Thursday 19 April 2018

விதியை மாற்றும் விதி - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனிதர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இறைவனிடம் மிகக் கடுமையாக பிரார்த்தனை செய்வதும், வேண்டுகோள் வைப்பதும் தவறல்ல. அதே சமயம் இறைவனிடம் ‘ இதை உடனடியாக நடத்திக் கொடு. அதிசயத்தை செய்து காட்டு ‘ என்றால் வேண்டுமென்றே இறைவன் சோதனைகளை அதிகரிப்பார். எனவே இறைவன் திருவடியை இறுக பற்றிக்கொண்டு ‘ நீ எதை வேண்டுமானாலும் செய், எப்பொழுது வேண்டுமானாலும் செய். ஆனாலும் என்னைக் கைவிட்டு விடாதே ‘ என்ற ஒரு பரிபூரண பக்தியின் அடிப்படையில் உள்ள பூரண சரணாகதிக்கு ஒரு மனிதன் வந்துவிட வேண்டும். "வாழ்க்கை நீண்ட காலம் அல்ல. குறைந்த காலம். அதற்குள் எண்ணியது கிடைத்து வாழ்ந்தால்தானே?" என்பது போன்ற விஷயங்கள் கட்டாயம் இறைவனுக்கும் தெரியும். மகான்களுக்கும் தெரியும். ஆனால் எந்த விதி எப்பொழுது மாற்றப்பட வேண்டும்? என்பதும் இறைவனுக்கும் தெரியும். திடும் என ஒரு விதியை மாற்றுவதால், நன்மை நடந்து விட்டால் பாதகமில்லை. அதே சமயம் தீய பக்க விளைவுகள் வந்து, முன்பு இருந்த நிலைமையே மேல் என்கிற ஒரு நிலை வந்துவிடும் என்பதையும் மனிதன் மறந்துவிடக் கூடாது.

இறைவனின் கருணையாலே, ஒவ்வொரு மனிதனும் விதியின் வழியாக வருகின்ற துன்பங்களில் இருந்து விரைவில் விடுதலை அடைய வேண்டும் என்று எண்ணுகிறான். யாங்களும் மறுக்கவில்லை. அதே சமயம் ஒரு மகானின் தொடர்பு கிடைத்து வழிமுறைகள் அறிந்தாலும் கூட பல்வேறு தருணங்களில் மனிதனால் விதியை வெல்ல முடிவதில்லை. காரணம், மன சோர்வும், எதிர்மறையான எண்ணங்களும், விதியை எதிர்த்துப் போராட ஒரு வலுவைத் தராமல் அவனை சோர்ந்து அமர வைத்து விடுகிறது.

அகத்தியர்ஞானம்