Tuesday, 27 January 2026

*எம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக அருள் புரியும் பதிகம்*

 *எம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக அருள் புரியும் பதிகம்*


எம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக அருள் புரியும் பதிகம். 


🙏🏾அவரவர் பிறந்த தினங்களிலும், திருமண ஆண்டு நிறைவு நாட்களிலும், குறிப்பாக 60, 80 ஆண்டு வயது நிறைவு நாட்களிலும் இப்பதிகத்தை ஓதி உரிய தான தர்மங்கள் அளித்து வந்தால் அகால மரணம் ஒருக்காலும் அண்டாது தற்காத்துக் கொள்ளலாம். நீண்ட ஆயுள் கிட்டும்


*🙏🏼பதிகம்*


துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்

நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்

வஞ்சக மற்றடி வாழ்த்த வந்த கூற்று

அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே.


மந்திர நான்மறையாகி வானவர்

சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன

செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு

அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே.


ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்

ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து

ஏனை வழிதிறந்து ஏத்துவார்க் கிடர்

ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே.


நல்லவர் தீயர் எனாது நச்சினர்

செல்லல் கெடச் சிவ முத்தி காட்டுவ

கொல்ல நமன்தமர் கொண்டு போமிடத்து

அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே.


கொங்கலர் மன்மதன் வாளி ஐந்தகத்து

அங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்

தங்கரவின் படம் அஞ்சும் தம்முடை

அங்கையில் ஐவிரல் அஞ்செழுத்துமே.


தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்

வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்

இம்மைவினை அடர்த் தெய்தும் போழ்தினும்

அம்மையிலுந் துணை அஞ்செழுத்துமே.


வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்

பீடை கெடுப்பன பின்னை நாள்தொறு

மாடு கொடுப்பன மன்னு மாநடம்

ஆடி உகப்பன அஞ்செழுத்துமே.


வண்டமரோதி மடந்தை பேணின

பண்டை இராவணன் பாடி உய்ந்தன

தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்கு

அண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே.


கார்வணன் நான்முகன் காணுதற் கொணாச்

சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்

பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு

ஆர்வணம் ஆவன அஞ்செழுத்துமே.


புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச்

சித்தத்தவர்கள் தெளிந்துதேறின

வித்தக நீறணிவார் வினைப்பகைக்கு

அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே.


நற்றமிழ் ஞான சம்பந்தன் நான்மறை

கற்றவன் காழியர் மன்னன் உன்னிய

அற்றமில் மாலை ஈரைந்தும்அஞ்செழுத்து

உற்றன வல்லவர் உம்பர் ஆவரே.


திருச்சிற்றம்பலம்

Monday, 26 January 2026

மேடையில் நடந்த அற்புதம்

 


Wednesday, 21 January 2026

மூன்று சிவரகசியங்கள்

 மூன்று சிவரகசியங்கள்…

இவற்றை தெரிந்தவன் வாழ்வை வென்று விடுகிறான்.


ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருக்கிறாள். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு வாரத்துக்கு முன்புதான் இறந்து போனான்.

                 

எமதர்மன் ஒரு எமதூதனை அனுப்பி "அந்த அம்மாவுடைய உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு" என்கிறான். இந்த எமதூதன் நினைக்கிறான், "ஐயோ பாவம் அப்பாவும் இல்லை, அம்மாவையும் நான் எடுத்துக்கொண்டு போய்விட்டால்  இந்த குழந்தைக்கு யார் கதி" என்று எடுக்காமல் திரும்பி விட்டான்.


நீங்களெல்லாம் அந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்று ஒரு எண்ணங்களை வைத்திருக்கிறீர்கள். அளவுகோல்களை வைத்திருக்கிறீர்கள். ஆக, எமதூதன் அந்த குழந்தைக்கு யார் கதி என்று நினைத்து பரிதாபப்பட்டதனால் உயிரை எடுக்காமல் போய்விட்டான்.

ஆனால், அங்கே எமன் சொல்லிவிட்டார்,  "உனக்கு சிவலோக ரகசியங்கள் தெரியவில்லை..

கடவுளுடைய அருளாட்சி எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை... அது தெரிகிற வரைக்கும் பூமியில் போய் கிட" என்று அவனை தூக்கி பூமியில் போட்டுவிட்டார்.....


அவன் ஒரு பூங்காவில் முனகிக் கொண்டு கன்னங்கரேலென்று கிடக்கிறான். அப்போது அந்த வழியாக வருகிற ஒரு தையற்காரன், என்னடா இது,  இங்கே முனகல் சத்தம் கேட்கிறதே என்று அவனைப் பார்த்து விட்டு, இவனிடம் இருந்த துணியை அவனுக்கு போடுகிறான். மேலும்....  "என்னுடன் வா" என்கிறான்.


எமதூதன் ஒரு வார்த்தை பேசவில்லை. தையற்காரனுடன் அவன் வீட்டுக்குச் சென்றான். திண்ணையில் எமதூதனும்,  அந்த தையற்காரனும் படுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


         அந்த தையற்காரனின் மனைவி தையற்காரனை மட்டும், "வா வா வந்து கொட்டிக்கோ"  என்று கூப்பிடுவாள்.


அவன் "விருந்தாளி வந்திருக்கிறானே" என்று சொல்வான். அவள் கணவனை திட்டி விரட்டுவாள்.


"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று".  எமதூதன்  ஒன்றும் சொல்ல மாட்டான். போய்க் கொண்டே இருப்பான். ஒரு பத்து நிமிடம் கழித்து இவள் "சரி சரி வா"  என்று எமதூதனை  மறுபடியும் கூப்பிடுவாள்..... அப்போது அவன் லேசாக சிரிப்பான். கன்னங்கரேலென்று இருந்த அவன் உடம்பு கொஞ்சம் பொன்னிறமாக மாறும். ஆனால் ஒன்றும் பேச மாட்டான்.


தையற்காரன் சொல்வான், "எனக்கு இந்த காஜா போடுவதற்கு பட்டன் தைப்பதற்கு எல்லாம் ஆளில்லை . தங்குவதற்கு இடமும் சாப்பாடும் போடுகிறேன். எங்கள் வீட்டில் இருந்து கொள்" என்று சொன்னான்.

எமதூதன் டெய்லரிங் அசிஸ்டண்ட் ஆகிவிட்டான்.


ஒரு பத்து வருடம் ஆகிறது. ஒரு குதிரை வண்டியில் ஒரு பணக்கார பெண்மணி கை கொஞ்சம் முடமாக இருக்கிற குழந்தை, அத்துடன் ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தை என இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு வந்து தையற்காரனிடம் "இந்தக் குழந்தைக்கு நல்லா தளர்வாக தைக்க வேண்டும். கை கொஞ்சம் சரி இல்லாமல் இருக்கிறது" என்று சொல்வாள்.


           எமதூதன் அந்த குழந்தையையும் பார்ப்பான். அந்த பணக்கார பெண்மணியையும் பார்ப்பான். சிரிப்பான். அவன் உடம்பு இன்னும் கொஞ்சம் பொன்னிறமாக மாறும். இன்னும் ஒரு ஐந்து வருடம் ஆகிவிடும்.


ஒருநாள் ஒரு பெரிய பணக்காரன் பென்ஸ் காரில் வருவான். வந்து "இந்தாங்க பத்து மீட்டர் துணி இருக்கிறது. இதிலே 20 வருஷம் தாக்குப் பிடிக்கிற மாதிரி சூப்பராக சபாரி சூட் தையுங்கள்" என்று சொல்லி கொடுத்து விட்டுப் போவான். அதற்குள் நம் எமதூதன் தேர்ந்த தையற்காரன் ஆகிவிடுகிறான்.


முதல் நாள் போய்விட்டது. இரண்டாம் நாள் போய்விட்டது....


தையற்காரன், "நாளை டெலிவரி , அந்த பணக்காரன் வந்து கேட்பான்,  என்ன சொல்வது?"  என்று கேட்கிறான். இவன் டர்ரென்று  அந்த பேண்ட் துணியை கிழிப்பான். ஒரு தலையணை உறை, பெட் கவர் தைப்பான். தையற்காரன் திட்டுவான். "என் பிழைப்பில் மண்ணை போடுவதற்கு வந்தாயா? இப்போது அவன் வந்து கேட்டால்  நான் என்ன பண்ணுவது?" என்பான்.


அப்போது கார் டிரைவர் ஓடி வருவான்.  "நீங்கள் சபாரி தைக்காதீர்கள். என் முதலாளி இறந்து விட்டார். அதனால் அவருக்கு ஒரு தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்து விடுங்கள்"  என்று சொல்வான். இவன் முகத்தில் சிரிப்பு வரும் முழுவதும் பொன்னிறமாக மாறி விடுவான்.

        அப்படியே மேலே போவான்.....


அப்போது தையற்காரன்  சொல்வான், "அப்பா நீ யார்? வாழ்க்கையில் இதுவரைக்கும் மூன்று முறைதான் சிரித்தாய். ஒவ்வொரு தடவை சிரிக்கிற போதும் உன் உடம்பு பொன்னிறமாக மாறியது. அதனால் அதற்கு விளக்கத்தை சொல்லிவிட்டு,  நீ போ" என்பான்.


அவன் "நான் எமனுடைய தூதுவன். ஒரு தாய் இறந்து விட்டால், அந்த குழந்தைக்கு யார் கதி என்று அந்த தாயின் உயிரை எடுக்காமல் விட்டதனால் பூமியில் போய் சிவ ரகசியத்தை தெரிந்து கொண்டு வா" என்று அனுப்பினார்கள். அதனால் வந்தேன்.


"என்ன தெரிந்து கொண்டாய்?"  என்று இவன் கேட்டான்.


முதல் நாள் உன் மனைவி என்னை அடிக்க வந்தாள் அல்லவா... அப்போது அவள் முகத்தில் தரித்திர தேவி தெரிந்தது. பத்தாவது நிமிடம் என்னை சாப்பிட வா என்று கூப்பிடும் போது அன்னை மகாலட்சுமி தெரிந்தார். அப்போது, இந்த உலகத்தில் "ஒருவன் பணக்காரனாக இருப்பதற்கும்  ஏழையாக இருப்பதற்கும் அவனுடைய எண்ணங்கள்தான் காரணம்"  என்று தெரிந்து கொண்டேன். இது போய்விட்டு அது வருவதற்கு பத்து நிமிடம் தான் தேவை என்றும் தெரிந்து கொண்டேன். #இதுதான் #சிவரகசியம் #ஒன்று!


மனிதர்களிடமே  பெரிய திட்டங்கள் எல்லாம் இருக்கிறது. ஆனால் எந்த கார்டை வைத்து விளையாடுவது என்று தெரியாததினால்  வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள்.


"பத்து வருடம் கழித்து ஒரு பணக்கார பெண்மணி குதிரை வண்டியில் வந்தாள் அல்லவா? அவளுடன் ஒரு குழந்தை கை முடமாக வந்தது அல்லவா...? அதுதான் நான் இதற்கு அம்மா இறந்து விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்த குழந்தை.


நிஜமான தாய் ஏழை. அவள் இறந்து விட்டால் கூட இந்த குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்வதற்கு,  இதற்கு கொஞ்சம் தளர்வாக தைக்கவேண்டும் என்று சொல்கிற அளவிற்கு ஒரு பணக்கார அன்பான அம்மாவை இறைவன் தயாராக வைத்திருக்கிறான்.  இது எனக்கு தெரிந்த போது இரண்டாவது முறை சிரித்தேன்.


           ஒரு எமதூதன் ஆகிய எனக்கே பச்சாதாபம் இருக்கிறபோது, இறைவனுக்கு இருக்காதா? அவன் அதற்கு ஒரு மாற்று வழி வைத்துக் கொண்டுதான் அந்த உயிரை எடுப்பான். இது எனக்கு தெரிந்தபோது #இரண்டாவது #சிவ ரகசியம் #புரிந்தது.


கடவுள் எல்லாம் காரண காரியங்களோடு நடத்துகிறான்......


மூன்றாவது #சிவ_ரகசியம்  மூன்று நாட்களில் சாகப் போகிறவன் இன்னும் 20 வருஷம் நான் உயிரோடு இருக்கப் போகிறேன் என்று நினைத்துக்கொண்டு,  நன்றாக 20 வருஷத்திற்கு வருகிற மாதிரி துணி தை என்று சொன்னானே..


"எனக்கு தெரியும் அவன் சாகப்போகிறான்" என்று,  அதனால்தான் நான் துணி தைக்கவே இல்லை. அவன்  இறந்த அந்த நேரத்தில் துணியை கிழித்து தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்தேன்". இந்த ஜனங்கள் இந்த உலகத்தில் ஏதோ நூறு வருஷம் இருநூறு  வருஷம் கொட்டகை போட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். சாவு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.. நேற்று இருந்தவன் இன்று இல்லை. அதுதான் இந்தக் கலியுகத்தின் எதார்த்தமான உண்மை..


அதுவே தெரியாமல் ஒவ்வொருவனும் நான் மட்டும் ரொம்ப வருஷம் இருப்பேன் என்றும்,  மற்றவன்தான் செத்துக் கொண்டிருக்கிறான் என்றும் நினைக்கிறான் அல்லவா? அதுதான் #மூன்றாவது #சிவரகசியம்!


அதனால்தான் இந்த உலகத்தில் அவன் திறமையாக செயலாற்ற முடியாமல் இன்னும் 20 வருஷம் கழித்து நடக்கப் போகிற குழந்தையுடைய கல்யாணத்திற்கு இன்றைக்கு காசு இல்லையே என்று வருத்தப்படுகிறான்.

இன்னும் 15 வருடம் கழித்து கல்லூரியில் படிக்கப் போகிற பையனுக்கு பணம் இல்லையே என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறான்..


அதனால்தான் உலகத்தில்  நிம்மதி இல்லாமல் இருக்கிறது. பேசிக் கொண்டிருக்கிறபோது இப்போதே செத்துப் போவோம், என்று நினைத்தால், நீ சந்தோஷமாக இருப்பாய்.


இந்த மூன்று ரகசியங்கள்.....


அதாவது ஏழையாக இருப்பதும் பணக்காரன் ஆக இருப்பதும் நம்முடைய எண்ணங்களால் நடக்கிறது.....


இரண்டாவது எது நடந்ததோ அதற்கு கடவுள் ஒரு மாற்றுவழி வைத்திருப்பார். மனிதனின் மனநிலையில் உள்ள ஈகோவினாலும்,  அறியாமையினாலும் அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.


மூன்றாவது எந்த நேரத்திலும் சாவு வரலாம். இது தெரியாமல் மனிதர்கள் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த #அஞ்ஞானம்தான் உலகில் துக்கங்களுக்கு எல்லாம் காரணம்.


இவைதான் அந்த மூன்று #சிவ_ரகசியங்கள்.....

எனவே, நாமும் இந்த சிவ ரகசியங்களை புரிந்து கொண்டு வாழப் பழகி விட்டால், நம் உடலில் உயிர் இருக்கும் வரை நிம்மதியாக வாழலாம்!


*ஓம் நமச்சிவாய*

Tuesday, 13 January 2026

மாந்தி

 மர்மம் நிறைந்த மாந்தி கிரகம் !

மாந்தி  என்பது வேத ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் ஒரு உபகிரகம் (Upagraha). இது நவகிரகங்களில் சேராது; உடல், ஒளி, பாதை ஆகியவை இல்லாத நிழல் கிரகம். மாந்தி, சனி தேவனின் கர்ம–கால சக்தியின் உள்நிழல் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. ஆகவே மாந்தி ஜாதகத்தில் கணித–கால கணக்கீடு மூலம் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. 


புராண நிகழ்வின்படி இராவணன் நவகிரகங்களை சிறைப்படுத்திய போது ...சனி பகவான் சிறைக்கு வெளியே தனது கனுக்காலை நீட்டி, அந்த கால் பாதத்தின் வெப்ப நிழலில் இருந்து வெளிப்படவைத்த ஓர் சக்தி தான் மாந்தி கிரகம். அந்த கிரகத்தை வைத்து ராவணனை பலவீனப்படுத்தியதாக விவரிக்கிறது.


ஜோதிட ரீதியில், மாந்தி பூர்வஜன்ம கர்மச் சுமை, மன அழுத்தம், நீடித்த தடைகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. இது திடீர் அதிர்ச்சிகளை விட, மெதுவாக நீளும் துன்பங்களைச் சுட்டும். மாந்தி லக்னம், 4, 6, 8, 12 போன்ற வீடுகளில் இருப்பின் அதன் பலன் தீவிரமாகும்; மனச்சோர்வு, தனிமை உணர்வு, குடும்ப அல்லது தொழில் தாமதங்கள் போன்றவை வெளிப்படும். அதே நேரத்தில், நன்மை கிரக பார்வை இருந்தால் இத்துன்பம் ஆன்மீக விழிப்புணர்வாக மாறும்.


புராண–தாந்திரீக விளக்கத்தில், மாந்தி என்பது சனியின் உள்நீதிக் குரல். அது மனிதனை வெளியில் தண்டிப்பதைவிட, உள்ளே சோதித்து சீரமைக்கும் சக்தி. சித்தர் மரபில், மாந்தி சித்த சுத்தி—அஹங்கார கரைவு, சுய விசாரணை, மௌனம்—இவற்றை ஊக்குவிப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் பல யோகிகள், துறவிகள் ஜாதகங்களில் மாந்தி வலுவாக இருப்பது காணப்படுகிறது.


மாந்தி கிரகம் துன்பத்தின் அடையாளம் மட்டுமல்ல; துன்பத்தைத் தாண்டி ஞானத்திற்கான வாயில். அதை “தோஷம்” எனப் பார்ப்பதைவிட, கர்மப் பாடம் எனப் புரிந்துகொள்ளும் போது, மாந்தி வாழ்க்கையை ஆழப்படுத்தும் ஆசிரியனாக மாறுகிறது. 


மாந்தி மனத்தை இருட்டில் நிறுத்தி உன்னைப் பார்க்கச் செய்வான்; 

குலிகன் உடலை அசைத்துப் “நீ உடல் அல்ல” என்று உணர்த்துவான். 


தாந்திரீக விளக்கம்:

மாந்தி = சித்த சுத்தி (Purification of Mind)

அவர் அஹங்காரத்தை மெதுவாகக் கரைக்கும் சக்தி.


குலிகன் = பிராண சுத்தி (Purification of Life-force)

அவர் அஹங்காரத்தை உடைப்பவன். 


தாந்திரிகத்தில் மாந்தி மற்றும் குலிகன் இருவரும்

தனி தெய்வங்கள் அல்ல; சனி தேவனின்

கர்ம–கால சக்தி மனித உடல்–மன அமைப்பில் செயல்படும் நிழல் சக்திகள்.


“ஒளி வெளியில் தெரியும்; நிழல் உள்ளே வேலை செய்கிறது.” – இதுவே மாந்தி–குலிகன் தத்துவம். 


புராண மரபில்: 

யமன் → மரணத்திற்கு பின் தீர்ப்பு.

சனி → வாழும் காலத்திலேயே தீர்ப்பு.

குலிகன், யமனின் துறைக்கு நெருக்கமான சக்தியாகக் கருதப்படுகிறார்.மாந்தி, சனியின் உள்நீதித் துறையின் பிரதிநிதி. 


பிரபஞ்ச சமநிலைக்காக, சனியின் சக்தி இரண்டு நிழல் வடிவங்களாக பிரிந்தது !

1. மாந்தி – உள்மன கர்ம நிழல்,

சனியின் உள்நோக்கி இயங்கும் சக்தி,

மனம், நினைவு, சிந்தனை, வேதனை,

மெதுவாக, நீடித்து துன்பம் தரும் !


2. குலிகன் – உடல்/உயிர் கர்ம நிழல்,

சனியின் வெளிநோக்கி இயங்கும் சக்தி,

உடல், விபத்து, விஷம், மரணம்,

திடீரென, கடுமையாக விளையும் !


இவர்கள் பிறந்தவர்கள் அல்ல –

பிரித்தெடுக்கப்பட்ட கர்ம சக்திகள். 

சிலர் ஜோதிட ரிதியாக மாந்தி பரிகாரம் செய்கிறேன் என ஜேஷ்டா தேவிக்கு அருகில் இருக்கும் உப தேவதைகளுக்கு செய்கிறார்கள். இது பெரும் சாஸ்திர பிழை ! அவ்வாறு செய்வது எதிர்மறை விளைவே ஏற்படும். ஜேஷ்டா தேவிக்கும் சனி பகவானுக்கு பிறந்தவர்கள் தான் மாந்தி, குளிகன் என செய்யும் பிரச்சாரம் பெரும் பிழையான ஓன்று..

தெய்வீக அதிசியங்கள்

 தமிழகத்தில் உள்ள அறிவியலுக்கு அப்பாற்பட்ட நான்கு தெய்வீக கற்சிலைகள்


குற்றாலம் நாடி விநாயகர், நாச்சியார் கோவில் கல் கருடன், திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் மற்றும் திருப்புறம்பியம் பிரளயம் காத்த விநாயகர் ஆகிய‌ நான்கு கற்சிலைகளும் அறிவியலால் புரிந்து கொள்ள முடியாத அதிசய சிலைகளக இன்றும் விளங்குகின்றன 


அவற்றின் சிறப்பை தனிததனியே காண்போம் 


1.  குற்றாலம் நாடி விநாயகர்


குற்றாலம் தலத்தில், ஸ்ரீ மௌன சுவாமிகள் புனித அரச மரத்தின் கீழ் நிறுவியுள்ள சித்தி விநாயகர் மூர்த்தியில் ஆரத்தி நேரத்தில் கண்ணுக்குத் தெரியும் வகையில் அசைவையும் மனிதருக்குரிய நாடித் துடிப்பையும்  காணலாம். 


மருத்துவர்கள் ஸ்டெதஸ்கோப் மூலம் இதயத் துடிப்பைப் போல அதிர்வுகளை உறுதி செய்தனர். 


திருநெல்வேலி மாவட்ட புவியியல் நிபுணர்கள் கல் அமைப்பையும் பரிசோதித்து உறுதி செய்தனர். 


இதனால் இது இந்தியாவின் மிக மர்மமான “உயிருள்ள” விநாயகர் அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.


2.  நாச்சியார் கோவில் கல் கருடன்


இத்தலத்தில் உள்ள கல்லால் செய்யப்பட்ட கருட மூர்த்தி, கருட சேவை ஊர்வலத்தின் போது அபூர்வமான நிகழ்வைக் காட்டுகிறது. 


முழுக்க கல்லால் ஆன இந்த மூர்த்தி, ஊர்வலம் முன்னேறியபோது எடை கூடிக்கொண்டே போய் 4, 8, 16, 32 என அதிகமான பக்தர்கள் சுமக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது; 


திரும்பும் போது அதேபோல் எடை குறைகிறது. 


மேலும், கருடனில் வியர்வை துளிகள் தோன்றுவதையும் பார்க்கலாம். 


இது தெய்வ சக்தி மற்றும் பக்தர்களின் கர்ம சுமைகள் நீங்குவதின் சின்னமாகக் கருதப்படுகிறது.


3.  திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் 


திருநீலக்குடி தலத்தில் சித்திரை திருவிழாவின் போது, நீலகண்டேஸ்வரர் சிவலிங்கத்தின் மீது தொடர்ச்சியாக எள்ளெண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. 


எவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும் அது முழுவதும் லிங்கத்தில் உறிஞ்சப்படுகிறது. 


மறுநாள் பார்க்கும்போது லிங்கம் முற்றிலும் உலர்ந்திருப்பது ஒரு விளக்கமற்ற தெய்வீக அதிசயமாகப் போற்றப்படுகிறது.


இது ஆயுள் பலத்தையும் மன நிம்மதியையும் குறிக்கும் குறியீடாக உள்ளது 


4.  திருப்புறம்பியம் பிரளயம் காத்த விநாயகர்


விநாயக சதுர்த்திக்கு முந்தைய இரவில் 100 கிலோ தேனுடன் தனிப்பட்ட அபிஷேகம் இந்த விநாயகப் பெருமானுக்கு நடைபெறுகிறது. 


இரவு முழுவதும் ஊற்றப்படும் தேன் அனைத்தும் மூர்த்தியால் உறிஞ்சப்பட்டுவிடுகிறது  


ஆண்டின் மற்ற நாட்களில் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. 


கோவில் வளாகத்தில் உள்ள கிணறு இந்த அதிசயத்தின் சாட்சியாகக் கருதப்படுகிறது. 


இந்த விநாயகரை வழிபடுவது பேரழிவுகளிலிருந்து தெய்வீக பாதுகாப்பை அளிக்கும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.


 

Friday, 2 January 2026

காகபுஜண்டர்

 ஆதி சித்தர் ஸ்ரீகாகபுஜண்டரின் அருளாற்றல் நிரம்பிய ஆலயங்கள்


ஜீவசமாதியடையாத ஒரே சித்தர் ஸ்ரீ காகபுஜண்டர் தான்.

ஸ்ரீ காகபுஜண்டர் சித்தரின் அவதார நட்சத்திரம் பங்குனி மாத ஆயில்யம் நட்சத்திரம்.


ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளில் கீழ்க்கண்ட ஆலயங்களில் காகபுஜண்டரை தியான வழியில் வழிபட அவரின் ஆசிகள் கிடைக்கும்.


1. சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் வட்டத்தில் இருக்கும் ஆச்சாள்புரம். இங்கே திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம் நடந்திருக்கிறது. இங்கே இன்னும் ஸ்ரீகாக புஜண்டர் தவம் செய்து வருகிறார்.


2. கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் ஆலப்பாக்கத்தில் ஸ்ரீபுஜண்ட லிங்கேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கே பலருக்கு ஞான உபதேசம் அளித்திருக்கிறார்.


3. காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி நெடுஞ்சாலையில் மாங்கல் கூட்ரோட்டிலிருந்து புதுப்பாளையம் செல்லும் பாதையில் சோதியம்பாக்கம் இருக்கிறது. இங்கே சிவாகமவிதிப்படி ஸ்ரீகாகபுஜண்டரின் ஆலயம் அமைந்திருக்கிறது.


4. விழுப்புரம் அருகில் சின்னச்சேலம் அருகில் இருக்கும் ஊர் தென்பொன்பரப்பி. இங்கு காகபுஜண்டர் கோவில் இருக்கிறது.


5. நாகப்பட்டிணத்தில்

இருந்து வேளாங்கன்னிக்குச் செல்லும் பாதையில் ஸ்ரீபால்மொழி அம்மன்கோவில் உள்ளது. இங்கே ஸ்ரீகாகபுஜண்டர் பல யுகங்களாக தவம் செய்திருக்கிறார்.

இங்கே தான் ஆதி பரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி என்ற வாலைப்பெண்ணைத் தரிசித்தார்.


6. ராஜபாளையத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில், 20 கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது திருவழுக்குப்பாறை, ஆகும். வனத்துறை அனுமதியோடு மலை மேலே பத்து கி.மீ.தூரம் பயணிக்க வேண்டும். இங்கே அமுத கலசத்துடன் வாலைத் தெய்வம் அருள்புரிந்து வருகிறார். இங்கேயும் ஸ்ரீகாகபுஜண்டர் பல காலமாக தவம் செய்திருக்கிறார்.


7. திருப்பரங்குன்றம் மலைக்குப் பெயரே புசுண்டர் மலையே. இங்கே ஏராளமான சித்தர்கள் துறவிகளின் ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன.

இங்கேயும் பல காலமாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்திருக்கிறார்.


8. நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இங்கே மனிதகாலடித் தடம் படாத வனத்தினுள் காகபுஜண்டர் குகை இருக்கிறது.


9. இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் உத்திரகோச மங்கையில் அமைந்திருக்கும் சிவாலயத்தில் ஸ்ரீகாகபுஜண்டர் பலகாலம் தவமிருந்து ஜோதி வடிவாக சிவனுடன் ஐக்கியமாகி இருக்கிறார்.


10. சிவகெங்கை மாவட்டத்தில் இருக்கும் திருப்பத்தூருக்கு அருகில் இருக்கும் வைரவன்பட்டி. பூமி படைக்கப்பட்டதிலிருந்து ஸ்ரீகாலபைரவர் இங்கே ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவராக அருள் பாலித்து வருகிறார். இங்கே தவம் செய்யாத சித்தர்களே கிடையாது. ஸ்ரீகாகபுஜண்டரின் தவ ஆற்றல் இன்னும் இங்கே பரவிக் கிடக்கிறது.


11. கோயம்புத்தூருக்கு அருகில் இருக்கும் வெள்ளியங்கிரி மலை ஏராளமான சித்த ரகசியங்களை தன்னுள் வைத்திருக்கிறது. தகுந்த குருவின் துணையோடு தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து சிவமந்திரம் ஜபிக்க, வெகு விரைவாகவே ஸ்ரீகாகபுஜண்டரின் ஆசி கிட்டும்.


12. சீர்காழி சட்டநாதர் திருக்கோவிலில் அஷ்டபைரவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கே இன்னமும் சூட்சுமமாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்து வருகிறார்.