ஆயுள் பலம்; காஞ்சி காமாட்சி; அரூப மகாலட்சுமி! நோய் போக்குவாள்; ஆரோக்கியம் தருவாள்!
லோகமாதா என்று போற்றப்படுகிறாள் காஞ்சி காமாட்சி. உலகின் அனைத்து சக்தி பீடங்களுக்கும் தலைமைப் பீடமாகத் திகழ்வது காஞ்சி மாநகரம். இங்கே குடிகொண்டிருக்கும் காமாட்சி அன்னையே, சக்தி பீடங்களுக்கும் தலைவி.
ஆலயத்தில், காமாட்சி அன்னை சந்நிதிக்கு அருகிலேயே அமைந்துள்ளாள் அரூப லட்சுமி.
அழகும் தெய்வாம்சமும் உள்ள பெண்களை ‘மகாலட்சுமி மாதிரி இருக்கா’ என்று சொல்வோம். ‘அப்படியென்றால் அழகில் சிறந்தவள் நானே’ என கர்வம் கொண்டாள் ஸ்ரீமகாலட்சுமி. ‘இந்த கர்வம் உலகத்துக்கு நல்லதல்ல. கர்வமே ஒருவருக்கு எதிரி என்பதை எல்லோருக்கும் உணர்த்த வேண்டும்’ என முடிவு செய்த மகாவிஷ்ணு தன் விளையாட்டைத் தொடங்கினார்.
முதல்கட்டமாக, மனைவிக்கு சாபமிட்டார். தன் துணைவி என்றும் பாராமல் மகாலட்சுமியைச் சபித்தார். அவ்வளவுதான். அவளின் அழகு மட்டுமின்றி, அவளுக்கு உருவமே இல்லாமல் போயிற்று. ரூபம் இழந்து, அரூபமானாள் மகாலட்சுமி. அரூப லட்சுமியானாள். ‘கர்வமே சத்ரு என்பதை உணர்ந்தேன். சாபத்துக்கு விமோசனம் தந்தருளுங்கள் ஸ்வாமி’ எனக் கதறினாள். கன்ணீர் விட்டாள்.
பிறகு, மகாவிஷ்ணுவின் ஆணைப்படி, இங்கே காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அன்னையின் சந்நிதிக்கு வந்து, இங்குள்ள காயத்ரீ மண்டபத்தில் அமர்ந்து, உமையவளை நோக்கி கடும் தவம் புரிந்தாள்.
அவளின் தவத்தில் மகிழ்ந்த காமாட்சி அம்பாள், கருணையே உருவெனக் கொண்டு, பிலாகாஸம் எனும் பகுதியில் இருந்து வெளிப்பட்டு, மகாலட்சுமி க்கு எதிரில் வந்து நின்று, காட்சி தந்தருளினாள். உருவமே இல்லாமல் இருந்தவளின் முன்னே உலகத்துக்கே தாயான காமாட்சி அம்பாள் நின்றதும், மகாலட்சுமியின் சாபம் மொத்தமும் காணாமல் போனது. சாப விமோசனம் பெற்றாள்.
‘என் குழந்தைகள், அரூபலட்சுமியாக இருக்கிற உன் மீது குங்குமத்தை வைத்துவிட்டு, எடுத்துச் செல்வார்கள். இழந்த சௌந்தர்யத்தை மீண்டும் பெறுவாய். என் குழந்தைகளும் இழந்ததையெல்லாம் பெறுவார்கள். சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வார்கள். நோய் நீக்கி, ஆரோக்கியத்துடன் அவர்களை வாழச் செய்வாய்’ என அருளினாள் காமாட்சி அம்பாள்.
இன்றைக்கும் காஞ்சி காமாட்சி அம்பாள் சந்நிதியில் தரப்படுகிற குங்குமப் பிரசாதத்தை, காயத்ரி மண்டபத்தில் உள்ள ஸ்ரீஅரூபலட்சுமியின் மேல் வைத்துவிட்டு, அவளையும் வணங்கி, பிரசாதத்தை எடுத்துச் செல்கின்றனர் பக்தர்கள்.
ஸ்ரீமகாலட்சுமி சாப விமோசனம் கிடைக்கப் பெற்ற புண்ணியத் திருத்தலம் காஞ்சியம்பதி. காஞ்சி காமாட்சியையும் அவளுக்கு அருகே இருந்து கொண்டு, அகிலத்து மக்களின் நோயையும் தீயசக்தி யையும் விரட்டி, ஆரோக்கியம் தந்தருள்கிறாள்.
வீட்டில், காலையும் மாலையும் விளக்கேற்றி, காமாட்சி அன்னை துதிகளைப் பாடி, மகாலட்சுமி யை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். நெற்றியிலும் மாங்கல்யத்திலும் குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். சகல ஆரோக்கியமும் ஐஸ்வரியமும் தந்தருள்வாள் அரூபலட்சுமி!
No comments:
Post a Comment