பேசும் தெய்வம்
அம்மாவும் பிள்ளையும் -
சக்தி விகடனில் பல வருஷங்களுக்கு முன்பு ஒரு விஷயம் படித்தது ஞாபகம் வருகிறது. திருவானைக் காவல் அகிலாண்டேஸ்வரி ஆலய அர்ச்சகர் சொன்னதாக ஒரு சம்பவம் அது. அரை நூற்றாண்டுக்கு முன் மகா பெரியவா திருச்சி அருகே ஒரு கிராமத்தில் முகாம் இட்டிருந்த சமயம். ஒருநாள் வழக்கம்போல சந்திரமௌளீஸ்வரர் பூஜை செய்து கொண்டிருந்தார். திடீரென்று மடத்து மானேஜரை பெயர் சொல்லி கூப்பிட்டார்.
''இன்னும் சித்தே நேரத்தில் இங்கே அம்பாள் அகிலாண்டேஸ்வரி கோவில் அர்ச்சகர்கள் சில பேர் வருவா. அவாளுக்கு போஜனம் ஏற்பாடு பண்ணி வை. மத்தியானம் ரெண்டு மணி போல என்கிட்டே அவர்களை அழைச்சிண்டு வா''.
சிறிது நேரம் மௌனம். அருகே இருந்த ஒரு அணுக்க தொண்டனை கூப்பிட்டார்.
''ஸ்தபதிகளில் ஒருத்தரை உடனே போய்ப்பார் . ரெண்டடி உசரத்திலே ஒரு விநாயகர் சிலை பண்ணிண்டு எடுத்துண்டு வரச்சொல்லு.மத்தியானம் அர்ச்சகர்கள் வந்துவிட்டார்கள். மடத்து மேனேஜர் அவர்களை வரவேற்று உபசரித்து போஜனாதிகள் அளித்து ரெண்டு மணி வாக்கில் பெரியவாளிடம் அழைத்துச் சென்றார் . பெரியவா அவர்களது க்ஷேமலாபங்களை விசாரித்தார்.
''பெரியவாளைப் பார்த்து ஒரு முக்கியமான விஷயம் கேட்க தான் வந்தோம்.''
''என்ன சொல்லுங்கோ''.
காலம்பற ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் சந்நிதி கதவைத் திறந்து பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு பண்ணும்போது ஒவ்வொரு நாளும் எதனாலோ தெரியவில்லை, அர்ச்சகர் மயங்கி தொப்புனு விழுந்திடறார். ஒருத்தர்னா பரவாயில்லே. தினமும் யார் கதவைத் திறக்கிறாளோ அவர்கள் மயக்கமாகி கீழே விழறா. ஏன்? எதனாலே?ன்னு சங்கடமாக இருக்கு. பத்து நிமிஷம் கழிச்சு எழுந்து வழக்கம் போல நடமாடறா. கொஞ்சநாளா யாரும் காலம்பற சந்நிதி திறக்க வர மாட்டேங்கிறா பெரியவா''
''ஓஹோ'' .... பெரியவா சிறிது நேரம் கண்ணை மூடி மௌனமா இருந்தார். பிறகு அர்ச்சகர்களிடம்
''சரி, நாளைக்கு நான் காலம்பற வரேன். நான் வந்தாவிட்டு அம்பாள் சந்நிதி கதவை திறங்கோ''அர்ச்சகர்கள் மன நிறைவோடு பிரசாதம் வாங்கிக்கொண்டு புறப்பட்டார்கள். பெரியவா ஆசிர்வதித்து அனுப்பினார்.
மறுநாள் காலை ஐந்தரை மணிக்கே மஹா பெரியவா திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி சந்நிதி சென்றுவிட்டார். கதவைத் திறந்த அர்ச்சகர் வழக்கம்போல் தடுமாறி, மயக்கமடைந்து விழுந்துவிட்டார்.பத்து நிமிஷம் கழித்து சுதாரித்துக் கொண்டு வழக்கமாக செயல்பட்டார்.
இதைப் பார்த்த மஹா பெரியவா அங்கேயே நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார்.
கோவில் பிரதான சிவாச்சாரியாரை கூப்பிட்டார்.
''நாளையிலிருந்து அம்பாள் சந்நிதி திறக்கும்போது பக்கத்துலே இருக்கிற சின்ன வாசல் கதவை திறந்துண்டு உள்ளே போகச்சொல்லுங்கோ. எப்படி திறக்கணும்னு சொல்றேன். கதவை திறந்ததும் உடனே உள்ளே போகவேண்டாம். ரெண்டு மூணு நிமிஷங்கள் கழிச்சு உள்ளே போகட்டும் ''
சாயந்திரம் நாலு மணி வாக்கில், அன்று பெரியவாளின் சிஷ்யன் சொல்லி அனுப்பிய ஸ்தபதி வந்துவிட்டார். அவர் கையில் ரெண்டடி உயர பிள்ளையார்.
மஹா பெரியவா பிள்ளையார் சிலையைப் பார்த்து சந்தோஷப்பட்டார்.
''ஸ்தபதி, உடனே ஆகம சாஸ்திரப்படி, ஒரு சின்ன ஸ்தூபி கட்டுங்கோ. அம்பாள் சந்நிதிக்கு நேரா இருக்கட்டும் அந்த பீடத்தில் பிள்ளையார் பிரதிஷ்டை பண்ணி, அவர் கண்ணும் அம்பாள் கண்ணும் நேராக சந்திக்கிற மாதிரி இருக்கணும். உடனே ஏற்பாடு ஆகி பிள்ளையார் ஸ்தூபத்தில் பிரதிஷ்டை ஆகி அம்பாளை நேராக பார்த்தார். அதற்குப்பிறகு கதவைத் திறந்த எந்த அர்ச்சகரும் மயக்கமாகி கீழே விழவில்லை. இன்றும் அந்த ஸ்தூபியில் விநாயகர் அம்மாவைப் பார்த்து நிற்கிறார். அம்பாளின் தாய்ப்பாச பார்வை முதலில் கதவைத் திறந்ததும் ஜேஷ்ட குமாரன் மேல் பாசமாக விழுகிறது. அந்த அன்பு தொடர்ந்து வரும் பக்தர்கள் மேலும் விழுகிறது என்று சொல்லவேண்டிய அவசியமில்லை.
No comments:
Post a Comment