பக்த விஜயம்
ரமாபாய்
🍁🍁🍁🍁🍁
முன் ஒருகாலத்தில் ரமாபாய் என்ற ஒரு பக்தை பண்டரிபுரம் கோவிலின் அருகில் வசித்து வந்தார். அவர் தினமும் மோரில் கோதுமை மாவைக் கரைத்து ஒரு உணவு தயாரித்து விட்டலன் கோவிலில் சென்று அவனுக்கு நிவேதனம் செய்துவிட்டு வருவார்.
வெகு காலமாக தினமும் இவ்வாறு விட்டலனுக்கு உணவு படைத்துவந்தார். ஒருநாள் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டிருந்ததால் கோவிலுக்குச் செல்ல முடியவில்லை.
இன்று கோவிலுக்குப் போகமுடியாது என்ற எண்ணம் அவர் மனத்தைப் பிசைந்தது.
அவரால் அதைத் தாங்கவே முடியவில்லை, உடல் உபாதையை மீறி பெற்ற அன்னையைப் போல் வருந்திப் புலம்பத் துவங்கினார்.
விட்டலா!! இன்று என்னால் உனக்கு உணவு கொண்டு வர முடியவில்லையே, இந்நேரத்திற்கு உனக்குப் பசிக்குமே! நான் இப்படிக்கிடக்கிறேனே! நீ எப்படிப் பசி தாங்குவாய்? என்றெல்லாம் பலவாறு புலம்பி அழுதார். மீண்டும் மீண்டும் எழ முயற்சி செய்தபோதும் உடல் ஒத்துழைக்கவில்லை.
கண்ணீருடன் படுக்கையில் கிடந்தவரை அப்படியே விட்டுவிட விட்டலன் என்ன கல்லா? கோவிலிருந்து ஓடோடி வந்துவிட்டான் அவரைப் பார்க்க….
ரமாபாய்.. வருத்தப்படாதே. உன்னால் வரமுடியாவிட்டால் என்ன? நான் வரமாட்டேனா.. அழாதே..என்ற இறைவனின் குரல் ரமாபாயின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது.
கண்ணைத் திறந்து பார்த்தால் எதிரில் வரி வரியாக அசையும் பீதாம்பரம், காதுகளில் மகர குண்டலம் பளபளக்க, நெற்றி நிறைய சந்தன திலகம், கழுத்தில் கௌஸ்துபணி ஒளிவீச, கால்களில் நூபுரம் ஒலிக்க, ஸாக்ஷாத் பகவானான விட்டலன் கோடி சூரியன்கள் ஒன்றாக ஒளிவீசுமாப்போல் நின்றான்.
இறைவனைக் கண்டதும் நோய் பறந்தது, துள்ளி எழுந்தாள் ரமாபாய்.. விட்டலா.. என்ற நாமத்தைத் தவிர வேறென்ன பேசுவாள்?
சொல்லற நிற்கும் அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே பாண்டுரங்கன் நேரமாயிற்று ரமாபாய்!! என் தரிசனத்திற்காக மக்கள் பெரிய வரிசையில் காத்திருக்கிறார்கள்.. நீ சீக்கிரம் உணவைக் கொடு! சாப்பிட்டுப் போகவேண்டும் என்று பெற்ற பிள்ளை கேட்பதுபோல் கேட்டார் பாண்டுரங்கன்.
ஓடோடிச் சென்று உணவைத் தயாரித்துக் கொடுத்தார் ரமாபாய். அதை வாங்கி உண்டுவிட்டு, வீட்டிற்கு வந்த விட்டலன் அங்கேயே அப்படியே விக்ரகமாக நின்றுவிட்டார்.
ஒரு ஆச்சரியம் என்னவென்றால், பாண்டுரங்கன் கோயிலில் இருக்கும் விக்ரகம் இங்கு வந்துவிட்டதோ என்னும்படியாக ஒரு சிறிய வித்யாசம்கூட இன்றி அதேபோல் இருக்கும் விக்ரகம்.
இந்த ரமாபாயின் வீடு இப்போது தாக்பீட் மந்திர் என்றழைக்கப்படுகிறது. தாக் என்றால் மோர். பீட் என்றால் கோதுமை மாவு. ரமாபாய் இவ்விரண்டையும் பயன்படுத்தி உணவு தயாரித்துக் கொடுத்தமையால் அவ்விடத்தின் பெயர் அப்படியே அமைந்திருக்கிறது.
விட்டலன் உணவு உண்ட பாத்திரம் இங்கிருக்கிறது, அந்தப் பாத்திரத்தினுள் இறைவனின் வலது கரம் பதிந்திருக்கிறது.
ராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி
No comments:
Post a Comment