Sunday 16 September 2018

சப்தமாதர்களைப் பற்றி அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு

சப்தமாதர்களைப் பற்றி அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு



சப்தமாதர்கள் யார் ? சக்தியின் அம்சங்கள்தான். இப்படியே பிரிந்து, பிரிந்து பார்த்துக்கொண்டே வந்தால் ‘ எனக்கு அம்பாளை பிடிக்கிறது, எனக்கு முருகனைப் பிடிக்கிறது, எனக்கு விநாயகரைப் பிடிக்கிறது ‘ என்று மீண்டும், மீண்டும் வடிவங்களில் மனிதன் சிக்கிவிடுகிறான். தவறொன்றுமில்லை. எஃதாவது ஒரு வடிவத்திற்குள் தன் மனதை ஒடுக்கப்  பழகிக்கொண்டால்கூட போதும். இந்த சப்தமாதர்கள் என்பது, சித்தர்கள், முனிவர்கள் இவர்களுக்கே சக்தியை அருளக்கூடிய நிலையில் உள்ள அம்பாளின் உபசக்திகள்தான். எனவே சப்தமாதர்களை வணங்கினாலும், சாக்ஷாத் அன்னை பராசக்தியை வணங்கினாலும் எல்லாம் ஒன்றுதான். அதற்காக விநாயகப்பெருமானை வணங்கினால் அல்லது முக்கண்ணனாகிய சிவபெருமானை வணங்கினால் அவையேதும் பலனைத் தராதா ? என்று கேட்கவேண்டாம். இவள் கேட்ட கேள்வியின் அடிப்படையில் எமது பதில் அமைவதால் அந்தக் கேள்வி, அதற்குரிய அளவில் இந்த பதிலை எடுத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் அடிக்கடி எமை நாடுகின்ற சேய்களுக்கு கூறுவது, சப்தகன்னியர்கள் அல்லது சப்தமாதர்கள் இரண்டும் ஒன்றுதான். சப்தம் என்ற சொல்லின் பொருளைப் பார்த்தால் ஏழு என்ற எண்ணைக் குறிக்கும்.

சப்தம் என்ற சொல்லுக்கு ஏழு என்ற பொருள் எப்படி வந்தது தெரியுமா ? ஏழு வகையான விலங்குகள் ஒரே சமயத்தில் ஒரேவிதமான ஒலியளவை எழுப்பினால் அப்பொழுது ஒருவிதமான இனிமையான இசை வடிவம் பிறக்கும். அந்த இசை வடிவத்தை வரிவடிவமாக மாற்றினால் என்ன கிடைக்கும் தெரியுமா ? ச,ரி,க,ம,ப,த,நி,ச என்ற ஒலி வரிவடிவமாக அப்பொழுது கிடைக்கும். இந்த சப்தம் என்ற சொல்லுக்குப் பின்னால் எத்தனையோ பொருள் இருக்கிறது. இருட்டிலே வழிகாட்டியாக இந்த சப்தமாகிய ஒலி இருக்கிறது. எந்தவிதமான ஒளி, அதாவது வெளிச்சம் இல்லாத நிலையிலே ஒலிதான் மனிதனுக்கு கண்ணாக இருக்கிறது. எனவே ஏழுவகையான சக்திகள் என்பதை குறிக்கதான் சப்தம், சப்தமாதர்கள், சப்தரிஷிகள் என்றெல்லாம் ஒருவகையான பொருளில் கூறப்படுகிறது. இன்னும் பல்வேறுவிதமான பொருள் இருக்கிறது. அது குறித்தெல்லாம் தக்க காலத்தில் விளக்கம் தருவோம்.

சப்தமாதர்களை வணங்கினால் என்ன பலன் ?

 என்று பார்த்தால், பொதுவாக எல்லாவகையான தோஷத்திற்கும் எத்தனையோ வகையான பரிகாரங்கள் இருக்கின்றன. அத்தனை பரிகாரங்களையும் ஒரு மனிதனால் செய்ய இயலாது என்பது எமக்கும் தெரியும், இறைவனுக்கும் தெரியும். அப்படியிருக்கும் பட்சத்தில் மிக எளிமையாக சப்தமாதர்களை அவனவன் அறிந்த மொழியில் வணங்கிவந்தால் அது நல்ல தோஷ பரிகாரமாக இருக்கும். அடுத்ததாக குறிப்பாக பெண்களுக்கு நாங்கள் கூறவருவது, இக்காலத்திலே வெளியில் செல்லவேண்டிய நிலை பெண்களுக்கு ஏற்படுகிறது. வெளியில் செல்லும்பொழுதே புரிந்துகொள்ள வேண்டும், ஆபத்தும் உடன் வருகிறது என்று. அப்படி வரக்கூடிய ஆபத்துக்களிலிருந்து பெண்கள் தங்களைக் காத்துக்கொள்ள இந்த சப்தமாதர்கள் வழிபாட்டை அனுதினமும் இல்லத்தில் அமர்ந்து அமைதியாக செய்து வந்தால் நல்ல பலன் உண்டு.

 இன்னும் கூறப்போனால், மனமொன்றி சப்தமாதர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டே வந்தால், எல்லோரும் கேட்கிறார்களே, குண்டலினி என்றால் என்ன ? அந்த குண்டலினி சக்தியை எழுப்பினால் என்ன நடக்கும் ? என்று. இந்த அன்னையர்களின் கருணையாலே எந்தவிதமான தியான மார்க்கமில்லாமல் சப்தமாதர்களை பிரார்த்தனை செய்வதன் மூலமே ஒரு மனிதன் அடையலாம். ஆனால் இது அத்தனை எளிதான காரியமல்ல. பல்வேறு சோதனைகள் வரும். அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு ஒருமைப்பட்ட மனதோடு சப்தமாதர்களை வணங்கிவந்தால் ஒரு மனிதனுக்கு வேண்டிய எல்லா நலன்களும் இகத்திலும், பரத்திலும் கிட்டும். இன்னும் பல்வேறு விளக்கங்களை பிற்காலத்தில் உரைப்போம்.