🔯🚩சப்த கயிலாய தலங்கள் பற்றிய பதிவு🔯🚩
🚩திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றங்கரையில் வடகரையில் சப்த கரைகண்ட தலமும், தென் கரையில் சப்த கைலாய தலமும் உள்ளது.
🚩அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள், காமாட்சி அம்மன். சிவனை பூஜிப்பதற்காக தன் மகன் முருகப்பெருமானிடம் நீர் ஊற்றை உண்டாக்கும்படி கூறினாள். முருகப்பெருமான் வீசிய ஞானவேல் 7 குன்றுகளைக் கொண்ட தென் கயிலாய பர்வதமலையை துளைத்துச் சென்று, செங்கம் மலையின் ஒரு பகுதியில் குத்தி நின்றது. அதில் இருந்து நீர் பெருகி ஆறாக ஓடியது. அதுவே ‘சேயாறு’. இது தற்போது ‘செய்யாறு’ என்று அழைக்கப்படுகிறது.
🚩முருகப்பெருமான் வீசிய வேல், 7 குன்றுகளைத் துளைத்ததில் குன்றை சுற்றி தவமிருந்த ரிஷிகளான போதவன், புத்திராண்டன், புருகூதன், போதன், பாண்டுரங்கன், சோமன் மற்றும் வாமன் ஆகியோர் சிரசை கொய்தது. ஞானவேல் கொண்டு வந்த தீர்த்தத்தோடு அவர்களின் உடம்பிலிருந்து வெளியேறிய குருதியும் கலந்தது. அதுவே தனி ஆறாக பெருக்கெடுத்தது.
🚩பிரமஹத்தி தோஷம் நீங்க முருகப்பெருமான் சேயாற்றின் வடகரையில் காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை என்றழைக்கப்படும் ஊர்களில் 7 சிவலிங்கங்கள் அமைத்து வழிபட்டு தோஷத்தில் இருந்து விடுபட்டார். இந்த சிவாலயங்கள் #சப்தகரைகண்டம் என்றழைக்கப்படுகின்றன.
🚩அதேபோல் முருகப்பெருமானை ஏவிய செயல், அன்னையை சேர்ந்ததால், அன்னையும் அந்த தோஷத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிவந்தது. இதனால் அன்னை சேயாற்றின் தென்கரையில் மண்டகொளத்தூர், கரைபூண்டி, தென் பள்ளிப்பட்டு, பழங்கோயில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம் மற்றும் வாசுதேவம்பட்டி ஆகிய ஊர்களில் ஏழு சிவாலயங்களை உருவாக்கி வழிபட்டு பாவத்தில் இருந்து விடுபட்டாள். அவை ‘#சப்த_கைலாயங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன
*🚩#மண்டகொளத்தூர்*
சென்னை- போளூர் நெடுஞ்சாலையில், போளூரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில், மண்டகொளத்தூர் உள்ளது. முன்காலத்தில் இந்தப் பகுதி வில்வ மரங்கள் அடர்ந்த வனமாக இருந்திருக்கிறது. இங்கு தர்மநாதேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இறைவன்- தர்மநாதேஸ்வரர், இறைவி- தர்மசம்வர்த்தினி. மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்குள் நான்கு கால் மண்டபம், அதன் அருகில் பிரதோஷ நந்தி வீற்றிருக்கிறார். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, நிம்மதியை அருளும் இறைவனாக, இத்தல மூலவர் அருள்புரிகிறார்.
*🚩#கரைப்பூண்டி*
போளூரில் இருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. செய்யாற்றின் தென்கரையில் அமைந்ததால், ‘கரைப்பூண்டி’ என்ற பெயர் வந்தது. இங்கு கரைகண்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இறைவன்- கரைகண்டேஸ்வரர், இறைவி- பாலசுந்தரி. தல விருட்சம்- வில்வ மரம். இங்கு வடதிசை நோக்கி பாயும் செய்யாற்றில், ஐப்பசி மாதத்தில் நீராடும் ‘துலா ஸ்நானம்’ சிறப்பானதாக கருதப்படுகிறது.
*🚩#தென்பள்ளிப்பட்டு*
போளூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் கலசப்பாக்கம் என்ற ஊரில் உள்ள செய்யாற்றின் பாலத்தைக் கடந்து 3 கிலோமீட்டர் சென்றால் இந்த ஊரை சென்றடையலாம். இங்கு கயிலாசநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் பல யுகங்களைக் கடந்தவர் என்று சொலலப்படுகிறது. எனவே யுகத்தின் கணக்குகளுக்கு உட்படாத லிங்க மூர்த்தி என்று இத்தல இறைவனை சிறப்பிக்கிறார்கள். இறைவன்- கயிலாசநாதர், இறைவி- கனகாம்பிகை. இந்த திருத்தலத்திற்குச் செல்வதற்கு பார்வதிக்கு, மகாவிஷ்ணு வழிகாட்டினாராம். இதனால் இங்கு பள்ளிகொண்ட கோலத்தில் பெருமாளுக்கும் சன்னிதி அமைந்துள்ளது. இதன் காரணமாகவும் இந்த ஊருக்கு ‘தென்பள்ளிப்பட்டு’ என்ற பெயர் வந்தது என்கிறார்கள். ஈசனை வணங்கி வந்த, ஸ்ரீமத் சபாபதி ஞானதேசிகர் சுவாமிகளின் சமாதி இங்கு அமைந்துள்ளது.
*🚩#பழங்கோயில்*
திருவண்ணாமலையில் இருந்து போளூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கலசப்பாக்கத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பழங்கோயில் உள்ளது. பார்வதி தேவி பிரதிஷ்டை செய்த சப்த கயிலாயங்களில் இது ‘மத்திய கயிலாசம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு பாலக்ரிதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ராஜகோபுரம் கிழக்கு நோக்கி கம்பீரமாக தோற்றம் அளிக்கிறது. கருவறையில் நான்கு கால் மண்டபத்தின் முன்பாக பெரிய அளவிலான துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். இறைவன்- பாலக்ரிதீஸ்வரர், இறைவி- பாலாம்பிகை. இங்குள்ள மூலவர் ‘ஷோடச மூர்த்தி’ ஆவார். மூலவர் சன்னிதிக்கு பின்புறத்தில் ருக்மணி- சத்யபாமா உடனாய வேணுகோபால சுவாமி சன்னிதி உள்ளது.
*🚩#நார்த்தாம்பூண்டி*
திருவண்ணாமலையில் இருந்து போளூர் செல்லும் சாலையில் உள்ளது, நாயுடுமங்கலம். இங்கிருந்து 2 கிலோமீட்டர் சென்றால் நார்த்தாம்பூண்டி உள்ளது. தென்பள்ளிப்பட்டு தலத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம்தான். இங்கு கயலாசநாதர் திருக்கோவில் உள்ளது. முருகப்பெருமானை நினைத்து தொடர்ச்சியாக 12 ஆண்டுகள், கிருத்திகை விரதம் இருந்தாராம் நாரத முனிவர். அவருக்கு முருகப்பெருமான் காட்சியளித்தார். இதனால் இந்த திருத்தலம் ‘நார்த்தாம்பூண்டி’ என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள். மிகவும் தொன்மை வாய்ந்த திருக்கோவிலாக இந்த கயிலாசநாதர் கோவில் திகழ்கிறது. இந்த ஆலயம் பல்லவர்கள், வல்லாள மன்னர்களால் கட்டப்பட்டு, சோழர்கள், விஜயநகர பேசரரசு, சம்புவராயர்கள் ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள இறைவன்- கயிலாசநாதர், இறைவி- பெரியநாயகி. கோவிலில் உள்ள இலந்தை மரத்தின் அடியில் நாரத முனிவர், ஈசனையும், வள்ளி-தெய்வானை உடனாய முருகரையும் வணங்கும் சிற்பதைக் காணலாம்.
*🚩#தாமரைப்பாக்கம்*
திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கு தென்மேற்கே 22 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. இங்கு அக்னீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. 10-ம் நூற்றாண்டில் சோழர்களால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக கல்வெட்டுச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன. இறைவன்- அக்னீஸ்வரர், இறைவி- திரிபுரசுந்தரி. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலைப் போல, இங்கும் மூலவரின் திருச்சுற்று சுவரில் லிங்கோத்பவர் வீற்றிருக்கிறார். ஸ்ரீதேவி- பூதேவி உடனாய பெருமாள் சன்னிதியும் காணப்படுகிறது. இத்தல இறைவனை, தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தால், ஈசனை அடையும் வழி பிறக்கும்.
*🚩#வாசுதேவம்பட்டு*
திருவண்ணாமலையில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வாசுதேவம்பட்டு. இந்த திருத்தலம் செய்யாற்றின் கரையிலேயே இருக்கிறது. இங்கு சவுந்திரநாயகி உடனாய பக்தவச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. முன் காலத்தில் ‘ஆட்கொண்டேஸ்வரர்’ என்று இந்த இறைவன் போற்றப்பட்டு உள்ளார். சப்த கயிலாய தலங்களில் 7-வதாக அமைந்த இந்தக் கோவிலை சோழர்கள் கட்டமைத்துள்ளனர். இத்தல ஈசனை, சித்திர, விசித்திரகுப்தர்கள் வழிபட்டு சாப விமோசனம் பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு, ஆலயத்தின் ஈசான்ய மூலையில் தனிச் சன்னிதி எழுப்பப்பட்டுள்ளது. இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. கோவிலுக்குள் நுழையும் போது உள்ள 12 கால் மண்டபத்தில் சப்த கன்னியர்கள், சிலை ரூபமாக வீற்றிருக்கின்றனர்.
சிவாய நம 🙏
திருச்சிற்றம்பலம்
சர்வம் சிவமயமே
எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும்
அனைவருக்கும் சிவனருள் கிடைக்கட்டும்
உலகாளும் அம்மையப்பன் திருவருளுடன் அனைவருக்கும் இனிய சிவகாலை வணக்கங்கள் 🙏🏻
ஆலவாயர் அருட்பணி மன்ற தந்தையே வணக்கங்கள்🌷🙏🏻
No comments:
Post a Comment