Sunday 3 March 2019

ஸ்ரீயஞோபவீதேஸ்வரர்

பொதுவாக அவிட்ட நட்சத்திரம் கூடிய ஆவணி நாளிதான் பூணூல் அணிவது சிறப்புடையதாகும். பிரளயத்திற்குப் பின் சிருஷ்டி ஏற்பட்டபோது கிராத மூர்த்தியாக அவதாரம் கொண்ட சிவபெருமான் ஜீவ அணுக்கள் கூடிய குடத்தை மேருமலையில் வைத்துத் தன் வில் கொண்டு சிருஷ்டி ஜோதியை ஏவியபோது அத்திருக்கடம் உடைந்து அதன் மேலிருந்த பூணூல், மாலை போன்றனவும் பல இடங்களில் தெறித்து விழுந்தன. இவ்வாறு அதன் பூணூல் விழுந்த இடத்தில் ஆதிசிவனே ஸ்ரீயஞோபவீதேஸ்வரராக (கும்பகோணம்) எழுந்தருளினார். எனவே உபநயனம், ஆவணி அவிட்டம் மட்டுமல்லாது எப்போது பூணூல் அணிந்திடினும் கும்பகோணம் ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரருக்குச் சாற்றிய பூணூலை அணிவதே மிகவும் விசேஷமானதாகும். இன்றைக்கும் ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரர் திருவடியில் பூணூலை வைத்து அவருக்குச் சாற்றி அதனையே அணிகின்ற நல்வழி முறையைப் பின்பற்றுவோர் பலர் உள்ளனர். இதனால் பூணூலில் படிந்திருக்கும் சகல தோஷங்களும் நீங்கி ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் உரு ஏற்றுவதற்காக மிகச் சிறந்த தெய்வீகப் பெட்டகமாக அது மிளிர்கின்றது.
ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரரின் சந்நிதியில்தான் ஸ்ரீமகாவிஷ்ணுவே முன்னின்று ஸ்ரீநாரதருக்கு உபநயனம் செய்வித்தார். இவ்விடத்தில் மிக எளிமையான முறையில் உபநயனத்தை நடத்திக் குறைந்தது 108 பேருக்கு அன்னதானம் அளித்திட பித்ரு லோக மகரிஷிகளே ஸ்ரீநாரதரின் தலைமையில் நேரில் சூட்சுமாய்ப் பிரசன்னமாகி ஆசிர்வதிக்கின்றனர். பெறற்கரிய பாக்கியமிது!
பூணூலில் உள்ள முடிச்சிற்கு பிரம்ம முடிச்சு என்று பெயர். இதை கைகளுக்குள் அடக்கிப் பிடித்தவாறு காயத்ரீ மந்திரத்தை ஜபிப்பர். இவ்வாலயத்தில் ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரருக்குச் சாற்றிய பூணூலை அணிந்து பிரம்ம முடிச்சை வலது உள்ளங்கைக்குள் இருத்தி காயத்ரீ மந்திரத்தை ஜபிப்போருக்கு ஞாபக சக்தி விருத்தி அடைவதோடு மனக்குழப்பங்கள் நீங்கி வாழ்க்கையில் கணவன், மனைவி, குழந்தைகளிடையே பரஸ்பர அன்பும் ஏற்படும். ஆன்மீகத்தில் முன்னிலை பெற விழைவோருக்கு ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் பீஜாட்சர சக்திகள் இன்றியமையாததாகும்


பிரம்மச்சாரிகள், மூன்று புரிகளையும், திருமணம் ஆனவர்கள் ஆறு புரிகளையும் கொண்ட பூணூலை அணிய வேண்டும். தாய், தந்தையரை இழந்தோர் ஒன்பது புரிகளை அணிந்திடுக.
பூணூலை எக்காரணம் கொண்டும் கழற்றுதல் கூடாது.
நீரிலோ அல்லது அசந்தர்ப்பங்களினாலோ, பூணூல் அறுந்தாலோ, தொலைந்தாலோ அல்லது கழன்றாலோ அதை மீண்டும் அணியலாகாது. உடனே (ஸ்ரீயஞோபவீதேஸ்வரருக்குச் சாற்றிய) புதிய பூணூலை அணிதல் வேண்டும். இதற்காகவே பல பூணூல்களை ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரருக்குச் சாற்றிக் கைவசம் வைத்திருப்பது நலம். காலை, மதியம், மாலை மூன்று வேளைகளிலும் கண்டிப்பாக ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபிக்க வேண்டும். இம்மூன்று வேளைகளிலும் தர்ப்பைப் பாயில் கிழக்கு/அல்லது வடக்கு/மேற்கு நோக்கி அமர்ந்து ஜபித்திட வேண்டும். ஏனைய நேரங்களில் எந்நேரமும், எப்போதும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்திடலாம். 32, 64, 108 என்று குறுகிய எண்ணிக்கைக்குள் முடித்திடாது குறைந்தது 1008 முறையேனும் ஜபித்திடுக மனதினுள் அதாவது மானசீகமாக ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபிக்கப் பழகிடில் ஒருமணி நேரத்தில் நின்று, அமர்ந்த, நடந்த நிலைகளில் கூட குறைந்த்து 300 முறை எவரும் ஜபித்திடலாம், ஆரம்பத்தில், கலியுக கர்ம பரிபாலனத்திற்கேற்ப ஒரு நாளில் குறைந்தது 10,000 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்தல் உத்தமமானது என்பதே சித்தர்களின் அருள்வாக்காகும். இதனால் அவரவர்க்குரிய கர்மசுமைகளின் பளுவை உணராது இறை நினைவுடன் பொழுதில் ஒன்றுவது எளிமையாகிறது.