Thursday, 11 November 2021

ரசவாதி

 நான் சமீபத்தில் படித்த அற்புதமான நூல் "ரசவாதி" என்னும் நூல்....


எழுதியவர் - : Paulo Coelho

தமிழில் மொழிபெயர்த்தவர்: நாகலட்சுமி சண்முகம்.


ஆங்கில மொழியில் எழுதப்பட்ட இந்த நாவலின் பெயர்

The Alchemist. எழுதியவர் பாலோ கொயலோ.


இந்த நாவலின் சிறப்பு இதுவரை உலகம் முழுவதும் 8.5 கோடிப் பிரதிகள் விற்றுச் சாதனை படைத்த பிரம்மாண்ட நூல்!


நூலின் சிறப்பு

--------------------------


ஆன்மாவிற்கு பரவசமூட்டுகிற ஞானத்தை உள்ளடக்கிய எளிய, சக்தி வாய்ந்த புத்தகம் இது.

சான்டியாகோ என்ற ஆடு மேய்க்கும் இளைஞன் ஒருவன், ஸ்பெயினில் உள்ள தன் சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு எகிப்தில் உள்ள பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி பாலைவனத்தின் வழியாக செல்லும் தீரமிக்க தேடல் பயணமே இந்தக் கதையின் மூலம்.

அங்கு செல்ல சிலர் அவனுக்கு உதவுகின்றனர். அந்தப் பொக்கிஷம் என்ன என்பது அவனுக்கோ, அவனுக்கு உதவுபவர்களுக்கோ தெரியாது.


பொக்கிஷத்தைத் தேடிச் செல்லும் இந்தப் பயணத்தில் சான்டியாகோ, தனக்குள் இருக்கும் பொக்கிஷத்தை கண்டறிகிற ஒன்றாக மாறுகிறது.

வசீகரமான, உணர்வுகளை தட்டி எழுப்புகிற, மனிதாபிமானத்தைப் போற்றுகிற இக்கதை பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பான "த்ரில்லர்".


சில விஷயங்களை நாம் தேடும் போது கிடைக்காது. ஆனால், நமக்கு கிடைக்கும் என்பது எழுதப்பட்ட விதி என்றால் நாம் அதை சென்றடைந்தே தீருவோம். அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இந்நூல் திகழ்கிறது.


இதன் கதாநாயகன் சான்டியாகோ காணும் கனவு எப்படி நனவாகிறது, சாகசங்கள் நிறைந்த அவனது பயணம் அவனுக்கும், நமக்கும் என்ன சொல்லித் தருகிறது?


இந்தக்கதையின் நாயகன் ஆடு மேய்க்கும் இடையன் சான்டியாகோ. நீங்கள் ஒவ்வொருவரும் அந்த இளைஞன் சான்டியாகோ தான். நீங்களும் உங்களுடைய பொக்கிஷத்தைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள். ஒருவனின் கதையே எல்லோருடைய கதை! ஒரு தனி மனிதனின் தேடலே ஒட்டு மொத்த மனித சமூகத்தின் தேடல் என்று முன்னுரையில் படித்தவுடன் இந்தக் கதையின் நாயகனாகவே இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் மாறி விடும் சூழல் உருவாகி விடுகிறது.

இது நமது ஆர்வத்தை வெகுவாக தூண்டி விடுகிறது.


இடையன்

------------------


சான்டியாகோ தனது செம்மறியாடுகளை ஓட்டிக் கொண்டு பல ஊர்களுக்கு சென்று ஆட்டு உரோமத்தை வழித்து எடுத்து அதை விற்று வியாபாரம் செய்து வருகிறான். ஒருநாள் பாழடைந்த தேவாலயத்தில் தனது ஆடுகளுடன் தங்க நேர்கிறது. தொடர்ந்து வரும் கனவு அன்றும் அவனுக்கு வருகிறது.


மாற்றத்திற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்ற குணம் கொண்ட அவன் உலகை முழுவதும் சுற்றிவர வேண்டும் என்ற ஆசை கொண்டவனாக இருந்தான். அதற்காக ஆடு மேய்க்கும் தொழிலே சிறந்தது என அதை தேர்ந்தெடுத்து ஊர் சுற்றி வியாபாரம் செய்து வந்தான்.


கனவு

-----------


கனவுகளுக்கு விளக்கம் அளிக்கும் ஒரு மூதாட்டி கிராமம் ஒன்றில் இருப்பதை அறிந்து அவளிடம் சென்று தன் கனவின் அர்த்தத்தை கேட்டான். கனவு இதுதான்:


தன் செம்மறியாடுகளுடன் புல்வெளியில் இருக்கும்போது ஒரு சிறுமி வந்து அவன் கையைப் பிடித்து எகிப்திய பிரமிடுகளின் முன்பு நிறுத்தி, நீ இங்கே வந்தால் இங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிற ஒரு புதையலைக் காண்பாய் என்று கூறுவதாக மூதாட்டியிடம் கூறினான்.


அதற்கு மூதாட்டி, நீ எகிப்து செல்ல வேண்டும். அங்குள்ள பிரமிடுகளில் உனக்கு ஒரு புதையல் காத்துக் கொண்டிருக்கிறது. அது உன்னைப் பெரிய பணக்காரனாக ஆக்கும் என்கிறாள். இந்தக் கனவு மிகவும் கடினமான ஒன்று எனவும் கூறுகிறாள்.

ஆனால், சான்டியாகோவிற்கு அது ஏமாற்றமாக இருக்கிறது.


தன் பயணத்தை தொடர்கிறான்.

புத்தகம் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவன் ஒருநாள் ஒரு இடத்தில் உட்கார்ந்து ஒரு புத்தகத்தை வாசித்து கொண்டிருக்கிறான். முதியவர் ஒருவர் அவனருகில் வந்து அமர்கிறார். இடையனிடம் பேச்சு கொடுத்து அவனுக்கு உதவுவதாக கூறுகிறார். அவர் சாலோம் நகர அரசன் நான் என்றும், தனது பெயரையும் கூறி உன்னுடைய செம்மறியாடுகளில் பத்தில் ஒரு பங்கு தனக்குத் தந்தால் புதையலை எப்படி எடுப்பது என சொல்லித் தருகிறேன் என்கிறார்.

நாம் புதையலை தேடி போவது இவருக்கு எப்படித் தெரிந்தது என ஆச்சரியப்படும் போது அவர் அங்குள்ள மணலில் இவனது சரித்திரத்தையே எழுதினார்.

பிரமிப்படைகிறான் சான்டியாகோ!


சாதகக் கொள்கை

--------------------------------


உன்னுடைய கனவை நீ நனவாக்க முயற்சிப்பதால் உனக்கு உதவுகிறேன் என்றவர், மறுநாள் வா என்று கூறிவிட்டு சென்று விடுகிறார்.

ஸ்பெயினிலிருந்து எகிப்து செல்ல நடுவில் உள்ள நீர் நிலையை கடந்தாக வேண்டும். அதற்கு, கப்பலுக்கு பணம் தர வேண்டும். இவனிடம் பைசா இல்லை. கனவை துரத்திச் செல்வதா அல்லது ஆடுகளை மேய்த்து அதே வேலையைச் செய்வதா என்ற குழப்பம்.

ஆனால், ஆறு ஆடுகளை மட்டும் விட்டுவிட்டு வேறு ஒரு நண்பன் இவனிடமிருந்த மற்ற ஆடுகளை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டான்.


மறுநாள் அந்த முதியவரை சந்திக்கும்போது எதிர்பாராமல் நடந்த இந்த நிகழ்வைக் கூற, அதற்கு அவர்

நீ உன் கனவை நிறைவேற்ற முயற்சிப்பதால் ஒரு சக்தி உனக்கு வெற்றியின் சுவையை கொடுத்துவிட்டு உன்னுடைய பசியைத் தூண்டுகிறது என்கிறார்.


எப்போதும் இப்படித்தான் நடக்கும். இதற்கு சாதகக் கொள்கை என்று பெயர் என கூறி உற்சாகப் படுத்துகிறார். அவனிடமிருந்து ஆறு ஆடுகளை வாங்கிக் கொள்கிறார்.


புதையலை கண்டுபிடிக்க நீ சகுனங்களை கவனமாகப் பின்தொடர வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.


தன் மார்பு கவசத்திலிருந்து ஒரு வெள்ளைக்கல், ஒரு கருப்புக்கல்லை எடுத்து அவனிடம் கொடுத்து இதற்கு  "உரிம்" என்றும் "தும்மிம்" என்றும் பெயர்.

உன்னால் சகுனங்களை புரிந்து கொள்ள முடியாத நேரங்களில் இந்தக் கற்களை பயன்படுத்தி கருப்புக் கல் என்றால் "ஆமாம்" என்றும் வெள்ளை என்றால் "இல்லை" என்றும் புரிந்து கொள். ஆனால், உன்னால் இயன்றவரை, நீ சொந்த தீர்மானங்களை எடு. நீ தேடும் புதையல் பிரமிடுகளில் இருக்கிறது என்று கூறிவிட்டு கிளம்புகிறார்.


புதையலைத் தேடிச் சென்று கொண்டிருக்கும் ஒரு சாகசக்காரன் நான் என்று தனக்குத் தானே கூறிக் கொண்டான், சான்டியாகோ!


மகிழ்ச்சியை விளக்கும் கதை

-----------------------------------------------------


ஒரு வியாபாரி தனது மகனை, ஒரு ஞானியிடம் மகிழ்ச்சிக்கான வழியை அவரிடமிருந்து கற்றுக் கொண்டு வர அனுப்புகிறார். அந்த இளைஞன் ஞானி இருக்கும் பெரிய அரண்மனைக்குச் சென்று அவரிடம் வேண்டிக் கேட்கிறான்.

"தனக்கு முழுமையாக சொல்லித்தர இப்போது நேரமில்லை. இரண்டு மணி நேரம் ஆகும். நீ அதற்குள் இந்த அரண்மணையை சுற்றிப் பார்த்து விட்டு வா" என உள்ளே அனுப்புகிறார்.

அதோடு, கையில் ஒரு தேக்கரண்டியைக் கொடுத்து அதில் 2 சொட்டு எண்ணெயை விட்டு, "நீ சுற்றி வரும்வரை இந்த எண்ணெய் துளிகள் கீழே சிந்தாமல், பத்திரமாக கொண்டு வா" என்று கூறி அனுப்புகிறார்.


இரண்டு மணி நேரம் ஆயிற்று! இளைஞன் அரண்மனையின் எல்லா பகுதிகளுக்கும் சென்று ஞானியிடம் திரும்பினான். ஞானி அவனிடம், "எல்லாம் சுற்றிப் பார்த்தாயா?" எனக்கேட்க "ஆம்" என்கிறான்.

தர்பாரில் இருந்த திரைச்சீலையைப் பார்த்தாயா? என்கிறார்.

இளைஞன் இல்லை என்கிறான்.


சுவரில் வரைந்திருந்த ஓவியங்கள், மலர்கள் பூக்கும் அழகான தோட்டங்கள் இவற்றை பார்த்தாயா? என்கிறார். இளைஞன் இல்லை என்கிறான்.

இப்படி பல சிறப்பு வாய்ந்த விஷயங்களை ஒவ்வொன்றாக கேட்க,

இளைஞன் " நான் இவை எதுவும் பார்க்கவில்ல. என் கவனம் முழுவதும் கரண்டியில் இருந்த எண்ணெய் துளிகள் கீழே சிதறாமல் இருப்பதில் இருந்தது" என்று தர்மசங்கடத்தில் நெளிந்தான்.


ஞானி, சரி! நல்லது. மீண்டும் ஒரு முறை சென்று பார்த்து விட்டு வா எனக்கூறி அதேபோல் ஒரு கரண்டியில் இரண்டு சொட்டு எண்ணெயை விட்டு அனுப்புகிறார்.

இளைஞன் திரும்பி வந்தான். ஞானி கேட்ட எல்லா இடங்களையும் பார்த்ததாக விவரித்தான். ஆனால், அவன் கையில் வைத்திருந்த கரண்டியில் எண்ணெய் துளிகள் இல்லை! கீழே சிந்தி விட்டது!


ஞானி அவனிடம், உனக்கு ஒரு அறிவுரை தருகிறேன். உலகின் அதிசயங்கள் அனைத்தையும் பார்க்கின்ற அதே நேரத்தில் , தேக்கரண்டியில் இருக்கும் எண்ணெய்த் துளிகளையும் மறக்காமல் இருப்பதுதான் மகிழ்ச்சிக்கான ரகசியம் என்கிறார்.


சான்டியாகோ எதுவும் கூறாமல் அமைதியாக நின்றான். அந்த முதியவர் கூறிய இந்தக் கதை அவனுக்குப் புரிந்திருந்தது.


ஒரு இடையன் பல இடங்களுக்கு ப் பயணிக்கக் கூடும். ஆனால், தனது செம்மறியாடுகளை மறந்து விடக் கூடாது என்பதே அது! என கதை முடிவடைகிறது.

என்ன நண்பர்களே! மிகுந்த அர்த்தம் பொதிந்த இக்கதை உங்களுக்கும் புரிந்திருக்கும். இது ஒவ்வொருவருக்கும் மிகவும் பொருந்தக் கூடிய கதை!


தொடர்ந்த பயணம்

-----------------------------------


ஆடுகளை விற்ற பணத்தை வைத்துக் கொண்டு ஆப்பிரிக்க தேசத்தில் காலடி வைக்கிறான், சான்டியாகோ.  ஒரு வழிப்போக்கனைப் பார்த்து பழகி பிரமிடு இருக்கும் இடத்தை காண்பிக்கப் போவதாக அவன் கூறியதை நம்பி தன் கையிலிருந்த பணம் முழுவதையும் ஒட்டகம் வாங்க (பாலைவனத்தில் பிரயாணிக்க) கொடுத்து அவன் ஏமாற்றி ஓடிப்போய் விட திக்கற்று நிற்கிறான் சான்டியாகோ!


தேர்ந்த வேலைக்காரன்

-------------------------------------------


மனம் தளறாமல் புதையலை நோக்கிய தன் பயணத்தை தொடர முடிவெடுத்தான் சான்டியாகோ. அவன் இருந்தது டேஞ்ச்சியர் எனும் நகரம். ஒரு குன்றின் மீது அமைந்திருந்த  படிக கண்ணாடிகளால் ஆன பொருட்களை விற்கும் கடை ஒன்றில் வேலை கேட்டு அங்கு சேர்கிறான். விற்பனை மிகவும் மந்தமாக இருந்த அந்தக் கடையின் வருமானம் இவன் வருகைக்குப் பிறகு, இவனது சாமர்த்தியமான நடவடிக்கைகளால் நன்றாக முன்னேறத் துவங்கியது.

ஆரம்பத்தில் சம்பளமாக சாப்பிட ஏதேனும் கொடுத்தால் போதும் என்று சேர்ந்த அவனுக்கு 120 ஆடுகள் வாங்கும் அளவிற்கு அவனுக்கு, அந்தக் கடையின் உரிமையாளர் விற்பனையில் கமிஷன் என்ற பெயரில் இவனுக்கு கொடுக்கும் அளவுக்கு வியாபாரம் வளர்ந்தது.


பாலைவனப் பயணம்

---------------------------------------


முதலில் இருந்த பணத்தை தொலைத்திருந்தாலும், மீண்டும் அவன் முயற்சியால் சம்பாதித்த கமிஷன் பணத்தை வைத்து வீடு திரும்பாமல் தனது கனவை நோக்கி, அதாவது புதையலைத் தேடி பிரமிடுகள் நோக்கி பாலைவனத்தில் பயணிக்கிறான்.


ரசவாதி

--------------


உடன் ஒரு ரசவாதியும் இணைகிறார். அவர் ஒரு ஆங்கிலேயர். செம்பு, வெள்ளி, இரும்பு என எந்த உலோகமானாலும் அதை தங்கமாக ஆக்கும் அதி அற்புத ரசவாதக் கல்லை கண்டுபிடிக்கும் நோக்கில் எகிப்து நோக்கிய பயணம் மேற்கொண்டவர் அவர்.


சுட்டெரிக்கும் வெயிலில் சஹாரா பாலைவனத்தில் பிரயாணிகள் பலரோடும் சேர்ந்து கொண்டு வீரதீர சாகசப் பயணம் செய்கிறான் சான்டியாகோ! உடன் வந்த ரசவாதியுடன் பல இன்னல்களை கடந்து,  இடையே, பாலைவன பழங்குடிகளிடையே கலவரம் மூண்டுவிட,

போய் சேர முடியுமா என்ற கேள்வி முதல்கொண்டு உயிரோடு இருப்போமா? என்ற கேள்வி வரை பல சிக்கல்களை கடந்து மணல் பிரதேசத்தைக் கடக்கிறார்கள்.


பிரபஞ்ச ஆன்மாவின் மொழி

----------------------------------------------------


உடன்வந்த ரசவாதி, ஈயம், தாமிரம் போன்ற உலோகங்களிலிருந்து தங்கமாக மாற்றும் ரசவாத திறமையை வைத்து ஒரு தட்டை தங்கமாக மாற்றி அதன் ஒரு பகுதியை சான்டியாகோ கையில் தருகிறார். அதை அவன் பத்திரமாக வைத்துக் கொள்கிறான்.

பழங்குடி குழு ஒன்றிடம் இவர்கள் மாட்டிக் கொள்கின்றனர்.

சான்டியாகோ விற்கு பிரபஞ்ச ஆன்மாவின் மொழி தெரியும் என அவர்களிடம் ஒரு பெரிய பாலைவனக் காற்று இங்கு வந்தடையும் என்றும் ரசவாதி கூறுகிறார். மணலோடு பிரபஞ்ச மொழியில் சான்டியாகோ வேண்டிக் கொள்ள அங்கே மணல் புயல் உருவாகிறது.  பழங்குடி கூட்டத்தினர், இவர்கள் இருவரையும் அதிசயமாகப் பார்த்து மேலே பிரயாணம் செய்ய அனுமதிக்கிறார்கள்.


பிரமிடுகள் இருக்கும் பகுதிக்கு வெகு அருகில் வந்துவிட, சான்டியாகோ இதுதான் தனது கனவு இடம் என பாலைவன மணலை தோண்டுகிறான், புதையலைத் தேடி!


புதையல்

----------------


ஆழம் சென்றாலும் எதுவும் தட்டுப்படவில்லை! திடீரென ஒரு பழங்குடி இன கூட்டம் வந்து அவனை விசாரித்து  உதைக்கிறார்கள். உடலெங்கும் காயங்களோடு கீழே சாய்கிறான். இவனிடமிருந்த தங்கத்துண்டை எடுத்து ஏது உனக்கு? எனக் கேட்க இவன் நான் புதையலைத் தேடுகிறேன் என்கிறான்.

அப்போது அந்தக் கூட்டத்தின் தலைவன், மற்றவர்கள் சான்டியாகோவை அடிப்பதை நிறுத்தி இவன் எங்கோ திருடிக் கொண்டு வந்திருக்கிறான் விட்டு விடுங்கள் என்கிறார்.

சான்டியாகோ, என் கனவை தொடர்ந்து புதையலை தேடி வந்தேன் என்கிறான் ஈனக்குரலில்!


அந்தத் தலைவன் சிரித்துக் கொண்டே, *இளைஞனே! எனக்கும் ஒரு கனவு முன்பொரு சமயம் வந்தது. ஸ்பெயின் நாட்டில் ஆடுகள் மேயும் புல்வெளிப் பிரதேசம் ஒன்றில் பழைய இடிந்து போன தேவாலயம் ஒன்றின் ஊடே ஒரு சிக்கமோர் மரத்தடியின் வேர்ப்பகுதியில் தோண்டினால் ஒரு புதையல் கிட்டும் என்று!

அந்தக் கனவை நம்பி பாலைவனம் கடந்து,கடல் கடந்து வேறு தேசம் சென்று பார்க்க நான் ஒன்றும் முட்டாளில்லை! சரி நீ போய் பிழைத்துக் கொள்*


 என்று ஏளனச் சிரிப்பு சிரித்துக் கொண்டே தன் சகாக்களோடு சென்று விடுகிறான்.


இதைக் கேட்ட சான்டியாகோ மிகுந்த உற்சாகத்தோடு எழுந்து ஆஹா, நான் என் புதையலை கண்டுபிடித்தேன் என்று மகிழ்ச்சியாக கூக்குரலிடுகிறான்.


நம் சான்டியாகோ அந்த ஸ்பெயின் தேசத்தில் அந்த இடிந்து போன தேவாலயத்தில் ஆடுகளை மேய்த்தவாறு உறங்கிக் கொண்டிருந்ததை நாம் வாசித்திருந்தோம்.

அங்குதான் அவனுக்கு பிரமிடுகளில் புதையல் இருப்பதாக கனவு வந்தது. அந்தக் கனவைத் தொடர்ந்து அவன் வெகுதூரம் பயணித்தான்.


மீண்டும் ஸ்பெயின்

-----------------------------------


சில நாட்கள் கழித்து,

அவன் முன்பு ஆடுகளை மேய்த்தபடி இருந்த அந்த தேவாலயம் அருகே சிக்கமோர் மரம் அருகே இப்போது நின்றிருந்தான். கையில் ஒரு மண்வெட்டி!

தோண்ட ஆரம்பித்தான். சற்று நேரத்தில் பொற்காசுகள் அடங்கிய பேழை, விலையுயர்ந்த கற்கள், ஆபரணங்கள் இருந்த புதையல் அவனுக்கு சொந்தமானது!


தங்கள் கனவுகளைத் தொடர்ந்து செல்பவர்களுக்கு வாழ்க்கை தாராளமாக அள்ளி வழங்குகிறது என்று சான்டியாகோ தனக்குள் சொல்லிக் கொள்வதாக இந்தக் கதை முடிவடைகிறது....


பிடித்த வரிகள் மற்றும் மேற்கோள்கள்

--------------------------------------------------------------------


1. தங்களுடைய பிறவி நோக்கம் என்ன என்பதை தங்களுடைய இளமைப் பருவத்தில் எல்லோருமே அறிந்திருக்கின்றனர். ஆனால், காலம் செல்ல, செல்ல தங்களுடைய பிறவி நோக்கத்தை தங்களால் அடைய முடியாது என்று ஏதோ ஒரு மர்மமான சக்தி அவர்களை நம்ப வைத்து விடுகிறது.


2. நீ யாராக இருந்தாலும் சரி, நீ செய்வது எதுவாக இருந்தாலும் சரி, நீ உண்மையிலேயே ஒன்றை விரும்பும்போது, அந்த ஆழ்விருப்பம் பிரபஞ்ச ஆன்மாவிலிருந்து முளைக்கிறது. அதுதான் இப்புவியில் உனது பிறவி நோக்கம்.


3. நீ உண்மையிலேயே ஒன்றை ஆழமாக விரும்பும்போது, அதை நீ அடைவதற்கு இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் உன் உதவிக்கு வரும். இது 120 வருடங்களுக்கு முன்பாக நம் நாட்டில் அவதரித்த சுவாமி விவேகானந்தர் கூறிய பொன்மொழியை ஒத்து இருக்கிறது என்பது நினைவில் நிற்கிறது!


4. நான் (கனவை மெய்ப்பிக்கும் சக்தி) ஏதோ ஒரு வடிவத்தில் எப்போதும் தோன்றுகிறேன். சிலசமயம் ஒரு தீர்வின் வடிவிலோ அல்லது ஒரு நல்ல யோசனையின் வடிவிலோ தோன்றுவேன். விஷயங்கள் சுலபமாக நடக்க நான் உதவுகிறேன். இன்னும் பல விஷயங்களை செய்கிறேன். ஆனால், பெரும்பாலான சமயங்களில் நான் (சக்தி) அவற்றைச் செய்துள்ளதை மக்கள் உணருவதில்லை.


5. எது எப்படியோ, வாழ்வில் எல்லாவற்றுக்கும் ஒரு விலையைக் கொடுத்தாக வேண்டும்.


6. உன்னால் இயன்றவரை, நீ உன்னுடைய சொந்த தீர்மானங்களை எடு.


7. சகுனங்களை புரிந்து கொள்ள ஏராளமான பொறுமை தேவை

 

8. உலகின் அதிசயங்கள் அனைத்தையும் பார்க்கின்ற அதே நேரத்தில் தேக்கரண்டியில் இருக்கும் எண்ணைய்த் துளிகளையும் மறக்காமல் இருக்க வேண்டும்.


9. மாற்றத்திற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்


10. ஒரு கனவு நனவாவதற்கான சாத்தியக்கூறு இருப்பதுதான் வாழ்க்கையை சுவாரசியமாக ஆக்குகிறது


11. கனவுகள் என்பவை, கடவுளின் மொழி


12. வாழ்வில் எளிமையான விஷயங்கள்தான் மிகவும் அசாதாரணமானவையாக இருக்கின்றன


13. பிறர் எப்படி தங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது குறித்து எல்லோருக்கும் ஒரு தெளிவான யோசனை இருக்கிறது. ஆனால் தான் எப்படி தன்னுடைய வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது பற்றிய ஒரு தெளிவான யோசனை யாருக்கும் இருப்பதில்லை


14. உலகிலுள்ள புத்தகங்கள் எல்லாம் தங்கள் சொந்தத் தலைவிதியை நிர்ணயித்துக் கொள்ளுவதற்கான திறன் மக்களுக்கு இல்லாதது பற்றி விளக்குகிறது


15. உலகின் மாபெரும் பொய் எது?

நம்முடைய வாழ்வில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், நமக்கு நிகழ்கின்ற விஷயங்களுக்கான கட்டுப்பாட்டை நாம் இழந்து விடுகிறோம். பிறகு, நம்முடைய தலைவிதி கட்டுப்படுத்தத் தொடங்குகிறது என்பதுதான் உலகின் மிகப்பெரிய பொய்


16. நானும் மற்ற எல்லோரையும் போலவே உள்ளது உள்ளபடி உலகத்தைப் பார்ப்பதற்கு பதிலாக, அது எப்படி இருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றோனா அதை அப்படிப் பார்க்கிறேன்.  (சான்டியாகோ இப்படி நினைக்கிறான்).


17. தெளிவான கேள்விகளைக் கேட்பதற்கு முதலில் தனக்கு என்ன வேண்டும் என்பதை ஒருவன் அறிந்திருக்க வேண்டும்.


18. வார்தைகளை சாராத ஒரு மொழி இருக்கத் தான் செய்கிறது. செம்மறியாடுகளுடன் அந்த அனுபவம் சான்டியாகோ விற்கு கிடைத்திருந்த்து. மொழி தெரியாத ஆப்பிரிக்காவில் மனிதர்களிடம் அது நிகழ்ந்தது. (மொழி ஒரு பிரச்னையே அல்ல).


19. பசியோடு இருக்கும் எவரொருவருக்கும் உணவளிக்க வேண்டும் என்று குரானில் கூறப்பட்டுள்ளது.


20.நீயும், நானும் நம்முடையமனங்களில் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களைத் துடைத்தெறிந்து நம்முடைய மனங்களைத் தூய்மையாக்க வேண்டும்.


21. அதிர்ஷ்டம் நம் பக்கத்தில் இருக்கும் போது அதை நாம் நமக்கு அனுகூலமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிர்ஷ்டம் நமக்கு எந்த அளவிற்கு உதவுகிறதோ, அதே அளவிற்கு நாம் அதற்கு உதவ வேண்டும். இதுவே சாதகக் கொள்கை அல்லது துவக்க ஆட்டக்காரர்களின் அதிர்ஷ்டம் எனப்படுகிறது


22. எல்லோரும் புரிந்து கொள்கின்ற மொழி, உற்சாகத்தின் மொழி அன்பு எனப்படுவதாகும்.


23. வெற்றிகரமாக செய்வதற்கு தோல்வி குறித்த பயம் இருக்கக் கூடாது.


24. ஒருசமயம் அந்த சகாரா பாலைவனம் கடலாக இருந்திருக்கிறது


25. பிரபஞ்ச மொழியைப் புரிந்து கொள்வதற்குத் துணிச்சல்தான் மிகவும் இன்றியமையாத பண்புநலன்.


26. உன் இதயம் சொல்வதை காது கொடுத்துக் கேள். எல்லாம் அறிந்தது அது


27.தேடலின் ஒவ்வொரு நொடியும் கடவுளுடனான ஒரு சந்திப்பு


28.மகிழ்ச்சியாக இருக்கின்ற அனைவருக்குள்ளும் கடவுள் இருக்கிறார்


29. பொழுது விடிவதற்குச் சற்று முன்பாகத் தான் இரவு மிக அதிக இருட்டாக இருக்கிறது


30. உன்னுடைய பயங்களுக்கு அடிபணிந்து விடாதே. நீ பயந்தால் உன் இதயத்திடம் பேச முடியாது


31. ஒரே ஒரு விஷயம்தான் ஒருவன் தன் கனவை அடைவதைச் சாத்தியமற்றதாக ஆக்குகிறது. தோல்வி குறித்த பயம்தான் அது


32. நாம் முன்பு இருந்ததை விட அதிக சிறப்பானவர்களாக ஆகக் கடினமாக முயற்சிக்கும் போது, நம்மைச் சுற்றி இருக்கின்ற எல்லாமே சிறப்புறுகின்றன


33. அராபிய தேசத்து பழமொழி:

*ஒரு முறை நிகழ்கிற அனைத்தும் இன்னொரு முறை நிகழ்வதற்கான வாய்ப்பே இல்லை!

ஆனால், இரண்டு முறை நிகழ்கின்ற அனைத்தும் மூன்றாவது ஒருமுறை நிச்சயமாக நிகழும்*


34. தன்னுடைய கனவை நனவாக்குவதுதான் ஒருவனுடைய ஒரே கடமையாகும்...


No comments:

Post a Comment