இது முக்கியமான தகவல்.
சித்தர்களின் குரல் என்ற முகநூலில் ஆசான் சிவசங்கரன் அய்யா எழுதியது.
Copy and paste
"அகத்தியர் சௌமிய சாகரம்"
Vadha saumyam 1200 {பாகம் -1}
------------------------------------------------------
{பல நண்பர்களின் வேண்டுதலுக்கு இணங்க அகத்தியர் பெருமானால் உலகுக்கு அருளப்பட்ட இது வரை ஓலை வடிவிலேயே விளங்கிய அரிய பொக்கிசமாகிய இந்த அகத்தியர் சௌமிய சாகரம் என்ற மிக பெரிய பொக்கிஷத்தை சித்தர்களின் குரல் வாயிலாக உலகம் அறிந்து பயன் பெற அகத்தியர் பெருமானின் பாதம் பணிந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்... நன்றி}
(1) காப்பு-1
சோதி எனும் மனோன்மணியைத் தியானஞ் செய்து
சுகமான சௌமிய சாகரத்தைப் பாட
ஆதிஎனுங் கணபதியும் வல்லபையுங்காப்பு
அரசான பிரம்மனொடு சரஸ்வதியுங்காப்பு
நீதியெனும் மாலுடனே லட்சுமியுங் காப்பு
நின்றிலங்கும் ருத்திரனும் உருத்திரியுங்காப்பு
ஓதியதோர் மயேஸ்பரனும் மயேஸ்பரியுங்காப்பு
உறுதியுள்ள சதாசிவனும் மனோன்மணியுங் காப்பே
சௌமியம் என்றால் ரம்மியமான, குளுமையானது, மனதுக்குகந்தது என்று பொருள். ஆயிரத்து இருநூறு பாடல்களைக் கொண்ட சௌமிய சாகரம் என்ற நூலைத் தொடங்கும்முன் அகத்தியர் காப்புச் செய்யுளில் பல தெய்வங்களை வணங்குகிறார். அவர் வணங்கும் தெய்வங்கள் நம் உடலில் உள்ள சக்தி மையங்களான சக்கரங்களின் அதிதேவதைகள். மூலாதரத்தின் அதிபதி கணபதியும் அவரது சக்தியான வல்லபையும். அதே போல் இப்பாடலில் உள்ள பிற தெய்வங்களும் முறையே சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம் விசுத்தி ஆகிய சக்கரங்களின் அதிதேவதைகள் ஆவர்.
~~~~~~~~~~~~~~~~~~~
(2) காப்பு-2
மணியான ரவிமதியுஞ் சுழினைக் காப்பு
மகத்தான வேதியர் தன் பாதங்காப்பு
கணியான நால்வேத அந்தங் காப்பு
கருணைவளர் சாஸ்திரமோர் ஆறுங்காப்பு
அணியான ஆதார சொரூபங் காப்பு
அருளான அமிர்தரச போதங் காப்பு
தனியான பராபரமாஞ் சோதி காப்பு
சதாநந்தப் பூரணமாந் தாய்காப்பாமே
சக்கரங்களின் அதிபதிகளை வேண்டிய பிறகு அகத்தியர் அடுத்து சக்கரங்களின் மூலம் செயல்படும் சக்திகளைக் காப்பாக வேண்டுகிறார். சூரியன் சந்திரன் சுழினை என்னும் மூன்று நாடிகள் ஆன்மீகத்தில் முக்கியமானவை. இவற்றை அடுத்து அவர் வேதியரை வேண்டுகிறார். பொதுவாக இந்த சொல் பிராமணரைக் குறிப்பிட்டாலும் அதன் உட்பொருள் வேதம் அல்லது அறியப்பட வேண்டிய அறிவின் உட்பொருளான இறைவனை, வேதத்தைத் தனது அங்கமாக உள்ளவனைக் குறிக்கும். கணி என்பது
கணத்தின் தலைவன் என்று பொருட்படும். அறிவு தரும் விஷயங்கள் என்னும் கணத்தில், கூட்டத்தில் தலையாய இடத்தை வகிப்பது வேதாந்தம். இதனை அடுத்து அகத்தியர் ஆதார சொரூபத்தை காப்பாக இருக்க வேண்டுகிறார். ஆதாரம் என்பது சக்கரங்களைக் குறிக்கும். அதில் ஜீவன் உணர்வுநிலையில் இருக்கும். இந்த உணர்வு நிலையே, அறிவு நிலையே ஜீவனின் சொரூபமாகும். அதனால் அகத்தியர் உணர்வு நிலைகளை இங்கு விளிக்கிறார் என்று கொள்ளலாம். ஆதார சொரூபம் என்பது அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கும் இறைவனை, பரவுணர்வைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். அமிர்த ரச போதம் என்பது லலாட சக்கரத்திலிருந்து ஊறும் அமிர்தபானம் மற்றும் அது அளிக்கும் உச்ச ஞானம் ஆகியவற்றைக் குறிக்கும்.
இறைவனின் ஒளி உருவம் பராபரம். அதை அடையச் செய்வது சக்தி அல்லது பராபரை. அவளே பரமபோதம். அதனால் அகத்தியர் சக்தித் தாயை சதானந்த பூரணத்தைக் கடைசியாக, காப்பாக வணங்குகிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~
(3) காப்பு-3
தாயான சிவயோக மூலங்காப்பு
சகலகலைக் கியானமணிபீடங்காப்பு
மாயாத வாசிமலர் அந்தங் காப்பு
மணி மந்திர நாதவொலி கீதங் காப்பு
சாயாத அடிமுடியும் நடுவுங் காப்பு
சௌமியமாம் தேவாதி ரிஷிகள் காப்பு
தேயாத வாசியடா மவுனங் காப்பு
சிவசிவா அகாரமுடன் உகாரங் காப்பே
தாயான சக்தியே சிவயோகம் எனப்படும் சிவனுடன் சேர்த்தலை நிகழ்த்துகிறாள். மலர் அந்தம் என்பது பூக்களாக குறிக்கப்படும் சக்கரங்களின் முடிவு, பரவெளியைக் குறிக்கும். அகத்தியர் நாதம் ஒலி கீதம் என்று குறிப்பிடுகிறார். நாதம் என்பது ஒலி தோன்றுவதற்கு முற்பட்ட நிலை. இதிலிருந்து ஒலிதோன்றி அதுவே பாடலாக கீதமாக மாறுகிறது. சாயாத அடி முடி நடு என்பது சகஸ்ராரம் அல்லது துவாதசாந்தம், மூலாதாரம் மற்றும் ஆக்னையைக் குறிக்கும். வாசியின் மவுனம் என்பது சித்தர்கள் சொல் கடந்த வெளி என்று குறிப்பிடும் சத்தத்தின் முதல் நிலையாகிய பரா நிலையைக் குறிக்கும். அகாரம் உகாரம் என்பது சிவ மற்றும் சிவாவை அதாவது சிவனையும் சக்தியையும் குறிக்கின்றன. குறில் சிவனையும் நெடில் சக்தியையும் குறிக்கிறது அதாவது அ என்பது சிவன் ஆ என்பது சக்தி.
~~~~~~~~~~~~~~~~~~~
(4) காப்பு-4 பீஜசாரம்
உகாரமென்ற நாதமடா சத்திகாப்பு
உறுதியுள்ள அகாரமடா சிவமே காப்பு
சிகாரமென்ற சோதியடா வாலை காப்பு
சிவசிவா மகாரமென்ற மவுனங் காப்பு
வகாரமென்ற பஞ்ச கண தீக்ஷை காப்பு
மகத்தான சடாதார ஆதிகாப்பு
நகாரமுடன் அகாரவரை ஓங்காரத்தில்
நாடிநின்ற சூட்சமடா ஆதி காப்பே
இப்பாடல் சித்தமார்கத்தில் முக்கியமான பீஜாட்சரங்களை விளக்குகிறது.
அகாரம்- சிவன், உகாரம்- சக்தி, சிகாரம்- வாலை அல்லது குண்டலினி, மகாரம்- மௌனம் அல்லது மாயை தோற்றுவித்த வெளிப்பாடு நிலையின் முடிவு, வகாரம்- பஞ்ச கண தீக்ஷை அல்லது ஐம்பூதங்களின் வெற்றி.
ஆறு ஆதாரங்களின் ஆதி என்பது ஆறு சக்கரங்களின் அதிபதியான இறைவன் அல்லது விழிப்புணர்வு. நகாரம் முதல் அகாரம் வரை ஓங்காரத்தில் என்பது நமசிவாய என்ற பஞ்சாட்சரம், அ உ ம என்னும் மூன்று நிலையான ஓம்காரம் முதல் அதன் ஒருமை நிலை, அதாவது எல்லா வெளிப்பாடுகளையும் உட்கொண்ட ஓம்காரம். நாடி நின்ற சூட்சம் என்பது பரவுணர்வை நாடி நின்ற ஆத்மா அல்லது ஆத்மாவை நாடி நின்ற இறைவன் அல்லது நாடியில் இருக்கும் இறைவன் என்ற சூட்சுமம் என்றும் பொருள்படும்.
~~~~~~~~~~~~~~~~~~~
(5) காப்பு-5
ஆதிகுரு வேதியர்தன் பாதம் போற்றி
அருள் பெருகும் கேசரியைப் பூசை பண்ணி
சோதிஎனுஞ் சௌமிய சாகரத்தைப் பாட
சுயஞ் சோதி ஆதியந்தஞ் சுழினை காப்பு
நீதியுடன் ஆதார மூலந்தன்னில்
நின்றிலங்கும் பிரணவமாம் அயனார் காப்பு
ஓதியதோர் கலைமகளும் பூமகளுங்காப்பு
உண்மையுள்ள செயமகளுங் காப்புத்தானே
இப்பாடலுடன் அகத்தியர் தனது காப்புச் செய்யுள்களை முடிக்கிறார். முதலில் ஆதிகுரு வேதியர் என்று கூறுவதன்மூலம் அகத்தியர் முன் பாடலில் தான் கூறிய வேதியன் என்பது சிவனே என்று காட்டுகிறார். அருள் பெருகும் கேசரி என்பது கேசரி முத்திரையினால் லலாடத்திலிருந்து அமிர்தம் ஊறுவதைக் குறிக்கிறது. கேசரி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. கேசரி என்பதை க +சரி என்று பிரித்தால் அது வானத்தில் சஞ்சரிப்பவன் என்று பொருள்படும். இவ்வாறு அகத்தியர் பரவெளியில் இருக்கும் பரவுணர்வை இதன் மூலம் குறிப்பிடுகிறார். சுழினை என்பது ஆக்ஞை சக்கரம். சில புத்தகங்கள் அதை சுழுமுனை நாடி என்று குறிப்பிடுவது சரியல்ல. இங்குதான் வெளிப்பாடுடைய உலகம் தோன்றி மறைகிறது. ஆக்ஞைக்கு மேலே இருக்கும் தத்துவங்கள் சுத்த தத்துவங்கள். அதற்குக் கீழே இருப்பவை அசுத்த மாயையால் ஆனவை. ஆக்ஞையில் ஓம்காரம் வெளிப்பாற்ற ஒருமை நிலையில் இருக்கிறது. மூலாதாரத்தில் பிரம்மா ஓம்காரமாக இருக்கிறார் என்கிறார் அகத்தியர். இங்கு பிரணவம் முழு வெளிப்பாடுடன் இருக்கிறது. இதனை அடுத்து அகத்தியர் சக்திகளான சரஸ்வதி, லட்சுமி, வெற்றி மகள் ஆகியோரை இந்த முயற்சி தடையறச் செல்வதற்கு வணங்குகிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~
(6) அகத்தியர் பெருமான் இந்த நூலை எழுதிய விதம்
தானான சதுரகிரி மூலங் கண்டு
தவமான சிவயோகத் திருக்கும்போது
கோனான வேதியரை அடுத்து நானும்
குறியான பூரணத்துக்கு உறுதி கேட்டேன்
ஊனான சத்தி சிவம் என்று பின்னும்
உண்மையுள்ள அகஸ்தியனே வாவாவென்றார்
தேனான வடமொழியைக் கையில் ஈந்து
திருவான பூரணத்தின் திறஞ் சொன்னாரே
அகத்தியர் தான் இந்த நூலை எவ்வாறு தொடங்கினேன் என்று இப்பாடலில் கூறுகிறார். அவர் சதுரகிரி எனப்படும் மூலாதாரத்தில் ஆத்ம நிலையில் சிவத்துடன் சேர்ந்த யோக நிலையில் இருக்கும்போது சிவ சக்தியை நெருங்கி பூரணத்தைப் பற்றிக் கூறுமாறு வேண்டியதாகவும் அப்போது அவர்கள் தன்னை அருகில் வா என்று அழைத்து வடமொழியில் இருந்த ஒரு நூலைக் கையில் கொடுத்து பூரணத்தைப் பற்றிக் கூறினார் என்கிறார். சதுரகிரி என்பது நாற்கோணத்தைக் கொண்ட மூலாதாரத்தைக் குறிக்கும். நாற்கோணம் நான்கு திசைகளைக் குறிக்கும். மூலாதாரத்தில் ஆத்மா துரியாதீத நிலையில் சிவனுடன் சேர்ந்து இருக்கும். இந்த நிலையை அகத்தியர் குறிப்பிடுகிறார். பூரணம் என்பது பொதுவாக சக்தியைக் குறிக்கும். சிவனைக் காரணம் என்றும் சக்தியைப் பூரணம் என்றும் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். பூரணம் என்பது ஆத்மா சிவநிலையை அடைவதற்கு முந்தைய நிலையையும் குறிக்கலாம். ஊனான சத்தி சிவம் என்று பின்னும் என்ற தொடர் ஒரு முக்கியமான கருத்தை விளக்குகிறது. நமது உடல் சக்தி அதில் உயிர்ப்பை அளிப்பது சிவம். இதைத்தான் அகத்தியர் இங்கு கூறுகிறார். இப்பாடலின் மூலம் சிவன் தனக்கு அளித்த ஒரு வடமொழி நூலின் தமிழ் வடிவமே இந்த சௌமிய சாகரம் என்பது புரிகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~
(7) அகத்தியர் பெருமான் இந்த நூலை வடிவமைத்த விதம்
திரஞ்சொன்ன மகிமையை நான் பெற்றுக்கொண்டு
திருவான வடமொழியை நன்றாய்ப் பார்த்து
பரஞ் சேர்ந்த பூரணமாம் அறிவிலேறி
பாடினேன் சௌமிய சாகரத்தை மைந்தா
சாரமான வாசியில்நான் உறுதி கொண்டு
சந்தோஷமாக ஈராறு நூறும்
வரஞ் சேர்ந்த தவமதனால் பாடி நானும்
மகத்தான வேதியர்முன் வைத்தேன் தானே
சிவனிடமிருந்து உபதேசம் பெற்ற அகத்தியர் அவரிடமிருந்து வடமொழியில் ஒரு நூலையும் பெற்றார். அந்த நூலை ஊன்றிப் பார்த்து, பரத்துடன் சேர்ந்த பூரணமாம் பரையான அறிவுநிலையில் நின்று, வாசியை உறுதியாகப் பற்றியபடி வரத்தினால் தான் பெற்ற தவநிலையில் இருந்தபடி ஆயிரத்து இருநூறு பாடல்களைக் கொண்ட இந்த நூலைத் தான் இயற்றினேன் என்று அவர் கூறுகிறார். அவ்வாறு இயற்றிய நூலை வேதியனான அறிவுருவாக இருக்கும் இறைவனின் முன் அவர் சமர்ப்பித்தார்.
~~~~~~~~~~~~~~~~~~~
(8) அகத்தியர் பெருமானுக்கு சிவன் சொன்ன ரகசியம்....
தானான சௌமிய சாகரத்தை நன்றாய்த்
தன்மையுடன் ஆதியந்தந் தயவாய்ப் பார்த்து
தேனான வடமொழியைத் தமிழ்தான் செய்த
திரமான கருவிபரம் நன்றாய்ச் சொன்னீர்
ஊனான உலகமதில் உலகத்தோர்கள்
உறுதியுள்ள கைலாயம் இடங் கொள்ளாது
மாணாக் கேள் சௌமிய சாகரத்தை நீயும்
மார்க்கமுடன் அந்தி சந்தி மகிழ்ந்து பாரே
இறைவன் அகத்தியர் இயற்றிய சௌமிய சாகரத்தை நன்றாக தயவுடன் பார்த்து அவர் வடமொழி நூலில் உள்ளவற்றை நன்றாகத் தமிழ்ப்படுத்தியுள்ளார் என்றும், அதை உலகோர் படித்தால் அவர்களைத் தாங்க கைலாயத்தாலும் இயலாது என்றும் கூறியதாகவும் அகத்தியர் கருவிகள் பரம் ஆகியவற்றைப் பற்றி நன்றாக விளக்கியுள்ளார் என்றும் கூறியதாகவும் அகத்தியர் நமக்குச் சொல்கிறார். மனம், புத்தி, சித்தம், புலன்கள் பொறிகள், நம்மை எல்லைக்குட்படுத்துவையாகிய அனைத்துத் தத்துவங்களும் கருவிகள் எனப்படுகின்றன. இவற்றின் பாதிப்பிலிருந்து விடுபட்ட நிலையே பர நிலை.
இறைவன் அகத்தியரை இந்த நூலை அந்தி சந்தியில் பார்த்து மகிழுமாறும் கூறினார். அந்தி என்பது பொதுவாக மலை என்று பொருள்பட்டாலும் அது ஒரு தத்துவத்தின் முடிவையும் குறிக்கும். அதேபோல் சந்தி என்பது இரு காலங்கள் சந்திக்கும் நேரம் என்றாலும் அது இரு தத்துவங்கள் சந்திக்கும் இடத்தையும் குறிக்கும். உதாரணமாக நமது உடலில் உள்ள சக்கரங்கள் தத்துவங்கள் சந்திக்கும் இடம். பிராணனும் அபானனும் சந்திக்கும் இடமும் சந்தி எனப்படுகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~
(9) பொதிகை வந்த அகத்தியர்
பாரென்று சொன்ன மொழி பெற்றுக்கொண்டு
பதிவான பொதிகைதனில் வாசமாகி
நேரென்று சௌமிய சாகரத்தைப் பார்த்து
நிச்சயமாய் அஷ்டாங்க யோகம் பார்க்கில்
சாரென்று பொதிகை மலை சார்புக்குள்ளே
சார்ந்திருந்த தபோதனர்கள் தானே கூடி
நேரென்ற பொதிகை தனின் முடிமேற்சென்று
மெஞ்ஞான சற்குரு வென்று அடிபணிந்தார்
இறைவனின் கட்டளையைப் பெற்ற அகத்தியர் பொதிகை மலைக்குச் சென்று அதைத் தனது இருப்பிடமாகக் கொண்டார். அங்கிருந்தபடி அவர் சௌமிய சாகரம் மற்றும் அஷ்டாங்க யோகம் ஆகிய இரண்டையும் பார்த்தபடி இருந்தார். அப்போது தபோதனர்கள் பொதிகையின் உச்சியை அடைந்து அவரை மெய்ஞ்ஞான சற்குருவே என்று அவரை வணங்கி நின்றனர்.
பொதிகை என்பது உலகில் உள்ள மலை என்பதுடன் உடலில் உள்ள ஒரு சக்தி மையத்தையும் குறிக்கிறது. இதைத்தான் புராணங்கள் சிவனின் கட்டளையை ஏற்று அகத்தியர் தென்புலம் வந்தார் என்று கூறுகின்றன.
~~~~~~~~~~~~~~~~~~~
(10) அகத்தியரிடம் தவயோகிகள் வேண்டினர்....
பணிந்துமிக அனைவோரும் இருகை கூப்பி
பரமகுரு தேசிகரே பதிவாய் நீரும்
கனிந்து மிக அந்தமதிற் கருணையாகி
கடாட்சித்த சௌமிய சாகரத்தை நாங்கள்
அணிந்துவரின் தெரிசனங்கள் பார்ப்போமென்று
அனைவோரும் ஒரு மனதாய் அருள்கண் கூர்ந்து
துணித்து வந்தோம் உம்முடைய பாதந்தன்னில்
சுகமாக அடுமை படைத்து ஆள் என்றாரே
இப்பாடலில் அகத்தியரிடம் தவயோகிகள் கேட்டதை அறிகிறோம். அவர்கள் அகத்தியரை அடைந்து அவரை பரமகுரு தேசிகா என்று போற்றி அவரது சௌமிய சாகரம் அதனை அறிந்தவர்களுக்குப் பல அதிசயங்களை, காட்சிகளைக் காட்டும் அதைத் தாமும் அறிய விரும்புகிறோம். அதனால் தம்மை சீடராக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினர்.
~~~~~~~~~~~~~~~~~~~
(11) சௌமிய சாகரம் நூலில் மறைந்துள்ள தீஷா மார்க்கம்.
ஆளென்று சொன்ன தபோ தனரைப்பார்த்து
ஆதி தொடுத்து அந்தம் வரை சொன்னோம் நூலில்
காலென்ற கருக்குருவும் நன்றாய்ச் சொன்னோம்
காசினியில் தபோதனர்கள் கருணையாக
வாளென்று சொன்னதொரு தீக்ஷை மார்க்கம்
வளமான சவுக்கார வழலை போக்கும்
மேலென்ற காப்பதிலே ஆறுலக்ஷம்
விண்டதிலே சூக்ஷமதாய்க் கண்டோம் பாரே
தபோதனர்களின் விண்ணப்பத்தைத் தொடர்ந்து அகத்தியர் சௌமிய சாகரத்தை இயற்றினார். அதில் ஆதி முதல் அந்தம் வரை உள்ள விஷயங்களை விளக்கியுள்ளார். குருக்கரு அல்லது கால் எனப்படும் பிராணனைப் பற்றியும் அதில் விளக்கியுள்ளார். அதனுடன் தீக்ஷை மார்க்கம் எனப்படும் சித்த மார்க்கத்தையும் கூறினார். அது "சவுக்கார வழலையை" விலக்கும் என்றும் கூறுகிறார்.
வழலை என்ற சித்தர் பரிபாஷை பல விஷயங்களைக் குறிக்கும். சிலர் அது கோழை என்பர், சிலர் அது பூ நீர் என்பர். பூ நீர் என்பது பூமியின் நீர் அல்லது கருவறையில் உள்ள நீர் என்றும் பொருள்படும். மற்றும் சிலர் இது பரநிலைக்கு முற்பட்ட நிலை என்பர். தீக்ஷை மார்க்கம் இந்த வழளையைப் போக்கும் என்கிறார் அகத்தியர். இதனை அடுத்து மேல் என்ற காப்பதிலே என்று அகத்தியர் குறிப்பிடுவது அவர் முன்பு சிவனிடமிருந்து பெற்ற சம்ஸ்கிருத நூலைக் குறிக்கலாம். அதில் இருந்த ஆறு லக்ஷம் சுலோகங்களின் சூட்சுமமே சௌமிய சாகரம் என்று இதற்குப் பொருள் கூறலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~
(12) அகத்தியர் பெருமானுக்கு சிவன் இட்ட கட்டளை....
கண்டதொரு சகலகலை வேதந்தன்னை
கடைந்தெடுத்து சௌமிய சாகரமாய்ப்பாடி
கொண்டதொரு சூத்திரத்தைக் குருமுன் வைத்தேன்
குருவான எம்குருவும் நன்றாய்ப் பார்த்து
விண்டதொரு சாகரந்தான் ஆதி சூக்ஷம்
விளம்பாது விளம்பாது மவுனம் பண்ணு
அண்ட கேசரமதிலே தவஞ் செய்யென்று
ஆதிகுரு வேதியரும் சொன்னார் பாரே
சிவனிடமிருந்து தான் பெற்ற உபதேசத்தை மட்டுமல்லாமல் வேதத்தின் சாரத்தையும் கடைந்தெடுத்து அகத்தியர் சௌமிய சாகரமாகப் புனைந்தார். பரமகுரு என்று போற்றப்படும் தலையாய சித்தரான அகத்தியர் உடனே அதைப் பிறருக்கு உபதேசிக்க முனையவில்லை. அந்த நூலை சிவனிடம் அர்ப்பணித்து அவர் அதைப் பரிசோதிக்கச் செய்தார். சிவனும் அந்த நூலைப் பார்த்து அனைத்து எல்லா சூட்சுமங்களையும் விளக்கும் நூல் இது என்றும் இதனை அனைவருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டாம் என்றும் மௌனம் காக்கும்படியும் கேசரத்தில் தவம் செய்யுமாறும் கூறினார். கேசரம் என்றால் ஆகாயத்தில் உலவுதல் என்று பொருள். இங்கு ஆகாயம் என்பது வெட்டவெளி அல்லது பரவுணர்வு நிலை என்று பொருள்படும். இவ்வாறு சிவன் அகத்தியர் பரவுணர்வு நிலையில் இருக்குமாறு கூறினார்.
~~~~~~~~~~~~~~~~~~~
(13) அகத்தியர் சொல்லும் தகுதிகள்....
பாரையா சொல் மொழிகள் தவறொண்ணாது
பத்தியுடன் உத்திரவு பெற்று வந்தால்
நேரையா சௌமியமாம் பொருளுஞ்சொல்லி
நிசமான சாகரத்தின் நிலையுங் காட்டி
தேரையா வென்றுக்கா யாதி ஈந்து
செய்த தொரு சாஸ்திரமே ஈவோமொன்று
மேரையா மேரு நடு முடியிற் சென்றேன்
விளம்பியதோர் சௌமியத்தை சொல்லக் கேளே
யாருக்குத் தான் இந்த அறிவைப் புகட்டுவேன் என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார். முனிவர்களும் தபோதனர்களும் விரும்பிய இந்த அறிவைப் பெற, ஒருவர் தவறான சொற்கள், வாக்கு ஆகியவை இல்லாமல் இருக்கவேண்டும், பக்தியுடன் இருக்க வேண்டும். இந்த அறிவைப் பெறுவதற்கு உத்தரவு பெற்றிருக்கவேண்டும். இவ்வாறு ஒருவர் வந்தால் அகத்தியர் அவருக்கு சௌமிய சாகரத்தின் பொருளைக் கூறி அதன் நிலையைக் காட்டி காயசித்தி முதலியவற்றை ஈவார். அதற்கு அவர், தான் மேரு மலையின் மத்திய உச்சியில் இருந்தபடி இதைக் கூறுவேன் என்கிறார். மேரு மலை என்பது தண்டுவடம். அதன் உச்சி என்பது சகஸ்ராரம். இவ்வாறு தான் நடுமுடியின் இருப்பேன் என்று அகத்தியர் கூறுவது அவர் பரவுணர்வு நிலையில் இருந்தபடி இந்த அறிவைத் தருவேன் என்று கூறுவதாகப் பொருள்படும். அதனால் அகத்தியர் எவ்வாறு ஒருவருக்கு உபதேசத்தை அளிப்பார் என்பதும் அதைப் பெற ஒருவருக்கு என்ன தகுதிகள் தேவை என்பதும் புரிகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~
(14) நூலின் அறிமுகம்
சொல்லக்கேள் சௌமிய சாகரத்தை மைந்தா
சுகமான வடமொழியைத் தமிழால் செய்தேன்
அல்லக்கேள் ஆதிமுதல் சொன்ன நூலில்
அரிதரிது இதன் பெருமை யாருங் காணார்
வெல்லக்கேள் வேதமென்ற சௌமியத்தை
மேலான பதவிஎன்று பதனம் பண்ணி
உள்ளத்தின் தன்னொளிவு மேலே நீயும்
உண்மையுடன் அந்தி சந்தி பூசை பண்ணே!
சௌமிய சாகரம் என்பது வடமொழியிலிருந்து தமிழாக்கப்பட்டது என்று கூறும் அகத்தியர் அது வேதம், ஆதி முதல் அனைத்து விஷயங்களையும் விளக்குவது, அதில் கூறுப்பட்டுள்ள பொருட்களை ஒருவர் படித்து மனதில் எண்ணிப்பார்க்க வேண்டும் என்கிறார். அவ்வாறு செய்தால் ஒருவர் வெற்றி பெறுவது நிச்சயம் என்கிறார். "அந்தி சந்தி பூசை பண்ணு" என்று அவர் கூறுவது சிவனின் கட்டளையை மீண்டும் வலியுறுத்துவதாகும்.
~~~~~~~~~~~~~~~~~~~
(15) இந்த நூல் கயிலாய மேருகிரியில் இட்ட தீபமாகும்....
பண்ணப்பா சௌமியத்தை பூசைபண்ணு
பதிவான சாகரத்தை அறிந்துகொண்டு
எண்ணப்பா வென்று தன்னை மறந்திடாதே
இகபரசாதனம் முழுதும் இதுவே சித்தி
முன்னப்பா சொன்ன சாஸ்திரங்களெல்லாம்
முன்பின்னாய்ப் பூரணத்திற் சேர்க்கச் சொன்னோம்
கண்ணப்பா கண்மணிபோல் இந்த நூல்தான்
கைலாச மேருகிரி தீபமாச்சே
அகத்தியர் இந்த நூலின் பெருமையை இப்பாடலில் விளக்குகிறார். இந்த நூல் அனைத்து சாத்திரங்களினும் உயர்ந்தது ஏனெனில் அது இக பர சித்தியை அளிக்கும். அதனால் ஒருவர் இதனைக் கற்றுத் தேர்ந்து இதைப் பூஜிக்க வேண்டும். பெற்ற சித்தியினால் தன்னிலையை மறந்துவிடக்கூடாது. கண்ணின் மணியைப் போல விளங்கும் இந்த நூல் கைலாச மேரு கிரியில் இட்ட தீபமாகும். பரவுணர்வு நிலையில் காணப்படும் பரவொளி யாகும் என்கிறார் அகத்தியர்.
~~~~~~~~~~~~~~~~~~~
(16) தகரத்தையும் தங்கமாக்கும் சிவயோகத்தை பயிலுங்கள்....
ஆச்சப்பா மேருகிரி தீபம் போலே
அரகரா சௌமிய சாகரந்தான் பாரு
நீச்சப்பா கடினமென்று நீ மலைக்க வேண்டாம்
நேர்மையுள்ள கைபாகம் முறை பாகங்கள்
பாச்சப்பா வெகுதெளிவு இந்நூல் போலே
பகராது முன் சொன்ன சாஸ்திரங்கள்
காச்சப்பா இந்நூலைப் பதனம் பண்ணி
கனகமுடன் சிவயோகங் கருத்தாய்ப் பாரே
இந்த நூலின் பெருமையைக் கண்டு ஒருவரும் அதைக் கற்பது, செயல்படுத்துவது கடினம் என்று விட்டுவிடவேண்டாம் என்கிறார் அகத்தியர். இந்த நூலில் கைபாகம் முறைபாகம் ஆகியவற்றை நன்றாக விளக்கியுள்ளேன் என்றும் அவர் கூறுகிறார். கைபாகம் முறைபாகம் என்ற சொற்கள் பொதுவாக சித்த மருத்துவத்தில் ரசவாதத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இது, பொருட்களின் அளவையும் அவற்றை எவ்வாறு மருந்தாக மாற்றுவது என்ற செயல் முறையையும் குறிக்கின்றன. அதனால் பிற சாத்திரங்களைப் போல இல்லாது சௌமிய சாகரத்தில் அளவுகளும் முறைகளும் நன்றாக விளக்கப்பட்டுள்ளன அதனால் ஒருவர் பயப்படவேண்டாம் என்று இதற்குப் பொருள். இந்த நூலை சித்த தயாரிப்பைப் போல நன்றாகப் பதனப்படுத்தி காய்ச்ச வேண்டும் என்கிறார் அகத்தியர். அவ்வாறு செய்தால் ஒருவர் கனகத்தையும் சிவயோகத்தையும் பெறலாம் என்று ஒரு வாக்கியத்துடன் அவர் இந்தப்பாடலை முடிக்கிறார்.
சித்தர்களின் ரசவாதம் கீழான உலோகங்களைத் தங்கமாக மாற்றுவது மற்றும் கீழான பருப்பொருளாலான உடலை தங்கமேனியாக மாற்றுவது, அளவுக்குட்பட்ட உடலை எங்கும் பரவி நிற்கும் இருப்பாய் மாற்றுவது என்ற இரண்டு குறிக்கோள்களையும் கொண்டது. அதனால்தான் அகத்தியர் இந்த நூலினால் ஒருவர் தங்கத்தையும் சிவயோகத்தையும் பெறலாம் என்கிறார். இனி வரும் பாடல்களில் உள்ள ரசவாத முறைகளை நாம் தத்துவ நோக்கிலிருந்து பார்க்கலாம். இந்த விளக்கவுரையின் குறிக்கோள் தூல சரீரத்தை திவ்ய சரீரமாக மாற்றுவது எவ்வாறு என்று அறிவது தான்.
~~~~~~~~~~~~~~~~~~~
(17) முகவுரை
கருவான சௌமிய சாகரத்தை மைந்தா
கருணையுடன் விளம்புகிறேன் கருவைக் கேளு
திருவான ஆதார மூலசூக்ஷஞ்
செப்பரிது தத்துவத்தின் வழியின் நேர்மை
உருவான தீக்ஷையொடு பூசை மார்க்கம்
உத்தமனே அஷ்ட கன்மஞ் சித்து மூலம்
குருவான கற்பமொடு மந்திரசித்து
கூர்மையென்ன யோகமொடு ஞானந்தானே
அகத்தியர் இப்பாடலிலிருந்து சௌமிய சாகரத்தில் உள்ள விஷயங்களைக் கூறத் தொடங்குகிறார். அவர் இந்த நூலில் ஆதாரமூலமான மூலாதாரத்தைப் பற்றியும் அதன் வழியான சுழுமுனையில் செல்லும் தத்துவங்களைப் பற்றியும் தீக்ஷை, பூஜை, அஷ்ட கர்மம், சித்து கற்பம் மந்திரம், யோகம் மற்றும் ஞானத்தைப் பற்றியும் கூறப்போகிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~
(18) முகவுரை....
தானான யோகமொடு சமாதி தீக்ஷை
சத்தியொடு சிவ தீக்ஷை வாலை தீக்ஷை
தேனான பூரணமாம் மவுன தீக்ஷை
திருவான பஞ்சகண தீக்ஷையோடு
ஊனான முப்பூவாம் வழலை தீக்ஷை
உண்மையுள்ள வினோத வகை மோடியங்கம்
பூனான மையுடனே திலதவாடை
போக்கான மறைப்புடனே இன்னங் கேளே
அகத்தியர் தான் இந்த நூலில் கூறப்போகும் விஷயங்களை இப்பாடலிலும் தொடருகிறார். சௌமிய சாகரம் என்ற இந்த நூலில் அவர் பல வகையான தீட்சைகளையும் மூலிகை தயாரிப்புக்களையும் கூறப்போகிறேன் என்கிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~
(19) தயாரிப்பு முறை
இன்னங் கேள் சொல்லுகிறேன் ஜெயநீர் போக்கு
இன்பமுள்ள திராவகத்தின் கருவின் மார்க்கஞ்
சொன்னதொரு கட்டினாங்கள் உருக்கினங்கள்
சுகமான பற்பமொடு செந்தூரங்கள்
வர்ணமுள்ள களங்குடனேமெழுகு மார்க்கம்
மகத்தான் தூபமொடு தீப வேதை
என்ன வொண்ணாத் தைலமொடு லேகியங்கள்
ஏகாந்த மானதொரு லகிரி போக்கே
அகத்தியர் இந்த நூலில் பல மருந்துத் தயாரிப்புகளைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விளக்கவுரையின் நோக்கம் அவரது தட்துவக்கருத்துக்களைப் பார்ப்பது மட்டுமே என்பதால் இந்தப் பாடல்களுக்கு விளக்கங்கள் தரப்படவில்லை. இவற்றை விளக்குவதற்கு இந்த எழுத்தாளருக்குத் தகுதியில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~
(20) பதன முறைகள்
போக்கான வைப்புமுறை பாஷாணங்கள்
புகழான உபரசங்கள் காரசாரம்
வாக்கான குளிகையுடன் கெவுனசித்தி
மகத்தான லோகமா ரணங்களோடு
தாக்கான சத்துருமித் துருக்கள் தானுத்
தன்மையுடன் குருமுடிக்கும் பாகந்தானுந்
தூக்கான புடபாகம் எரிப்பான் பாகந்
துடியான கைபாகங் கணக்குந்தானே
இப்பாடலில் சித்தர்கள் கையாளும் பதன முறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த முறைகள் தத்துவ ரீதியாகவும் முக்கியமானவை. இவற்றை ஒருவர் அனுபவத்தால் உணரவேண்டும்.
~~~~~~~~~~~~~~~~~~~
(21) லகரி தியான முறை
கணக்கான சேர்மானஞ் சரக்கு வைப்பு
கருணையுள்ள ரத்தினங்கள் வைப்பு மார்க்கம்
புணக்கான சல்லியங்கள் ஒட்டியங்கள்
புலி ரத்தம் ஏவல் பில்லி சூன்னியங்கள்
தனக்கான அழகிரியிலே அனந்த மார்க்கந்
தன்மையுள்ள தெரிசனங்கள் கோடான கோடி
பிணக்க முள்ள சக்கரங்கள் ஆவேசங்கள்
ஏகாந்த அஞ்சனங்கள் கோடி பாரே
பலவித தயாரிப்புக்களையும் அவற்றின் சரக்குகளையும் குறிப்பிட்ட பிறகு சில சித்து முறைகளை இங்கே அகத்தியர் குறிப்பிடுகிறார். இப்பாடலில் குறிப்பிடப்பட்ட லகிரி என்பது தியானத்தில் முக்கியமான ஒன்று. சமாதி நிலையை அடையும் யோகி இந்த லகிரி அல்லது ஆனந்த ஆஸ்பதம் என்பதில் மூழ்கிவிடாமல் இருக்க பெரும்முயற்சி செய்யவேண்டும்.
~~~~~~~~~~~~~~~~~~~
(22) ரசவாத வழி
கோடியென்ற வெகுகோடி தொழில்களெல்லாங்
குறித்தபடி சௌமியமாய்க் காணலாகும்
நாடி மனங் கொண்டு குறி கண்டாயானால்
நந்தி பிரகாசமது நயனந்தன்னில்
ஆடிநின்ற திரு நடனங் காணலாகும்
அப்பனே சக்கரங்கள் தோணும் பாரு
சூடிநின்ற சக்கரத்தின் இனங்கள் தன்னை
சொல்லுகிறேன் வேத முறை சூக்ஷந்தானே
மூலிகைத் தயாரிப்புக்கள் சித்த மார்க்கத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அவற்றின் உதவியால் உயருணர்வு நிலையைப் பெறலாம். அதனால் தயாரிப்புக்களையும் சரக்குகளையும் கூறிய பிறகு அவற்றின் செயல் தளங்களான சக்கரங்களைப் பற்றி அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார். இந்த சக்கரங்களின் ஊடே உணர்வுநிலைகளின் எழுச்சி ஏற்படுகிறது. அதை மனத்தின் உதவியால்தான் செய்ய முடியும். அதனால் அகத்தியர் மனத்தினால் குறியைப் பார்க்கவேண்டும், அப்போது நந்தியின் பிரகாசம் கண்ணில் தென்படும் என்று கூறுகிறார். இறைவனின் திருநடனமான செயல்பாடுடைய உலகம் தென்படும். இவை நடைபெறுவது சக்கரங்களில். அதனால் சக்கரங்களும் அவை பூணும் தத்துவங்களும் புலப்படுகின்றன. இதுதான் சூட்சுமம், வேத வழி என்று அகத்தியர் கூறுகிறார். வேதவழி என்பது வேதம் கூறும் வழி என்றும் வேதை அல்லது ரசவாத வழி என்றும் இரு பொருள்களைத் தருகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~
(23) ஜீவாத்மா, பரமாத்மாவின் தொடக்கம்
தானென்ற சூக்ஷமடா விந்து நாதம்
தனை அறிந்து நாதமுடன் விந்து சேர்ந்து
கோவனன்ற குருவருளால் அங்குதித்து
கொண்டெழுந்த மடபதியை என்ன சொல்வேன்
ஊனென்ற மடபதிக்கு உறுதியான
உண்மையுள்ள அக்கினி யும் வாய்வுங் கூடி
தேனென்ற ஜீவாத்மா பரமாத்மாவாய்ச்
சென்றிருந்து ஆதாரம் ஆனார்பாரே
இப்பாடல் முதலாக அகத்தியர் தனது தத்துவங்களை விளக்கத் தொடங்குகிறார். உலகம் தோன்றுவதற்குக் காரணமாக இருப்பது விந்துவும் நாதமும். இவையிரண்டும் குருவருளால் கூடி மடபதியாயின என்கிறார் அகத்தியர். குருவருள் என்பது பொதுவாக உபதேசம் செய்யும் உலக குருக்களைக் குறித்தாலும் இங்கு அது இறைவனைக் குறிக்கும். குரு என்ற சொல் இருட்டை நீக்குபவர் என்று பொருள்படும். இருட்டு என்பது ஆணவ மலம் தோற்றுவிக்கும் "நான் அளவுக்குட்பட்டவன்" என்ற எண்ணம். இந்த இருட்டை நீக்குவதற்கே ஒரு ஜீவனுக்கு உடல் கொடுக்கப்படுகிறது. இதற்கு உதவியாக இறைவன் கர்மம் மாயை என்ற இரு மலங்களையும் கூட்டுவிக்கிறார். அது வண்ணான் துணியை வெளுக்க ஆற்றங்கரையில் மண் என்ற மற்றொரு அழுக்கை அதன்மேல் தேய்ப்பதைப் போல் உள்ளது என்று திருமூலர் கூறியுள்ளார்.
மடபதி என்ற சொல் அறிவற்றவன் என்றும் அறிவற்ற ஒரு தலம் என்றும் ஆன்மீக இடம் என்றும் பொருள்படும். மடபதி என்பதற்கு அறியாமையை உடைய ஜீவன் என்று பொருள் கூறலாம் என்றாலும் இங்கே அகத்தியர் அந்த சொல்லை உடல் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார். உடல் அசேதனம் அல்லது அறிவற்றது. ஆத்மா சேதனம் அல்லது அறிவுள்ளது. இதனால் உடலை அறிவற்ற தலம் என்று அழைக்கலாம். உடலில் அக்னியும் வாயுவும் ஜீவாத்மா பரமாத்மாவாக இருக்கின்றனர் என்று அகத்தியர் அடுத்து கூறுவதால் உடல் ஆன்மீக தலம், மடம், பதி, ஜீவாத்மா பரமாத்மாக்களின் இருப்பிடம் என்றும் பொருள் கூறலாம். இந்த உடலுக்கு ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஆதாரங்களாக அதற்கு இருப்பைக் கொடுப்பவர்களாக இருக்கின்றனர் என்று அகத்தியர் இப்பாடலை முடிக்கின்றார்.
~~~~~~~~~~~~~~~~~~~
(24) ஜீவாத்மா, பரமாத்மா என்றால் என்ன?
பாரப்பா ஆதாரம் ஆறாதாரம்
பரிவான ஆதார மடத்துக்குள்ளே
நேரப்பா அக்கினிதான் ஜீவாத்மாவே
நிறைந்துநின்ற வாய்வதுதான் பரமாத்மாவாய்ப்
பேரப்பா பெருகி நின்ற கடத்தினுள்ளே
பிளமாக நின்று திருவிளையாட்டாடி
காரப்பா ஆகாசஞ் சாக்ஷியான
கருணையுடன் நின்றுதடா கருவாய்க்காணே
மிக முக்கியமான இப்பாடலில் அகத்தியர் ஜீவாத்மா பரமாத்மா உடல் ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறார். அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பவை சக்கரங்கள். ஆதாரம் என்றால் தாங்குவது, support. சக்கரங்கள் உடலுக்கும் தத்துவங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்றன. இந்த ஆதாரங்கள் இருக்கும் மடம் உடலாகும். அந்த மடத்தில் அக்னி தத்துவமே ஜீவாத்மா. அந்த மடத்தை நிறைக்கும் வாயுவே பரமாத்மா. இந்த பரமாத்மா குகை அல்லது பிலம் எனப்படும் இதயத்தில் இருந்து விளையாடுகிறது. வாழ்க்கையே அதன் விளையாட்டுதான். இந்த கடம் அல்லது பானையில் ஆகாயம் சாட்சியாக இருக்கிறது.
ஆகாயத்தை சாட்சி என்று கூறுவது மிகவும் ரசமானது. பஞ்ச தத்துவங்களில் ஆகாய தத்துவமே அனைத்துக்கும் அடிப்படையாக இருந்து தாங்குகிறது. பிற தத்துவங்கள் அதன் மீது உள்ளன. ஒரு இடத்தில் மற்ற எந்த தத்துவம் இல்லாவிட்டாலும் ஆகாய தத்துவம் இருக்கிறது. அதனால் அதுவே அனைத்துக்கும் சாட்சியாக உள்ளது.
~~~~~~~~~~~~~~~~~~~
(25) பஞ்ச பூதங்கள்
காணப்பா தத்துவத்தின் விபரஞ் சொல்வேன்
கருணையுடன் சொல்லுகிறேன் கனிவாய்க்கேளு
பேணப்பா பூதமைந்து சொல்லக் கேளு
பிரிதிவி அப்புவுடன் தேய்வுமாக
பூணப்பா வாய்வுடனே ஆகாசந்தான்
பொருந்திநின்ற பூதமடா ஐந்துமாச்சு
தோணப்பா மனக்கண்ணால் நன்றாய்ப் பார்த்துத்
துலங்கி நின்ற பூதத்தை நன்றாய்க்காரே
ஜீவாத்மா அக்னி பரமாத்மா வாயு என்று கூறிய அகத்தியர் இப்பாடலில் ஐம்பூதங்களை விளக்கத்தொடங்குகிறார். ஐம்பூதங்களாவன பிரிதிவி எனப்படும் நிலம், அப்பு எனப்படும் நீர், தேயு எனப்படும் தீ, வாயு எனப்படும் காற்று மற்றும் ஆகாயம். நமது உடலில் உள்ள சக்கரங்களுக்கும் இந்த பூதங்களுக்கும் உள்ள தொடர்பு பின்வருமாறு: மூலாதாரம்-நிலம், சுவாதிஷ்டானம்-நீர், மணிபூரம்- தீ, அனாகதம்- வாயும் விசுத்தி- ஆகாயம்.
~~~~~~~~~~~~~~~~~~~
(26) பூத சித்தியின் தொடங்கி மெருகிரி, சதுரகிரி, கயிலாயம்
காரப்பா அஞ்சு பஞ்ச பூதந்தன்னை
கண் குவித்து மனக்கண்ணால் கருவாய்ப் பார்த்தால்
மேரப்பா மேருகிரி காணலாகும்
மேரான சதுரகிரி விலாசந் தோணும்
ஆரப்பா உனக்கீடு சொல்லப் போறேன்
அரகரா பூதவகை அறிந்து கொண்டால்
நேரப்பா நின்ற கைலாசந் தோன்றும்
நிஜமான ஞான இந்திரியங்கேளே
இந்த முக்கியமான பாடலில் அகத்தியர் சித்தர் பாடல்களில் காணப்படும் பல சிகரங்களைப் பற்றிக் கூறுகிறார். மேரு கிரி, சதுரகிரி, மகேந்திர கிரி, கைலாயம் என்ற பெயர்கள் சித்தர்பாடல்களில் அடிக்கடி காணப்படுகின்றன. மேரு கிரி என்பது ஒரு மலை என்றும் அதனைச் சுற்றி உலகங்கள் அமைந்துள்ளன என்றும் சூரியனும் அதைச்சுற்றிப் பயணிக்கிறது என்றும் புராணங்களும் பல கதைகளும் கூறுகின்றன. உண்மையில் மேரு என்பது நமது தண்டுவடம். அதனுள் சுழுமுனை நாடி உள்ளது. அதேபோல் சதுரகிரி என்பது மூலாதாரத்தைக் குறிக்கும். இவ்வாறு இந்த கிரிகளை ஒருவர் பூத சித்தி பெற்றால், பூதங்களின் உண்மையான தன்மையை உணர்ந்தால் அறியலாம். கைலாயம் என்பது சஹாஸ்ராரத்தைக் குறிக்கும். இதனால் பூத சித்தி அடைந்த ஒருவர் கண்ணால் காணும் உலகைப் படைக்கும் சக்திகளின் தன்மைகளை உணர்ந்து குண்டலினியின் பாதையை உணரலாம். உலகம் எவ்வாறு தோன்றுகிறது என்பதை உணரலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~
(27) ஞானேந்திரியங்கள்
கேளப்பா ஞான இந்திரியந்தன்னை
கிருபையுடன் சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
சூளப்பா தோத்திரந்தான் தேகந்தேகம்
வாளப்பா சக்ஷுவென்றால் நேத்ரமாகு
மகத்தான சிங்குவென்றால் வாய்தானாகும்
காலப்பா ஆக்கிராணம் மூக்கு மூக்கு
கருணையுள்ள ஞான இந்திரியமைந்தாம்.
பூதங்களைப் பற்றிக் கூறிய பிறகு அகத்தியர் ஞாநேந்திரியன்களைப் பற்றிக் கூறத்தொடங்குகிறார். உடல் த்வக் என்றும் கண்கள் சக்ஷு என்றும் வாய் சிங்கு என்றும் மூக்கு ஆக்ராணம் என்றும் அழைக்கப்படுகின்றன. இங்கு காது குறிப்பிடப்படவில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~
(28) மெய்ஞ்ஞான தீபம்
கேளப்பா ஞான இந்திரியந்தன்னை
கிருபையுடன் சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
சூளப்பா தோத்திரந்தான் தேகந்தேகம்
வாளப்பா சக்ஷுவென்றால் நேத்ரமாகு
மகத்தான சிங்குவென்றால் வாய்தானாகும்
காலப்பா ஆக்கிராணம் மூக்கு மூக்கு
கருணையுள்ள ஞான இந்திரியமைந்தாம்.
அகத்தியர் இப்பாடலில் ஞாநேந்திரியங்களை விளக்குகிறார். கண்கள்-சஷு, உடல்- த்வக், வாய்- சிங்கு, மூக்கு- ஆக்ராணம் என்று அழைக்கப்படுகின்றன என்கிறார் அகத்தியர். இப்பாடலில் காது குறிப்பிடப்படவில்லை. ஆனால் அகத்தியர் அதையும் சேர்த்து ஞானேந்திரியங்கள் ஐந்து என்கிறார்.
அஞ்சான பஞ்ச இந்திரியந்தன்னை
அருளான மனக்கண்ணால்நன்றாய்ப் பார்த்து
நெஞ்சார அஞ்சி நிலை பார்த்து மைந்தா
நிலையான குருபதியில் நின்றாயானால்
மிஞ்சாமல் வாசியது தானேதானாய்
மெய்ஞ்ஞான தீபமது விளங்கும் பாரு
தஞ்சமுடன் ஐந்து நிலை நன்றாய்ப் பார்த்துச்
சங்கையுடன் கர்ம இந்திரியங்கேளே
மேற்பாடலில் கூறிய ஞானேந்திரியங்கள் அறிவைக் கொடுப்பவை. அவற்றின் உண்மையான தன்மையை, அவை விஷய ஞானத்தை ஆத்மாவுக்குத் தருபவை, அந்த அறிவை அனுபவிப்பது ஆத்மாவே என்ற உண்மையை, ஒருவர் அறிந்தால் அவற்றைப் பற்றிய அறிவைப் பெறலாம். இந்த அறிவுடன் ஒருவர் குருபதம் எனப்படும் ஆக்னையில் நின்றால் வாசி ஆத்ம தீபமாக, மெய்ஞ்ஞான தீபமாகக் காட்சி தரும் என்கிறார் அகத்தியர்.
இவ்வாறு ஞானேந்திரியங்களை விளக்கிய பிறகு அகத்தியர் கர்மேந்திரியங்களை விளக்கப் புகுகிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~
(29) கர்ம இந்திரியங்களின் பயன்கள்
கேளப்பா வாக்குடனே பாதம்பாணி
கிருபையுடன் பாயு உபஸ்தம் ஐந்துஞ்
சூளப்பா கர்ம இந்திரிய மாகுஞ்
சுகமாகத் தானரிந்து சுத்தமானால்
பாளப்பா போகாது ஞான மார்க்கம்
பத்தியுடன் ஐந்தையும் நீ கண்டு தேர்ந்தால்
கேளப்பா ஒன்றுமில்லை வாசியேகுங்
குறியாக ஐம்புலனைக் கூர்ந்து பாரே
ஞாநேந்திரியங்களை விளக்கியபிறகு அகத்தியர் கர்மேந்திரியங்கள் எனப்படும் ஐந்து புலன்களை இப்பாடலில் விளக்குகிறார். அவை வாய், கால், கை, கழிவுறுப்பு மற்றும் பிறப்புறுப்பு என்பவை. இவற்றின் தன்மையை அறிந்து அவற்றை சுத்தமாக்கினால் வாசி ஏறும் என்கிறார் அகத்தியர். இங்கு குறிப்பிடும் சுத்தம் சரியை எனப்படும் வெளிச்சுத்தமாகும்.
ஞான இந்திரியங்கள் ஆத்ம தரிசனத்தையும், கர்ம இந்திரியங்கள் வாசியின் ஏற்றத்தையும் தருகின்றன என்கிறார் அகத்தியர்.
(30) புலன்களின் தொடர்பு
பார்க்கையிலே ஐம்புலனை நன்றாய்க் கேளு
பதிவான சத்தமொடு பரிசம் ரூபம்
ஏர்க்கவே ரசமுடனே கெந்தம் ஐந்து
இன்பமுள்ள ஐம்புலனை அறிவதற்கு
சேர்க்கையுடன் ஐம்புலனிக் கண்டு மைந்தா
தேர்ந்து மனதறிவாலே தேர்ந்து கொண்டால்
மார்க்கமுள்ள சித்தரென்று யார்க்குந்தோணும்
மைந்தனே ஐம்புலனை வகுத்துக் காணே
சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம் என்று புலன்கள் ஐந்தாகும். இந்த புலன்களால் பெரும் அறிவு எவ்வாறு ஏற்படுகிறது என்றால் பொறிகள் எனப்படும் ஞானேந்திரியங்கள் புலன்களுடன் சேருகின்றன, இவையிரண்டும் ஆன்மாவுடன் சேர ஆன்மா அந்த அனுபவங்களை உணர்கிறது. இதனால் அகத்தியர் புலன்களை அவற்றின் சேர்க்கையுடன் அறிந்துகொள்ளவேண்டும் என்று கூறுகிறார். இவ்வாறு உலக இன்பங்கள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது சித்தர் மார்க்கத்தில் ஒரு அம்சம் என்று அவர் நமக்குக் கூறுகிறார்.
அகத்தியர்அறிவுரை!
-------------------------------
"பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம்
உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி
உனக்கேதடா. பாவத்தை செய்தவன்
சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே.
அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி
தண்டனை தருவார் என்பது யாருக்கும்
தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான்
இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு
நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான்
என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக்
கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம்
இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த
நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று
பொருள். இந்த கருத்தை மனதில்
வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும்
பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக
எளிதாக, மிக நீதியாக தோன்றும்."!
ஓம் அகத்திய குருவே போற்றி!
தொடரும் அகத்தியரை நோக்கிய இந்த உண்மை பயணம் ......
"அகத்தியர் சௌமிய சாகரம்"
Vadha saumyam 1200 {பாகம் -2}
------------------------------------------------------
{பல நண்பர்களின் வேண்டுதலுக்கு இணங்க அகத்தியர் பெருமானால் உலகுக்கு அருளப்பட்ட இது வரை ஓலை வடிவிலேயே விளங்கிய அரிய பொக்கிசமாகிய இந்த அகத்தியர் சௌமிய சாகரம் என்ற மிக பெரிய பொக்கிஷத்தை சித்தர்களின் குரல் வாயிலாக உலகம் அறிந்து பயன் பெற அகத்தியர் பெருமானின் பாதம் பணிந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்... நன்றி}
~~~~~~~~~~~~~~~~~~~
(31) அகத்தியர் சொல்லும் வாசி ரகசியம்
காணவே ஐம்புலனை வகுத்துப் பார்த்துக்
கருவான ஆதார மூலத்தேகி
தோணவே வாசியுட நிலையைக் கண்டு
சுத்தமுடன் அவ்வாசி தன்னிலேறி
பூணவே அண்டவரைத் தன்னிற் சென்று
புத்தியுடன் சித்தமதாய் நின்றாயானால்
ஊணவே கரணம் அந்தக் கரணம் நாலும்
உண்மையுடன் சொல்லுகிறேன் உகந்து கேளே
இப்பாடலில் அகத்தியர், நாம் முதலில் நமது ஐம்புலன்களைப் பற்றி அறிய வேண்டும் என்கிறார். அதனை அடுத்து நமது கவனத்தை மூலாதாரத்தில் வைக்க வேண்டும் என்கிறார். அப்போது நமக்கு வாசியின் நிலை புலப்படும் என்கிறார். இதனால் புலன்களின் தாக்கத்தைக் கடந்ததால்தான் வாசி புலப்படும் என்பது தெரிகிறது. வாசி என்பது இப்பயிற்சியினால் எழும் குண்டலினி சக்தி என்பதும் தெரிகிறது. அதனை அடுத்து அந்த வாசியில் ஏறி அண்ட முகட்டை அடையவேண்டும் என்கிறார் அகத்தியர். அண்டம் என்பது ஐம்புலன்களால் அறியப்படும் உலகம். இதற்கு மனது தேவைப்படுகிறது. இதனால் அண்ட முகட்டை அடையும்போது நாம் மனதின் தாக்கத்திலிருந்து விடுபடுகிறோம் என்பது புரிகிறது. அதனால்தான் அகத்தியர் புத்தியும் சித்தமுமாக நின்றவேண்டும் என்று அடுத்து கூறுகிறார். புத்தி என்பது மனத்தால் அறியப்பட்டவற்றை ஆராயும் பகுதி, சித்தம் என்பது அவ்வாறு ஆராய்ந்து பெற்ற அறிவினால் ஏற்படும் உணர்வுகளை அனுபவிக்கும் பகுதி. இவையனைத்தும் அந்தக்கரணங்கள் அல்லது உட்கருவிகள் எனப்படும் நான்கின் பகுதிகளாகும். அதனால், தான் அடுத்து அந்த நான்கு கருவிகளைப் பற்றிப் பேசப்போகிறேன் என்கிறார் அகத்தியர்.
~~~~~~~~~~~~~~~~~~~
(32) அந்த கரணங்கள்
கேளப்பா புலத்தியமா ரிஷியேஐயா
கிருபையுள்ள கரணம் அந்தக்கரணந் தன்னை
கோளடா இல்லாத மனம் தானொன்று
கூர்மையுடன் நின்றிலங்கும் புத்தி ஒன்று
தேரடா ஆங்காரம் ஆனதொன்று
சிவ சிவா சுத்த மென்ற சித்தமொன்று
ஆளடா கரணமென்ற கரணம் நான்கும்
அப்பனே அறிந்துகொண்டு வாற்றுமம் பாரே
ஞானேந்திரியங்களையும் கர்மேந்திரியங்களையும் பூதங்களையும் அவற்றின் சூட்சும குணங்களையும் பட்டியலிட்ட பிறகு அகத்தியர் அந்தக்கரணம் எனப்படும் மனத்தின் நான்கு நிலைகளை இப்பாடலில் கூறுகிறார். அவையாவன, அனைத்தையும் உணருவதான மனம், நன்மை தீமைகளைப் பகுத்தறியும் புத்தி, ஆங்காரம் எனப்படும் "தான்” என்னும் உணர்வு மற்றும் மனத்தின் தூய பகுதியான சித்தம் என்பவை. இவற்றில் அகங்காரம் என்பது மனம் மற்றும் புத்தி உணர்ந்தவற்றைத் தன்னுடன் தொடர்புபடுத்தி தனக்கு விருப்பமானது நன்மையானது அல்லது அவ்வாறு இல்லாத ஒன்று என்று உணருகிறது. சித்தம் என்பது பரவுணர்வு அல்லது சித்தின் பகுதி. தூய்மையான மனம். சித்தத்தை சித்தாக மாற்றுவதே சித்தர்களின் குறிக்கோள்.
இவ்வாறு மேற்கூறிய விஷயங்களை அறிந்து அடுத்து ஆத்மாவைப் பற்றி அறிந்துகொள் என்று அகத்தியர் புலத்தியரிடம் கூறுகிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~
(33) ஆத்ம தத்துவங்கள்
பாரப்பா ஆத்தும தத்துவம் தானப்பா
பதிவாக இருபத்து நாலும் சொன்னேன்
நேரப்பா தானிருந்து ஆத்துமாவாம்
நிலையறிந்து பெற்றதினால் வாசியாகும்
காரப்பா வாசிநிலை கருவைக் கண்டு
கருவாக ஆத்துமத தத்துவத்தைப் பார்த்தால்
ஆரப்பா உனக்கு நிகர் உண்டோ பிள்ளாய்
அப்பனே வித்தியா தத்துவம் கேளே
இதுவரை அகத்தியர் ஆத்ம தத்துவங்கள் எனப்படும் 24 தத்துவங்களை விளக்கினார். அவை 5 ஞானேந்திரியங்கள், 5 கர்மேந்திரியங்கள், 5 பூதங்கள், 5 தன்மாத்திரைகள், 4 மனத்தின் மாறுபாடுகள் என்பவை. இந்த ஆத்ம தத்துவத்தின் கருவையும் வாசியின் நிலையையும் ஒருவர் அறிந்தால் அவருக்கு ஈடானவர் இவ்வுலகில் இல்லை என்கிறார் அகத்தியர்.
இதனை அடுத்து அவர் வித்யா தத்துவங்களை விளக்கப்போகிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~
(34) வித்யா தத்துவம்
கேளப்பா வித்தியா தத்துவத்தைச் சொல்வேன்
கேள் என்ன காலை என்றும் நியதி என்றும்
சூளப்பா கலைஎன்றும் வித்தை என்றுஞ்
சுகமான ராகம் என்றும் புருடன் என்றும்
நாளப்பா மாய்கை என்றும் எழுமாச்சு
நன்மையுடன் வித்தியா தத்துவத்தைப் பார்த்து
ஆளப்பா ஆதாரத் தேகந் தன்னை
அறிந்து கொண்டு சிவ தத்துவத்தைக் கேளே
அகத்தியர் இப்பாடலில் வித்யா தத்துவங்களை விளக்குகிறார். தத்துவம் என்பது தன்னிலிருந்து மற்றொன்றைப் பிறப்பிப்பது. அதனால்தான் ஆத்ம தத்துவம் என்பவை ஆத்மா அல்ல. ஆத்மா என்றும் நிலையாக இருப்பது, தன்னிலிருந்து மற்றொரு தத்துவத்தைப் பிறப்பிப்பதில்லை. புருடன் என்று வித்தியா தத்துவத்தில் குறிப்பிடப்படுவது ஆத்மா அல்ல. அது வித்யா தத்துவத்தால் மாயையினால் உருவாக்கப்படும் ஒரு நிலை. அதேபோல் வித்தியா தத்துவத்தில் சேர்க்கப்படும் மாயை சுத்த மாயை அல்ல.
மற்ற தத்துவங்களான காலம்- பகல், இரவு, நாள், மாலை, காலை என்று காலத்தின் அளவுக்குட்பட்டமையை ஏற்படுத்துவது. கலை- செயல்பாட்டில் அளவுக்குட்டமையை ஏற்படுத்துவது, ராகம்- விருப்பத்தில் அளவுக்கு உட்பட்டமைக்குக் காரணம், நியதி- அனுபவத்தில் அளவுக்குட்பட்டமையை ஏற்படுத்துவது, வித்யை- அறிவில் அளவுக்கு உட்பட்டிருப்பதை ஏற்படுத்துவது.
இவ்வாறு வித்தியா தத்துவத்தை விளக்கியபிறகு அகத்தியர் சிவ தத்துவங்களை விளக்கப்போகிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~
(35) சிவ தத்துவம்
கேளடா சிவதத்துவந் தன்னை மைந்தா
கிருபையுள்ள புலத்தியனே நன்றாய்க் கேளு
ஆளடா சுத்த வித்தை ஈசுவரமும் மைந்தா
அப்பனே ச்தாக்கியமும் சத்தி சிவம் ஐந்துஞ்
சூளடா சிவதத்துவம் என்று பேரு
சுகமான தத்துவங்கள் முப்பத்தாறும்
வாளடா உடற்கருவி என்றும் பேரு
மைந்தனே தானறிந்து தன்னைப் பாரே
சுத்த வித்யா, ஈஸ்வரம், சாதாக்கியம் அல்லது சதாசிவம், சக்தி, சிவம் என்று சிவ தத்துவங்கள் ஐந்தாகும். இந்த ஐந்தும் பிற தத்துவங்கள் தொன்ருவதர்க்குக் காரணமாக இருப்பதால் தத்துவங்களாகின்றன. இவ்வாறு சித்த மார்க்கத்தில் தத்துவங்கள் முப்பத்தாறு. 24 ஆத்ம தத்துவம், 7 வித்யா தத்துவம், 5 சிவ தத்துவம். இவையனைத்தும் உடற்கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன என்கிறார் அகத்தியர். இவை உடல் செயல்படுவதற்கும் பல அனுபவங்களைப் பெறுவதற்கும் காரணமாக இருப்பதால் கருவிகளாகின்றன.
~~~~~~~~~~~~~~~~~~~
(36) தத்துவங்கள் தோன்றிய விதம்
பாரப்பா தன்னை மிகத்தானே கண்டு
பக்தியுடன் உள்கருவி மூலம் பார்த்து
நேரப்பா நின்றதினால் தத்துவத்தின் பெருமை
நீதியுடன் தோணுமடா நினைவாய்ப் பாரு
சாரப்பா மனசாரச் சார்ந்து பார்த்தால்
சார்வான தத்துவங்கள் தோணும் பாரு
ஆரப்பா அறிவார்கள் பூதமைந்தில்
அதிற்பிறந்த தத்துவந்தான் தொண்ணூற்றாரே
சித்த மார்க்கத்தில் தத்துவங்கள் 96 ஆகக் கருதப்படுகின்றன. அவற்றில் 36 பிரதம தத்துவங்கள் என்றும் மீதி 60 சார்வுத் தத்துவங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. சார்வுத் தத்துவங்கள் பிரதம தத்துவங்களிலிருந்து தோன்றுபவை. இவற்றை அவர் அடுத்த பாடலிலிருந்து விளக்கத் தொடங்குகிறார். பிரதம தத்துவங்களை ஒருவர் மனதால் கவனம் கொண்டு நோக்கினால் அவற்றிலிருந்துதான் சார்வுத் தத்துவங்கள் தோன்றுகின்றன என்பதைக் காணலாம் என்று அவர் கூறுகிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~
(37) நில தத்துவத்தில் தோன்றிய கூறுகள்
ஆறான பூதம் ஐந்தின் விரிவைக் கேளு
அப்பனே பிரிதிவியின் கூர்தான்மைந்தா
நேரான மயிருடனே எலும்பு சிரமம்
நிலையான நரம்பு சதை ஐந்துமாச்சு
பேரான பிரிதிவியின் கூறைச்சொன்னேன்
பொறுமையுடன் தான் ஐந்துப் பிலமாய் நின்று
கூரான அப்புடைய கூறு பாரு
குணமான புலத்தியனே குவித்துப் பாரே.
அகத்தியர் இப்பாடலிலிருந்து சார்வுத்தத்துவங்களை விளக்கத் தொடங்குகிறார். முதலில் பிரிதிவி அல்லது நிலதத்துவத்திலிருந்து தொடங்கும் அவர் முடி, எலும்பு, தோல், நரம்பு, சதை என்ற ஐந்தும் பூமி தத்துவத்திலிருந்து தோன்றுபவை என்கிறார் அவர்.
இதனை அடுத்து அவர் அப்பு அல்லது நீரின் கூறைக் கொண்ட தத்துவார்த்தங்களை விளக்குகிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~
(38) நீர் தத்துவத்தில் தோன்றிய கூறுகள்
பாரப்பா அப்புடைய கூறு சொல்வேன்
பதிவான நீருடனே உதிரம் அப்பா
காரப்பா சுக்கிலமும் மூளை மச்சை
கருவான ஐந்துமடா அப்பின் கூறு
தேரப்பா அப்பினுட கூறறிந்து
தெளிந்து மனதொன்றாகத் தன்னைப் பாரு
சாரப்பா தன் உணர்வாய்ப் பார்த்தால் மைந்தா
தயவான தேய்வினுட கூறு கேளே
வியர்வை, உதிரம், சுக்கிலம், மூளை, மச்சை ஆகிய ஐந்தும் நீரின் கூறுகள் என்று கூறுகிறார் அகத்தியர். இவற்றை புலத்தியர் மனக்குவிப்போடு ஆத்மா அனுபவிக்கும் உணர்வுகளாகப் பார்க்கவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். இதனை அடுத்து தேயு அல்லது அக்னி தத்துவத்தின் கூறைக் கூறுகிறேன் என்கிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~
(39) அக்கினி தத்துவத்தில் இருந்து தோன்றிய கூறுகள்
கேளப்பா தேய்வினுட கூறு கேளு
கேள்வியென்ன பசியுடனே நித்திரையுமாகும்
கூளப்பா மைதுனம் பயமுஞ் சோம்பல்
தொகுத்துரைத்த ஐந்துமடா தேய்வின் கூறு
சூரப்பா தேய்வினுட கூறரிந்து
ஆக்கமுடன் தன்னகத்தை மனதாய்ப் பாரு
காலப்பா வலுவரிந்து பார்த்தாயானால்
கலையான வாய்வினுட கூறுதானே
அக்னி அல்லது நெருப்புத் தத்துவத்தின் கூறையுடைய ஐந்தை இப்பாடலில் அகத்தியர் பட்டியலிடுகிறார். அவை, பசி, தூக்கம், மைத்துனம் அல்லது உடலுறவு, பயம், சோம்பல் என்பவை. நாம் பொதுவாக இவற்றைப் பற்றிப் பேசும்போது சுட்டெரிக்கும் ஆசை, பொசுக்கும் கோபம், தன்னையே உண்ணும் பசி என்பதுபோன்ற சொற்களைப் பயன்படுத்துவது இதனால்தானோ என்னவோ! இவையனைத்தும்- ஏரிப்பது, தகிப்பது என்ற அடைமொழிகள், தீக்கே பொருந்தும்.
அடுத்து அகத்தியர் வாயுவின் கூறைக் கொண்டவற்றை விளக்கப்போகிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~
(40) வாயு தத்துவத்தில் இருந்து பிறந்த கூறுகள்
தானான வாய்வினுட கூறு கேளு
தன்மையுள்ள புலத்தியனே நடத்தல் ஓடல்
ஊனான இருத்தலொடு கிடத்தல் மைந்தா
உத்தமனே எழுதலொடும் ஐந்துமாச்சு
வாறான வாய்வினுட கூறறிந்து
மார்க்கமுடன் தன்னகத்தை மகிழ்ந்து பாரு
கோனான குருவருளால் பார்த்தாயானால்
குணமான ஆகாசக் கூறைக் கேளே
பிரிதிவியின் கூறு உடல் அங்கங்களான தோல், மயிர், எலும்பு போன்றவையாக இருக்க வாயுவின் கூறை உடையவை செயல்பாடுகளாக இருக்கின்றன. வாயுவின் தன்மை ஒரு இடத்தில் நில்லாமை அதனால் வாயுவின் கூறை உடையவையும் செயல்பாடுகளாக இருக்கின்றன. அவையாவன நடத்தல், ஓடுதல், இருத்தல், கிடத்தல், எழுதல் என்ற ஐந்துமாகும்.
இதனையடுத்து தான் ஆகாயத்தின் கூறைக் கொண்டவற்றை விளக்கப்போகிறேன் என்கிறார் அகத்தியர்.
~~~~~~~~~~~~~~~~~~~
(41) ஆகாய தத்துவத்தின் கூறுகள்
கூறாக ஆகாசக் கூறு தன்னை
குறியுடனே சொல்லுகிறேன் குணமாய்க்கேளு
நேராகக் குரோதமொடு லோபம் மோகம்
நிசமான வாச்சரிய மதமுமைந்து
ஊரான ஆதாரந் தன்னைப் பார்த்து
உத்தமனே தானாவாய் நின்றாயானால்
தேராக வாசியது தேரும் தேரும்
சிவபூதம் ஐந்து தொழில் இருத்தல் ஐந்து
காமம், குரோதம், மோகம், மதம், மாச்சரியம் என்ற ஐந்து குணங்களும் ஆகாசத்தின் கூறை உடையவை என்கிறார் அகத்தியர். ஆகாய தத்துவம் பிற தத்துவங்களுக்கு அடிப்படையாக இருப்பது. அதேபோல் இந்த குணங்கள் செயல்களுக்கு அடிப்படையாக இருக்கின்றன. இப்பாடலில் அகத்தியர் மற்றொரு முக்கியமான விஷயத்தைக் கூறுகிறார். பூதங்கள் அனைத்தும் சிவனின் கூறு என்றும் அவற்றின் செயல்பாடு சக்தித் தத்துவம் என்றும் அவர் கூறுகிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~
(42) தச நாடிகள்
அஞ்சான ஐந்து பத்து நாடி தன்னை
அப்பனே சொல்லுகிறேன் அறிவாய்க் கேளு
துஞ்சாத இடையான பின் சுழினையாகி
துலங்குகின்ற காந்தாரி அத்தியோடு
மிஞ்சான அஸ்வனியும் அலம்புருடன்
வேகமுள்ள சூதமுடன் சிங்குவை பத்தும்
நெஞ்சார நின்றதோர் நாடிபத்தும்
நேர்மையுள்ள பிரிதிவியின் கதிதான் பாரே
இப்பாடலில் அகத்தியர் தச நாடிகள் எனப்படும் பத்து நாடிகளை விளக்குகிறார். அவை இடை, பிங்கலை, சுழினை, காந்தாரி, அத்தி, அஸ்வனி, ஆலம், புருடன், சூதம் மற்றும் சிங்குவை என்பன. நாடிகள் என்பவை குழல்கள். அவற்றின் ஊடே பிராணன்கள் ஓடுகின்றன. அதனால் நாடிகள் பூமி தத்துவத்தின் கூறை உடையவை.
~~~~~~~~~~~~~~~~~~~
(43) நாடிகளினுடு ஓடும் வாயுக்கள்
வளியான வாய்வினிட வழிதான் மைந்தா
மார்க்கமுடன் சொல்லுகிறேன் மனதாய்க் கேளு
நெளியாத பிராணனுடன் அபானன் தானும்
நிசமான உதானனுடன் சமானன் மைந்தா
அளியாத வியானனுடன் ஐந்துமப்பா
அரகரா தேய்வுடனே வாய்வு மாச்சு
சுளியாத தேயு வாயுவைத்தான் கண்டால்
சுகமாக பூத வாயுவைத் தான் கேளே
இப்பாடலில் அகத்தியர் தச நாடிகள் எனப்படும் பத்து நாடிகளை விளக்குகிறார். அவை இடை, பிங்கலை, சுழினை, காந்தாரி, அத்தி, அஸ்வனி, ஆலம், புருடன், சூதம் மற்றும் சிங்குவை என்பன. நாடிகள் என்பவை குழல்கள். அவற்றின் ஊடே பிராணன்கள் ஓடுகின்றன. அதனால் நாடிகள் பூமி தத்துவத்தின் கூறை உடையவை. முன்னம் கூறிய பூமி தத்துவத்தின் கூறையுடைய அசைவற்ற தத்துவங்களைப்போல (எலும்பு, தோல்..) இவை அசைவை உடையவை. அதனால் இவற்றை பிரித்திவி தத்துவத்தின் கதி என்கிறார் அகத்தியர்.
~~~~~~~~~~~~~~~~~~~
(44) தச வாயுக்கள்
கேளப்பா நாகனொடு கூர்மன் மைந்தா
கிரிகரனும் தேவதத்தன் தனஞ்செயனாம் ஐந்தும்
ஆரப்பா ஐம்பூத வாயுவென்பார்
ஆச்சரியந் தச வாய்வை அறிந்துகொள்ளு
காலப்பா தசவாய்வை அறிந்து கொண்டு
கருணையுடன் சிவயோகக் கருத்தில் நின்றால்
கோளப்பா ஒன்றுமில்லை எல்லாஞ் சித்தி
குறிப்புடனே ஆகாச வழிதான் கேளே
முந்தைய பாடலின் தொடர்ச்சியாக உள்ள இதில் அகத்தியர் மீதம் உள்ள ஐந்து வாயுக்களைப் பற்றிப் பேசுகிறார். முக்கியமான வாயுக்கள் பத்து என்றால் எதற்காக அவற்றை இரண்டு கூறாகப் பிரிக்கவேண்டும்? அவற்றினிடைய உள்ள வேறுபாடு யாது? இதை இப்பாடல் நமக்கு விளக்குகிறது. முற்பாடலில் கூறிய ஐந்து- பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என்பவை வாயுவின் கூறுடன் தேயு எனப்படும் அக்னியின் கூறையும் கொண்டவை. இப்பாடலில் கூறப்பட்டுள்ள ஐந்து- நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன் மற்றும் தனஞ்சயன், வாயுவின் கூறை மட்டும் கொண்டவை. அதனால் முதல் ஐந்தும் குண்டலினியின் எழுச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்போது இந்த ஐந்தும் உடலை அதற்குத் தகுந்த நிலையில் வைத்திருக்கின்றன. அதனால் தசவாயுக்கள் என்னும் இந்த பத்தும் சிவயோகத்துக்கு முக்கியமானவையாக உள்ளன.
இதனை அடுத்து அகத்தியர் ஆகாயத்தின் கதியை உள்ள தத்துவங்களை விளக்கப்போகிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~
(45) பற்றுகள்
கேளடா ஆகாச வழிதான் மைந்தா
கிருபையுடன் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு
வாளடா அர்த்த ஏடணை தான் ஒன்று
வகையான புத்திர ஏடணை தான் ஒன்று
சூளடா உலக ஏடணை தான் ஒன்று
சுத்தமுடன் ஆகாய வழியைக் கண்டு
ஆளடா அந்தரங்கச் சுழியில் நின்று
அப்பனே வாக்காதி அறிந்து பாரே
பாடல் 41ல் ஆகாயத்தின் கூறைக் கொண்டவை என்று அகத்தியர் காமகுரோதாதிகளைக் கூறினார். இப்பாடலில் ஆகாச தத்துவத்தின் அசைவை உடையவையான ஏடணைகளைக் குறிப்பிடுகிறார். ஏடணை என்பவை பற்றுக்கள். அவை செல்வத்தைக் குறித்த பற்று, புத்திரர்களைக் குறித்த பற்று மற்றும் உலகைக் குறித்த பற்று என்று மூன்று வகைப்படும். இந்த பற்றுக்களைக் கூர்ந்து நோக்கினோமானால் முன் கூறிய குணங்களினால் அவை பிறக்கின்றன என்பதைப் பார்க்கிறோம். இவற்றை சாதாரணமாகப் பிற பொருட்களைப் பார்ப்பதைப் போலப் பார்க்க முடியாது. யோக நிலையில் கவனத்தை உள்திருப்பும்போதுதான் அவை புலப்படுகின்றன. அதனால் அகத்தியர் புலத்தியரிடம் அவர் அந்தரங்க சுழி எனப்படும் சக்கரங்களில் நின்று அவற்றைப் புரிந்துகொள்ளுமாறு கூறுகிறார்.
இதனையடுத்து அவர் வாக்கு முதலிய ஐந்து செயல்களைக் கூறப்போகிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~
46. Actions of karmendriya
பாரப்பா வாக்காதி என்னவென்றால்
பதிவான வசனமொடு கெமனந்தானம்
நேரப்பா விசர்க்கமொடு ஆனந்தம் ஐந்தும்
நிரமான வசனாதி என்றும் பேரு
காரப்பா வசனாதி ஐந்தும் கண்டு
கருவான ஆதார மூலம் பார்த்து
சாரப்பா பிரகிருது வழியைப் பார்க்க
தன்மையுடன் சொல்லுகிறேன் சங்கை கேளு
இப்பாடலில் அகத்தியர் கர்மேந்திரியங்களின் செயல்களைக் கூறுகிறார். அவை வாக்கு (வாயின் செயல்), நடை அல்லது கமனம் (கால்களின் செயல்), மலம் கழிப்பு (கழிவு உறுப்புக்களின் செயல்), ஆனந்தம்- உடலால் இன்பம் (லிங்கத்தின் செயல்) மற்றும் தானம்- கொடுக்கல் வாங்கல் (கைகளின் செயல்). கர்மேந்திரியங்கள் தத்துவங்கள் என்றும் அவற்றின் செயல்கள் தாத்துவிகங்கள் அல்லது சார்புத் தத்துவங்கள் என்றும் சித்தர் மரபில் அழைக்கப்படுகின்றன. இவற்றை ஒருவர் ஆதார மூலம் அல்லது மூலாதாரத்தில் நின்று பார்க்கவேண்டும் என்கிறார் அகத்தியர். இதனை அடுத்து அவர் பிரகிருதியின் கதியை விளக்கப்போகிறார்.
--------------------------------------------------------------------------------
47. Path of prakriti and bindhu
கேளப்பா ராசதமுந் தாமதமும் மைந்தா
கிருபையுள்ள சாத்துவிகம் குணங்கள் மூன்றும்
வாளப்பா முக்குணங்கள் அறிந்துகொண்டு
வரிசையுடன் விந்தினுட வழியைக் கேளு
சூளப்பா பைசந்தி மத்திமை வைகரியுஞ்
சூக்குமையும் நாலுமிது வாக்கேயாகும்
ஆளப்பா வாக்காதி நாலும் பார்த்து
அரகரா ஆதாரந் தன்னைக் காணே.
இப்பாடலில் அகத்தியர் முக்குணங்களான சத்துவம், ரஜஸ், தமஸ் என்ற மூன்றையும்முதலில் குறிப்பிடுகிறார். அதன் பிறகு விந்துவின் கதியான வாக்கைப் பற்றிக் கூறுகிறார். வாக் அல்லது பேச்சு பரா அல்லது சூட்சுமம், பஷ்யந்தி, மத்திமை மற்றும் வைகரி என்று நான்கு வகைப்படும். மேற்கூறிய தத்துவங்கள் அனைத்தும் ஒரு உருவத்துக்கும் அதன் செயல்பாட்டுக்கும் ஆதாரங்களாக இருக்கின்றன. இவற்றின் தன்மைகளை அடுத்த பாட்டில் அவர் விளக்குகின்றார்.
--------------------------------------------------------------------------------
48. Summary of the principles
காணப்பா ஆதராந் தன்னிலேதான்
கருவான உட்கருவி முப்பத்தாறும்
பூணப்பா புறக்கருவி அறுபதாச்சு
புத்தியுடன் உள் வெளியும் நன்றாய்ப் பார்த்தால்
தோணப்பா தத்துவங்கள் தொண்ணூற்றாறுந்
தோணுமடா இருதயத்தில் சூழ்ந்து பார்க்கில்
வீணப்பா ஒன்றுமில்லை தத்துவமாங் குப்பை
விளங்குபதி பசுபாசம் விளையாட்டாச்சே
இதுவரை பட்டியலிட்ட தத்துவங்களை அகத்தியர் இப்பாடலில் தொகுக்குகிறார். தத்துவங்கள் மொத்தம் 96. அவற்றுள் 36 உட்கருவிகள் 60 வெளிக்கருவிகள். அகத்தியர் அவையனைத்தையும் குப்பை, தண்டம் என்கிறார். அவை பசு, பதி, பாசம் என்ற விளையாட்டை நிகழ்த்துவதற்குத்தான் சரி என்கிறார் அகத்தியர்.
----------------------------------------------------------------------------
49. Siva and Sakthi components of the 96 instruments
ஆச்சப்பா உட்கருவி முப்பத்தாறும்
அப்பே சிவத்தினுட கூறேயாச்சு
நீச்சப்பா புறக்கருவி அறுவதுதான்
நிசமான சக்தியுட கூறேயாச்சு
பேச்சப்பா உள்வெளியும் நன்றாய்ப் பார்த்து
பெருமையுடன் ஆதார நிலையுங் கண்டு
காச்சப்பா கருவி கரணாதி என்று
காடான தத்துவத்தைக் கண்டு தேரே
மொத்த தத்துவங்கள் 96ல் உட்கருவிகளான 36 தத்துவங்கள் சிவனின் கூறு என்கிறார் அகத்தியர். இந்த கருவிகள் வெளியிலிருந்து பெரும் அறிவினால் இயங்குகின்றன. வெளிக்கருவிகளான 60 சக்தியின் கூறு ஏனெனில் அவை செயல்பட்டு அறிவை ஏற்படுத்துகின்றன. இந்த சூட்சுமத்தை நன்கு அறிந்து கருவிகளையும் கரணங்கள் எனப்படும் மனத்தில் மாறுபாடுகளையும் நன்கு காய்ச்சுமாறு அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார். அவ்வாறு செய்தால் காடு போல் வழிதவறி உலகில் உழலச் செய்யும் தத்துவங்களை அறிந்து தேறலாம் என்கிறார் அகத்தியர்.
--------------------------------------------------------------------------------
50. Charya, kriya, yoga and Jnana
தேரப்பா சரிதையுடன் கிரிகை ரெண்டுஞ்
சிவசிவா சத்தியுட கூறேயாச்சு
காரப்பா யோகமுடன் ஞானம் ரெண்டும்
கருவான சிவத்தினுட காலேயாச்சு
நேரப்பா சிவரசம் அந்தங் கண்டு
நெறிமுறமை தவறாமல் அந்தம் பார்த்து
சாரப்பா சதுரகிரி பொதிகை தன்னில்
சங்கையுடன் நின்று தவந்தானே செய்யே
தத்துவங்கள் அல்லது கருவிகளைப் பற்றி விவரித்துவிட்டு அவை குப்பை, பதி, பசு, பாசம் என்ற விளையாட்டுக்குத் தான் லாயக்கு என்று கூறிய அகத்தியர் பரவுணர்வைப் பெற ஆகமங்கள் பரிந்துரைக்கும் சரியை, கிரியை,யோகம் ஞானம் என்ற நான்கு படிகளைப் பற்றிப் பேசுகிறார். இவற்றில் முதல் இரண்டு- சரியை, கிரியை என்பவை செயல்பாடுகள். அதனால் அவை சக்தியின் கூறுகள். யோகமும் ஞானமும் மனத்தால் மேற்கொள்ளப்படுபவை. அவை சிவனின் கூறுகள் என்கிறார் அகத்தியர். இவற்றை மேற்கொண்டால் ஒருவர் சிவரசம் எனப்படும் சிவ அனுபவத்தை சமாதியில் பெறுவார். ஆனால் அதுவே முடிவு நிலையல்ல. அதனால் அந்தங்கள் எனப்படும் துரிய நிலைகளை அனுபவித்து, அவற்றைக் கடந்து பரநிலையைப் பெற்று அதன் அந்தத்தையும் பார்த்து முடிவில் சர்வ வியாபகத்தை அடையவேண்டும் என்று புலத்தியரிடம் கூறுகிறார் அகத்தியர். இதற்கு புலத்தியர் சதுரகிரி பொதிகையை அடைந்து தவம் செய்யவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார். சதுரகிரி பொதிகை என்பது கண்டமூலத்தையும் மூலாதாரத்தையும் குறிக்கும். இதனால் அகத்தியர் புலத்தியரைக் குண்டலினி யோகத்தை மேற்கொள்ளச் சொல்கிறார் என்று நாம் புரிந்துகொள்கிறோம்.
--------------------------------------------------------------------------------
51. Measures of various factors in the body
தானான தேகமதில் கூடிநின்ற
சங்கைகளைச் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு
ஊனன ரோமமது மூன்றரையாங்கோடி
உத்தமனே நாடியது எழுபத்தீராயிரமாங்
கோனான தேகமடா பலமோ ஆயிரமாங்
கொள்கியத்தில் குடல்பலந்தான் நாற்பத்தைந்து
பூனான பல்லதுவும் பலந்தான்நாலு
பொருந்திநின்ற சதைபலமும் இருநூறாச்சே
இப்பாடலிலிருந்து அகத்தியர் உடலின் பல பகுதிகளைப் பற்றி விளக்கப் புகுகிறார். உடலில் உள்ள மயிர்க்கால்கள் மூன்றரைக் கோடி என்று தொடங்கும் அவர் நாடிகள் எழுபத்திரண்டாயிரம் என்கிறார். உடல் ஆயிரம் பலம் என்றும் குடல் நாற்பத்து இரண்டு பலம், பற்கள் நான்கு பலம், சதை இருநூறு பலம் என்றும் அவர் கூறுகிறார்.
---------------------------------------------------------------------------------
52. Measures of solids and liquids in the body-2
ஆச்சப்பா உப்பதுவும் பலந்தான் ஐந்து
அப்பனே மச்சையது பலந்தான் நாலு
நீச்சப்பா ஈரலது பலந்தான் எட்டு
நிசமான அஸ்தியதைச் சொல்லக் கேளு
காச்சப்பா பலமும் நூற்றிருபதாச்சே
கூட்டி நின்ற சேவுடுமந்தான் நாழியாகும்
பேச்சப்பா பித்தமது படிதான் காலாம்
பலமான சுக்கிலந்தான் அரைக்காலாகும்
பல வலைத்தளங்கள் தமிழரது அளவைகளைத் தருகின்றன. இங்கு ஒரு பலம் என்பது முப்பத்தைந்து கிராம் ஒரு நாழி அல்லது ஒரு படி என்பது 1444 மில்லி லிட்டர் என்பதைத் தெரிந்துகொண்டால் போதும்.
இப்பாடலில் அகத்தியர் ஒருவரது உடல் ஆயிரம் பலம் என்று கொண்டால் (முப்பத்து ஐந்து கிலோ) அதில் ஈரல் இருநூற்று என்பது கிராம், எலும்பு நான்கு கிலோ என்றும் உடலில் உள்ள திரவங்களில் கபம் அல்லது சிலேஷ்மம் ஒரு படி என்றும் பித்தம் கால் படி என்றும் விந்து அரைக்கால் படி என்றும் கூறுகிறார்.
-------------------------------------------------------------------------------
53. Entrances on the body
ஆச்சப்பா சர்மமது என்னவென்றால்
அப்பனே பலம் நூற்றிப் பதினாலாச்சே
தாமப்பா இப்படித்தான் கூடிநின்று
சரீரமத்தில் வாசலது எட்டுமாச்சு
நாமப்பா சொல்லுகிறோம் நன்றாய்க் கேளு
நாடிநின்ற கோபுரத்தின் வாசல் ஒன்று
ஓமப்பாஅவ்வாசல் ஒன்பதுக்கு
உண்மையுள்ள ஆதாரக் கதவைப் பாரே
இவ்வாறு உடலில் சர்மம் அல்லது தோல் நூற்றிப் பதினான்கு பலம் என்று முடிக்கிறார் அகத்தியர். இதனை அடுத்து இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள உடலில் எட்டு வாசல்கள் உள்ளன என்கிறார் அவர். இந்த எட்டு வாசல்களைத் தவிர்த்து ஒரு ஒன்பதாம் வாசல் உள்ளது என்றும் அந்த வாசலையே ஒருவர் நாடவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். இந்த வாசலை அவர் கோபுர வாசல், ஆதார வாசல் என்று குறிப்பதனால் இது மூலாதாரம் என்று தோன்றுகிறாது.
பொதுவாக உடலுக்கு ஒன்பது வாசல் என்று கூறுவது வழக்கம். அவை இரு கண்கள், இரு நாசித்துவாரங்கள், இரு காதுகள், ஒரு வாய், ஒரு பிறப்புறுப்பு மற்றும் ஒரு கழிப்புறுப்பு. ஒருவேளை அவர் பிறப்புறுப்புக்கு அருகில் இருக்கும் மூலாதாரத்தைத் தனியாகக் குறிப்பிடுவதனால் எட்டு என்ற எண்ணிக்கையில் அவர் பிறப்புறுப்பைச் சேர்த்துக்கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.
-------------------------------------------------------------------------------
54. The key for the locks in the cakra...
பாரப்பா ஆதாரக் கதவைச் சாற்றி
பலபலவாய் நின்றதொரு தாளைப் பூட்டி
நேரப்பா அப்பூட்டுத் தனக்கு மைந்தா
நிசமான சுழினையே கோல்தான் அப்பா
அறிந்து மிகத் தான் நிறுத்துப் பார்க்கும்போது
வீரப்பா கொண்டதொரு ஆறாதாரம்
விபரமுடன் தோணுதற்கு விபரங்கேளே
எதனால் ஆக்ஞா சக்கரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார். அவர் ஆறு ஆதாரங்களைக்பூட்டுக்கள் கொண்ட கதவுகள் என்றும் அந்தக் கதவுகளைத் திறக்க பயன்படும் திறவுகோல் ஆக்ஞா அல்லது சுழினை என்றும் கூறுகிறார். இதனை அடுத்து அவர் ஆறு ஆதாரங்களை விளக்கப்போகிறார்.
------------------------------------------------------------------------------
55. Muladhara
Muladhara
மூலாதாரம்
கேளப்பா விபரமென்ன மூலாதாரங்
கிருபையுடன் கண்டுகொள்ள வகையைக் கேளு
காலப்பா தோன்றி நின்ற மூலாதாரம்
கருணையுடன் சொல்லுகிறேன் அண்டம் போலாம்
மேலப்பா அண்டமதிற் சூழ்ந்து நின்ற
விசையான இதழதுதான் நாலுமாச்சு
சூளப்பா நிறமதுதான் மாணிக்கம் போல்
சுகமாக நின்றுதடா மூலம் பாரே
மூலாதாரமே கால் அல்லது பிராணன் தோன்றும் இடம், அது அண்டம் போல் இருக்கும் என்கிறார் அகத்தியர். அண்டம் என்பது ஒரு கோளம் மற்றும் உலகம் என்று பொருள்படும். இதன் இதழ்கள் நான்கு என்று கூறும் அகத்தியர் அதன் நிறம் மாணிக்கம் என்கிறார்.
---------------------------------------------------------------------------------
56. How to perceive the muladhara
Muladhara-2
பாரப்பா மூலமென்ற முட்டைக்குள்ளே
பதியான அக்ஷரந்தான் ஓங்காரமாச்சே
நேரப்பா நின்ற ஓங்காரத்தோடே
நிசமான ரீங்காரம் உகாரங் கூட்டி
சாரப்பா தன்மனமே சாக்ஷியாக
தன்மையுடன் தானிருந்து செபிப்பாயாகில்
காரப்பா கணபதியும் வல்லபையுமைந்தா
கனிவாக உந்தனிடம் கனிவார் காணே
முந்தைய பாடலில் அகத்தியர் மூலாதாரத்தின் அமைப்பைக் கூறினார். இப்பாடலில் அதைக் காண்பதற்கான வழிமுறையைத் தருகிறார். சரியான தன்மையுடன் இருந்து ஒருவர்ஓம் ரீம் உம் என்று மனதினுள் ஓதினால் கணபதியும் அவரது துணைவியார் வல்லபையும் அவருக்கு அருள் புரிவார் என்கிறார் அகத்தியர்.
-----------------------------------------------------------------------------
57. Benefits of perceiving the muladhara and continuing the practice
காணடா கனிவாகக் கண்டாயானால்
கருணையுள்ள சிவலோகம் உறுதியாச்சு
பூணடா சிவயோகம் உறுதியானால்
பொற்கமலம் உச்சியிலே தீபங்காணும்
பேணடா தீபமதை தினமும் நோக்கிப்
பிசகாமல் வாசியிலே பிலமாய் நில்லு
தோணடா அவ்வாசிப் பிலமாய் நின்றால்
சுக சீவ பிராண கலை சுத்தமாச்சே
மூலாதாரத்தை எவ்வாறு பார்ப்பது என்று முந்தைய பாடலில் கூறிய அகத்தியர் இப்பாடலில் அவ்வாறு செய்வதனால் வரும் பலனைக் கூறுகிறார். இந்தப் பயிற்சியை அவர் சிவயோகம் என்கிறார். இந்த சிவயோகம் உறுதிப்பட்டால் சிவலோகத்தைப் பெறுவது உறுதி என்கிறார். இந்தப் பயிற்சியை ஒருவர் தினமும் செய்து வாசியில் நின்றால் பொன்கமல உச்சியில் சோதி தெரியும் என்கிறார். இங்கு ஆத்ம தரிசனத்தைப் பற்றிப் பேசுவதால் இது ஆக்ஞை என்று தோன்றுகிறது. இதனால் சீவகலை தூய்மையடையும் என்கிறார் அவர்.
--------------------------------------------------------------------------------
58. Svadishtana
சுவாதிஷ்டானம்
சுத்தமுடன் ஆதார மூலஞ் சொன்னேன்
சுவாதிஷ்டானத்தினுட சுகத்தைக் கேளு
பதமுடன் நாற்கோணம் இதழ்தான் ஆறு
பதிவான பொன் நிறம்போல் இருக்கும் மைந்தா
சுத்தமுள்ள நாற்கோணம் நடுவிலே தான்
தெளிவான நகாரமென்ற தீபமேத்தி
நித்தமுமே நகாரமுடன் சிவறீங்கிட்டு
நிலையறிந்து உருச்செபிக்க நிசத்தைக் கேளே
இப்பாடல் சுவாதிஷ்டானம் என்று குறிப்பிட்டாலும் சில பகுதிகள் மூலாதார சக்கரத்தைப் போல உள்ளன. தந்திரங்கள் மூலாதாரத்தை சதுரமாகக் குறிப்பிடுகின்றன. இங்கு அகத்தியர் சுவாதிஷ்டானத்தை சதுரம் என்கிறார். அதன் உள்ளே இடவேண்டிய எழுத்து நகாரம் மற்றும் சிவ ரீங்காரம். தந்திரத்தில் குறிப்பிடப்படும் எழுத்து வம் என்பது. அகத்தியர், அந்த சதுரத்தைச் சுற்றி ஆறு இதழ்கள் உள்ளதாகக் கூறுகிறார். தந்திரமும் சுவாதிஷ்டானத்தை ஆறு இதழ்களுடன் வரைகிறது.
சுவாதிஷ்டானமே ஆத்மாவின் இருப்பிடம் என்றும் மூலாதாரத்தில் அதன் கர்மங்கள் உள்ளன என்றும் இந்த இரு சக்கரங்களும் சேர்ந்திசைந்து குறிப்பிட்ட குணங்களையுடைய ஒரு மனிதனாகப் பிறக்கின்றன. மூலாதாரப் பயிற்சி மூலம் ஜீவகலையைத் தூய்மைப் படுத்திய பிறகு ஏற்படும் அனுபங்களை அகத்தியர் இதன்மூலம் குறிப்படுகின்றார் என்று நாம் கருதலாம்.
கோபிநாத கவிராயர் என்பவர் நவநாத சித்தர்களில் ஒருவரான கோரக்கரின் சக்கரங்களைப் பற்றிய விளக்கங்கள் தந்திரத்தில் குறிப்பிடப்படும் விளக்கங்களிலிருந்து வேறுபட்டுள்ளன என்கிறார். அதேபோல் அகத்தியரின் விளக்கங்களும் வேறுபடுகின்றன.
-----------------------------------------------------------------------------
59. Experience at the svadishtana
கேளடா நிலையறிந்து வாசிகொண்டு
கீழ் மேலும் நன்றாக நின்றுபாரு
சூளடா நின்றநிலை பார்க்கும்போது
சோதியொன்று தோணுமடா பிரம சொரூபம்
ஆளடா பிரம்ம நிலை ரூபங்கண்டால்
அடங்காத வாசியது அடங்கும் வீட்டில்
காலடா வாசியது அடங்கி நின்றால்
கண்ணடங்கா பூரணத்தைக் காணலாமே
மூலாதாரத்தில் செய்யவேண்டிய பயிற்சிகளின் மூலம் சீவகலையைத் தூய்மைப்படுத்திய ஜீவன் சுவாதிஷ்டான சக்கரப் பயிற்சியின் மூலம் பிரம்ம சொருபத்தைப் பார்க்கிறது என்கிறார் அகத்தியர். இந்த அனுபவத்தைப் பெற வாசி உதவுகிறது. வாசி என்பது வெறும் மூச்சுப் பயிற்சி அல்ல. அது பிரபஞ்ச சக்தியை சுவாசத்தின் மூலம் உள்ளிழுப்பது. சுவாசத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் வாசி கட்டுக்கொள் கொண்டுவரப்படுகிறது. அதனால்தான் இந்த சுவாதிஷ்டானப்பயிர்சியில் அது வீட்டில் அடங்குகிறது என்கிறார் அகத்தியர். வாசி அடங்குவது என்பது கும்பக நிலை, உள்மூச்சு வெளிமூச்சற்ற நிலை. இந்த நிலையில் ஜீவன் பரம்பொருளை பிரம்மசொரூபத்தை பரிபூரணத்தைப் பார்க்கிறது என்கிறார் அவர். இந்தக் காட்டி கண்ணுக்குள் அடங்காதது என்றும் அவர் கூறுகிறார்.
-------------------------------------------------------------------------------
60. Manipurakam
மணிபூரகம்
காணவே பிரம்மாவின் பதியைச் சொன்னேன்
கருவான மணிபூரகங் கருத்தைக் கேளு
தோணவே பிறை மூன்றாம் பிறை போற்கீறித்
துலங்க அதில் ஈரைந்து பத்தும் போட்டு
பேணவே நிரமதுதான் பளிங்கு போலாம்
பிறை மூன்றாம் பிறை நடுவே மகாரமிட்டு
பூணவே சங்கிலி மங்கென்றேதான்
பூரணமாய்த் தினம் நூறு செபித்துக்காரே
முந்தைய பாடலில் அகத்தியர் சுவாதிஷ்டான காக்கரத்துக்கான பயிற்சியைக் குறிப்பிட்டு அதைச் செய்பவர் பிரம்ம சொரூபத்தைக் காண்பர் என்றார். இப்பாடலில் அவர் சுவாதிஷ்டானம் பிரம்மாவின் இருப்பிடம் என்கிறார். அவரது விளக்கம் நவநாத சித்தர் கோரக்கநாதரின் விளக்கத்தை ஒத்திருக்கிறது. இப்பாடலில் அகத்தியர் மணிபூரக சக்கரத்தை விளக்குகிறார். இந்த சக்கரப் பயிற்சிக்கு மூன்றாம் பிறையைப் போன்ற பிறையை நடுவில் வரைந்து அதன் மத்தியில் மகாரத்தை இடவேண்டும். அதனைச் சுற்றி பத்து இதழ்களைப் போட்டு நடுவில் மகாரத்தை இட வேண்டும். மகாரத்துடன் சங் கிலி மங் என்று நூறுமுறை செபிக்கவேண்டும் என்கிறார் அவர். மனிபூரகத்தின் நிறம் பளிங்கு என்கிறார். இதன் மூலம் அகத்தியர் விளக்கும் முறைகள் தமிழ் சித்தர்களின் தனிப்பட்ட முறைகள் என்பது புரிகிறது.
அகத்தியர்அறிவுரை!
-------------------------------
"பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம்
உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி
உனக்கேதடா. பாவத்தை செய்தவன்
சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே.
அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி
தண்டனை தருவார் என்பது யாருக்கும்
தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான்
இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு
நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான்
என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக்
கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம்
இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த
நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று
பொருள். இந்த கருத்தை மனதில்
வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும்
பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக
எளிதாக, மிக நீதியாக தோன்றும்."
!ஓம் அகத்திய குருவே போற்றி!
தொடரும் அகத்தியரை நோக்கிய இந்த உண்மை பயணம் ......
"அகத்தியர் சௌமிய சாகரம்"
Vadha saumyam 1200 {பாகம் -3}
------------------------------------------------------
{பல நண்பர்களின் வேண்டுதலுக்கு இணங்க அகத்தியர் பெருமானால் உலகுக்கு அருளப்பட்ட இது வரை ஓலை வடிவிலேயே விளங்கிய அரிய பொக்கிசமாகிய இந்த அகத்தியர் சௌமிய சாகரம் என்ற மிக பெரிய பொக்கிஷத்தை சித்தர்களின் குரல் வாயிலாக உலகம் அறிந்து பயன் பெற அகத்தியர் பெருமானின் பாதம் பணிந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்... நன்றி}
61. Benefit of the manipurakam practice
கார்க்கவுரு செபித்த நடு புருவமதில்
கண்ணுமனக் கண்ணாலே நன்றாய்ப் பார்த்தால்
மார்க்கமுடன் லட்சுமியும் விஷ்ணு தேவர்
மகத்தான பூரண ச் சந்திரன்போல் மைந்தா
யேர்க்கையுடன் இருதயத்தில் காணும் பாரு
இன்பமுள்ள தரிசனத்தைக் கண்டாயானால்
தீர்க்கமுள்ள சிவயோக வாழ்வு பெற்று
செல்வபதி யாயிருப்பாய் தினமும் நோக்கே
முந்தைய பாடலில் மனிபூரகத்திற்கான யந்திரத்தையும் மந்திரத்தையும் ஜெபிக்கும் முறையையும் கூறிய அகத்தியர் இப்பாடலில் அப்பயிற்சியினால் ஏற்படும் பயனைக் கூறுகிறார். மேற்கூறிய மந்திரத்தை ஜெபித்தபடி மனக்கண்ணால் புருவ மத்தியை நோக்கினால் இதயத்தில் லட்சுமி மற்றும் விஷ்ணுவின் உருவங்கள் தோன்றும் என்றும் அதை அனுபவிக்கும் ஒருவர் சிவயோக வாழ்வை வாழ்வார் பெரும் செல்வத்துக்கு அதிபதியாக இருப்பார் என்கிறார் அகத்தியர். மேலும் அவர், இந்தப் பயிற்சியை ஒருவர் தினமும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.
------------------------------------------------------------------------------
62. Benefit of Manipurakam practice-2
நோக்குவது பூரணச் சந்திரனை நோக்கு
நுண்மையுடன் பூரணமாய் நின்றாயானால்
நாக்கு நுனி யந்தமதில் வாசி நின்று
நலங்காமல் தீபமதில் நாடும் பாரு
வாக்கு மனதொன்றாகி நின்று பாரு
மக்களே கண் பசுவு வாழ்வுண்டாகும்
தூக்கமென்ற கொடுமை தனை அகற்றி மைந்தா
சுகமான இடமறிந்து சுகத்தில் நில்லே
முந்தைய பாடல்களில் அகத்தியர் மூலாதாரப் பயிற்சி ஜீவகலையைத் தூய்மைப் படுத்தும் என்றும் சுவாதிஷ்டான பயிற்சி பிரம்ம சொரூபத்தைக் காட்டும் என்றும் கூறினார். இப்பாடலில் அவர் மணிபூரக சக்கரப் பயிற்சி பசு நிலையை அளிக்கும் என்கிறார். பதி பசு பாசம் என்ற மூன்றில் பத்தி என்பது பரவுணர்வு நிலையைக் குறிக்கும். பசு என்பது தான் தூய விழிப்புணர்வு, ஆனால் பாசத்தால் அளவுக்குட்பட்டதைப் போல எண்ணுபவன் என்று ஜீவாத்மா உணர்ந்த நிலை என்று திருமூலர் திருமந்திரத்தில் குறிக்கிறார். தனது நிலையை உணர்ந்தாலும் ஜீவன் இதில் பாசத்தில் தோய்ந்திருக்கிறது. பசு என்பது தன்னையறியாத நிலையல்ல.
இந்தப் பயிற்சியின்போது வாசி நாக்கு நுனியில் நிற்கும் என்கிறார் அகத்தியர். “நலுங்காமல் தீபமதில் நாடும்” என்பது ஆத்மா, விழிப்புணர்வு என்ற தீபத்தை நாடுவதைக் குறிக்கிறது. வாசி இவ்வாறு நின்றால் மனமும் சொல்லும் அதன் பலனாக காயமும் இசைந்திருக்கும் நிலை ஏற்படும். அந்நிலையில் ஆத்ம ஜோதியை நாடுவது சாத்தியமாகிறது. அகத்தியர் தூக்கத்தைக் கொடுமை என்கிறார். ஏனெனில் அது ஜீவனை அறியாமை என்ற இருளில் மூழ்கடித்துவிடுகிறது. அதனால் ஒருவர் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு இந்தப் பயிற்சியின்போது ஏற்படும் ஆனந்த நிலையில் இருக்க முனைய வேண்டும் என்கிறார் அகத்தியர்.
----------------------------------------------------------------------------
63. Anahata
அனாகதம்
நில்லடா நிலை அறிந்து சுகத்தைக் காண
நிசமான ருத்திரனார் பதியைக் கேளு
சொல்லடா சொல்லறிந்து சுகத்தைப் பார்க்க
சுகமான முக்கோணம் நன்றாய்க் கீறி
அல்லடா முக்கோணத் ததிலே நீதான
அப்பனே பன்னிரண்டு திரந்தான்போடு
விள்ளடா செம்பு நிறமான கோட்டை
விசையான கோட்டை நடு விந்து போடே
அனாகத சக்கரத்தை இப்பாடலிலிருந்து விளக்கத் தொடங்குகிறார் அகத்தியர். இரு முக்கோணங்கள் ஒன்று மேல்நோக்கியும் ஒன்று கீழ் நோக்கியும் இருக்கும் இந்தச் சக்கரத்தை அவர் வரிகள் நான்கு ஐந்தில் குறிக்கிறார். இந்த சக்கரத்தில் பன்னிரண்டு இதழ்களை வரையுமாறு கூறுகிறார். இந்த சக்கரத்தின் மத்தியில் பிந்துவைப் போடா வேணும் என்கிறார். அனாகதம் ருத்திரனின் பதியாகும்.
-------------------------------------------------------------------------------
64. Origin of Atma jyothi
போடப்பா விந்து நடு ஓங்காரந்தான்
பூரணமாய் சிங்கிலி யொன்று நாட்டி
நாடப்பா விந்து நடு முனை மையத்தில்
நாடிநின்று சிங்கிலி என்று சொல்லி
வீடப்பா பிலப்பதற்கு தினம் நூற்றெட்டு
விரும்பி மன தரிவதினால் உருவே செய்தால்
சூடப்பா தானேறி முனை மையத்தில்
சூரியன்போல் காந்தி வெகு சோதியாமே
அனாகத பயிற்சியை விளக்கும் இப்பாடலில் அகத்தியர் சித்தர்கள் அனைவரும் கூறும் ஜோதி எவ்வாறு தோன்றுகிறது என்று விளக்குகிறார். மேற்கூறிய இரு முக்கோணங்களின் மத்தியில் ஓம்காரம் சங் கிலி என்று எழுதி அந்த அட்சரங்களை மனதுள் நூற்றியெட்டு முறை செபிக்க வேண்டும் என்று கூறும் அகத்தியர் அவ்வாறு செய்தால் உள்ளே சூடேறி முனை எனப்படும் ஆக்னையில் சூரியனைப் போல ஒரு ஒளி தோன்றும் என்கிறார். இதைத்தான் பல நூல்கள் ஆத்ம ஜோதி என்கின்றன.
--------------------------------------------------------------------------------
65.nahata practice
சோதிஎன்ற காந்தியடா சூரிய காந்தி
துலங்கு நடுச் சுழினையை நீ காண்டாயானால்
ஆதியென்ற ஆதாரம் ஆறாதாரம்
அரூபமாய மானதொரு மேலாதாரம்
நீதியுடன் தோணுமடா வாசியாலே
நின்றிலங்கும் வாசிதனைத் தன்னுள் பார்த்து
சாதியென்ற சராசரத்தைத் தானாஎண்ணி
சதாயோக பூரணமாய் நின்று பாரே
சக்கரங்கள் உடலில் குறிப்பிட்ட இடங்களில் இருப்பதாக் கருதினாலும் அவற்றிற்கான பயிற்சிகள் ஏற்படுத்தும் விளைவுகள் அந்த சக்கரங்கள் இருக்கும் இடத்தில்தான் ஏற்பட வேண்டும் என்பதில்லை என்று இந்தப் பாடல்கள் காட்டுகின்றன. அனாகத சக்கரப் பயிற்சிகள் ஆக்னையில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்தச் சக்கரத்தை மேல் ஆதாரம், அரூபமானது முக்கியமான ஆதாரம் என்றகிறார் அகத்தியர். இந்த விளைவு வாசியால் ஏற்படுகிறது என்றும் அவர் கூறுகிறார். வாசி என்பது மூச்சுப் பயிற்சியினால் உயிர் சக்தியை உடலுள் புகச் செய்வது. இந்த நிலையில் அந்தப் பயிற்சியாளர் உலகம் முழுவதுமே தான் என்ற பாவத்தில் நிற்பார். இதுவே சதா யோக பூரண நிலை என்கிறார் அகத்தியர்.
-----------------------------------------------------------------------------
66. By Rudra's grace...
பார்க்கையிலே ருத்திரனார் கடாக்ஷத்தாலே
பாதாதி கேசமுதல் நன்றாய்ப் பாரு
சேர்க்கையுடன் பார்க்கையிலே மைந்தா மைந்தா
என்ன சொல்வேன் அக்கினிபோல் ஆகுந்தேகம்
தீர்க்கமுடன் அக்கினிபோல் தன்னுள் கண்டாற்
சிவயோக வாழ்வு வெகு திறமாய் நிற்கும்
மார்க்கமுடன் உருத்திரனார் பதியைப் பார்த்து
மனங் குவிந்து பூரணத்தில் மருவியேறே
அனாகதப் பயிற்சி உடலில் சூடேற்றி அதை அக்னி போலத் தகிக்கச் செய்யும். அந்தத் தீ போல உள்ளே இருப்பதை ஒருவர் மனத்துடன் தலை முதல் கால்வரை பார்த்தால் உடல் நெருப்புபோல இருப்பதைக் காணலாம். இந்தப் பேற்றைப் பெற்றால் சிவயோக வாழ்வு கிட்டும் என்றும் அதனால் மனக் குவிப்புடன் பூரணம் என்னும் சக்தியின் உதவியினால் சக்கரங்களில் விழிப்புணர்வை ஏற்றவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார். சக்தியைப் பூரணம் என்றும் சிவனைக் காரணம் என்றும் அழைப்பதைப் பல சித்தர்கள் பாடலில் காணலாம்.
--------------------------------------------------------------------------------
67. Vishuddhi
விசுத்தி
மருவி நின்ற தலமதுதான் விசுத்தி வீடு
மகத்தான அறுகோணம் நன்றாய்ப் போட்டு
திருவிருந்த அறுகோணஞ் சுத்தி நல்ல
தீர்க்கமுடன் பதினாறு இதழ்தான் போட்டு
குருவிருந்த கோட்டை வெகு கருப்பாய் நிற்குங்
குணமான அக்கோட்டை நடுவிலேதான்
உருவரிந்து விந்திட்டு ஓங்காரஞ் சுத்தி
உத்தமனே வங்கிலி யங்கென்று போடே
விசுத்தி சக்கரத்தை விளக்கத் தொடங்குகிறார் அகத்தியர். அறுகோணம் அல்லது ஷட்கோணத்தைக் கொண்ட இந்த சக்கரத்தைச் சுற்றி பதினாறு இதழ்கள் போடவேண்டும் என்றும் அதன் மத்தியில் பிந்துவும் அதைச் சுற்றி ஓம்காரமும் போடவேண்டும் என்றும் அதனுடன் வங் கிலி யங் என்று எழுதவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். இந்த சக்கரத்தை குருவின் கோட்டை என்று அழைக்கும் அவர் அது கரிய நிறத்தில் இருக்கும் என்கிறார். சிவனின் கரிய கழுத்து இதைத்தான் குறிக்கிறது.
------------------------------------------------------------------------------
68. Lahiri due to vishuddhi practice..
போட்ட பின்பு மனதுகந்து மனக்கண் சாத்தி
பூரணமாய் வங்கிலி யங்கென்றிட்டு
நாட்டமுடன் தானிருந்து ஒரு நூறு மைந்தா
நன்மையுடன்தான் செபித்து நயனமேவி
தேட்டமுடன் குருபதியில் சென்று பாரு
சிவ சிவா வாய்வேக லகிரியுண்டாம்
வாட்டமில்லா லகிரியடா வாய்வேகமாகு
மகத்தான யோக சிவ போதமாமே
விசுத்தி சக்கரப் பயிற்சி யோகியை லகிரி நிலைக்கு இட்டுச் செல்லும் என்கிறார் அகத்தியர். இது வாயு எனப்படும் பிராணனால் ஏற்படுகிறது என்கிறார் அவர். இந்த நிலையை ஒருவர் மனக்கண்ணால் குருபதியில் பார்க்க முடியும் என்கிறார். குருபதி என்பது ஆக்ஞை என்று சிலர் கூறுகின்றனர். சில சித்தர்கள் (கோரகனாதர்) இந்த சக்கரம் ஆக்ஞைக்கு சிறிது மேலே இருக்கிறது என்று கூறுகிறார்.
அமரகவி சித்தேஸ்வரர் இந்த நிலையை ஆனந்த ஆஸ்பதம் என்கிறார். இந்த நிலை கடல்போல எழுந்து ஒருவரை மூழ்கடித்துவிடும், அதனால் ஒருவர் இந்த நிலையிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.
------------------------------------------------------------------------------
69. Maheswaram and triple flames
ஆமப்பா யோகமென்று சிவயோகந்தான்
அருளான முச்சுடரின் அந்தத்தாலே
ஓமப்பா முச்சுடரின் அந்தம் பார்த்தால்
ஒளி விளக்காய் நின்றதொரு மூலத் தீதான்
வாமப்பா நிறைந்த தொரு மூலத்தீதான்
வளர்ந்துதடா அறுகோண வரையின் மேலே
நாமப்பா சொல்லுகிறோம் நன்றாய்ப் பாரு
நாதாந்த மயேஸ்வரத்தைக் காணலாமே
விசுத்தி சக்கரம் மகேச்வர தத்துவத்தின் இடம். அங்கு மகேச்வர தத்துவம் வெளிப்படுகிறது. பஞ்ச கர்த்தாக்கள் எனப்படும் சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன் விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் முறையே ஆக்ஞா, விசுத்தி, அனாஹதம், மணிபூரகம், சுவாதிஷ்டானம் என்ற சக்கரங்களில் தோற்றமளிக்கின்றனர். இதனால் அவர்கள் இந்த சக்கரங்களில் அமர்ந்திருக்கின்றனர் என்று பொருளல்ல. இவர்கள் ஒவ்வொருவரும் விழிப்புணர்வின் ஒவ்வொரு நிலையைக் குறிக்கின்றனர். பிரம்மா சாக்ரத் எனப்படும் விழிப்புநிலையையும் விஷ்ணு சுவப்னம் எனப்படும் கனவு நிலையையும் ருத்திரன் சுஷுப்தி எனப்படும் ஆழ்உறக்க நிலையையும் மகேஸ்வரன் துரிய நிலையையும் சதாசிவன் துரியாதீத நிலையையும் குறிக்கின்றனர். இவர்கள் ஆத்மா தனது மலங்கள் ஐந்தை, ஒவ்வொன்றாக இழந்த நிலையைக் குறிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் பல்வேறு தத்துவங்களுக்கு நிலைகளுக்குக் குறியீடுகளாக இருக்கின்றனர்.
முச்சுடர் அல்லது முத்தீ என்பது சூரியன், சந்திரன், அக்னி என்ற மூன்றையும் குறிக்கும்.
இந்த மூன்றுவித ஒளிகளும் மூலாதாரத்தில் உள்ள அக்னியின் வெளிப்பாடுகளே என்கிறார் அகத்தியர். மூலாதாரத்தில் உள்ள ஒளி விளக்கே இவ்வாறு மூன்று தீக்களாக காணப்படுகிறது, இதை ஒருவர் அவற்றின் அந்தத்தைப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம் என்கிறார் அவர்.
விசுத்தியில் பெரும் அனுபவம் சிவயோகம், உயர் விழிப்புணர்வுடன் சேர்க்கை என்கிறார் அகத்தியர்.
-----------------------------------------------------------------------------
70. Ajna
ஆக்கினை
காணவே மயேஸ்வரத்தின் கடாக்ஷத்தாலே
கண்ணான சதாசிவத்தின் கருவைக் கேளு
தோணவே ஆக்கினையாம் விந்து வட்டம்
சொல் நிறைந்த வட்டமதில் இதழ்தான் ரெண்டு
பூணவே வட்டமத்தின் நிறந்தான் சொல்வேன்
புதுமை வெகு புதுமையடா ஆகாசந்தான்
பேணவே ஆகாச வட்டத்துள்ளே
பேர் பெரிய பிரணவத்தை நன்றாய் நாட்டே
ஆக்ஞை சக்கரத்தை விளக்கும் இப்பாடல் அச்சக்கரம் சதாசிவ தத்துவத்தைக் குறிக்கிறது என்கிறது. எழுத்துக்கள் நிறைந்த இது இரு இதழ்களைக் கொண்டது. அதன் நிறம் புதுமையானது என்கிறார் அகத்தியர். இதனுள் இருக்கும் மந்திரம் ஓம்காரம்.
---------------------------------------------------------------------------------
71. Yantra and mantra for ajna
நாட்டவே ஓங்கார நடுவிலேதான்
நன்மையுடன் அகாரமுடன் உகாரஞ்சாற்றி
தேட்டமுடன் ரீங்காரம் நுகாரஞ்சாற்றி
திறமாகத் தானிருந்துப் புருவமேகி
கூட்டமன்றி தானாகத் தானே நின்று
குணமாக அங்ரீங் உம்மென்றேதான்
வாட்டமில்லா மனதாக தினம் நூறு மைந்தா
மார்க்கமுடன் தான் செபிக்க வரிசை கேளே
சித்தர்களின் சக்கர வழிபாட்டில் யந்திர மந்திரங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. முந்தைய பாடலில் ஆக்ஞா சக்கரத்தை விளக்கிய அகத்தியர் இப்பாடலில் அதில் இடப்படும் அட்சரங்களையும் செபிக்க வேண்டிய அட்சரங்களையும் குறிப்பிடுகிறார். அடுத்த பாடலில் இப்பயிற்சியின் பலன்களைக் கூறுவார்.
ஆக்ஞா சக்கரத்தின் இடம் புருவமத்தி. ராமரின் கையில் இருக்கும் வில் புருவங்களைக் குறிக்கின்றன என்றும் அதன் ஊடே செலுத்தப்படும் அம்பு விழிப்புணர்வு அல்லது குண்டலினி சக்தி என்றும் சிலர் கூறுகின்றனர். ஆக்ஞைவரையில் தான் உருவத்தையுடைய இறைவன் காணப்படுகிறான். ஆக்ஞைக்கு மேல் அருவுருவமே பார்க்கப்படுகிறது.
-------------------------------------------------------------------------------
72. Benefits of Sadasiva pooja
வரிசையுடன் ஆதாரஞ் செபித்து மைந்தா
மார்க்கமுடன் சதாசிவத்தை மகிழ்ந்து கொண்டால்
தெரிசனமாய் நின்றதொரு ஆறாதாரஞ்
சிவ சிவா அரூபமாய மாகத் தோணுங்
கரிசனமே நின்றதொரு ஆறாதாரங்
கண்ணடங்காத் தெரிசனங்கள் காண லாகும்
புரிச முடன் சதாசிவத்தில் மனதை வைத்து
புத்தியுடன் அனுதினமும் பூசை பண்ணே
இப்பாடலுடன் அகத்தியர் சக்கரப் பூஜைகளை முடிக்கிறார். இக்கடைசி பாடலில் அவர் ஆறு ஆதாரங்கள் இறைவனின் கரிசனத்தால் நம் உடலில் உள்ளன என்று கூறுகிறார். ஆக்ஞை பயிற்சியில் ஒருவர் மனதை சதாசிவத்தில் வைத்தால் அரூபமான ஆறு ஆதாரங்களும் புலப்படும் என்றும் பல அற்புதக் காட்சிகள் தென்படும் என்றும் அவர் கூறுகிறார். இங்கு அவர் முக்கியமான கருத்து ஒன்றை விளக்குகிறார். இப்பாடலின் கடைசியில் அவர் மனத்தை சதாசிவத்தில் வைக்கவேண்டும் என்றும் புத்தியால் பூஜை செய்யவேண்டும் என்றும் கூறுகிறார். மனம் என்பது உணர்ச்சிகளை அனுபவிப்பது. அதை சதாசிவத்தில் வைக்கும்போது பிற வெளிப்பொருட்களால் கவனச்சிதறல்கள் ஏற்படாமல் இருக்கிறது. புத்தி என்பது நன்மை தீமைகளைப் பகுத்துணரும் மனத்தின் பகுதி. பூஜை செய்யும்போது இறைவனே அழிவற்றவன் பிற பொருட்கள் அனைத்தும் அழிவுக்குட்பட்டவை என்பதை புத்திபூர்வமாக உணர்ந்து அவனை வழிபடவேண்டும். அப்போது வழிபாடு மனப்பூர்வமாக ஏற்படும்.
--------------------------------------------------------------------------------
73. Lalata cakra
பண்ணப்ப ஆதார பூசைப் பண்ணி
பதியான முச்சுடரின் தியானங் கேளு
நண்ணப்பா புருவமத்தில் மனக்கண் சாற்றி
நாட்டமுடன் அங்கிலி நங்கென்றேதான்
உன்னாப்பா லலாட விழிக் கண்ணினின்று
உத்தமனே நூற்றெட்டு உருவே செய்தால்
கண்ணப்பா தான் குளிர மதிதானின்று
காணுமடா பூரணச் சந்திரனைப் பாரே
ஆக்ஞைக்கு அடுத்த சக்கரம் லலாட சக்கரம். அது ஆக்ஞைக்கு சிறிது மேலே இருக்கிறது. ஆக்ஞை எவ்வாறு குங்குமம் இட்டு நினைவில் நிருத்தப்படுகிறதோ அதே போல் லலாடம் சந்தனத்தால் பிறையைப் போல நெற்றியில் குறிக்கப்படுகிறது. இதன் குளுமையை உணர்த்தவே சந்தனம் பயன்படுத்தப்படுகிறது. இப்பாடலில் அகத்தியர் லலாட சக்கரம் முத்தீயின் தியானம் ஆகியவற்றை விளக்குகிறார். இதற்கான யந்திரம் குறிப்பிடப்படவில்லை. ஆக்ஞைக்கு மேல் இறைவனின் அருவ உருவம் தியானிக்கப்படுவதால் எவ்வித யந்திரமும் கொடுக்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது. இத்தியானத்துக்கான மந்திரம் அங் கிலி நங் என்று அகத்தியர் கூறுகிறார். இவ்வாறு நூற்றியெட்டு முறை செபித்தால் முத்தீக்கள் தென்படும் லலாடக் கண் திறக்கும். கண்கள் குளுமையடைந்து பூரண சந்திரன் தென்படும் என்கிறார் அவர்.
---------------------------------------------------------------------------------
74. Gurupathi
பாரப்பா பூரணச் சந்திரனைக் கானில்
பாதாதி கேசமுதல் பதிவாய் மைந்தா
நேரப்பா குளிர்ச்சி வெகு குளிர்ச்சியாகும்
நேமமுடன் அந்நேரம் நினைவாய் மைந்தா
தேரப்பா குருபதியில் திறமாய் நின்று
செகத்தோர்க்கு விபூதியை நீ கடாக்ஷி த்தாக்கால்
வீரப்பா கொண்டதொரு சுரமும் தீரும்
வினையான வல்வினையும் விட்டுப்போமே
இதுவரை தனிமனித அனுபவங்களை மட்டும் பேசிவந்த அகத்தியர் இப்பாடல் முதல் எவ்வாறு ஒரு யோகி பிறருக்கு உதவுகிறார் என்று கூறுகிறார். லலாட சக்கரத்தை அடைந்து பூரண சந்திரனை அனுபவித்த யோகியின் உடல் தலை முதல் கால் வரை குளுமையாகிறது. இந்த அனுபவத்தைப் பெற்ற யோகி அடுத்த சக்கரமான குரு சக்கரம் அல்லது குருபதத்திற்கு உயர்ந்து அங்கு நின்று விபூதி கொடுத்தால் ஜுரத்தின் வெப்பத்தினால் வாடுபவர்கள் தமது சுரத்திலிருந்து விடுபடுவர் என்கிறார் அகத்தியர். அவர்களது வல்வினைகளும் அவர்களைவிட்டு நீங்கும் என்கிறார் அவர்.
உடல் எனும் எல்லைக்குள் கட்டுப்பட்டு அதில் மட்டும் பல அனுபவங்களைப் பெறும் யோகி குருபத்திற்கு உயரும்போது மெதுவாக தனது உடல் எல்லையைத் தகர்க்க ஆரம்பிக்கிறார். தான் இருக்கும் நிலையினால் பிறரிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பிக்கிறார் என்பதை நாம் இதிலிருந்து புரிந்துகொள்கிறோம். அவரது குளுமை பிறரது வெம்மையைக் குறைக்கிறது.
----------------------------------------------------------------------------
75. Somappaal
போமப்பா சகலபிணி ரோகமெல்லாம்
பூரணச் சந்திரனுடைய பிறப்பைக் கண்டால்
காமப்பால் காணற்பால் கருணை தங்கும்
கலையான வாசியது கடக்காதப்பா
சோமப்பால் சொலிக்குமடா அந்தப்பாலை
அந்தமுடன் நித்தியமுங் கொண்டாயாகில்
தாமப்பா தன்னிலையே தான்தானாகுந்
தானான ஆதார மூலம் பாரே
இப்பாடலில் அகத்தியர் மூவகையான பால்களைப் பற்றிப் பேசுகிறார். அவை காமப்பால், காணற்பால் மற்றும் சோமப்பால் என்பவை. காமப்பால் என்பது முலைப்பால், காணற்பால் அல்லது கானற்பால் என்பது உலகப்பொருட்களில் ஆசை. சோமப்பால் என்பது லலாடத்திலிருந்து ஊறும் அமுதம். காமப்பாலையும் காணற்பாலையும் தவிர்த்தால் சோமப்பால் ஊறும், ஒருவர் அதைத் தினமும் பருகினால் தான் என்ற நிலையில் இருப்பார் என்கிறார் அகத்தியர். இந்த சோமப்பாலை சித்தர்கள் அமுதப்பால், மாங்காய்ப்பால் (அது சுரக்கும் இடத்தின் உருவை வைத்து) என்றுபல பெயர்களில் அழைக்கின்றனர்.
76. Ponnaar meni- golden body
Verse 76
ஆச்சப்பா சோதி வெகு காந்தியாகும்
மாகார வவ்வேளை யறிவாய் நின்று
மூச்சப்பா நிறைந்ததொரு வாசியாலே
முனையான சுழிமுனையில் வாசி நாட்டி
பேச்சப்பா தானிருத்தி மவுனமாக
பெருமையுடன் சிவயோகத் திருந்தாயாகில்
போச்சப்பா அபமிருத்தி அகன்றுபோகும்
பொன்னொளிவு தேக காந்தி ஆச்சு பாரே
இப்பாடலில் அகத்தியர் குண்டலினியின் ஒரு முக்கியமான நிலையைக் கூறுகிறார். சித்தர்களின், ராமலிங்க அடிகள் உட்பட, தமது பருவுடலை ஒளியுடலாக மாற்றுவதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அகத்தியரின் இப்பாடல் அந்த நிலையை அடைவதற்கான ஒரு முக்கியமான படியை விளக்குகிறது. ஒரு யோகி அறிவு நிலையில், அதாவது விழிப்புணர்வாக இருந்து வாசியை சுழிமுனை எனப்படும் ஆக்னையில் பதித்து மௌன நிலையில், சிவ யோகத்தில் நின்றால் அவரது உடல் பொன்னொளி வீசும் என்கிறார் அகத்தியர். திருமூலரும் சிவவாக்கியரும் இதைக் குறித்து அந்த யோகியின் உடலில் ஒவ்வொரு மயிர்க்காலும் பொன்னொளி வீசும் என்று கூறியுள்ளனர். சிவபெருமான் பொன்னார் மேனியன் என்று அழைக்கப்படுவது இக்கருத்தில்தான், குண்டலினி யோகத்தின் ஒரு நிலையைக் குறிக்கத்தான்.
------------------------------------------------------------------------------
77. Ravi dhyana
Verse 77
ரவிதியானம்
பாரப்பா மூலமத்தில் மனக்கண் சாற்றி
பதியான ரவியினிட தியானங் கேளு
நேரப்பா புருவநடு தீபம் பார்த்து
நிசமான அங்கிலி வங்கென்றாக்கால்
சாரப்பா பதினாறு உருவிலேதான்
தன்னகமாய் நின்றதொரு ரவிதான் மைந்தா
மேரப்பா தான் துலங்க ரவிதான் மைந்தா
மெய் நிறைந்த காந்தி வெகு தேகமாச்சு
திருமூலர் தனது தந்திரம் ஒன்பதில் கூறியுள்ள அண்ட ஆதித்தன் பிண்ட ஆதித்தன் என்று பல விதமான சூரியன் அல்லது ஒளிகளைக் குறிப்பிட்டதை ஒத்து உள்ளது இப்பாடல். முந்தைய பாடலில் முத்தீ தியானம் பற்றிக் கூறிய அகத்தியர் இதில் பிண்ட ஆதித்தனை விளக்குகிறார். இப்பயிற்சிக்கு ஒருவர் மனக்கண்ணை மூலாதாரத்தில் வைக்க வேண்டும். அங் கிலி வங் என்று ஓத வேண்டும். அப்போது முத்தீ தியானத்தால் ஒளி பெறத் தொடங்கிய உடல் மேரு எனப்படும் தண்டுவடம் (அதனுள் சுழுமுனை நாடி ஓடுகிறது) ஒளிர அதன் உச்சியில் பிண்ட ஆதித்தன் காணப்பட்டு மிகக் காந்தியுடன் விளங்கும் என்கிறார் அகத்தியர்.
----------------------------------------------------------------------------
78. Mystical accomplishments attained by ravi dhyanam
Verse 78
தேக மென்ற தேகமடா தேவரூபந்
திருவான ரூபமதை பூசைபண்ணி
பாகமுடன் விபூதியை நீ தியானஞ்செய்து
பாருகளில் மானிடர்க்குக் கடாட்சித்தாக்கால்
ஆகமுடன் சகலசவு பாக்கியம் பெற்று
அருள் பெருக பூரணமாய் இருந்துவாழ்வார்
ஏகமென்ற பூரணத்தின் கிருபையாலே
என் மகனே சுடரினுட தியானங் கேளே
ரவிதியானத்தை விளக்கிய அகத்தியர் இப்பாடலில் அதனால் பெறும் சித்தியைக் கூறுகிறார். தேகத்தின் மயிர்க்கால் எல்லாம் ஒளிர தண்டுவடம் ஒளிபெற்று அதன் உச்சியில் சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கண்ட யோகி அந்தக் காட்சியை, உருவத்தை பூசை பண்ணி உலகத்தோருக்கு விபூதி அளித்தால் அவர்கள் சகல சம்பத்துக்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்வர் என்கிறார் அகத்தியர். இதனை அடுத்து அவர் சுடர் தியானத்தை விளக்கப்போவதாகக் கூறுகிறார். இங்கு சுடர் எனப்படுவது ஆத்ம சோதி. அதை புருவமத்தியில் காணலாம்.
-----------------------------------------------------------------------------
79. Dhyana of the flame
Verse 79
சுடர்த்தியானம்
கேளப்பா ரவிமதியைத் தியானம் பண்ணி
கிருபையுள்ள சுடரதிலே மனக்கண் சாற்றி
யாழப்ப அங்கிலி ரீங்கென்றேதான்
அருள் பெருக நூற்றெட்டு உருவே செய்தால்
காலப்பா வலுவான ரவி மதி தன்னாலே
கருணை வளர் புருவ நடுச் சுடரிலேதான்
வாளப்பா மனங்குவிந்து நிற்கும்போதில்
மகத்தான சோதிவெகு சோதியாச்சே
ரவிதியானத்தை விளக்கிய அகத்தியர் அடுத்து சுடர் தியானத்தை இப்பாடலில் கூறுகிறார். சுடர் என்பது ஆத்ம தரிசனம். மனதைப் புருவ மத்தியில் குவித்து அங் கிலி ரீங் என்று நூற்றியெட்டு முறை செபித்தால் கால் எனப்படும் பிராணன் பெரும் வேகத்துடன் வீசும், அதனால் சுடரைப் போல ஆக்னையில் கண்ட சோதி பெரும் விளக்காக ஒளிவீசும் என்கிறார் அகத்திய
-----------------------------------------------------------------------------
80. Siva Sookshma
Verse 80
சோதிமய மானசிவ சூக்ஷங் கண்டால்
சுக சீவப் பிராணனது அகலாதையா
ஆதியிலே முச்சுடராய் நின்ற சூக்ஷம்
ஆரறிய போரார்கள் அறிவானந்தம்
நீதியுடன் அறிவான போதம் பெற்று
நிசமான முச்சுடரைக் கண்டாயானால்
ஓதியதோர் மந்திரகளை வாசியலே
உண்மைஎன்ற மந்திரங்கள் எல்லாஞ் சித்தே
குண்டலினி தியானத்தை மேற்கொள்ளும் ஓர் யோகி முதலில் ஆத்ம ஜோதியைத் தரிசிப்பார். ஆக்ஞையில் காணப்படும் இந்த ஜோதி உள்ளே மூச்சுடன் இழுக்கப்படும் உயிர்ச்சக்தியால் வலுவூட்டப்பட்டு சிவஜோதியாகக் காட்சியளிக்கும். இந்த நிலையில் பிராணன் உடலை விட்டு நீங்காது, அதாவது அந்த யோகி கும்பக நிலையில் இருப்பார். இந்த ஜோதி சிவ சூட்சுமம் என்று கூறும் அகத்தியர் இதுவே சித் ஆனந்தம் என்றும் இதுவே முச்சுடர் என்றும் கூறுகிறார். இந்த நிலையில் வாசி அல்லது உயிர்ச்சக்தியில் நின்று மந்திரத்தை செபித்தால் உண்மையான மந்திரங்கள் அனைத்தும் சித்தியாகும் என்கிறார் அவர்.
-------------------------------------------------------------------------------
81. Shanmukha dhyana
Verse 81
சித்தான முச்சுடரின் தியானஞ் சொன்னேன்
சிவாய குரு சண்முகனார் தீர்க்கத்தாலே
பத்தான தச தீக்ஷை முத்தி பெற்றுப்
பரமகுரு சண்முகனார் தியானங் கேளு
வித்தான சூக்ஷமடா சற்றோ இல்லை
வேத முடிவானதொரு விஞ்சை மூலஞ்
சத்தான விஞ்சையடா சொல்லக் கேளு
சங்கையுடன் ஓம் கிலி சிம் என்று ஓதே
சண்முக தியானத்தைப் பற்றி அடுத்து பேசுகிறார் அகத்தியர். சண்முகம் என்பது பொதுவாக முருகப்பெருமானையே குறிக்கும். குண்டலினி யோகத்தின்போது யோகி ஆக்ஞையில் தரிசிக்கும் மணியும் ஆறு முகங்களையுடையது. அதனால் இந்தத் தியானம் ஆக்ஞையில் பெறும் ஒரு அனுபவத்தைக் குறித்தும் இருக்கலாம். அகத்தியர் சண்முகனாரை சிவாய குரு சண்முகனார் என்று அழைக்கிறார். தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானே இவ்வாறு விளிக்கப்படுவார். சிவாய என்பதை பரவுணர்வு நிலை என்று கொண்டால் அறிவின்மை என்ற இருட்டை விலக்கும், கு+ரு, ஆக்னையில் பஏற்படும் உணர்வு நிலையே. இவ்வாறு இத்தொடர் குண்டலினி யோக அனுபவத்துக்கும் பொருந்தும். இந்த நிலையை அடைய ஒருவர் தசதீட்சையில் முக்தி பெற்றிருக்க வேண்டும் என்கிறார் அகத்தியர். தச தீட்சை என்பது பத்து படிகளைக் கொண்ட ஒரு முறை. இது மனதிலும் உடலிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது. உடலில் ஏற்படும் மாற்றங்கள் பருவுடலை ஒளியுடலாக்குகின்றன. மனதில் ஏற்படும் மாற்றங்களை அகத்தியர் சக்தி தீட்சை சிவ தீட்சை என்று தனது பரிபூரண சூத்திரம் 420ல் கூறியுள்ளார். இந்த தீட்சை ஒரு ஆத்மாவை பரவுணர்வு நிலையைப் பெற ஏற்றதாக்குகின்றன. இந்த சண்முக தியானத்தால் ஏற்படும் அனுபவம் மிக சூட்சுமமானது என்கிறார் அகத்தியர். இதை ஒருவர் வேதத்தின் முடிவில் அதாவது கற்றுக்கொள்ளக் கூடிய எல்லாவற்றின் முடிவில், அனுபவத்தின் தொடக்கத்தில் பெறுகிறார். இதற்கான மந்திரம் ஓம் கிலி சிம் என்கிறார் அகத்தியர்.
----------------------------------------------------------------------------
82. Effect of Shanmukha dhyanam
Verse 82
ஓதியதோர் நாழிகையில் மைந்தா கேளு
உண்மையுள்ள சண்முகனார் வடிவேல் கொண்டு
நீதியுடன் உன்னகத்தில் தானே நின்று
நினைத்தபடி நின்று விளையாடும் பாரு
ஆதியுடன்ஆதார சொரூபமாகி
ஆறுமுகமான செயலார்தான்காண்பார்
சோதிஎன்ற சொரூபமத்தில் ஆறுமுகமாகி
துலங்குதடா சுடரொளியைத் தூண்டிப்பாரே
முந்தைய பாடலில் அகத்தியர் சண்முகத் தியானத்திற்கான மந்திரம் ஓம் கிலி சிம் என்று கூறினார். இப்பாடலில் அவர் இந்த மந்திரத்தின் பலனைக் கூறுகிறார். இந்த மந்திரத்தை ஒருவர் ஒரு நாழிகை அல்லது இருபத்து நான்கு நிமிடங்கள் செபித்தால் சண்முகனார் வடிவேலுடன் தோன்றுவார் என்கிறார் அவர். வடிவேல் என்பது ஞான சக்தியைக் குறிக்கும். சண்முகனார் என்ற சொல் முருகனைக் குறித்தாலும் அது ஜோதி சொரூபம் ஆருமுகமாகத் துலங்குவது என்று அகத்தியர் இப்பாடலின் கடைசியில் கூறுகிறார். அதனால் ஒருவர் உள்ளொளியைத் தூண்டி இந்த தரிசனத்தைப் பெறுமாறு அவர் பரிந்துரைக்கிறார்.
------------------------------------------------------------------------------
83. Benefits that a yogi performing Shanmukha dhyanam can confer
Verse 83
பாரப்பா சுடரொளியைக் கண்ணால் தூண்டி
பதிவான கடைக்கண்ணால் நடுக்கண்ணைப் பார்க்க
நேரப்பா நடுநிலையைக் கண்ணாற்பார்க்க
நின்ரூபஞ் சோதிமயமாகத் தோணும்
தேரப்பா மனதறிவால் விபூதி வாங்கி
திருவான பதி நோக்கித் தியானம் பண்ணி
காரப்பா உலகோர்க்கு கடாக்ஷித்தாலே
கருமவினை தீருமடா கண்ணைப் பாரே
பல்வேறு விதமான தியானங்களை விளக்கும் அகத்தியர் ஒரு முறையைக் கையாண்டுள்ளார். மூன்று பாடல்களால் ஒரு தியானம் விளக்கப்பட்டிருக்கிறது. அதில் முதல் பாடல் தியான முறையையும் இரண்டாவது பாடல் அந்த தியானத்தைச் செய்பவர் பெரும் பலனையும் மூன்றாவது பாடல் அதனால் பிறர் பெரும் நன்மையையும் விளக்குகிறது. இவ்விதத்தில் சண்முக தியாத்தை விளக்கும் இப்பாடலில் அகத்தியர் அந்த யோகி பிறருக்குச் செய்யக்கூடிய நன்மையைக் கூறுகிறார். சண்முக தியானத்தை மேற்கொள்ளும் யோகி “அந்தர் ஜோதி” எனப்படும் உள்ளொளியைத் தூண்டி நடுக்கண்ணை ஓரக்கண்ணால் பார்த்தால் தனது உருவத்தை சோதிமயமானதாகக் காண்பார். அந்த நிலையையும் பதி எனப்படும் இடத்தையும் மனத்தாலும் அறிவாலும் நினைத்தபடி அவர் பிறருக்கு விபூதி அளித்தால் பிறரது கர்ம வினைகள் அவர்களைவிட்டு நீங்கிவிடும் என்கிறார் அகத்தியர்.
இதனால் நாம் புரிந்துகொள்வது என்னவென்றால் குண்டலினி யோகம் என்பது பயிற்சி செய்பவருக்கு மட்டுமின்றி உலகோர் அனைவருக்கும் பலனளிக்கக் கூடியது என்பதையே.
--------------------------------------------------------------------------------
84. Origin of vaasi
Verse 84
கண்ணைப் பார் மனக்கண்ணால் தன்னைப் பாரு
கமலமென்ற சுழினையுட காலைப் பாரு
விண்ணைப் பார் காலறிந்து உன்னைப் பாரு
வேதமயமான சிவ யோகம் பாரு
பெண்ணைப் பார்த்தலையாதே தன்னைப் பாரு
பெலமான வாசி திருமூலம் பாரு
தன்னைப் பார் தன்னிலையே வாசி மூலஞ்
சதா மூலமானதே சரிதான் பாரே
இப்பாடலில் அகத்தியர் வாசி அல்லது உயிர்ச்சக்தியைப் பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறுகிறார். அவர் முதலில் புலத்தியர் தன்னை அதாவது ஆத்மாவை மனக்கண்ணால் பார்க்கவேண்டும். பின் விண் அல்லது பிண்டாகாசத்தைப் பார்க்கவேண்டும். அதனை அடுத்து தாமரை மலரான சுழினை அல்லது ஆக்ஞையையும் அங்கு கால் எனப்படும் பிராணனைப் பார்க்கவேண்டும் என்கிறார். கால் என்பது இங்கு பிராணனைக் குறித்தாலும் அது உயருணர்வு நிலை என்பதன் பாதம் என்றும் பொருள்படுகிறது. இங்கிருந்துதான் ஆத்மா சிவ நிலையையும் பரநிலையையும் அடைகின்றது. இவ்வாறு சுழினையில் இவற்றைப் பார்த்திருக்கும் நிலையே சிவயோகம் அல்லது பரவுணர்வுடன் கூடியிருக்கும் நிலை. இந்த நிலையே வாசியின் மூலம் என்கிறார் அகத்தியர். தன்னிலை அல்லது ஆத்மா இவ்வாறு சுழினையில் சிவயோகத்தில் இருக்கும் நிலையே வாசியின் மூலம். அதுமட்டுமல்ல அதுவே அனைத்துக்கும் மூலம். இதைச் சரியாகப் பார்க்குமாறு அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார்.
------------------------------------------------------------------------------
85. Bhairava dhyanam
Verse 85
Vairava dhyanam
வைரவத் தியானம்
பாரப்பா வைரவனார் தியானங் கேளு
பரிவான வைரவனை யார்தான் காண்பார்
நேரப்பா அவருடைய நிலையைக் கேளு
நிலையான ஆதார முடி மேலாக
காரப்பா உங் கிலி அங்கென்றோதி
கருத்துறவே மனதாக நின்றாயானால்
ஊரப்பா ஊர் முழுதுங் காவலான
உண்மை என்ற வைரவனைக் காணலாமே
பைரவ தியானத்தைக் கூறத் தொடங்குகிறார் அகத்தியர். பைரவர் க்ஷேத்திர பாலர் அல்லது இடத்தைக் காப்பவர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு இடம் என்பது நம் உடல், முக்கியமாக ஆக்ஞை. சித்த மார்க்கத்தில் ஆக்ஞை காசி அல்லது ஒளிபொருந்திய நகரம் எனப்படுகிறது. இந்த காசியின் க்ஷேத்ர பாலர் பைரவர். அதனால் அகத்தியர் பைரவரின் தியானத்தை அடுத்து கூறுகிறார். பைரவரது மந்திரம் உங், கிலி, அங் என்பது. இதை உச்சரித்தால் பைரவ தரிசனம் கிட்டும் என்கிறார் அகத்தியர்.
-----------------------------------------------------------------------------
86. Benefits of Bhairava dhyana
Verse 86
காணலாம் அவருடைய மூலங் கேளு
கனகரத்தின மானசிறு குழந்தை போலத்
தோணலாம் புருவநடுக் கமலந் தன்னிற்
சுகமாகச் சொரூப நிலை கண்டாயானால்
பேணலாம் அவர்பதத்தைத் தியானஞ் செய்து
பெருமையுடன் மானதமாம் பூசை செய்தால்
பூணலாஞ் சகலவரங் கைகுள்ளாகும்
பொற்கமல வைரவனைத் தியானம் பண்ணே
வைரவர் க்ஷேத்ர பாலர் என்று கூறி அவரது மந்திரத்தை முந்தைய பாடலில் உரைத்த அகத்தியர் இப்பாடலில் அவரது உருவத்தைப் பற்றியும் இடத்தைப் பற்றியும் சொல்கிறார். வைரவர் காண்பதற்கு தங்க நிறமான ரத்தினத்தின் நிறம் கொண்ட குழந்தை உருவை உடையவர் என்றும் அவரை ஆக்ஞா சக்கரத்தில் காணலாம் என்றும் கூறும் அகத்தியர் அவரது தரிசனத்தைப் பெற்று அவரது பதத்தை ஒருவர் தியானித்தால் எல்லா வரங்களும் கைக்கூடும் என்கிறார்.
வைரவர் தரிசனம் உணர்வு எழுச்சியில் ஒரு நிலை என்பது இதிலிருந்து தெரிகிறது.
-----------------------------------------------------------------------------
87. Guru dhyana and kechari
Verse 87
குருத்தியானம்
பண்ணப்பா தியானமது குருத்தியானம்
பரமகுரு சீர்பாதந் தியானங் கேளு
உண்ணப்பா கண்ணான மூலந் தன்னில்
முத்தி கொண்ட அக்கினியாஞ் சுவாலை தன்னை
நண்ணப்பா வாசியினால் நன்றாயூதி
நடுமனையைப் பிடித்தேறி நாட்டமாக
வின்ணப்பா கேசரியாம் புருவ மையம்
மேன்மை பெறத் தானிறுத்தி வசிவசி என்னே
முந்தைய பாடல்களில் அகத்தியர் முச்சுடர் தியானம் வைரவ தியானம் என்று பல அனுபவங்களைப் பேசியதிலிருந்து ஆக்ஞா சக்கரம் எவ்வளவு முக்கியமானது என்பது நமக்குப் புரிகிறது. இது பரம்பொருளின் உருவ நிலையிலிருந்து அருவுரு நிலைக்கு ஒரு பாலமாக இருக்கிறது.
இதனை அடுத்து அகத்தியர் குரு தியானம் மற்றும் கேசரி முத்திரையைப் பற்றிப் பேசுகிறார். குரு சக்கரம் என்பது ஆக்ஞைக்கு மேலே சகஸ்ராரத்தின் வாயிலில் இருக்கிறது என்று தந்திர நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த தியான முறையை விளக்கும்போது அகத்தியர் ஒருவர் வாசியின் உதவியால் குண்டலினி அக்னியை நன்கு ஊதி அதிகரிக்கச் செய்யவேண்டும். பிறகு நடு வீடு எனப்படும் ஆக்னையிலிருந்து மேலே ஏறவேண்டும் என்கிறார். இதனை அடுத்து கேசரியில் நின்று வசிவசி என்று ஓத வேண்டும் என்கிறார்.
கேசரி என்ற சொல் கா எனப்படும் விண்ணில் உலவுபவன் என்று பொருள்படும். கேசரிமுத்திரையில் ஒருவர் தனது நாக்கை உள்ளே மடித்து சிறு நாக்கைத் தொடவேண்டும். அப்போது சகஸ்ராரத்திலிருந்து ஒரு திரவம் சுரக்கும். அது அமிர்தத்தைப் போல இனிக்கும். அதை உண்பவர் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வார் என்று யோக நூல்கள் கூறுகின்றன. இந்தப் பயிற்சி யோகத்தில் உச்ச நிலையை அடைந்த யோகிகளுக்கானது. இதை ஒருவர் ஒரு குருவிடமிருந்து கற்று சுயமாக உணரவேண்டும் என்பதால் இதைப் பற்றிய விளக்கத்தை இங்கே இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.
திருமூலர் திருமந்திரம் ஒன்பதாம் தந்திரத்தில் சிவ என்பது காரண பஞ்சாக்ஷரம் என்றும் அதை ஓதுபவர் பிறவிக்குக் காரணமானவை அனைத்தையும் தொலைக்கிறார் என்கிறார். வசிவசி என்பது சிவசிவ என்பதன் மறுஉருவம் ஆகும்.
-------------------------------------------------------------------------------
88. vaasi comes under control
Verse 88
எண்ணியிரு நூற்றெட்டதில் மைந்தா கேளு
ஏகாந்த மானகுரு இன்பந் தன்னில்
பொன்னொளிபோல் அருவுருவங் கண்ணிற் காணும்
புத்தியுடன் அவ்வேளை புருவ மேவிற்
கண்ணொளிவுந் தன்னொளிவாய் உன்னை நோக்கி
தன்னொளிவு போலவே நீ உருவே செய்தால்
தாயான வாசியது தனதாங் காணே
இப்பாடலின் தொடக்கத்தில் அகத்தியர் குரு தியானத்தின்போது எத்தனை முறை வசி என்று செபிக்கவேண்டும் என்கிறார். இந்த மந்திரத்தை ஒருவர் நூற்றியெட்டு முறை உச்சரித்தால் ஒருவர் ஆனந்தநிலையை அடைவார் என்றும் அருவுருவான இறைவனைக் காணலாம் என்றும் அவர் கூறுகிறார். இது நூற்றியெட்டு முறை செபித்து எண்ணி இருக்கவேண்டுமா அல்லது இருநூற்றிஎட்டு முறை செபிக்க வேண்டுமா என்பதை குருமுகமாக அறியவேண்டும். இந்த பயிற்சியின்போது ஒருவர் தனது உணர்வை புருவ மத்திக்கு உயர்த்தினால் ஒளிப் பிரகாசத்தைக் காணலாம், வாசி தன்வசப்படும் என்கிறார்.
------------------------------------------------------------------------------
89. The state beyond the guru
Verse 89
காணவே சத்திசிவம் அந்தமாகுங்
கருணைவளர் அந்தமதைக் கருதக் கேளு
பேணவே சிவமென்றாற் சத்தி மூலம்
பேரறிந்து வசிஎன்றால் வாசி மூலம்
பூணவே சத்தி சிவம் வாசியாகிப்
பொருந்தி நின்ற காரணத்தை யார்தான் காண்பார்
தோணவே குருமுறையாய்க் காணவேணுந்
தொடுகுறிபோல் காணுதற்கு வகையைக் கேளே
நாம் முன்னம் பார்த்ததுபோல் சக்தி சிவத்தின் அந்தம் ஒருமை நிலை, பரசிவ நிலை.
இதன் முதல் வெளிப்பாடு சத்-சித் அல்லது சிவம்-சக்தி. இதை அகத்தியரும் சக்தியின் மூலம் சிவம் என்று கூறுவதன்மூலம் உறுதிப்படுத்துகிறார். அதேபோல் வாசியின் மூலம் வசி. வாசி யோகம் என்பது உள்மூச்சின்போது வ என்றும் வெளிமூச்சின்போது சி என்றும் உச்சரிப்பது. மேற்கூறியதுபோல் சிவம் சக்தி வாசி ஆகியவற்றின் மூலம், ஆதி, ஒருமை நிலை, பரசிவ நிலை. அந்த நிலையில் பார்க்கப்படும் பொருள், பார்க்கும் பொருள், பார்ப்பது என்ற செயல் ஆகிய மூன்றும் தனித்தனியாக இருப்பதில்லை. இந்த நிலையை ஒரு தன் முயற்சியால் மட்டும் பார்க்கமுடியாது. அதனால் அகத்தியர் இந்த நிலையை ஒருவர் குருமுறையாய்க் காணவேண்டும் என்று கூறுகிறார். குருமுறை என்பது குருவின் வழி என்று குரு சக்கரத்தின் வழியில் சென்று காணவேண்டும் என்கிறார். தான் இந்த நிலையை ஒரு தொடுகுறி அல்லது இதுதான் என்று காட்டும் கைக்காட்டி போல் கூறுகிறேன் என்று அகத்தியர் புலத்தியரிடம் கூறுகிறார்.
-------------------------------------------------------------------------------
90. Direct path to Singularity
Verse 90
வகையான வகையேது என்று கேட்டால்
மார்க்கமுடன் சரியைவழி நடந்தாயானால்
தகையாமல் சரியைவழி நடந்தாயானாற்
சிவ சிவா கிரியையுட வழியே காணும்
புகையாமல் கிரியை வழி நன்றாய்ப் பார்த்தாற்
பாலகனே யோகவழி பரிவாய்த் தோணும்
நகையாமல் யோக வழி தானே சென்றால்
நன்மையுடன் ஞான வழி காணலாமே
சௌமிய சாகரத்தைத் தொடங்கி முதலில் மனிதனையும் உடலையும் படைக்கும் 96 தத்துவங்களை அகத்தியர் விளக்கினார். அதனை அடுத்து சூட்சும உடலில் உள்ள சக்கரங்களையும் அவற்றின் வழிபாட்டு முறையையும் மந்திரம் யந்திரத்துடன் விளக்கி அதனால் பெரும் நன்மைகளையும் கூறினார். இந்த நன்மைகளின் உச்சம் பரசிவ நிலையை அடைவது, ஒருமை நிலையை அடைவது. இதற்கான வழி நான்கு படிகளைக் கொண்ட சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம் என்ற பாதையாகும். இப்பாடலிலிருந்து நாம் இந்தப் பாதை படிப்படியாகக் கடக்கவேண்டியது என்பதைப் புரிந்துகொள்கிறோம்.
-------------------------------------------------------------------------------
அகத்தியர்அறிவுரை!
-------------------------------
"பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம்
உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி
உனக்கேதடா. பாவத்தை செய்தவன்
சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே.
அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி
தண்டனை தருவார் என்பது யாருக்கும்
தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான்
இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு
நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான்
என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக்
கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம்
இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த
நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று
பொருள். இந்த கருத்தை மனதில்
வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும்
பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக
எளிதாக, மிக நீதியாக தோன்றும்."
!ஓம் அகத்திய குருவே போற்றி!
தொடரும் அகத்தியரை நோக்கிய இந்த உண்மை பயணம் ......
"அகத்தியர் சௌமிய சாகரம்"
Vadha saumyam 1200 {பாகம் -4}
------------------------------------------------------
{பல நண்பர்களின் வேண்டுதலுக்கு இணங்க அகத்தியர் பெருமானால் உலகுக்கு அருளப்பட்ட இது வரை ஓலை வடிவிலேயே விளங்கிய அரிய பொக்கிசமாகிய இந்த அகத்தியர் சௌமிய சாகரம் என்ற மிக பெரிய பொக்கிஷத்தை சித்தர்களின் குரல் வாயிலாக உலகம் அறிந்து பயன் பெற அகத்தியர் பெருமானின் பாதம் பணிந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்... நன்றி}
91. Charya, Temples and Rivers one has to bathe in and worship
Verse 91
சரியை, கிரியை, யோகம், ஞானம்
காணுதற்கு சரியைவழி என்னவென்றாற்
கருணையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு
பூணுதற்கு நவ்வெழுத்தின் மேலே மைந்தா
புகழான மவ்வேழுத்தால் சிகராந் தோணும்
பேணுதற்கு மவ்வெழுத்தின் மேலே சென்று
பிலமான அவ்வெழுத்தின் கீழதாகத்
தோணுதற்கு சிவாலயமும் நதியுமுண்டு
சுத்தமுடன் அந்திடத்தில் கண்டு தேரே
சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நான்கு படி வழியில் அகத்தியர் இப்பாடலிலிருந்து சரியையை விளக்கத் தொடங்குகிறார். சரியை என்பது புற ஒழுக்கங்கள். அவை கோயிலுக்குப் போவது, புனித தீர்த்தங்களை நாடுவது, பூத்தொடுப்பது போன்ற சேவைகளைச் செய்வது ஆகியவை. இவையனைத்தும் புறச் செயல்கள். சித்த மார்க்கத்தில் இந்த புறச்செயல்களுக்கு அவற்றுடன் தொடர்புடைய அகச்செயல் உள்ளது. அதாவது, புறச்செயல்கள் அகச்செயல்களை நினைவுபடுத்தவே செய்யப்படுகின்றன என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. இப்பாடலில் அகத்தியர் கோயில் என்றால் என்ன தீர்த்தங்கள் என்றால் என்ன என்று கூறுகிறார்.
சித்த மார்க்கத்திலும் தந்திர மார்க்கத்திலும் சக்கரங்கள் ஒரு பீஜ எழுத்தால் குறிக்கப்படுகின்றன. இந்த எழுத்துக்கள் ஒரு தத்துவத்தைக் குறிக்கின்றன, மந்திரமாக செபத்துக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எழுத்துக்களைப் பற்றிய விவரங்கள் அகத்தியர் மெய்ஞ்ஞானத்தில் விளக்கப்பட்டுள்ளதைக் காண்க ((www.scribd.com or http://agatthiyarjnanam.blogspot.in/)
அகத்தியர் இப்பாடலில் சக்கரங்கள் என்ற நிலப்பரப்பை பீஜ அட்சரங்களின் மூலம் விளக்குகிறார். மூலாதாரத்தின் எழுத்து நகாரம் அல்லது நவ்வு. அதற்கு மேல் இருக்கும் சுவாதிஷ்டானத்தின் எழுத்து மகாரம் அல்லது மவ்வு. அதற்கு மேல் இருக்கும் மனிபூரகத்தின் எழுத்து சிகாரம். மூலாதாரத்துக்கு மேல் சுவாதிஷ்டானத்துக்குக் கீழ் உள்ள இடத்தை இப்பாடலில் குறிப்பிடும் அகத்தியர் அந்த இடத்தில் பல சிவாலயங்கள் இருக்கின்றன நதிகள் இருக்கின்றன என்கிறார். நதிகள் என்பது நாடிகளைக் குறிக்கும். ஆலயங்கள் அவை தோன்றும் இடமான கண்ட மூலத்தைக் குறிக்கும். கண்டமூலத்தில் முக்கியமான நாடிகள் தோன்றுகின்றன. கண்டமூலம் ஒரு ஆமையைப் போல வரையப்படுகிறது. கோவில்களில் துவஜஸ்தம்பத்தின் கீழே ஒரு ஆமை இருக்கும். அதன் முதுகின்மேல் துவஜஸ்தம்பம் அமைக்கப்பட்டிருக்கும். அதில் பல நிலைகள் குறிக்கப்பட்டிருக்கும். ஆமை என்பது கண்ட மூலத்தையும் துவஜஸ்தம்பம் தண்டுவடத்தையும் அதில் உள்ள நிலைகள் சக்கரங்கள் சக்தி நிலைகளையும் குறிக்கும். கண்ட மூலத்திலிருந்து ஓடும் முக்கிய நாடிகளிலிருந்து பிற துணை நாடிகள் பிரிகின்றன. இவற்றைத்தான் அகத்தியர் சிவாலயங்கள் என்கிறார்.
வெளியில் உள்ள கோயில்களுக்கும் குளங்களுக்கும் தொடர்புடைய கோவில்களும் குளங்களும் நம்முள் இருக்கின்றன என்பது இதிலிருந்து புரிகிறது. சித்தர்கள் ஏன் கோயில்களையும் குளங்களையும் நாடி ஓடுவதை கண்டிக்கின்றனர் என்பது இதிலிருந்து புரிகிறது. சிவவாக்கியரின் “கோயிலாவது ஏதடா, குளங்களாவது ஏதடா” என்ற பாட்டை இங்கே நினைவு கூரவும் (பாடல் 36).
92. True Charya
Verse 92
கண்டு மனந் தேர்ந்தந்த நதியில் மூழ்கிக்
கமலமலர் சிவாலயத்தைப் பூசைபண்ணி
நின்றநிலை காணாத மாந்தரெல்லாம்
நீள்புவியில் சிவாலயங்கள் நதிகள் தேடி
சென்று மிகத் தானலைந்து பரிதவித்து
சீவநிலையறியாமல் திகைத்து மாண்பர்
அண்டமெனும் உடலுயிரை அறியாமல்தான்
அலைவார்கள் சரியைவழி அறியார் தானே
நம்முடலுள் எங்கே சிவாலயங்களும் நதிகளும் இருக்கின்றன என்று சுட்டிக் காட்டிய பிறகு அகத்தியர் இப்பாடலில் இதை அறிந்த ஒரு யோகி என்ன செய்வார் என்று கூறுகிறார். இந்த சிவாலயங்களையும் நதிகளையும் ஒருவர் மனத்தால்தான் பார்க்கமுடியும், வெளிப்புலன்களுக்கு அவை தென்படமாட்டா. இவற்றை மனத்தால் உணர்ந்த ஒரு யோகி இந்த நதியில் மூழ்குவார், அதாவது தனது விழிப்புணர்வை இந்த நாடிகளில் செலுத்துவார். அவற்றின் மூலம் “கமல மலர் சிவாலயத்தில்” பூஜை செய்வார். அதாவது நாடிகளின் மூலம் தாமரை மலர்களாக உருவகப்படுத்தப்படும் சக்கரங்களை அடைந்து அவை குறிக்கும் உயர் விழிப்புணர்வு நிலைகளை அனுபவிப்பார்.
இதை அறியாத மாந்தர்கள் தான் வெளியில் உள்ள கோயில்களையும் நதிகளையும் தேடி ஓடுவர், அவ்வாறு அலைந்து அண்டம் எனப்படும் உலகமே தன்னுள் இருக்கும் உயிரும் உடலும் என்பதைப் புரிந்துகொள்ளாமல் முடிவில் மாண்டுபோவர் என்கிறார் அகத்தியர்.
-------------------------------------------------------------------------------
93. The entity that is worshipped and the attitude with which worship is performed
Verse 93
தானென்ற திருக்கோவில் நதிகள் நல்ல
சங்கையுள்ள வேதமுதல் சாஸ்திரங்கள்
ஊனென்ற மனுப் பிறந்து செய்த மாய்கை
உறுதியுள்ள அம்மாய்கை அறிந்து தள்ள
வானென்ற நாத விந்து செயலறிந்து
மார்க்கமுள்ள மெய்ஞ்ஞானத் தலைவரெல்லாங்
கோனென்ற கேசரியைப் பூசை பண்ணிக்
குறியறியான சரியை வழிக் கூர்ந்தோர் தானே
வெளிஒழுக்கமான சரியை என்பது கோயிலில் வழிபடுவது தீர்த்தங்களில் ஆடுவது என்னும்போது அந்தக் கோயில்களும் தீர்த்தங்களும் எங்கு உள்ளன என்று அகத்தியர் முதலில் கூறினார். அதன் பிறகு அந்தக் கோயில்களுக்கு எவ்வாறு செல்வது என்று கூறினார். நாடிகள் என்னும் நதிகளில் மூழ்கி தாமரை மலரைப் போன்ற சக்கரங்களான சிவாலயங்களில் பூஜை செய்வதே சரியை என்று கூறியபிறகு அந்த ஆலயத்தில் உள்ள இறைவன் யார் இப்பாடலில் கூறுகிறார் அகத்தியர். இக்கோயில் உள்ள இறைவன் கேசரி, அதாவது க என்னும் வெளியில் சஞ்சரிக்கும் விழிப்புணர்வு. கேசரி என்றால் என்ன என்று பாடல்கள் 5 மற்றும் 87 ல் பார்த்தோம்.
எந்தக் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ய முயன்றாலும் அதற்குமுன் தன்னை அதற்கு ஏற்றவாறு தயார்ப்படுத்திக்கொள்வது அவசியம், வழிபாட்டை சரியான மனநிலையில் செய்வது முக்கியம். கேசரி பூஜையும் அவ்வாறு செய்யப்படவேண்டிய ஒன்று. அதற்கு எவ்வாறு தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வது என்று இப்பாடலில் அகத்தியர் கூறுகிறார். கோயில்கள் எவை நதிகள் எவை என்று ஒருவர் அறியவேண்டும், சாத்திரங்கள் வேதங்கள் ஆகியவற்றை அறியவேண்டும், மாயையால் தோற்றுவிக்கப்பட்ட இந்த உடல் எனும் மனுவையும் மாயை எவ்வளவு உறுதியானது என்பதையும் அதை எவ்வாறு விலக்குவது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும் முடிவில் நாத பிந்துவின் செயல்பாட்டை அறிந்துகொள்ளவேண்டும் என்று பட்டியலிடுகிறார் அகத்தியர்.
இவ்வாறு சரியான பாவத்துடன் பூஜை செய்யவேண்டும் என்கிறார் அகத்தியர். மெய்ஞ்ஞானப் பாதையில் செல்பவர்கள் இவ்வாறுதான் செய்வார்கள், இதுவே சரியை மார்க்கம் என்கிறார் அவர்.
-------------------------------------------------------------------------------
94. Sivalaya and the benefit of worshipping there
Verse 94
தானென்ற பூரகத்தின் கீழதாகச்
சபையான சிவாலயங்கள் நதிகளுண்டு
கோனென்ற அனாகதமாம் மயிர்ப்பாலத்தப்பால்
கொள்கிநின்ற சிவாலயங்கள் நதிகளுண்டு
வானென்ற வாசிமலர் தனையெடுத்து
மகத்தான சிவாலயத்தைப் பூசை பண்ணி
தேனென்ற உடலுயிரை அறியாமற்றான்
திகைத்தபடி மாய்கையிலே திரிவார்பாரே
முன்னமே கூறியபடி மணி பூரகத்துக்குக் கீழேயும் அனாகதத்துக்கு மேலேயும் சிவாலயங்களும் நதிகளும் இருக்கின்றன என்கிறார் அகத்தியர். இங்கு ஓடும் நாடிகள் நுண்மையாக இருப்பதனால் அவற்றை மயிர்ப்பாலங்கள் என்கிறார். இந்தக் கோயில்களில் வாசி மலர் கொண்டு பூசை செய்யவேண்டும் என்கிறார் அவர். இதை அறியாத மக்கள் உடல், உயிர், மேலிருந்து ஊரும் அமுதம் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் மாயையின் தாக்கத்தால் மதியிழந்து திகைத்துத் திரிவர் என்கிறார் அவர்.
-----------------------------------------------------------------------------
95. Kriya-1
Verse 95
பாரப்பா சரியைவழி முறைமை சொன்னேன்
பதிவான கிரியைவழி பகரக்கேளு
நேரப்பா முக்கோணந் தன்னிலேதான்
நிறைந்தவிதழ் பனிரெண்டின்மேலதாகச்
சேரப்பா முக்கோணந் தன்னிலேதாகச்
சிவாலயத்திற் சிவனுமையுந் தீபம் போலே
காரப்பா கருவிழி மலர்க்கண் கொண்டு
கருணையுள்ள வாசிமலர் கருவாய்ச்சாற்றே
இப்பாடலில் அகத்தியர் கிரியாவைப் பற்றிப் பேசுகிறார். பன்னிரண்டு இதழ்களைக் கொண்ட அனாஹத சக்கரத்தின் மேல் உள்ள முக்கோணத்தில் சிவனும் உமையும் தீபமாகக் காட்சியளிப்பர் என்றும் அவர்களைக் கண்ணின் கருமலர் கொண்டு பார்த்து வாசி மலரை அவர்களுக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்கிறார் அகத்தியர். இதுவே கிரியா என்கிறார் அவர்.
------------------------------------------------------------------------------
96. Kriya-2 Its effects
Verse 96
சாற்றிநீ தொழுதங்கே நின்றாயானாற்
சங்கையுள்ள பாவமெல்லாந் தானே தீரும்
போற்றியே ஆதாரப் புதுமைகண்டு
பொருந்திநின்ற வாசியுட திறத்தைப் பெற்று
நேத்திரத்தின் சின்மயத்தைக் கண்டு போற்றி
நினைவறியா மானிடர்கள் நேசந்தப்பி
ஆற்றுமத்தின் நிலைதனையே காணமற்றான்
அலைவார்கள் கிரியை வழி அறியார்பாரே
உணர்வை ஆக்ஞைக்கு எழுப்பி அங்கு சிவன் சக்திகளை ஒளி வடிவில் தரிசித்து அவர்களுக்கு வாசி மலரை சமர்ப்பித்தால் ஒருவரது பாபம் எல்லாம் விலகிவிடும் என்கிறார் அகத்தியர். இவ்வாறு செய்பவர் ஆதாரங்களின் புதுமையையும் மூன்றாவது கண்ணில் சின்மயத்தையும் பாரப்பர். இவ்வாறு செய்யாதவர்கள் பல்வேறு சடங்குகளை மேற்கொண்டு பயனற்றுத் திரிவர் என்கிறார் அவர்.
-----------------------------------------------------------------------------
97. The journey of kriya begins from muladhara
Verse 97
பாரப்பா துரியமத்தின் கீழதாகப்
பத்திநின்ற சுடரொளியாம் மூலத்துள்ளே
காரப்பா கணபதியைத் தொழுது போற்றிக்
கருணையுடன் வாசிமலர் சாத்திமைந்தா
நேரப்பா அவ்வாசி கொண்டுமேலே
நீயறிந்து பூரணமாய் நின்றுக்கொண்டு
சாரப்பா சார்புநிலை அறியாரெல்லாம்
சங்கையுடன் அதில் மூழ்கித் தயங்குவாரே
சித்தர்கள், குறிப்பாக திருமூலர், உடலில் பல இடங்களில் விழிப்புணர்வு நிலைகள் உணரப்படுகின்றன என்கின்றனர். நெற்றிக்கண் அல்லது ஆக்ஞையில் சாக்கிரதம், விசுத்தியில் கனவு நிலை, இதயத்தில் ஆழ் உறக்கம், நாபியில் துரியம் மற்றும் மூலாதாரத்தில் துரியாதீதம் என்ற நிலைகள் உணரப்படுகின்றன. இப்பாடலின் முதல் வரி இக்கருத்தைப் பிரதிபலிக்கிறது. துரியத்தின் கீழ் எனப்படுவது துரியாதீதத்தின் இடமான மூலாதாரத்தைக் குறிக்கிறது. இதற்கு அதிபதி கணபதி. குண்டலினி யோகத்தைத் தொடங்கும் ஒரு யோகி கணபதியைத் தொழுது தனது பயணத்தை மூலாதாரத்திலிருந்து தொடங்குகிறார். இந்த வழியை அறியாதவர்கள் நதி எனப்படும் நாடிகளில் மூழ்க தயங்குகின்றனர் என்கிறார் அகத்தியர்.
--------------------------------------------------------------------------------
98. Charlatans who pretend that they are performing kriya
Verse 98
தயங்குவார் நதி மூழ்கி நீர் தெளித்து
தன்மையுடன் நீறணிந்து ஸ்நானம் பண்ணி
மயங்குவார் இருவிழியுமூடிக்கொண்டு
மணிஎடுத்துத் தானாட்டி மதங்கள் பேசி
தியங்குவார் அக்கிரமம் பிடித்தே அந்தச்
சிவநிலை அறியாத திருடர் தானும்
தயங்கு விந்து வாதாரம் பாரமற்றான்
நாடுகளிற் தான் திரிவார் நயந்து தள்ளே
கிரியை என்று கூறிக்கொண்டு பல சடங்குகளை செய்தபடி திரியும் திருடர்களைப் பற்றிப் பேசுகிறார் அகத்தியர். இம்மக்கள் நதிகளிலும் நீர்நிலைகளிலும் மூழ்கி எழுந்து திருநீறணிந்து மணியடித்து பெரும் சடங்குகள் செய்வதாகப் போலி நாடகம் ஆடி வெறும் பேச்சைப் பேசியபடி திரிவார்கள் அவர்கள் சிவநிலை அறியாத திருடர்கள் அவர்கள் ஒரு உயிரும் உடலுமாக நிற்கும் விந்துவைப் பற்றியும் ஆதாரங்களைப் பற்றியும் அறியாத மூடர்கள் என்று அவர்களைச் சாடும் அகத்தியர் புலத்தியர் அவர்களைத் தள்ளவேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.
-----------------------------------------------------------------------------
99. Union of eight and two in Sivalaya and rivers
Verse 99
தள்ளடா தனையறியா மூடர்தன்னை
தள்ளி மனையேறி மனஞ் சாந்தமாக
அள்ளடா எட்டெழுத்துஞ் சிவமதாகும்
உறுதியுள்ள இரண்டெழுத்துஞ் சத்தியாகும்
நில்லடா எட்டிரண்டும் ஒன்றாய் நின்ற
நிலையான சிவாலயங்கள் நதிகள் தன்னை
அல்லடா அந்தநிலை காணார் எல்லாம்
அலைவார்கள் கிரியை வழி அறியார்தானே
அகத்தியர் இப்பாடலில் சித்த மார்க்கத்தின் ஒரு முக்கிய பரிபாஷையை விளக்குகிறார். எட்டு இரண்டு என்ற பரிபாஷை சொற்களை எல்லா சித்தர் பாடல்களிலும் காணலாம். எட்டு என்பது அகாரம். தமிழில் எட்டு என்ற எண்ணுக்கான எழுத்து அ. இரண்டு என்ற எண்ணுக்கான எழுத்து உ. இவ்வாறு எட்டு இரண்டு என்றால் அகார உகாரங்கள். அகாரம் என்பது சிவன் என்றும் உகாரம் என்பது சக்தி என்றும் அகத்தியர் குறிப்பிடுகிறார். இவை ஒன்றாக இருக்கும் நிலை, சிவ சக்தி ஐக்கியமாகும். இந்த ஐக்கியத்தை உணருவதே கிரியையின் குறிக்கோள். இந்த ஐக்கியம் ஒவ்வொரு சக்கரத்திலும் ஒவ்வொரு நாடியிலும் நிகழ்கிறது. இதைத்தான் அகத்தியர் சிவாலயங்களிலும் நதிகளிலும் இந்த எட்டு இரண்டு சேர்ந்திருக்கும் நிலையைக் காணலாம் என்கிறார். இதை உணராதவர்கள் கிரியை வழியை அறியாதவர்கள் என்கிறார் அவர்.
------------------------------------------------------------------------------
100. True Yoga
Verse 100
தானென்ற கிரியை வழி சொன்னேன் மைந்தா
தன்மையுடன் யோகவழி சாற்றக் கேளு
கானென்ற இருகதிருஞ் சுழியிலேற்றி
குறியான நவகிரகந்த தன்னைக் கண்டு
வானென்ற அனுக்கிரகத்துள்ளே சென்று
மகத்தான சிதம்பரத்துக் கப்பால் நின்று
தேனென்ற கமலமலர்ப் பொய்கை தன்னில்
திருவான பொய்கையில் நீராடிக்காணே
சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நான்கு படிகளைக் கொண்ட பாதையில் முதலில் சரியை என்றால் என்று அகத்தியர் விளக்கினார். நாடிகளான நதிகளில் மூழ்கி சிவாலயங்கள் எனப்படும் சக்தி நிலைகளை அடைந்து அங்கு வாசி எனப்படும் உயிர்ச்சக்தியை சமர்ப்பிப்பதே சரியை என்பது. கிரியை என்பது சிவசக்தி ஐக்கியத்தை எல்லா சக்தி மையங்களிலும் உணருவது. இதனை அடுத்த படியான யோகத்தைப் பற்றி இப்பாடல் பேசுகிறது. யோகம் என்பது இரு கதிர்களை சுழிக்கு ஏற்றி நவகிரகங்கள் என்னும் குறியை அறிந்து வெளியான சிதம்பரத்தைக் கடந்து தாமரைகள் உள்ள நீர்நிலையில் மூழ்குவது என்று விளக்குகிறார் அகத்தியர். இரு கதிர்கள் என்பது சூரிய சந்திரர்கள். இடை பிங்கலை நாடியில் ஓடும் மூச்சு சந்திர சூரியர்களாவர். அவற்றை சுழிக்கு ஏற்றுவது என்பது சக்கரங்களின் ஊடே அவற்றைப் பாயச் செய்து ஆக்ஞையை அடைவது. நவக்கிரகங்களுக்கும் சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு அகத்தியர் மெய்ஞ்ஞானம் பாடல் 117 ல் விளக்கப்பட்டது. நவகிரங்கள் நமது உடலில் பல தத்துவங்களின் குறியீடுகளாகக் காட்டப்படுகின்றன.அதனால் அவற்றை அகத்தியர் குறிகள் என்கிறார். இவ்வாறு சிதம்பரம் எனப்படும் உணர்வு வெளியைக் கடந்து ஏரியாக உருவகப்படுத்தப்படும் உணர்வின் விரிவை அனுபவிப்பதே மானச சரோவர் ஏரியில் குர்லிப்பது என்று சித்தர்கள் கூறுவர். இதையே அகத்தியர் இங்கே குறிக்கிறார். இதுதான் உண்மையான யோகம்.
யோகம் என்ற சொல் சேர்வது என்று பொருள்படும். இங்கு அளவுக்குட்பட்ட உணர்வு நிலை அதன் விரிவுடன் சேருவதே உண்மையான யோகம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
-----------------------------------------------------------------------------
101. yogam-summary
Verse 101
காணடா நீராடி சிவனை நீயுங்
கண்டுமன துருதியின லம்பரத்தில்
கோணடா பெருவாசற் சென்று புக்கிக்
குணமான சுழிமுனையில் பத்திக் கொண்டு
ஊணடா வாசியினால் ஆறாதாரம்
ஊடுருவ நிராதாரம் அண்டம் மேவி
பேணடா அந்தநிலை தன்னில் நின்று
பிலமான ரவிமதியைத் தன்னுட் காணே
அகத்தியர் யோகத்தை சுருக்கமாக இப்பாடலில் கூறுகிறார். யோகம் என்பது பெருவாயில் எனப்படும் மூலாதாரத்தில் உள்ள வாயிலுள் மனவுறுதியினால் நுழைந்து அங்கு வாசியை அழுத்தமாக ஊணி ஆறு ஆதாரங்களையும் துளைத்து ஏறி நிராதாரம் எனப்படும் ஆக்ஞைக்கு மேலே உள்ள இடத்தை அடைந்து அங்கு அண்டம் எனப்படும் வெளியை அடைந்து அந்த நிலையில் நின்றபடி சூரியனையும் சந்திரனையும் தன்னுள் காண்பது என்கிறார் அகத்தியர். இந்த உச்ச நிலையே சமாதி எனப்படுகிறது. இந்த சமாதி நிரந்தரமான நிலையல்ல. ஆனால் அது ஒரு சிறு நேரம் இறைவனுடன் கூடுவது என்றால் என்ன என்று காட்டுகிறது. சூரிய சந்திரர்கள் என்பது கலைகளைக் குறிக்கும். கலை என்பது அறிவைக் கொடுப்பது. இந்த கலைகளை அகத்தியர் அடுத்த பாடலில் விளக்குகிறார்.
--------------------------------------------------------------------------------
102. Chandrakala and suryakala
Verse 101
காணப்பா சந்திரகலை பதினாறாகும்
கருவான சூரிய கலை பனிரெண்டாகும்
பேணவே இருகதிரும் ஒன்றாய் நின்ற
பிலமான சூரியகலைப் பன்னிரண்டில்
தோணப்பா உடலுக்குள் நின்ற மிச்சஞ்
சொந்தமுடன் போனதெங்கே இருந்த தெங்கே
பூணப்பா இருந்த மிச்சம் நாலுந்தானும்
பொருந்திநின்ற பூரணமாய்க் கண்டு பாரே
அகத்தியர் இப்பாடலில் பிராணாயாமத்தைப் பற்றிய ஒரு முக்கியமான செய்தியைக் கூறுகிறார். இட நாடி வழியே பாயும் சுவாசம் சந்திரகலை எனப்படுகிறது. கலை என்றால் அளவு என்று ஒரு பொருள். சந்திரகலை பதினாறு அளவுகள் ஓடுகிறது. பிங்கலை நாடியில் பாயும் சுவாசம் சூரிய கலை எனப்படுகிறது. இந்த சூரியகலை பன்னிரண்டு காலஅளவுகள் ஓடுகிறது. இந்த இருகலைகளும் ஒன்றாக ஒத்திசையும்போது சூரிய கலையின் பன்னிரண்டு அளவுகளில் நான்கு அளவுகள் கழுத்துக்குமேல் தலை பிரதேசத்தில் சுழல்கிறது. மீதி எட்டு உடலில் சுழல்கிறது. இந்த நான்கு அளவுகளை பூரணமாகக் காணவேண்டும் என்று புலத்தியருக்கு அகத்தியர் கூறுகிறார். சித்த மார்க்கத்தில் இந்த எட்டோடு நான்கைக் கூட்டுவதே யோகம் எனப்படுகிறது.
---------------------------------------------------------------------------------
103. Agatthiyar's authoritative definition of Yoga
Verse 103
கண்டுபார் பூரணமே என்று போற்றி
கருணைவளர் கலைநாலுங் காணாமற்றான்
தொண்டரெனப் பசியடக்கி விரதங் காத்துச்
சுழன்று நின்ற வாசிதனை அடக்கி மைந்தா
நின்றநிலை காணாமல் நதிகள் தேடி
தேடினதால் மலைக்களெல்லாஞ் சுற்றிப்பார்த்து
ஒன்றுமிடம் அறியாமல் யோகஞ் செய்து
உடலுயிரைக் காணாமல் அலைவார் பாரே
இப்பாடலில் அகத்தியர் யோகம் என்றால் என்ன என்று கன்னத்தில் அறைவதைப் போலக் கூறுகிறார். யோகம் என்பது தொண்டர் என்று கூறிக்கொண்டு விரதங்கள் ஜபதபங்கள் செய்வது இல்லை, காடுகள் மலைகள் ஆகியவற்றைத் தேடி ஓடுவது இல்லை, ஆசனங்களில் தேர்ந்தவராவது இல்லை. யோகம் என்பது சூரிய கலையையும் சந்திர கலையையும் சேர்ந்திசைய வைத்து அப்போது மேலே சுழலும் வாசியைக் காண்பது. இதுவே யோகத்தின் இலக்கான ஆத்ம தரிசனத்தைத் தரும். மற்ற யாவும் நேர விரயம் பொருள் விரயமே என்று அகத்தியர் பொட்டேனக்கூறுகிறார்.
--------------------------------------------------------------------------------
104. Jnana
Verse 104
பாரப்பா யோகவழி நன்றாய்ச் சொன்னேன்
பதிவான ஞானவழி பகரக் கேளு
காரப்பா ஆதார மூலந் தன்னிற்
கனிவான அக்கினிதான் ஆவிதன்னை
சேரப்பா முக்கோணச் சுடரில் நின்று
திருவாசியான தொரு செங்கண் மேவி
சாரப்பா அந்தமனைச் சொந்தமென்று
சங்கையுடன் தானிருந்து தன்னைக் காணே
ஞானம் என்றால் என்ன என்று இப்பாடலில் அகத்தியர் கூறுகிறார். ஞானம் என்பது ஆதார மூலத்தில் உள்ள அக்னியை ஆத்மா என்று அறிந்து முக்கோணம் எனப்படும் ஆக்னையில் அதனுடன் கூடுவது. ஆக்னையில் உள்ள அக்னிக்கு வாசி, செங்கண் என்கிறார். இங்கு கண் என்று கூறப்படுவது மூன்றாம் கண், வீடு எனப்படுவது ஆக்ஞை.
உண்மை விளக்கம் என்னும் சைவ சித்தாந்த நூலில் நடராஜரின் திருவாசி ஓம்காரம் என்று கூறப்படுகிறது. திருவாசியினுள் இறைவன் நடமாடுவது என்பது சொல்லும் பொருளும் சேர்ந்திருப்பதைக் காட்டுகிறது. இங்கு அகத்தியர் குண்டலினி அக்னிக்கு, ஆக்னையில் காணப்படும் ஆத்மாவுக்கு வாசி மூன்றாம் கண் என்கிறார்.
----------------------------------------------------------------------------
105. The poorna is paripurna.
Verse 105
காணப்பா மேல்வெளியைக் கண்டு கூடி
கருணையுடன் அவ்வெளியைக் கண்டு கூடி
பூணப்பா நிராதாரச் சித்தமாகிப்
பூரணமாய் நின்ற பரி பூரணமேயாகி
தோணப்பா சிவன் அயன்மால் பூசைசெய்து
துடங்கி நின்ற தீவினைகள் ஒன்றுமற்று
பேணப்பா ருசியற்று ஆசையற்று
பேரண்ட சோதியுட சோதிதானே
முந்தைய பாடலில் அகத்தியர் ஞானம் என்றால் குண்டலினி அக்னியை ஆவி என்று உணர்ந்து அதனுடன் ஆக்னையில் கூட வேண்டும் என்று கூறினார். இப்பாடலில் அதை மேலும் விளக்குகிறார். நிராதார சித்தம் என்பது உயருணர்வு எவ்வித ஆதாரமும் இல்லாமல் இருப்பது. இந்த நிலை ஆக்ஞையைக் கடந்த நிலை. அண்டவெளி என்பது உடலுள் இருப்பது. பேரண்ட வெளி என்பது உடலைக் கடந்தது.
பரிபூரணமே பூரணமாக இருப்பது என்று இங்கு அகத்தியர் கூறுகிறார். பூரணம் என்பது ஆன்மாவைக் குறிக்கும். இது மலம் கடந்த நிலை. பரிபூரணம் என்பது இறைமையைக் குறிக்கும். இவ்வாறு ஆத்மாவே பரமாத்மா என்ற அத்வைத கொள்கையை இங்கே அகத்தியர் கூறுகிறார். இந்த ஆத்மா பரமாத்மாவாக தனது தீவினைகளைக் களைய வேண்டும். அதற்கு சிவன், பிரம்மா மற்றும் மாலைப் பூசிக்கவேண்டும் என்கிறார் அகத்தியர். இந்தத் தெய்வங்கள் மூலாதாரம், சுவாதிஷ்டானம் மற்றும் மணிபூரக சக்கரங்களின் அதிபதிகள், பிறப்பை ஏற்படுத்தும் தத்துவங்களைக் குறிப்பவை. இது மட்டுமல்ல அந்த யோகி ருசியையும் ஆசையையும் அறுக்கவேண்டும் என்கிறார் அகத்தியர் ஏனெனில் அவை புதிய கர்மங்களைத் தோற்றுவித்து மீண்டும் பிறப்பை ஏற்படச்செய்யும். இவ்வாறு செய்தால் ஆத்ம ஜோதி, பரஞ்சோதியாகும் ஏனெனில் அது பேரண்ட சோதியின் சோதியே என்கிறார் அகத்தியர்.
-------------------------------------------------------------------------------
106. The states that soul remains in, in the jnana step
Verse 106
சோதி என்ற ஐந்தெழுத்துந் தான்தானாகித்
துலங்குகின்ற சதானந்தம் தான்தானாகி
ஆதியென்ற மூன்றெழுத்தும் தான்தானாகி
அடங்கியொன்றாய் நின்ற பொருள் தான் தானாகி
சாதியென்ற சமரசமும் தான் தானாகிச்
சதரகோடி மந்திரமுந் தான் தானாகி
வேதிஎன்ற கெவுனமுதல் அஷ்டசித்தும்
செப்பாத மவுனமதும் தான்தானாமே
ஞான நிலையை அடைந்த யோகி அனுபவிக்கும் ஒருமை நிலையை அகத்தியர் இப்பாடலில் விளக்குகிறார். தான் என்னும் ஆத்மா மெதுவாக தனது அளவுக்குட்பட்டமையை விலக்கி அனைத்துமாகி நிற்கும் நிலையை அடைகிறது. அது சோதியாக, ஐந்தெழுத்தான நமசிவாயவாக, மூன்று எழுத்தான அ,உ ம வாக, இவையனைத்தும் அடங்கியிருக்கும் நிலையாக, ஜீவன் ஈஸ்வரன் என்ற சாதிகள் மறைந்து சமரசநிலையாக, அனைத்து மந்திரங்களாக, கெவுனமான ரசவித்தையாக, அணிமா, லகிமா முதலிய எட்டு சித்திகளாக பேசாத மவுனமாக நிற்கிறது.
--------------------------------------------------------------------------------
107. A jnani will remain as aham brahmasmi
Verse 107
ஆமப்பா வாதியந்தப்பொருள் தானென்றும்
அடங்கிநின்ற பஞ்ச கர்த்தாள் அது தானென்றும்
தாமப்பா சத்தி சிவம் தான் தானென்றும்
தண்மையுள்ள பஞ்ச கர்த்தாள் தான் தானென்று
ஓமப்பா ஏழுவகை உலகமெல்லாம்
உறுதி கொண்டு தானாகத் தான்தானென்று
சோமப்பா நான்தானே அவன் தானென்றுஞ்
சோதி மயமாயிருப்பார் ஞானி தானே
ஞான நிலையை அடைந்தவர் தானே சக்தி சிவமாக, பஞ்ச கர்த்தாள் எனப்படும் சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன், விஷ்ணு, பிரம்மாவாக, ஏழு உலகங்களாக- பூ புவர், சுவர், மகர், தப, ஜன மற்றும் சத்தியம் இருப்பார். அவர் “நானே அவன்” அல்லது அகம் பிரம்மாஸ்மி என்ற நிலையில் சோதிமயமாக இருப்பார் என்கிறார் அகத்தியர்.
"அகத்தியர் சௌமிய சாகரம்"
Vadha saumyam 1200 {பாகம் -8 }
-------------------------------------------
{ பல நண்பர்களின் வேண்டுதலுக்கு இணங்க அகத்தியர் பெருமானால் உலகுக்கு அருளப்பட்ட இது வரை ஓலை வடிவிலேயே விளங்கிய அரிய பொக்கிசமாகிய இந்த அகத்தியர் சௌமிய சாகரம் என்ற மிக பெரிய பொக்கிஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன் . நன்றி . }
108. Jnana state
Verse 108
தானென்ற சரியை முதல் ஞானஞ்சொன்னேன்
சமரசமாய்க் கண்டறிந்து தன்னைப் பாரு
ஊனென்ற உடலுயிர்க் கண்டாயானால்
உண்மையென்ன சரியை முதல் ஞானந் தோன்றுங்
கோனென்ற குருவருளால் மைந்தா நீயுங்
குறிப்பறிந்து ஞான நிலை கூர்ந்துப் பார்க்க
வானேற சரியை முதல் ஞான மட்டும்
மார்க்கமுட நன்றாகச் சூக்ஷங்கேளே
சரியை, கிரியை, யோகம் ஞானம் என்னும் நான்கு படி வழிமுறையில் முதல் மூன்று ஒரு யோகியின் முயற்சியால் செய்யப்படுபவை. ஞானம் என்பது அவ்வாறல்ல. அது முதல் மூன்று படிகளின் விளைவாக ஏற்படுவது. யோகத்தில் உள்ள சமாதி நிலை இந்த ஞான நிலையின் ஒரு துளியைத்தான் காட்டுகிறது. சமாதியில் அனுபவிப்பவர் அனுபவிக்கப்படும் நிலை என்ற வித்தியாசங்கள் உள்ளன. ஞான நிலையில் அந்த யோகி எவ்வாறு தான் அந்த நிலையாகவே இருப்பது என்பதை உணருகிறார். இங்கு மேற்கூறிய இருமை நிலை இல்லை. ஆனால் இங்கும் அந்த யோகி உடலின் கட்டுத்தளையைக் கடக்கவில்லை. உடலில் இருந்துகொண்டே அந்த உடலற்ற நிலையை அன்பவிக்கிறார். இப்பாடலில் குறிப்பிடப்படும் ஊனென்ற உடலுயிர் என்பது அகார உகாரத்தைக் குறிக்கும். அகாரம் சிவனையும் உயிரையும் குறிக்கும். உகாரம் சக்தியையும் உடலையும் குறிக்கும்.
இந்த நிலை குருவின் அருளால் ஏற்படுவது. இதை எவ்வாறு அடைவது என்று இன்னும் விளக்கமாக அடுத்த பாடலில் அகத்தியர் கூறுகிறார்.
---------------------------------------------------------------------------
109. The jnani remains as jeeva pranamaya
Verse 109
கேளப்பா அயன்மாலின் திரையறுத்து
கிருபையுள்ள ருத்திரன் தன் திரையை நீக்கி
ஆளப்பா மயேசுரன்தன் திரையைத் தள்ளி
அதன் மேலே சதாசிவன்தான் திரையைக் கட்டு
சூளப்பா ஐம்புலனைச் சுட்டுத் தள்ளிச்
சுக சீவப் பிராணமயத் தோடிருந்து
காலப்பா செவி விழியுங் கடந்தப்பாலே
கருணையுடன் தானிருப்பார் ஞானிதானே
சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று நிலைகளையும் கடக்கும்போது ஏற்படுவது ஞான நிலை என்று முன்னம் பார்த்தோம். இந்த மூன்று படிகளும் ஒரு யோகியை பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகியவர்களால் குறிக்கப்படும் தத்துவங்களைக் கடக்க உதவுகின்றன. இந்த தளைகளை அகத்தியர் திரைகள் என்கிறார். இந்த திரைகளை ஒவ்வொன்றாக அறுத்தெறிந்து சதாசிவனையையும் கடந்து ஒரு யோகி முன்னேற வேண்டும். ஐம்புலன்களின் தாக்கத்தைக் கடந்து ஜீவ பிராணமயமான நிலையை அடையவேண்டும். அந்த நிலையில் அந்த ஞானி கண் காது என்ற புலன்களைக் கடந்து இருக்கிறார், அதாவது புலன்களின் உதவியில்லாமலேயே அனைத்தையும் அறியும் திறம் பெற்று இருக்கிறார்.
---------------------------------------------------------------------------
110. The jnana remains in siva jnana yogam
Verse 110
தானென்ற முப்பாழில் மும்மலமும் நீக்கித்
தற்பரத்துக் கப்பால் மயிர்ப்பாலமீதில்
வானென்ற நெருப்பாறுக்கு அப்பாற்சென்று
மகத்தான பரவெளியில் மனதொடுங்கி
கோனென்ற வெளியொளியில் தானே தானாய்
குவிந்திருந்த சிவயோக ஞானந்தானாய்
ஊனென்ற வாதியந்தந் தானே தானாய்
உகந்திருப்பார் சிவஞான முணர்ந்தோர்காணே
மும்மலங்கள் என்பவை ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றுமாகும். இந்த மூன்றையும் கடப்பதை மூன்று பாழ்களைக் கடப்பது என்கிறார் அகத்தியர். இந்த மூன்று பாழ்கள் மாயப்பாழ், போதப்பாழ் உபசாந்தப் பாழ் என்பவை. தூல உடல், சூட்சும உடல், கர்மேந்திரியம் ஞானேந்திரியம், அந்தக்கரணம், பிரகிருதி ஆகியவற்றைத் தன்னைவிட்டு வேறாக உணருவது மாயப் பாழைக் கடப்பதாகும். ஏழு வித்தியா தத்துவங்களைக் கடப்பது போதப்பாழைக் கடப்பது. ஒரு பிறவிக்குக் காரணமாக இருப்பவை இந்த தத்துவங்கள். காரணங்களையும் காரியத்தையும் உணர்ந்து கடப்பது உபசாந்தப்பாழைக் கடப்பதாகும். திருமூலர் தனது திருமந்திரம் தந்திரம் எட்டில் இந்த முப்பாழைப் பற்றி விளக்கியுள்ளார். இந்த முப்பாழையும் கடக்கும் ஜீவன் மீண்டும் பிறப்பதில்லை. ஏனெனில் பிறவியை ஏற்படுத்தும் காரணங்கள் அனைத்தும் அதைவிட்டு விலகிவிடுகின்றன. அது சிவ ஞான யோக நிலையில், சிவ ஞானத்துடன் கூடிய நிலையில் இருக்கிறது.
மயிர்ப்பாலம், நெருப்பாறு என்பவை உயருணர்வு கடக்கும் நிலைகளை உணர்த்தும் குறிப்புகள். இந்த நிலையை அடைந்த ஞானி தூய வெளியின் ஒளியாய் இருக்கிறார், உடலின் அந்தம் அல்லது முடிவு நிலையில் இருக்கிறார் என்கிறார் அகத்தியர்.
-----------------------------------------------------------------------------
111. When a Siva jnani is born into this world...
Verse 111
ஆதியந்த விளக்கம்
காணவே சிவஞானம் உணர்ந்தோர் தானும்
கருணையுள்ள மாதவத்தோர்ப் பெருமை தானும்
பேணவே தூலமதைச் சூக்ஷமாக்கிப்
பிலமான சூக்ஷமத்துக் காரணமாய் நின்று
தோணவே ஆதி அந்தம் ஒன்றாய் நின்று
துலங்குகின்ற சுடரொளியில் சோதியாகிப்
பேணவே பூமியில் வந்து அவதரிப்பார்
பிறந்தாலுஞ் சிவ யோகி யாவார் பாரே
ஞான நிலையை அடைந்த ஆத்மாவைப் பற்றி அகத்தியர் இப்பாடலில் பேசுகிறார். அந்த ஆத்மா பிறவிக்குக் காரணமான ஆதியையும் அந்தக் காரணத்தின் அந்தமான தூல நிலையையும் ஒழித்து சோதி உருவில் நிற்கிறது. தூல நிலை சூட்சும நிலையாக மாற்றப்படுகிறது. தூலத்துக்கு அடித்தளமான சூட்சுமம் காரணநிலையாக மாறுகிறது. இவ்வாறு ஆதியான காரண நிலையும் அந்தமான தூல நிலையும் அந்த ஆத்மாவில் ஒன்றாக இருக்கும். அது சோதியின் ஒளியாக இருக்கும். அத்தகைய ஆத்மா இவ்வுலகில் மீண்டும் பிறந்தாலும் ஒரு சிவயோகியாகவே, எப்போதும் சிவத்துடன் சேர்ந்திருக்கும் ஆத்மாவாகவே பிறக்கிறது என்கிறார் அகத்தியர். இப்பாடல் பல ஞானிகளும் முக்தாத்மாக்களும் ஏன் மீண்டும் இவ்வுலகில் பிறக்கிறார்கள், அவ்வாறு பிறக்கும்போது அவர்களது நிலை என்ன என்று விளக்குகிறது.
---------------------------------------------------------------------------
112 Great statement and meeting the Lord
Verse 112
பாராளு மெக்கியமா முனியே யையா
பதிவான ரிஷி முனிவர் சித்தரெல்லாம்
நேராக நின்று தவம் பெற்ற பேரை
நீள்புவியில் பிறந்திடுவார் என்று வாக்கியம்
பேராகச் சொல்லி மனக்கசடு நீக்கிப்
பிறவாத நெறிகாட்டி அமிர்தம் ஈந்து
மாறாத அடுமை படைத்து ஆளுமென்று
மார்க்கமுடன் அவர் பதத்தில் வணங்கினேனே
தான் முற்பாடலில் எவ்வாறு ஞானிகள் பிறக்கிறார்கள், எதற்காகப் பிறக்கிறார்கள் என்று கூறியதை மகா வாக்கியம் வழிமொழிகிறது என்றும் மகா வாக்கியத்தைக் கூறியவரது பொற்பாதத்தைத் தான் சேவைகள் செய்து வணங்கி, “எனது மனக்கசடுகளை நீக்குங்கள், அமிர்தத்தை அருளுங்கள் எம்மை ஆளுங்கள் என்று மார்க்கமாகப் பணிந்தேன்,” என்கிறார்.
-----------------------------------------------------------------------------
113. Lord's reply to Agatthiyar
Verse 113
வணங்கிமிக நிற்கையிலே வேதியோனும்
மகத்தான ரகஸ்யமடா ஞான மார்க்கம்
இணங்கியதோர் அந்தரங்க மான சூக்ஷம்
ஏகாந்த சூக்ஷமென்ற கதையைக் கேளு
குணங்குவிய ஆதியந்தக் குறியை நன்றாய்க்
கூர்மையுடன் சொல்லுகிறோங் குணமாய்க் கேளே
(இரண்டு வரிகள் இல்லை)
மேற்பாடலில் கூறியபடி அகத்தியர் இறைவனை வணங்கி நின்றபோது வேதியன் அல்லது வேதம் எனப்படும் ஞானத்தின் அதிபதியான இறைவன் அவருக்கு ஞான மார்க்கத்தின் தன்மை மிக ரகசியமானது, அந்தரங்கமானது, சூட்சுமமானது என்று கூறினார். அதனை அடுத்து அவர், “ஏகாட்சரம் எனப்படும் ஓம்காரத்தைப் பற்றிக் கூறுகிறேன் கவனமாகக் கேள்,” என்றார்.
--------------------------------------------------------------------------
114. The aadhi antham vasthu- the origin terminus entity
Verse 114
கேளப்பா நான்முகன்மால் இந்திராதி தேவர்
கெடியான வேதமுதல் சமயத்தோரும்
தேரப்பா தேடி அறியாத வஸ்து
தெளிவான வெளியதுதான் பரமதாகும்
கேளப்பா பரமான வஸ்து தன்னைக்
கிருபையுடன் அறிவதுவே ஆதியந்தம்
கேளப்பா ஆதியந்த வஸ்து மனு படைத்த
கெதியைமிக அறிவதுவே விளக்கந்தானே
அகத்தியர் ஆதியந்தம் என்ற வஸ்துவை இப்பாடலில் வெட்டவெளி, பரம் என்று அழைக்கிறார். இது யாராலும் காணமுடியாத வஸ்து. இதுவே உலகையும் மனு எனப்படும் மனிதனையும் படைத்தது. இந்த படைப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறிவதே ஆதியந்தம் என்பதன் விளக்கமாகும் என்கிறார் அகத்தியர்.
------------------------------------------------------------------------------
115. Before the birth of the seven...
Verse 115
தானென்ற ஆதியந்த விளக்கந்தன்னைச்
சங்கையுடன் சொல்லுகிறேன் தயவாய்க் கேளு
வானென்ற உலகமதில் மைந்தா மைந்தா
மகத்தான் எழுவகையின் தோற்றந் தானும்
கோனென்ற ஜகமதிலே பிறக்குமுன்னே
குருவான பரமிருந்த குறியைமைந்தா
ஊனென்ற திருமுடியும் அடியுந்த தன்னை
உத்தமனே சொல்லுகிறேன் உறுதி கேளே
இப்பாடலில் அகத்தியர் உலகம் தோன்றுவதற்கு முன் ஆதியந்த வஸ்துவின் நிலையைக் கூறுகிறார். எழு வகைகள் தோன்றுவதற்கு முன் வானமான அது மட்டுமே இருந்தது என்கிறார் அகத்தியர். வானம் என்பது ஆகாயம். ஆகாயம் என்ற சொல் ஆ+காசம் அல்லது பரந்து விரியும் ஒளி, நிலம் என்று பொருள்படும். ஏழுவகை என்பது ஏழு வகையான உயிரினங்களைக் குறிக்கும். அவை தேவர்கள், மனிதர்கள், மிருகங்கள்,ஊர்வன, நீரில் வாழ்வன, பறப்பன மற்றும் தாவரங்கள்.
ஒரு குழந்தை கருவில் ஏழு நிலைகளைக் கடந்து வெளிவருகிறது என்று இந்திய மருத்துவம் கூறுகிறது. அவை மூலாதாரம் ( 3 வாரங்கள்), சுவாதிஷ்டானம் ( 3-6 வாரங்கள்) மணிபூரகம் (6-12 வாரங்கள்) அனாஹதம் (12-24 வாரங்கள்) , விசுத்தம் (24-30 வாரங்கள்), ஆக்ஞை (30-38 வாரங்கள்) சகஸ்ராரம் (39 வாரங்களுக்கு மேல்) (wwwlmovingmoon.com/node/36) ஏழு வகைத் தோற்றத்துக்கு முன் பரம் மட்டுமே இருந்தது என்று கூறுவது இந்தக் கருத்திலும் பொருந்தும்.
எழுவகைத் தோற்றம் என்பது ஏழு உணர்வு நிலைகளான சிவன், சக்தி, சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன், விஷ்ணு மற்றும் பிரம்மாவைக் குறிக்கலாம். இவை தோன்றுவதற்கு முன் பரம் ஒன்று மட்டுமே இருந்தது.
-------------------------------------------------------------------------------
116. The original form at T zero
Verse 116
கேளப்பா புலத்தியனே நன்றாய்க் கேளு
கிருபையுடன் உலகமது ஜனிக்கு முன்னே
காலப்பா பரமிருந்த கருணை தன்னைக்
காரணமாய்க் குருவருளால் கருதக் கேளு
ஆளப்பா குருபதந்தான விஸ்வரூபம்
அவருடைய வடிவு ஒளி அடிபாதாளம்
வாளப்பா முடியதுதான் அண்டத்துச்சி
மகத்தான பர சொரூப வடிவுகாணே
விஞ்ஞானமும் ஆன்மீகமும் உலகம் எவ்வாறு தோன்றியது, அது தோன்றுவதற்கு முற்பட்ட நிலை யாது என்ற கேள்விகளைப் பல காலமாகக் கேட்டுவருகின்றன. இப்பாடலில் அகத்தியர் உலகம் தோன்றுவதற்கு முன் இருந்த நிலையை விளக்குகிறார். இந்த உலகம் பிறப்பதற்கு முன் இருந்த ஒரே வஸ்து பரம். அது கால் அல்லது உயிர்ச்சக்தியான பிராணனாக அனைத்துக்கும் காரணமாக இருந்தது. அதன் உருவம் விஸ்வரூபம் அல்லது அனைத்தையும் தன்னுள் அடக்கிய உருவம். விச்வம் என்ற சொல் இறைவனின் முதல் நாமமாக விஷ்ணு சகஸ்ரநாமத்தில் தோன்றுகிறது. இந்தப் பெயருக்கு உரையாசிரியர்கள் விரிவாக விளக்கமளித்துள்ளனர். இறைவனின் இந்த விஸ்வரூபத்தின் அடி பாதாளத்திலும் முடி அண்டத்து உச்சியிலும் உள்ளன என்றும் அவன் ஒளியுருவாக இருக்கிறான் என்றும் அகத்தியர் கூறுகிறார்.
---------------------------------------------------------------------------
117. Siva as column of flame
Verse 117
காணவே உச்சிமுடி தன்னை மைந்தா
கருவான பிரமனுமே தேடித்தேடி
தோணவே காணாமல் வந்தாரப்பா
சுகமான மாலவரும் ஏனமாகிப்
பூணவே பூமிபா தாளஞ்சென்று
புத்தியுடன் வைத்தவடிக் காணார்தானே
பேணவே மாலயனுந் தேடித்தேடிப்
பெருகிநின்ற வடிமுடியுங் காணார்பாரே
சிவன் ஒளிப்பிழம்பாக நிற்க மாலும் அயனின் அவனது அடியையும் முடியையும் தேடிப்போன புராணக்கதையை இங்கு அகத்தியர் குறிப்பிடுகிறார். பிரம்மா மன தத்துவத்தையும் விஷ்ணு புத்தி தத்துவத்தையும் குறிக்கின்றனர். இதனால் இறைவனை மனத்தாலும் புத்தியாலும் உணரமுடியாது என்று காட்டப்படுகிறது.
------------------------------------------------------------------------------
118. History of the world
Verse 118
உலகம் படைத்த வரலாறு
பாரப்பா அடிமுடியுந் தேடிப்போன
பதிவான மாலயனுங் காணாரென்று
நேரப்பா வேதமுரைத் திட்ட செய்தி
நீள்புவியில் யாவர்களும் உரைத்திட்ட செய்தி
யாரப்பா அறிவார்கள் பரசொரூபம்
அந்தரங்கமான சிவ ரூபாரூபம்
காரப்பா குருவருளால் தெரிந்த மட்டுங்
கருணையுடன் சொல்லுகிறேன் என்று தானே
புராணங்கள் உலகம் தோன்றிய வரலாறை மேற்கூறிய லிங்கோத்பவ கதையாக உலகமக்களுக்குக் கூறுகின்றன என்றும் உண்மையில் அது மிக சூட்சுமமானது, அந்தரங்கமானது என்றும் கூறும் அகத்தியர் அதைக் குருவருளால் தனக்குத் தெரிந்த மட்டும் கூறுவதாகப் புலத்தியரிடம் சொல்கிறார்.
----------------------------------------------------------------------------
119. The Param, the space, remained as singularity
Verse 119
என்றுமுள்ளார் அடிமுடியே ஆதியந்தம்
ஏகமவர் வடிவு வெளி யடிபாதாளம்
மன்று கதிர் சந்திரனும் இல்லாக்காலம்
அதிரும் இடி மின்மேகம் இல்லாக்காலம்
குன்றுசெடி ஆண் பெண்ணும் இல்லாக்காலம்
கூறு பஞ்ச பூத நெறி இல்லாக்காலம்
ஒன்றெனவே நிறைந்த பரம் நின்றவாறும்
ஒருவரறியாதசெயல் உண்மை காணே
சிருஷ்டியை விளக்கப் புகும் அகத்தியர் நாம் காணும் உருவத்தில் உள்ள உலகுக்கு முற்பட்ட காலத்தைக் குறிப்பிடுகிறார். அப்போதுசீவராசிகளோ பஞ்ச பூதங்களோ இருக்கவில்லை. வெளியுருவான பரம் மட்டுமே எங்கும் நிறைந்திருந்தது. அதன் அடி இருந்த இடம் பாதாளம் என்கிறார் அகத்தியர். பரம் தனது ஏக நிலையில் இருந்தது.
-----------------------------------------------------------------------------
120. Continuation of the previous verse
Verse 120
காணவே வேதநெறி இல்லாக்காலங்
கருவான சாஸ்திரம் ஆறு இல்லாக்காலம்
பூணவே உபதேசம் இல்லாக்காலம்
புண்ணிய பாவங்கள் இரண்டும் இல்லாக்காலம்
பேணவே குலநெறிகள் இல்லாக் காலம்
பெருகிநின்ற மந்திரங்கள் இல்லாக்காலம்
தோணவே சொன்னதெல்லாம் உண்டாய் நின்ற
சூக்ஷமதைச் சொல்லுகிறேன் சுகமாய்க் கேளே
முந்தைய பாடலின் தொடர்ச்சியாக இப்பாடலில் அகத்தியர் சிருஷ்டி தொடங்குவதற்கு முன் எவையெல்லாம் இல்லாமல் இருந்தன என்று கூறுகிறார்.
அகத்தியர்அறிவுரை!
-------------------------------
"பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம்
உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி
உனக்கேதடா. பாவத்தை செய்தவன்
சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே.
அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி
தண்டனை தருவார் என்பது யாருக்கும்
தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான்
இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு
நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான்
என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக்
கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம்
இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த
நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று
பொருள். இந்த கருத்தை மனதில்
வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும்
பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக
எளிதாக, மிக நீதியாக தோன்றும்."
!ஓம் அகத்திய குருவே போற்றி!
தொடரும் அகத்தியரை நோக்கிய இந்த உண்மை பயணம் ......
"அகத்தியர் சௌமிய சாகரம்"
Vadha saumyam 1200 {பாகம் -5}
------------------------------------------------------
{பல நண்பர்களின் வேண்டுதலுக்கு இணங்க அகத்தியர் பெருமானால் உலகுக்கு அருளப்பட்ட இது வரை ஓலை வடிவிலேயே விளங்கிய அரிய பொக்கிசமாகிய இந்த அகத்தியர் சௌமிய சாகரம் என்ற மிக பெரிய பொக்கிஷத்தை சித்தர்களின் குரல் வாயிலாக உலகம் அறிந்து பயன் பெற அகத்தியர் பெருமானின் பாதம் பணிந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்... நன்றி}
121. Order of emergence
Verse 121
கேளப்பா பராபரமாய் நின்ற சோதிக்
கிருபையுடன் சிவன் படைக்க நினைந்தபோது
மாளப்பா வல்ல பரந்தன்னிலேதான்
வளவான சிவமதுதான் உண்டாச்சப்பா
மேலப்பா சிவமதிலே சத்தியுண்டாய்
விளங்கி நின்ற சத்தியிலே மைந்தாகேளு
சூளப்பா சதாசிவந்தான் துலங்கிநின்ற
சொற்பெரிய சதாசிவத்தின் மயேசுரந்தானே
ஏகமாக வெளியாக ஒளியாக இருந்த பராபரம் சிவனைப் படைக்க நினைத்தபோது முதலில் பரத்தில் சிவம் அல்லது பரவுணர்வு தோன்றியது. அதிலிருந்து சக்தி, சதாசிவம், மகேஸ்வரம் என்று நிலைகள் ஒவ்வொன்றாகத் தோன்றத் தொடங்கின. இந்த நிலைகள் பல்வேறு தத்துவங்களைக் குறிக்கின்றன. இவற்றைப் பற்றிய விவரங்களை அடுத்த பாடலில் காண்போம்.
--------------------------------------------------------------------------
122. Paramasiva granted the seven the authority
Verse 122
தானான மயேஸ்வரத்தில் உருத்திரன்தான்
சங்கையுள்ள ருத்திரனிற் திருமால் தோன்றி
கோனான திருமாலில் அயனார் தோன்றிக்
குவிந்தெழுந்த எழுவருந்தான் கூர்மையாக
வானான பராபரத்தை அறியமாட்டார்
மகத்தான பரந்தானே பராபரமாய் நிற்குந்
தேனான பரமசிவம் அதிகாரத்தைத்
தீர்க்கமுடன் அனுக்கிரகஞ் செய்தார் பாரே
மகேசுவரத்திலிருந்து ருத்திரனும் ருத்திரனிலிருந்து விஷ்ணு அல்லது திருமாலும் திருமாலிலிருந்து பிரம்மனும் தோன்றினார்கள் என்று கூறும் அகத்தியர் அந்த எழுவரும்- சிவன், சக்தி, சதாசிவன், மகேசுவரன், ருத்திரன், விஷ்ணு மற்றும் பிரம்மன், ஆதியான பராபரத்தை அறியமாட்டார்கள். பரமே பராபரமாக நின்றது என்றும் அந்த பரமான பரமசிவம் இந்த எழுவருக்கும் அதிகாரத்தை அனுகிரகித்தது என்கிறார் அகத்தியர். பராபரத்தை வான் என்கிறார் அகத்தியர். வானம் என்பது ஆகாயமாகும். இது பூத ஆகாசமல்ல. பூத ஆகாசம் எவ்வாறு பிற பூதங்களான காற்று, நெருப்பு ஆகியவற்றுக்குத் தன்னில் இடமளிக்கிறதோ அதே போல் பராபரம் பிற தத்துவங்களுக்குத் தன்னில் இடமளிக்கிறது.
-----------------------------------------------------------------------------
123. The Paraparam remained as all pervasive jyothi
Verse 123
பாரப்பா அனுக்கிரகம் செய்துநல்ல
பரமான பராபரந்தான் எங்குந்தானாய்
நேரப்பா நின்ற பரஞ் சோதியாகி
நிறைந்ததொரு சோதியாய் நின்ற போது
சாரப்பா முன் உதித்த எழுவர் தானும்
சங்கையுடன் அவர்கள் செய்யும் முறமைதன்னை
யாரப்பா அறிவார்கள் புலத்தியா கேள்
ஆதிதொடுத்து அந்தம்வரை அறிந்துகாணே
சிவன், சக்தி, சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன், விஷ்ணு, பிரம்மன் என்ற எழுவரையும் படைத்த பிறகு பராபரம், பரஞ்சோதி எங்கும் நிறைந்த சோதியாக நின்றது. அதனை அடுத்து அது அளித்த அனுகிரகத்தால் எழுவரும் தத்தம் செயல்களை செய்யத்தொடங்கினர்.
-----------------------------------------------------------------------------
124. Creation of elements-1
Verse 124
காணவே பரமசிவன் வானுண்டாக்கக்
கருணையுள்ள திருமாலைக் கண்ணால் மேவி
பூணவே சதாசிவத்தைப் பார்க்கும்போது
புத்தியுடன் பேரண்டம் படைத்து நின்றார்
ஊணவே மயேசுரனைப் பார்க்கவேதான்
உருமியிடி வாய்வு தனைப் படைத்து நின்றார்
தோணவே ருத்திரனைக் கண்ணால் பார்க்கத்
துலங்கு மின்னல் அக்கினியும் படைத்தார் பாரே
ஐம்பூதங்களாலான உலகைப் படைக்க விரும்பிய பரமசிவன் திருமாலைக் கண்ணால் மேவி சதாசிவனைப் பார்த்தார் என்றும் அப்போது சதாசிவன் புத்தியையும் வானத்தையும் உலகத்தையும் படைத்தார் என்றும் அகத்தியர் கூறுகிறார். வான் என்னும் முதல் பூதம் பிற பூதங்களுக்குத் தன்னில் இடமளிக்கிறது. அதனால்தான் அகத்தியர், சதாசிவன் அண்டத்தைப் படைத்தார் என்கிறார்.
இதனை அடுத்து பரமசிவனார் மகேசுரனைப் பார்க்க அவர் காற்றுத் தத்துவத்தையும் இடியையும் படைத்தார். அவருக்கு அடுத்து பரமசிவனார் உருத்திரனைப் பார்க்க அவர் தீ தத்துவத்தையும் மின்னலையும் படைத்தார் என்கிறார் அகத்தியர்.
பொதுவாக படைப்புக்கடவுள் பிரம்மா என்று கூறுவது வழக்கம். இப்பாடலில் அகத்தியர் படைப்பு திருமாலின் உதவியுடன் நடந்தது என்று கூறுகிறார். மால் என்பது மாயை என்பதைக் குறிக்கும். இதனால் படைப்பு மாயையின் உதவியால் நடந்தது என்று அகத்தியர் கூறுகிறார் என்று தோன்றுகிறது.
--------------------------------------------------------------------------
125. creation of other elements and the sun
Verse 125
பாரான திருமாலைப் பார்க்கும்போது
பதிவான அகண்ட மேகம் படைத்து நின்றார்
ஆரான பிரம்மனையும் நோக்கும்போது
அளவற்ற பூமிதனைப் படைத்து நின்றார்
நேரான சத்திதனைக் கண்ணால் மேவி
நிஜமான சூரியனைப் படைத்து நின்றார்
பேரான சிவமதுவும் பதியாய் நின்ற
பெருமையுடன் எழுவரதி காரங் காணே
முந்தைய பாடலில் அகத்தியர் வானம் சதாசிவனாலும் காற்று மகேசுவரனாலும் தீ உருத்திரனாலும் ஏற்படுத்தப்பட்டன என்றார். இப்பாடலில் அவர், விஷ்ணு நீர்த்தத்துவத்தை உருவாக்கும் மேகத்தை ஏற்படுத்தினார் என்றும் பிரம்மா பூமி தத்துவத்தைப் படைத்தார் என்றும் கூறுகிறார். பரமசிவனார் இவையனைத்தையும் விஷ்ணுவைப் பார்த்து படைத்தார். அடுத்து அவர் சக்தியைப் பார்த்தார். அதனால் சூரியன் தோன்றியது. இவ்வாறு சூரியன் பரமசிவனால் நேரடியாகப் படைக்கப்பட்டது. இவ்வாறு பூதங்களையும் சூரியனையும் படைத்த பிறகு பரம சிவன் அவையனைத்தையும் தாங்குபவராக நின்றார்.
பரமசிவனை ஆகாசம் என்று சித்தர்கள் அழைக்கின்றனர். ஆகாசம் என்பது ஒளியும் வெளியும் கொண்டது. இவ்வாறு பரமசிவனார் வெளி ஒளியாக இருக்கிறார். ஆகாயம் அனைத்துக்கும் இடமளிப்பதாக அனைத்தையும் தாங்குவதாக உள்ளது. பரமசிவனும் அனைத்தையும் தன்னில் தாங்குகிறார்.
இதனை அடுத்து அகத்தியர் ஏழு தேவதைகளின் அதிகாரத்தையும் விளக்கப்போகிறார்.
----------------------------------------------------------------------------
126. Aditya and seven worlds
Verse 126
காணவே அண்டரவி யதுதான் மைந்தா
காசினியில் அன்புடையோர் அநேகஞ்சொல்வார்
தோணவே கண்டபடி அண்டந்தன்னில்
தொகுத்துரைக்க மாட்டார்கள் சுணங்கச்சாதி
பேணவே அண்டமதில் மனுவுண்டாக்கும்
பெருமைதனைக் குருவருளால் பேசுவேன் கேள்
பூணவே மேலேழு லோகந் தன்னை
புத்தியுடன் விதம்விதமாய்ப் படைத்தார் கேளே
முந்தைய பாடலின் தொடர்ச்சியாக அகத்தியர் இறைவனே சூரியனைப் படைத்தான், அந்த சூரியனைத்தான் நாம் அண்ட ஆதித்தனாகக் காண்கிறோம் என்கிறார் இப்பாடலில். அன்புடைய உயராத்மாக்கள் இதை விரிவாக விளக்குவார்கள் ஆனால் அவர்களும் அந்த சூரியன் எவ்வெவ் வகையில் இங்கு காணப்படுகிறான் என்பதைக் கூறமாட்டார்கள் என்கிறார் அவர். இப்பாடல் திருமூலரின் திருமந்திரம் தந்திரம் ஏழு பகுதி இருபத்திரண்டில் விளக்கப்பட்டுள்ள அண்ட ஆதித்தனைக் குறிக்கும். இந்த ஆதித்தன் இறைவனே என்று பல பாடல்களில் விளக்கிய பிறகு அது உண்மையில் குண்டலினி யோகத்தில் எழும் விழிப்புணர்வு என்று கூறுகிறார் திருமூலர். அந்த ஆதித்தன் நீருக்கும் நெருப்புக்கும் இடைப்பட்ட இடத்தில் தோன்றுகிறது என்று அவர் கூறுவது இந்த கருத்துக்கு வலு சேர்க்கிறது.
ஏழு உலகங்களும் புத்தியினால் படைக்கப்பட்டன என்று கூறுகிறார் அகத்தியர். இந்த உலகங்கள் பூ, புவர், சுவர், மகர், தப, ஜன மற்றும் சத்தியம் என்கின்றன புராணங்கள். இந்த உலகங்கள் உண்மையில் ஏழு உணர்வு நிலைகள். அவற்றை யோகத்தில் அனுபவிக்கலாம். இவை நமது உடலில் மூலாதாரத்திலிருந்து மேலே சஹஸ்ராரம் வரை பரவியுள்ளன.
----------------------------------------------------------------------------
127. Creation of manu or man
Verse 127
கேளப்பா லோகமதைப் படைத்த பின்பு
கிருபையுடன் பரமசிவன் மனுவுண்டாக்க
கேளப்பா சத்திதனை வரவழைத்துக்
கெணிதமுடன் மனுப்படைக்கக் கிருபை செய்தார்
கேளப்பா பராபரையாள் கிருபை பெற்றுக்
கெணிதமுடன் சதாசிவத்துக் குபதேசித்தான்
கேளப்பா சதாசிவனும் கிருபை பெற்றுக்
கெதியுடைய மயேஸ்பரருக்கு ஈந்தார் பாரே.
ஏழு உலகங்களையும் படைத்த பிறகு பரமசிவன் மனு எனப்படும் மனிதனைப் படைக்க விரும்பினார். அதற்காக அவர் சக்தியை அழைத்து பராபரையான அவளுக்கு உபதேசம் செய்தார். சிவனின் கிருபையைப் பெற்ற சக்தியும் சதாசிவனுக்கு உபதேசம் செய்தாள். சதாசிவன் மகேஸ்வரனுக்கு உபதேசம் செய்தார். இவ்வாறு ஏழு உலகங்களைப் படைப்பது என்பது மூலாதாரத்திலிருந்து, கீழிருந்து, மேலே செல்வதாக இருக்க மனிதனை, அளவுக்குட்பட்ட உணர்வைப் படைப்பது என்பது மேலிருந்து கீழிறங்குவதாக, சிவனிலிருந்து மகேச்வர நிலைக்கு வருவதாக உள்ளது.
--------------------------------------------------------------------------------
128. Creation of humans
Verse 128
பாரான மயேசுரந்தான் ருத்திரருக்கீந்தார்
பதிவான ருத்திரனும் மாலுக்கீந்தார்
நேரான மாலதுவும் அயனுக்கீந்தார்
நிசமான அயனாரும் நிலையைப் பெற்று
பேரான கருணையினால் தனுப்படைக்கப்
பெருமையுடன் ஆதியந்தம் நடுவில் நின்று
மாறாத காலறிந்து மவுனங்கொண்டு
மனுப்படைக்க நினைத்து நின்றார் அயனார் தானே
படைப்பு வரிசையை இப்பாடலில் தொடரும் அகத்தியர் சிவனிலிருந்து தொடங்கிய இந்த வரிசை பிரம்மனில் முடிந்தது என்கிறார். பிரம்மன் உடலைப் படைக்க அதன் நடுவில் ஆதி அந்தம் எனப்படும் இறைமை நின்றது என்கிறார் அவர். அதில் நடு என்பது உடலின் நடுவாகக் கருதப்படும் இதயம் அல்லது நடு நாடியான சுழுமுனை நாடியாக இருக்கலாம்.
-----------------------------------------------------------------------------
129. Siva, Sakthi and pancha kartha
Verse 129
அயன் முதற்கொண்டு ஐவருடல் உயிருஞ் சத்தி
ஆதியந்த சிவனாரும் உயிருக்குயிராய் நின்று
தயவுபெற வெடுத்துவுயிர் ஆண்பெண் கோடிச்
சங்கையில்லா மூப்பிளமை சாக்காடன்றி
ஐயம்பெறவே வொருகோடி காலம் வாழ்ந்து
தீர்க்கமுடன் இருக்கையிலே மைந்தாகேளு
நயம்பெறவே சிவனுமையை நோக்கி மைந்தா
நமை வணங்க அனுக்கிரகஞ் செய் என்றாரே
படைப்பு எவ்வாறு சிவனிலிருந்து பிரம்மாவரை ஏற்பட்டது என்று கூறிய அகத்தியர் இப்பாடலில் உடல் என்பது சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன், விஷ்ணு, பிரம்மா என்ற ஐந்து தெய்வங்கள் என்றும் உயிர் சக்தி என்றும் அந்த உயிருக்கு உயிராக இருப்பது சிவன் என்றும் கூறி முடிக்கிறார். இவ்வாறு உடலும் உயிருமான வஸ்து பல கோடி ஆண்டுகள் இருந்தது என்றும் அப்போது சிவன் சக்தியிடம் நமை வணங்க அனுகிரகம் செய் என்று கூறினார் என்றும் இப்பாடலில் சொல்கிறார் அகத்தியர்.
பஞ்ச கர்த்தாக்கள் எனப்படும் சதாசிவன், மகேஸ்வரன் ஆகியோர் பல்வேறு தத்துவங்களைக் குறிக்கின்றனர். பூதங்களில் சதாசிவன்- ஆகாயம், மகேஸ்வரன்-வாயு, ருத்திரன்-தீ, விஷ்ணு- நீர், பிரம்மன்- பூமி தத்துவங்களைக் குறிக்கின்றனர். உணர்வு நிலைகளின் சதாசிவன்- துரியாதீதம், மகேஸ்வரன்-துரியம், ருத்திரன்-ஆழ் உறக்கம், விஷ்ணு- கனவுநிலை, பிரம்மன்- விழிப்புநிலை ஆகியவற்றைக் குறிக்கின்றனர். இந்த ஐந்து தெய்வங்களும்பஞ்சாட்சர மந்திரத்தில் ந- பிரம்மன், ம-விஷ்ணு, சி-ருத்திரன், வா- மகேஸ்வரன், ய- சதாசிவன் என்பதாக விளங்குகின்றனர். இந்த அட்சரங்கள் நமது உடலில் ந-இரு கால்கள், ம-வயிறு, சி-இரு தோள்கள், வா- வாய் மற்றும் ய- கண்கள் என்று விளங்குகின்றன. இவ்வாறு இந்த ஐந்து தெய்வங்களும் நமது உடலாக இருக்கின்றனர்.
இப்பாடலின் கடைசி வரி ஒரு புதிராக உள்ளது. பஞ்ச கர்த்தாக்கள் உடலாகவும் சக்தி உயிராகவும் சிவன் உயிருக்கு உயிராகவும் இவ்வாறு பல கோடி காலங்கள் இருந்தனர் என்றும் அப்போது சிவன் “நமை வணங்க அனுகிரகம் செய்” என்று கூறினார் என்றும் அகத்தியர் சொல்கிறார். “நமை” என்ற சொல் நம்மை அதாவது சிவனை அல்லது சிவ சக்தியை வணங்க அருள் செய் என்று கூறுவதாகவும் நம எனப்படும் மாயையை போற்றச் செய் என்று கூறுவதாகவும் பொருள் கொள்ளலாம். நமசிவாய மந்திரத்தில் நம என்பது மாயையையும் சி என்பது சிவனையும் ய என்பது சக்தியையும் வ என்பது ஜீவனையும் குறிக்கின்றன. மாயையை வழிபடுவது என்பது அதனை செயலாற்ற அனுமதிப்பது. அதாவது சக்தி அசுத்த மாயையை செயல்படச் செய்து உலகை இயங்கச் செய்யவேண்டும் என்று சிவன் கூறுகிறார்.
-------------------------------------------------------------------------------
130. Emergence of crops in this world
Verse 130
செய்யென்ற சொன்ன மொழி உமையுங் கேட்டுச்
சிந்தைமன தொன்றாகச் சிவனை நோக்கி
மெய்யென்ற வித்துவதைத் தானுண்டாக்கி
மேதினியில் உயிர் பயிர்கள் மேன்மையாக
மையென்ற திருமால்தான் மேகந்தன்னை
மார்க்கமுடன் நினைக்கையிலே மைந்தாகேளு
பையென்ற முகிலதனால் அமுர்தமுண்டாய்ப்
பார்தனிலே சகலவித்துப் பதிவதாச்சே
இப்பாடலில் அகத்தியர் இவ்வுலகில் பயிர்கள் எவ்வாறு தோன்றின என்று கூறுகிறார். “நமை வணங்க அனுகிரகம் செய்” என்று சிவன் கூறியவுடன் சக்தி உயிர்களுக்கு உணவளிக்கும் பயிர்களைத் தோற்றுவிக்க வித்து அல்லது விதைகளை தோற்றுவித்தாள். இந்த விதைகளுக்கு திருமால் மேகங்களின் மூலம் நீர்வார்த்தார். அவை பயிர்களாக உலகில் தோன்றின என்கிறார் அகத்தியர்.
உலகில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்று கூறும்போது உயிர்கள் வெளியில், ஆகாயத்தில் இருக்கின்றன என்றும் அவை மழை நீருடன் உலகுள் வந்து பயிர்களுள் நுழைகின்றன என்றும் அந்த பயிர்களை உண்ணும் ஆணுக்குள் அவை விந்துவாக உருவாகின்றன, அந்த விந்து ஒரு பெண்ணுடன் சேரும்போது ஒரு உயிராக வடிவெடுக்கிறது என்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. இந்த முறையில் இப்பாடல் உலகில் உயிர்கள் எவ்வாறு உருபெற்றன என்று கூறுவதாகவும் பொருள் கூறலாம்.
வித்து என்பது மூலம். ஒரு உடலில் இந்த வித்து மூலாதாரத்தில் உள்ளது. அது நீர் தத்துவத்தின் இருப்பிடமான சுவாதிஷ்டான சக்கரத்தின் மூலம் தனது கர்மங்களுக்கு ஏற்ப ஒரு உயிராக உலகில் தோன்றுகிறது என்று யோக நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு இப்பாடல் செயலற்ற நிலையில் இருந்த உடல் உயிர் தொகுதி எவ்வாறு இவ்வுலகில் உலவ ஆரம்பித்தது என்று கூறுவதாகவும் பொருள்கொள்ளலாம்.
-------------------------------------------------------------------------------
131. The world with duality emerged
Verse 131
ஆச்சப்பா சென்னால் பதினெட்டு வித்து
அப்போதே உண்டாச்சு அதின் மேல் மைந்தா
நீச்சப்பா அன்னம் அரு சுவையைக் கண்டு
நிசமான மனு நீதி நேர்மையாக
பேச்சப்பா சகல சித்துந் தானுண்டாச்சுப்
பெருகுகின்ற ஆசைவெகு நேசமாச்சு
மூச்சப்பா வாசியது முன்பின்னாச்சு
முழங்கி நின்ற ஜகமதுவுங் கலக்கமாச்சே
இப்பாடலில் அகத்தியர் சில முக்கியமான விஷயங்களைக் கூறுகிறார். முதல் வரியில் அவர் பதினெட்டு வித்துக்கள் தோன்றின என்கிறார். பதினெட்டு என்ற எண் சித்தமார்க்கத்தில் பல முக்கியமான தத்துவங்களைக் குறிக்கிறது. கட்டுப்பட்ட நிலையிலிருந்து எல்லையில்லா நிலையை அடைய பதினெட்டு படிகள் சித்த மார்க்கத்தில் உள்ளன. இத்தோடு தொடர்புடைய ரசவாதத்தில் பாதரசம் பதினெட்டு படிகளில் சக்தியூட்டப்பட்டு விசேஷ சக்திகளைப் பெறுகிறது. ஆறு சுவைகள் என்பது சுவாதிஷ்டான சக்கரத்துடன் தொடர்புடையது.
அகத்தியர் இப்பாடலில் நிசமான மனு நீதி என்று கூறுகிறார். உலகில் மனுநீதி என்று பரப்பப்பட்டு வரும் பிரிவினைகளைக் ஏற்படுத்தும் நீதி கோட்பாடுகளை சித்தர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மனுநீதியை எரிக்க வேண்டும் என்று பல சித்தர்கள் பாடியுள்ளனர். இதனால் இங்கு அகத்தியர் குறிப்பிடுவது மனு எனப்படும் மானுடர் கடைப்பிடிக்க வேண்டிய உண்மையான தர்மத்தைத்தான் என்பது புரிகிறது. ஆசை நேசமாச்சு என்பது பாசம் தோன்றியதையும் பிராணன் முன்பின்னாச்சு என்பது கும்பக நிலை விலகி உள்சுவாசம் வெளிசுவாசமானதையும் குறிப்பிடுகின்றன. இவ்வாறு உலகம் “கலங்கியது” அதாவது தெளிவாக இருந்தது இருதுருவங்களான நன்மை, தீமை, இன்பம் துன்பம் என்று மாறியது என்கிறார் அகத்தியர்.
----------------------------------------------------------------------------
132. Division of people into four classes
Verse 132
கலங்கிநின்ற லோகமதுக் குறுதியாகக்
கருணையுள்ள விஷ்ணு முனிக் கருத்தை வைத்து
இலங்கி நின்ற எட்டிரண்டும் ஒன்றாய்க் கட்டி
ஏகமென்ற வைந்தெழுத்தால் வேதமாக்கித்
துலங்கிநின்ற மனுவை ஒரு நான்கு ஜாதிச்
சுத்தமுடன் தான் வகுத்துச் சுகமாய் மைந்தா
விளங்கிநின்ற க்ஷத்திரிய வங்கிஷத்தில்
விபரமுள்ள நாகமுனி விபரங் கேளே
இப்பாடலில் அகத்தியர் ஒரு முக்கியமான கருத்தைக் கூறுகிறார். இரு துருவங்களான தன்மை தோன்றிய பிறகு உலகு கலங்கி நின்றது என்றும் அதைக் கண்ட விஷ்ணு முனி கருணை கொண்டு எட்டு இரண்டு எனப்படும் அகார உகாரங்களை ஒன்றாகக் கட்டி ஏகம் எனப்படும் ஒருமை நிலையை ஏற்படுத்தி அந்த நிலையை ஐந்தெழுத்தால் வேதமாக்கினார் என்கிறார் அகத்தியர். இதனால் ஐந்தெழுத்து மந்திரமான நமசிவய மந்திரம் ஏகாந்த நிலையை, அகார உகாரங்கள் சேர்ந்த ஒருமை நிலையை விளக்குவதற்காகத் தோன்றியது என்பது புரிகிறது. இவ்வாறு வேதத்தைத் தோற்றுவித்த பிறகு விஷ்ணு முனி மக்களை நான்கு ஜாதிகளாகப் பிரித்தார் என்கிறார் அகத்தியர். அகார உகாரங்களை ஒன்றாகக் கட்டுவது என்பது செயல்புரியும் நிலை செயலற்ற நிலை என்ற இரண்டையும் ஒன்று சேர்ப்பது. இவ்வாறு செய்த பிறகு மக்களை ஜாதிகளாகப் பிரித்தார் என்பதனால் சாதிகள் செயல்கள், செயலின்மை ஆகியவற்றின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டன என்பதும் ஒருவரது சாதி அவர் பிறந்த குடியினால் ஏற்படுவது அல்ல, அவர் செய்யும் செயல்களினாலும் செய்யாத செயல்களினாலும் இருப்பது என்பது புரிகிறது. இதனைக் கூறிய பிறகு அகத்தியர் சத்திரிய ஜாதியில் தோன்றிய நாகமுனி என்பவரையும் அவரது செயல்களையும் கூறப் புகுகிறார்.
-----------------------------------------------------------------------------
133. Nagamuni, Rajamuni
Verse 133
கேளடா நாகமுனி உலகுக்கையா
கிருபையுடன் பாஷை பதினெட்டுஞ் சொன்னார்
வாளடா ராஜமுனி தர்க்க சாஸ்திரம்
மகத்தான வேதாந்த சிப்பி சாஸ்திரங்
காலடா தானறிய மதன சாஸ்திரங்
கலந்த மனு மோகமதால் நன்மை துன்மை
பாளடா அறுசுவையும் அமிர்தங் காட்டி
வங்கமுடன் அன்னமதாற் சார்ந்தார் தானே
விஷ்ணு முனியை அடுத்து மற்றொரு முனியான நாகமுனி உலகுக்கு பதினெட்டு மொழிகளைக் கொடுத்தார் என்று கூறும் அகத்தியர் ராஜமுனி உலகுக்கு தர்க்க சாத்திரம், சிப்பி சாத்திரம் (அல்லது சில்பி சாத்திரமோ?), மூச்சு சாத்திரம், மதன சாத்திரம் ஆகியவற்றைக் கொடுத்தார் என்கிறார். நாக முனி சத்திரிய ஜாதியில் தோன்றியவர் என்று அகத்தியர் கூறியதால் ராஜ முனி என்பதும் நாகமுனியைக் குறிக்கிறதோ என்று தோன்றுகிறது. இவ்வாறு மனு எனப்படும் ஆத்மா அன்னம் எனப்படும் உணவைச் சார்ந்து நன்மை, தீமை, அறுசுவை என்பவற்றை வங்கம் அல்லது கப்பல் எனப்படும் உடலுடன் அனுபவிக்கலானார் என்று இப்பாடலை முடிக்கிறார் அகத்தியர்.
--------------------------------------------------------------------------
134. Food is the basis for everything
Verse 134
தானென்ற அன்னமதால் நித்திரையுண்டாய்ச்
சங்கையுடன் அனுபோகமூப்பிளமையுண்டாய்
வானென்ற வேகமுடன் ஆசையுண்டாய்
வஞ்சகமும் பிறப்பிறப்புத் தானும் உண்டாய்
தேனென்ற பல கோவில் நதிகளுண்டாய்ச்
செகராச மகுடபதி வர்க்க முண்டாய்க்
கோனென்ற வொப்பனைகள் நன்றாய்ச் செய்து
குறிப்புடனே நாள் முகூர்த்தஞ் செய்தார் பாரே
அன்னத்தினால் எல்லா இருமைகளும் தோன்றின என்கிறார் அகத்தியர். உணவினால் தூக்கம், இன்பம், பிறப்பு இறப்பு, பழக்கவழக்கங்கள் ஆகியவை தோன்றின என்கிறார் அவர். நதிகள், கோயில்கள், சாதிகள், நல்ல நேரம் ஆகியவற்றையும் மக்கள் ஏற்படுத்தினார்கள் என்கிறார் அகத்தியர்.
----------------------------------------------------------------------------
135. Vishnu muni granted boon
Verse 135
பாரான மறையோர்கள் வேள்வி செய்யப்
பதிவான விஷ்ணுமுனி தோன்றிச்
சீராக வரங்கேளுமென்று சொன்னார்
ஜெகத்திலறு சுருதி மறையாகவேதான்
நேராக நாள் முகூர்த்தம் நன்றாய்ச்சொல்ல
நீதியுடன் எந்தன்சொல் மேலதாகப்
பேராக அந்தரத்தில் ஆருங்காணாப்
பெருமையுள்ள சோதிதனைப் பேசுங் காணே
வேதியர்கள் வேள்வி செய்ய அங்கு விஷ்ணு முனி தோன்றி அவர்களிடம் வேண்டிய வரங்களைக் கேளுங்கள் என்றார் என்கிறார் அகத்தியர். இங்கு மறையோர் என்றது யோகிகளையும் அவர்கள் செய்யும் யோகம் குண்டலினி யோகம் என்றும் பொருள் கொள்ளலாம். இந்த வேள்வியினால் பல சித்திகளும் உணர்வு நிலைகளும் தோன்றுகின்றன. அவற்றையே வரங்கள் என்று அகத்தியர் கூறுகிறார் போலும். இந்த வேள்வியினால் யாரும் காணாத சோதி பேசுவதைக் காணலாம் என்கிறார் அவர். இந்த சோதி பரஞ்சோதியாகும் ஆத்ம சோதியே.
136. Creation of astronomical elements
Verse 136
காணவே விஷ்ணுமுனி பிரம்மனைத்தான்
கருதலையன் வந்துதித்தங் கேது சொல்வார்
பூணவே யசுபதியோ டிருபத்தேழும்
பொருந்துநவக் கிரகமது தானுண்டாக்கத்
தோணவே விளம்பின பின் மாது தானுஞ்
சொரூபமுள்ள சதாசிவ மயேசுரன்தானும்
பேணவே ருத்திரனு மாலுந்தானும்
பெருமையுடன் பரனினைக்க வந்தார் தானே
இப்பாடலில் அகத்தியர் கிரகங்களும் நட்சத்திரங்களும் எவ்வாறு தோன்றின என்று கூறுகிறார். பரிணாம விரிவின் அடுத்த நிலை இது. உடல் உயிர் கூட்டுப்பொருள் உருவான பிறகு அதில் உணர்வு வந்து குடிகொண்டது. அத்தகைய வஸ்து பலவித அனுபவங்களைப் பெறுவதற்கு காரணமாக இருப்பவை நட்சத்திரங்களும் கிரகங்களும்.
நமது முன்னோர்கள் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்றனர். அதாவது வானில் உள்ள நட்சத்திரங்களுடனும் கிரகங்களுடனும் தொடர்புடைய பகுதிகள் நமது உடலிலும் உள்ளன. அதனால் இந்த படைப்பு அண்டத்திலும் பிண்டத்திலும் ஏற்பட்டது என்று பொருள்.
இந்த படைப்பிற்குக் காரணமாக இருப்பவர்கள் சக்தி, சதாசிவன், மகேசுவரன், ருத்திரன், விஷ்ணு,பிரம்மன் ஆகியோர் என்கிறார் அகத்தியர். ஆனால் இதற்கு மூல காரணமாக இருபவர்கள் விஷ்ணுவும் பிரம்மாவும் அதாவது மூலாதாரமும் சுவாதிஷ்டானமும்.
கிரகங்களுக்கும் நமது சக்கரங்களுக்கும் உள்ள தொடர்ப்பை பின் வரும் பாடல்களில் காண்போம்.
----------------------------------------------------------------------------
137. Planets
Verse 137
தானென்ற மாதுமைக்கிப் பிரமன் சொல்லச்
சந்திரனுஞ் சூரியனுந் தானேயானாள்
பானென்ற சதாசிவந் தான் ராஜாவானார்
மகத்தான மயேசுரனுஞ் சனியுமானார்
ஊனென்ற ருத்திரனுஞ்சங்கரனுமானார்
உண்மையுள்ள மாலதுவும் புதனுமானார்
மாலென்ற அயன் சுக்கிர வடிவுமானார்
மகத்தான ராகுவுடன் கேது தானே
அகத்தியர் எந்தெந்த தெய்வங்கள் எந்தெந்த கிரகங்களாயினர் என்று இப்பாடலில் கூறுகிறார். புதன்- விஷ்ணு, சுக்கிரன்-பிரம்மா, குசன்- சதாசிவன்? குரு- ருத்திரன், சனி- மகேஸ்வரன், சந்திர சூரியர்கள்-உமை, ராகு கேது- விஷ்ணு (அடுத்த பாடலில்)
அவர் ருத்திரன் சங்கரனானார் என்று கூறும்போது அவர் குரு என்ற கிரகம் என்பதற்கு அவ்வாறு குறிப்பிடுகிறாரா சதாசிவன் ராஜனானார் என்னும்போது குஜனைக் குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை. இப்பாடல் குறிப்பிடும் அதிதேவதைகள் தந்திரம் கூறும் தேவதைப் பட்டியலினும் வித்தியாசமானதாக உள்ளது. டேவிட் பிரௌலி என்பவர் கிரகங்களுக்கும் சக்கரங்களுக்கும் ராசிகளுக்கும் உள்ள தொடர்ப்பைக் குறிக்க கீழ்க்கண்ட பட்டியலைத் தருகிறார்.
சக்கரம்-கிரகம்-உள்மூச்சு-வெளிமூச்சு
மூலாதாரம்-சனி-கும்பம்-மகரம்
சுவாதிஷ்டானம்-குரு-மீனம்-தனுசு
மணிபூரகம்-செவ்வாய்-மேஷம்-விருச்சிகம்
அனாஹதம்-சுக்கிரன்-ரிஷபம்-துலாம்
விசுத்தி-புதன்-மிதுனம்-கன்னி
ஆக்ஞை-சந்திர/சூரியன்-கர்க்கடம்-சிம்மம்
சஹஸ்ராரம்-இந்த வரைமுறையைக் கடந்தது.
----------------------------------------------------------------------------
138. Rahu and ketu
Verse 138
காணவே விஷ்ணுவைத்தான் உமையும் பார்க்கக்
கருவான ராகுடனே கேதுமானார்
தோணவே சோதி ரிஷி நாளுமுண்டாந்
துலங்குகின்ற அமாவாசை திதிநாள் கரணம்
பேணவே நவசித்தாற் கிரகமாகி
பேருலகில் நிறைந்தபின்பு பிழைப்பதற்குப்
பூணவே நக்ஷத்திர ராசியோகம்
பொன்னுலகுண்டானதின்பின் உண்டாம்பாரே
வெறும் சடங்குகளைச் சாடுபவராயினும் சித்தர்கள், நாள், திதி, நட்சத்திரம் முதலியவற்றை ஏற்றுக்கொண்டனர், அவற்றைக் கருத்தில்கொண்டே பல கர்மங்களைச் செய்தனர் என்பது இப்பாடலின் மூலம் நமக்குத் தெரிகிறது. ஏனெனில் இந்த வானத்து வஸ்துக்களுக்கு இணைகள் நமது உடலில் உள்ளன. ராகு கேது என்பவை கிரகங்கள் அல்ல. அவை சந்திரனும் சூரியனும் அவற்றின் பாதையில் சந்திக்கும் புள்ளிகளைக் குறிக்கும். ராகு என்பது பாம்பின் தலையாகவும் கேது என்பது அப்பாம்பின் வாலாகவும் காட்டப்படுகின்றனர். கிரகணங்கள் இந்த புள்ளிகளில் இவையிரண்டும் இருக்கும்போது ஏற்படுவதால் சந்திரனைப் பாம்பு விழுங்கிவிட்டது என்று கிரகணங்களின் விளக்கமாகக் கூறப்படுகிறது.
-----------------------------------------------------------------------------
139. Conclusion and yuga
Verse 139
பாரான பார்தனிலே மனுவுண்டாக்கிப்
பதிவாக வந்தபின்பு அனேக சாஸ்திரம்
நேரான சாஸ்திரங்கள் சூத்திரங்கள்
நேர்மையுள்ள ரிஷி முனிவர் சித்தரெல்லாம்
மேரான கிரிதனிலே தபசு பண்ணி
வெகுகோடி காலம்வரை யோகஞ் செய்து
பேரான வெளியோடு வெளியாச் சேர்ந்தார்
பலமான காலயுகம் பேசக்கேளே
படைப்பைப் பற்றிய தனது விளக்கங்களை அகத்தியர் மனுவைப் படைத்த பிறகு சாத்திரங்கள், சூத்திரங்கள் ஆகியவை படைக்கப்பட்டன என்று கூறி முடிக்கிறார். அவ்வாறு படைத்த பிறகு ரிஷி, முனி, சித்தர்கள் ஆகியோர் மேரு கிரி எனப்படும் உணர்வின் உச்சத்தில் பல கோடி யுகங்கள் யோகம் புரிந்து தாமே வெளியாகி வெளியுடன் கலந்தனர் என்கிறார் அவர். இதனால் உச்ச நிலை என்பது வெளியாவது வெளியுடன் கலப்பது என்பது நமக்குக் காட்டப்படுகிறது. சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்பவர்கள் கர்மத்தினால் தொடப்படாதவர்கள் என்பதும் புலப்படுகிறது. விஞ்ஞானகலர், பிரளயகலர், சகலர் என்று ஆத்மாக்கள் மூவகைப்படுவர். ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் விஞ்ஞானகலர் என்ற நிலையில் இருப்பவர்கள். இதனை அடுத்து அகத்தியர் யுகம் என்றால் என்ன என்று விளக்க ஆரம்பிக்கிறார்.
----------------------------------------------------------------------------
140. Description of the eons
Verse 140
கேளடா புலத்தியனே மைந்தா நீயும்
கெணிதமுள்ள யுகமதுதான் பதினெட்டப்பா
ஆளடா வரியினுகம் ஈரேழு கோடி
அற்புதனார் யுகமதுதான் ஈரைந்துகோடி
வாளடா தன்மயுகம் ஈராறு கோடி
மகத்தான ராசியுகம் ஈரெட்டு கோடி
காலடா யுகமெல்லாஞ் சொல்லி வாரேன்
கனமான வீராசன் நாலைந்து தானே
இப்பாடலிலிருந்து அகத்தியர் யுகங்களைப் பட்டியலிடுகிறார். வரியுகம் 14 கோடி வருடங்கள், அற்புதனார் யுகம் 10 கோடி வருடங்கள், தன்ம யுகம் 12 கோடி யுகம், ராசி யுகம் 16 கோடி வருடங்கள், வீராசன் யுகம் 20 கோடி வருடங்கள் என்கிறார் அவர்.
-----------------------------------------------------------------------------
141. List of eons continued..
Verse 141
தானென்ற விண்ணதனில் ஈரெட்டு கோடி
தருவான வாய் தனக்கு யுகம் ஏழு கோடி
மானென்ற மைனயுகம் இரு மூன்று கோடி
மகத்தான மணிகள் யுகம் இரு மூன்று கோடி
பானென்ற பணியிரதம் நான்கு கோடி
பதிவான விஸ்வாசண் யுகம் மூன்று கோடி
வானென்ற வாய்தன் யுகம் ஒரு கோடியாகும்
மார்க்கமுடன் திரேதா யுகந்தன்னைப் பாரே
யுகங்களின் பட்டியலை இப்பாடலிலும் தொர்டர்கிறார் அகத்தியர். இதனை ஒரு பட்டியலாக அடுத்த பாடலில் காண்போம்.
---------------------------------------------------------------------------
142. Summary of the eons
Verse 142
பாரடா திரேதாயுகம் அதனைக் கேளு
பதினேழுலக்ஷத்தொன்பதினாயிரமாம்
மேரடா கிரேதாயுகம் அதனைக் கேளு
விருபது லக்ஷத் தொன் பதினாயிரமாம்
தேரடா துவாபரயுகம் அதனைக் கேளு
தீர்க்கமுடன் ஒன்பது லக்ஷத்து ஒன்பதினாயிரமாம்
காரடா கலியுகம் வெகு கடினமைந்தா
கண்டுபார் நாலு லக்ஷத்து முப்பதினாயிரமாம்
அகத்தியர் இப்பாடலில் யுகங்களைப் பற்றிய விவரங்களை முடிக்கிறார். யுகங்கள் பதினெட்டு என்று கூறிய அகத்தியர் அவற்றின் பெயர்களையும் காலவிவரங்களையும் தருகிறார்.
அவை:
வரியின் யுகம்- 14 கோடி வருடங்கள்
அற்புதனார் யுகம்-10 கோடி வருடங்கள்
தன்ம யுகம்- 12 கோடி வருடங்கள்
ஜன்ய யுகம்-10 கோடி வருடங்கள்
வீரராசன் யுகம்- 20 கோடி வருடங்கள்
விண் யுகம்- 16 கோடி வருடங்கள்
வாயு யுகம்- 7 கோடி வருடங்கள்
மைன யுகம்- 6 கோடி வருடங்கள்
மணிகள் யுகம்- 6 கோடி வருடங்கள்
அத்தே யுகம்- 19 கோடி வருடங்கள்
பணியிரத யுகம்- 4 கோடி வருடங்கள்
விஸ்வாசன யுகம்- 3 கோடி வருடங்கள்
திரேதா யுகம்- 17, 09,000 வருடங்கள்
கிரேதா யுகம்- 9,10,000 வருடங்கள்
த்வாபர யுகம்- 9,09,000 வருடங்கள்
கலியுகம்- 1,30,000வருடங்கள்
இவற்றில் மிகக் கடினமானது கலியுகம் என்கிறார் அகத்தியர்.
---------------------------------------------------------------------------
143. A day, month and a year in the macro scale
Verse 143
ஆமப்பா இந்த யுகம் பதினெட்டு மைந்தா
அப்பனே கூடியொரு சதுர்யுகமாகுந்
தாமப்பா சதுர்யுகம் பதினெட்டு சென்றால்
தயவான இந்திரனுக்கு ஒரு நாளாகும்
ஓமப்பா அந்தநாள் ஆறைந்துகூடி
உத்தமனே சொல்லுகிறேன் ஒரு மாதமாகும்
போமப்பா அம்மாதம் பனிரெண்டுகூடி
புத்தியுடன் வருடமெனப் புகழ்ந்து காணே
பிரம்மாண்ட கணக்கில் ஒரு நாள், ஒரு மாதம் ஒரு வருடம் என்றால் எவ்வளவு காலம் என்று இப்பாடலில் அகத்தியர் குறிப்பிடுகிறார். மேற்கூறிய பதினெட்டு யுகங்களின் கால அளவைக் கூட்டினால் நூற்று இருப்பத்தேழு கோடி முப்பத்தைந்து லட்சம் இருபத்தெட்டாயிரம் ஆண்டுகள் வருகின்றன. இது இந்திரனின் ஒரு நாள் என்கிறார் அகத்தியர். இத்தைய நாட்கள் முப்பது சென்றால் ஒருமாதமாகும் என்றும் அத்தகைய மாதங்கள் பனிரெண்டு சென்றால் ஒரு வருடமாகும் என்றும் அகத்தியர் கூறுகிறார்.
------------------------------------------------------------------------------
144. Pralaya
Verse 144
காணப்பா அவ்வருஷம் அறுபதுதான் கூடிக்
கருவான ஆண்டுயுகம் என்பார் மேலோர்
பூணப்பா ஆண்டுயுகம் பதினெட்டு சென்றால்
பொங்குகடல் பிரளயமாய்க் கண்டு பாரு
வேளப்பா பிரளயமும் நூறாயிரமுமானால்
பெரிதான நாள்பெருக்கம் பேணிப்பாரே
தோணப்பா அப்பெருக்கு ஈரெட்டு சென்றால்
சுகமான இந்திரர்க்குப் பூரணமாம் பாரே
இப்பாடலில் அகத்தியர் இந்திரனின் வாழ்நாள் எவ்வளவு என்று கூறுகிறார். முந்தைய பாடலில் அவர் ஒரு வருடம் பிரம்மாண்ட அளவில் ஒருவருடம் என்பது 127, 35, 28, 000 வருடங்களைக் கொண்டது என்று கூறினார். அத்தகைய வருடங்கள் அறுபது கழிந்தால் அது ஒரு ஆண்டு யுகம் என்றும் பதினெட்டு ஆண்டு யுகங்கள் கழிந்தால் கடல் மேலெழுந்து பிரளயம் ஏற்படும் என்றும் அத்தகைய பிரளய ஆண்டு நூறாயிரம் கழிந்தால் ஒரு நாள் பெருக்கம் ஏற்படும் என்றும் அத்தகைய அறுபது தினங்கள் கழிந்தால் இந்திரனின் வாழ்வு பூர்த்தியடையும் என்றும் அகத்தியர் கூறுகிறார். இந்த கால அளவுகளை நம்மால் கற்பனைசெய்துகூட பார்க்க முடியவில்லை!
-------------------------------------------------------------------------------
145. Agora muni, Saradanadha muni, Vishnu muni
Verse 145
பாரடா சுகமாக வனந்த நாள் மைந்தா
பதிவாக ஏழாயிரங் கோடி மீண்டால்
நேரடா வகோரமுநிக்கிருவருமையா
நிசமாக அந்தநாள் எண்கோடி சென்றால்
சாரதா நாதமுனி பூரணமுமாவார்
சங்கையுடன் அந்த நாள் கோடிசென்றால்
பேரடா விஷ்ணுமுனி பரமபதமாவார்
பிலமான அந்த நாள் பதிங்கோடிதானே
இப்பாடலில் அகோரமுனி, சாரதா நாத முனி மற்றும் விஷ்ணு முனியின் ஆயுட்காலம் எவ்வளவு என்று அகத்தியர் கூறுகிறார். இந்த முனிவர்களை அகத்தியர் உலகம் தோன்றிய வரலாற்றை விளக்கிய முந்தைய பாடல்களில் குறிப்பிட்டதை இங்கே நினைவுகூறுவோமாக.
-------------------------------------------------------------------------------
146. Kasi muni, Isvara muni, Enkona muni
Verse 146
காணவே பதிங் கோடி செல்லும்போது
காசிமா முநியவருங் கயிலாசமாவார்
பூணவே அந்தநாள் எண்கோடி மீண்டால்
புகழான மாமுனிக்கி இடறேயாகுந்
தோணவே அந்தநாள் நவகோடி மீண்டால்
சுகமான ஈஸ்வரமுனியும் பிரம்மாவாவார்
பேணவே அந்தநாள் ஏழு கோடி சென்றால்
பிலமான எண்கோணமுனி தனக்குக் கேளே
இப்பாடலில் அகத்தியர் காசி முனி, புகழ் மாமுனி, ஈஸ்வர முனி, எண்கோண முனி என்பவர்களைக் குறிப்பிட்டு அவர்களது காலங்களைக் கூறுகிறார். நமது நூல்கள்
நமது நூல்கள் கால அளவுகளைக் குறிக்கும்போது மன்வந்தரம் கல்பம் என்ற அளவுகளைக் குறிப்பிட்டு ஒவ்வொரு மன்வந்திரத்துக்கும் ஒரு சப்த ரிஷி குழு பொறுப்பேற்கின்றனர் என்று கூறுகின்றன. கீழ்க்காணும் தளத்தில் இதைப் பற்றிய விவரங்களைக் காணலாம். https://en.wikipedia.org/wiki/Saptarishi
-----------------------------------------------------------------------------
147. Enkona muni, Agni muni and Parthumaa muni
Verse 147
கேளடா எண்கோண முனியுமைந்தா
கிருபையுடன் இமைதிறந் திடும்போதையா
சூளடா அவர்தானும் பூரணமே யாவார்
சுகமாக அந்தநாள் நவகோடி சென்றால்
ஆளடா அக்கினிமா முனிதான் மைந்தா
அரகரா பரமபத பாகஞ் சேர்வார்
பாளடா அந்தநாள் எண்கோடி மீண்டா
பார்த்துமா முநியவரும் பரமபதமாமே
இப்பாடலில் அகத்தியர் எண்கோண முனி, அக்னி முனி மற்றும் பார்த்துமா முனி என்பவர்களைப் பற்றிக் கூறுகிறார். பிற சித்தர் பாடல்களை ஆராய்ந்தால் இங்கு குறிப்பிட்டுள்ள முனிவர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்குமோ என்று தோன்றுகிறது
----------------------------------------------------------------------------
148. Roma rishi, Brahmamuni
Verse 148
ஆமப்பா அந்தநாள் பதின்கோடி மீண்டால்
அருமையுள்ள ரோமரிஷிக்கு ஒரு ரோமம் உதிரும்
தாமடா ரோமமது மூன்றரையாங்கோடி
சரியாக உதிரும்போ அவர் மரணமாவார்
நாமடா வந்தநாள் மூவிரட்டியானால்
நலமான பிரமமுனியவர்க்குப் பூசை வேளை
ஓமடா சிவபூசை எழுநூறு மீண்டால்
உள்ள முனி ரிஷிகளுக்கு ஒரு நாளுமாமே
இப்பாடல் அகத்தியர் நம்மில் பெரும்பாலோர் அறிந்த ரோமரிஷியைப் பற்றிப் பேசுகிறார். முன் பாடலில் கூறிய நாளில் பத்து கோடி கழிந்தால் ரோமரிஷிக்கு ஒரு முடி உதிரும் என்றும் அவரது மூன்றரைக் கோடி முடிகள் உதிரும்போது அவர் இறப்பார் என்றும் அகத்தியர் கூறுகிறார். இவரை அடுத்து பிரம்ம முனி என்பவரைப் பற்றியும் அகத்தியர் கூறுகிறார்.
உயிர்கள் அவற்றின் மலத்தின் எண்ணிக்கையைப் பொருத்து விஞ்ஞான கலர், பிரளயகலர் சகலர் என்று மூவகைப்படுவர். நாம் அனைவரும் சகலர்கள். நமது கால அளவு நாம் அறிந்த வினாடி, மணி, நாள் என்று போகிறது. பிரளயகலர்கள் என்பவர்கள் பிரளயகாலம் வரை இருப்பவர்கள். இவர்களது கால அளவுகளை நாம் முந்தைய பாடல்களில் பார்த்தோம். இப்பாடலில் குறிப்பிடப்படுபவர்கள் விஞ்ஞானகலர்கள். அவர்கள் மேற்கூறிய இரு வகையினரையும்விட அதிக நாட்கள் இருப்பவர்களானாலும் முடிவில் இறப்பைச் சந்திப்பவர்கள்தான். அதையே இப்பாடல் காட்டுகிறது.
------------------------------------------------------------------------------
149. Maal and Vishnu, varusham and aandu
Verse 149
அந்தநாள் ஏழாயிரம் கோடிமீண்டால்
ஆனதொரு ரிஷி முனிவர் பிறந்திடுவாரப்பா
இந்தநாள் பதினாயிரங்கோடி மீண்டால்
இதமான மால்தனக்கு ஒருநாள் ஆகும்
பந்தமுடன் கொண்டநாள் முப்பத்தொருமாதம்
பதிவான மாதமீராறு ஒரு வருஷம்
சொந்தமுடன் வருஷமது அறுபதுமேயானால்
சுகமாகக் கண்டு கொள்ள ஆண்டுகளுமாமே
எப்போது ரிஷிமுனிவர் பிறக்கிறார் என்றும் மாலுக்கு ஒரு நாள் என்பது என்றும் இப்பாடலில் அகத்தியர் குறிப்பிடுகிறார். மேலும், அகத்தியரின் கால அளவில் மால் என்பவர் விஷ்ணுவைவிட அதிக நாள் இருப்பவர் என்பது போல் தோன்றுகிறது. இவ்விரு பெயர்களும் ஒருவரையே குறிப்பிடப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல் வருடம் என்பதும் ஆண்டு என்பது இருவேறு கால அளவுகளைப் போலத் தோன்றுகிறது. ஆண்டு என்பது வருடம் என்பதைவிட நீண்டதாகத் தோன்றுகிறது.
----------------------------------------------------------------------------
150. Pralaya
Verse 150
ஆண்டுகளும் ஈரொன்ப தாகில் மைந்தா
ஆனசலப் பிரளயம் எழுநூறு கண்டாய்
காண்ட சலப் பிரளயமும் எழுநூறு மீண்டால்
கலங்குமா பிரளயமாம் நூறுதான் மீண்டால்
தோண்டுமொரு பூத சங்காரமெனலாகுஞ்
சுகபூத சங்கார மொரு கோடி மீண்டால்
தாண்டிவரும்போது வந்த சங்காரந்தான்
தருவான சங்காரமொரு மூன்றுமாமே
இப்பாடல் ஜலப்பிரளயம் அல்லது நீரினால் உலகம் லயமடைவதைப் பற்றிப் பேசுகிறது. இத்தகைய பிரளயங்கள் பல ஏற்படுகின்றன என்று அகத்தியர் இங்கு குறிப்பிடுகிறார். இந்தப் பிரளயங்களின் முடிவில் பூத சம்காரம் ஏற்படுகிறது என்றும் அவர் கூறுகிறார். ஐம்பூதங்களின் தோற்றம் மூலப்பிரகிருதியிலிருந்து தோன்றுகிறது. அதனால் அவற்றின் லயம் அல்லது சம்காரம் என்பது அவை மீண்டும் மூலப்பிரகிருதியை அடைவதைக் குறிக்கிறது.
சம்காரம் தத்துவம் என்றால் என்ன என்று பார்த்தோமானால் அது ஒன்றின் முடிவின் அல்லது மற்றதன் துவக்கம் என்று தெரிகிறது. ஒவ்வொரு நொடியும் தான் முடிந்து அடுத்த நொடி தோன்றுவதற்கு இடம் கொடுப்பதனால் சம்காரம் என்பது நொடிக்கு நொடி ஏற்படுகிறது. அதேபோல் ஒரு மூச்சு முடிந்து அடுத்த மூச்சு தொடங்குவதற்கு முன் இடைப்பட்ட சமயம் என்பதும் சம்காரத்தைக் குறிக்கிறது. இதையே சித்தர்கள் கும்பகம் அல்லது மூச்சற்ற நிலை என்கின்றனர். அவர்கள் இதை அந்தி சந்தி என்றும் கூறுகின்றனர். சந்தியாவந்தனம் அல்லது பகலும் இரவும் சேரும் அந்திப்பொழுதில் செய்யப்படும் வழிபாட்டை நாம் அனைவரும் அறிவோம்.
அகத்தியர்அறிவுரை!
-------------------------------
"பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம்
உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி
உனக்கேதடா. பாவத்தை செய்தவன்
சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே.
அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி
தண்டனை தருவார் என்பது யாருக்கும்
தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான்
இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு
நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான்
என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக்
கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம்
இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த
நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று
பொருள். இந்த கருத்தை மனதில்
வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும்
பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக
எளிதாக, மிக நீதியாக தோன்றும்."
!ஓம் அகத்திய குருவே போற்றி!
தொடரும் அகத்தியரை நோக்கிய இந்த உண்மை பயணம் ......
"அகத்தியர் சௌமிய சாகரம்"
Vadha saumyam 1200 {பாகம் -6}
------------------------------------------------------
{பல நண்பர்களின் வேண்டுதலுக்கு இணங்க அகத்தியர் பெருமானால் உலகுக்கு அருளப்பட்ட இது வரை ஓலை வடிவிலேயே விளங்கிய அரிய பொக்கிசமாகிய இந்த அகத்தியர் சௌமிய சாகரம் என்ற மிக பெரிய பொக்கிஷத்தை சித்தர்களின் குரல் வாயிலாக உலகம் அறிந்து பயன் பெற அகத்தியர் பெருமானின் பாதம் பணிந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்... நன்றி}
(151) திருமாலின் யோக நித்திரையின் ஆயுள் காலம்...
ஆமென்ற சங்காரமாகிவருங்காலமதில்
திருமாலயனும் ஆலிலைமேற் பள்ளி
ஓமென்ற சயனமது ஒரு கோடி மீண்டால்
உத்தமனே நாகமதில் நித்திரையுமாவார்
தானென்ற நித்திரை முத்திரை மேலாகி
தன்னொளிவு விண்ணொளிவு சரியாய்ப் பார்த்து
நாமென்றும் இவரென்றும் நினையாமல் அந்த
நாதாந்த பூரணத்தில் பூரணமானாரே
யோகநித்திரையைப் பற்றி இப்பாடலில் பேசுகிறார் அகத்தியர். திருமால் எனப்படும் விஷ்ணு சர்வ சம்காரத்தின் முடிவில் ஆலிலையில் துயில்வார் என்றும் இந்த யோக நித்திரை ஒரு கோடி ஆண்டுகள் நடந்த பின் அவர் நாகணை மேல் துயில்வார் என்றும் அதன் பிறகு அவர் தான் பிறர் என்ற பாகுபாடுகளற்ற ஒருமை நிலையை அடைவார் என்றும் கூறும் அகத்தியர் முடிவில் அவர் நாதாந்த பூரண நிலையுடன் கூடுவார் என்று கூறி விஷ்ணுவின் ஆயுள்காலம் எவ்வாறு முடிகிறது என்று விளக்குகிறார்.
152. Fate of Muni, rishi and devas
Verse 152
பூரணமாய் நின்றதொரு ரிஷிமுனிவர் தேவர்
பொருந்திநின்று வாதாரம் நன்றாய்ப் பார்த்து
காரணமாய்க் கருணையொளி பார்வையாலே
கணயோகமான சிவ நிஷ்டைகூடி
பாரணிந்த பூமிதனில் அனந்தங்கோடி
பத்தியுடன் தானிருந்து பரத்திற் செல்ல
நேரணிந்து நிலையறிந்து நிலையில் நின்று
நிசமான பூரணங்கண்டேறினாரே
முந்தைய பாடலில் அகத்தியர் விஷ்ணு எவ்வாறு பிரளயத்தின் முடிவில் லயமடைகிறார் என்று கூறினார். இவ்வாறு பிரளயத்தின் முடிவில் லயமடையும் ஆத்மாக்களை பிரளயகலர் என்பர். இவர்களைவிட உயர்த்த நிலையில் இருப்பவர்கள் விஞ்ஞானகலர். பிரளயகலரின் உச்ச நிலை நாதாந்த நிலை. விஞ்ஞானகலரின் உச்ச நிலை பர நிலை. ஆனால் நிலையை அவர்கள் உலகில் ஒரு வடிவெடுத்து வந்துதான் அடையமுடியும் ஏனெனில் இவ்வுலகமே கர்ம பூமி, செயல்புரியக்கூடிய இடம். இந்த விஞ்ஞானகலர்கள் யோகத்தின் மூலம் சிவ நிஷ்டை செய்து ஆதாரங்களின் உண்மை நிலையை அறிந்து பரநிலையை அடைகின்றனர், பூரணத்துடன் கூடுகின்றனர் என்கிறார் அகத்தியர்.
------------------------------------------------------------------------
153. Bhuta samharam in pinda
Verse 153
ஏறியே பூரணத்தில் செல்லும்போது
என்ன சொல்வேன் பிரிதிவியைப் பிரமனுக்குத்
தேறியே வாய்வுதனை மயேஸ்வரற்குத் தத்தஞ்
சிவ சிவா ஆகாசந் தன்னை மைந்தா
வாரியே அண்டமெல்லாந்தத்தஞ்செய்து
மைந்தனே சகலமுமே சொன்னேன் பாரு
கூறியே சதாசிவத்திற்குத் தத்தம் பண்ணி
கொண்ட பின்பு அறிவு பூரணத்தைக் கேளே
முந்தைய பாடலில் அகத்தியர் ரிஷி, முனிவர்கள் மற்றும் தேவர்கள் குண்டலினி யோகத்தின் மூலம் லயமடைகின்றனர் என்று கூறினார். அவர்கள் தமது உணர்வை ஒவ்வொரு சக்கரத்தின் ஊடேயும் ஏற்றும்போது அந்த சக்கரம் குறிக்கும் தத்துவத்தை அந்த சக்கரத்துக்கான அதிதேவதைக்குச் சமர்ப்பிக்கின்றனர். பூமி தத்துவம் பிரம்மனுக்கும் வாயு தத்துவம் மகேஸ்வரனுக்கும் ஆகாய தத்துவம் சதாசிவனுக்கும் தத்தம் செய்யப்பட்டன என்று கூறுவதன் மூலம் நீர்த்தத்துவம் விஷ்ணுவுக்கும் நெருப்புத் தத்துவம் ருத்திரனுக்கும் சமர்ப்பிக்கப்பட்டன என்று குறிப்பால் உணர்த்துகிறார் அகத்தியர். இவ்வாறு தான் பிண்டத்தில் பூதங்கள் சம்காரம் செய்யபடுகின்றன.
-----------------------------------------------------------------------------
154. Ravi was offered to surya and mathi to chandra..
Verse 154
கேளப்பா ரவிதனையே சூரியர்க்குத் தத்தங்
கிருபையுள்ள மதி தனியே சந்திரற்குத் தத்தம்
வாளப்பா சூடான சோதிதனை மைந்தா
மகத்தான செகச் சோதியிடமேசென்று
சூளப்பா எங்கும் நிரை பரத்தோடொப்பாய்த்
துலங்குதடா நட்சத்திரஞ் சோதிபோலே
காலப்பா தனையறிந்த பேருக்கெல்லாங்
கடாக்ஷமுடன் பராபரத்திற் கலந்தார்பாரே
ரவி என்பது பிராணன். இந்த பிராணன் பிங்கலை நாடியில் ஓடுகிறது. இதுவே சூரிய நாடி எனப்படுகிறது. அதேபோல் மதி என்பது சந்திரன், அது உள்மூச்சு, இடை நாடியில் ஓடுவது. இவ்வாறு மூச்சு ஓடுவதையே ரவியை சூரியனுக்கும் மதியைச் சந்திரனுக்கும் தத்தம் கொடுத்ததாக அகத்தியர் கூறுகிறார். அடுத்து கூறும் வெப்பம் அக்னியைக் குறிக்கும். இது சுழுமுனை நாடியில் பாயும் குண்டலினி அக்னியாகும். இந்த அக்னியின் சக்தியினால்தான் நாம் காணும் உலகம் அவ்வாறு தோன்றுகிறது. இவ்வாறு பிராணன் சரியான நாடியில் ஓடும்போது முடிவில் அந்த ஜீவன் பராபரத்துடன் கலக்கிறது. இதைத்தான் இப்பாடலின் கடைசிவரி கூறுகிறது.
-----------------------------------------------------------------------------
155. Emergence of Tattva and taatvika
Verse 155
பாரப்பா வுலகமெல்லாம் பரத்தினுட் கூத்து
பரிவான கூத்ததுவும் வாசி நேர்மை
நேரப்பா வாசியது வன்னியுடன் கூடி
நிசமான பூதவகை ஐந்துண்டாச்சு
பேரப்பா ஐந்துவகை ஐந்துண்டாச்சு
பெருகி நின்ற தத்துவங்கள் தொண்ணூற்றாறாய்
வீறாப்பா கொண்ட செடந்தான் தானாக
வேதாந்த முறைமை நெறி ஒன்று கேளே
உலகமனைத்தும் பரத்தினுள் அடக்கம் என்கிறார் அகத்தியர். அதன் இயக்கம் வாசி அல்லது உயிர்சக்தி என்கிறார். முந்தைய பாடலில் குறிப்பிட்ட பராபரம் வெளிப்பாட்டுக்கு முற்பட்ட இறைமையின் நிலை. பரம் என்பது வெளிப்பாட்டுக்கு முற்பட்ட நிலை. வாசியும் அக்னி எனப்படும் குண்டலினி சக்தியும் கூடுவதால் நிசமான ஐம்பூதங்கள் தோற்றுவிக்கப்பட்டன என்று அகத்தியர் கூறுகிறார். இங்கு ஐந்து என்று குறிப்பிடப்படுவது சிவன், சக்தி, சதாசிவன், ஈஸ்வரன், சுத்த வித்யா என்ற ஐந்து தத்துவங்கள். அவற்றை “நிசமான” என்று கூறுவதற்குக் காரணம் அவை அசுத்த மாயையின் கலப்பு இல்லாமல் இருப்பதுதான். இந்த ஐந்து சிவ தத்துவங்களிலிருந்து ஐந்து பூதங்கள், ஐந்து தன்மாத்திரங்கள், கர்மேந்திரியம் போன்றவை தோன்றின.இவ்வாறு 96 தத்துவங்கள் தோன்றின என்று அகத்தியர் கூறுகிறார்.
இந்த தத்துவங்கள் எவை என்று முன்னம் பார்த்தோம். அவை 36- ஐந்து சிவ தத்துவம் ஏழு வித்யா தத்துவங்கள், இருபத்து நான்கு ஆத்ம தத்துவங்கள் (ஐந்து பூதங்கள், ஐந்து தன்மாத்திரங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள் ஐந்து ஞானேந்திரியங்கள் மனஸ் புத்தி சித்தம் அகங்காரம்)
இவை தவிர உள்ள அறுபது தத்துவங்கள் தாத்விகங்கள் எனப்படுகின்றன. அவை:
காற்று-ஓடுவது, நடப்பது, கிடப்பது, உறக்கம், எழுவது-5
பூமி-முடி, எலும்பு, தோல், நரம்புகள், தசை-5
நீர்-எச்சில்/மூத்திரம், ரத்தம், சுக்கிலம், மூளை, மச்சை-5
நெருப்பு-பசி, தூக்கம், உடலுணர்வு, பயம், சோம்பல்-5
ஆகாசம்-கிரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம்-5
பூமி-நாடிகள்- இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, அஸ்வனி, ஆலம், புருடன், சூதம், சிங்குவை-10
காற்றின் அசைவுத் தன்மையிலிருந்து-
பிராணன்- பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன் (நெருப்பு+வாயு), நாகன், கூர்மன், கிரிகரன், தே`வதத்தன் தனஞ்சயன்- பூத வாயு-10
ஆகாயத்தின் செயல்பாட்டு நிலையிலிருந்து
ஏடணை- அர்த்த, உலக, புத்திர-3
செயல்கள்-வசனம், கமனம், விசர்கம், ஆனந்தம், ஆதனம்-5
குணம்-ராஜசம், தாமசம், சத்துவம்-3
வாக்கு-பரா, பஷ்யந்தி, மத்தியமா, வைகரி-4
இவ்வாறு ஜடம் என்னும் உடல் தோன்றுகிறது என்கிறார் அகத்தியர்
-----------------------------------------------------------------------------
156. Charya.. by kechari's grace
ஒன்றான பொருள்
ஒன்றான பொருளறிந்து ஒன்றைக் கேளு
உத்தமனே நலமான உறுதி கொண்டு
நின்றாடும் வாசிதனில் மனக்கண் சாற்றி
நிசமான சரியையொடு கிரியை யோகம்
பண்டான ஞானமொடு நூலுமைந்தா
பார்த்தவர்க்குக் கெதிமோக்ஷம் பலனுண்டாகும்
அண்ட கேசரி மாது தன்னா லந்த
ஆதியென்ற சரியைவழி அறிந்து பாரே
சித்தர்கள் மார்க்கம் வேதாந்த சித்தாந்தம் எனப்படுகிறது. அதன் அடிப்படையாக இருப்பது வேதாந்தம். ஆகமத்தை அடிப்படையாகக் கொண்ட மார்க்கங்கள் அனைத்தும் முக்தியின் வழியாக சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு படிகளைக் கூறுகின்றன. இந்த நான்கு படிகளையும் கடைப்பிடிப்பவர்கள் நிச்சியமாக மோக்ஷத்தை அடைவர் என்று கூறும் அகத்தியர் மாது கேசரியின் அனுகிரகத்துடன் சரியையைப் பற்றி ஆய்வோம் என்கிறார்.
இங்கு கேசரி என்றால் என்ன என்று பார்ப்போம். பரமசிவனின் சக்தி சித் சக்தி அவளது நிலைகளே கேசரி, கோசரி, திக்சரி மற்றும் பூசரி என்பவை. இவற்றில் கேசரி நிலை என்பது அளவுக்குட்பட்டமை ஏற்படும் முதல் படி, சிவன் ஜீவனாகும் படி. கேசரி நிலை கைவல்யத்துடன் தொடர்புடையது. கோசரி நிலை அந்தக்கரணம் எனப்படும் உட்கருவிகளுடன் தொடர்புடையது. அவள் காரண சரீரத்துடன் தொடர்புடையவள். அவளே இச்சா சக்தி. திக்சரி புலன்களுடன் தொடர்புடையவள். அவள் சூட்சும சரீரத்துடன் தொடர்புடையவள். அவளே ஞான சக்தி. அவள் மத்தியமை வாக்குடன் தொடர்புடையவள். பூசரி என்பவள் வெளியுலகத்துடன் தொடர்புடைய சக்தி. அவள் தூல சரீரத்துடனும் வைகரி வாக்குடனும் தொடர்புடையவள். அவளே கிரியா சக்தி.
கேசரியே ஒருமை நிலை வெளிப்பாடுடையாதாக மாறுவதன் முதற்படி என்பதால் அந்த சக்தியினால் சரியை என்னும் முதல் படியைப் பார்ப்போம் என்கிறார் அகத்தியர். கேசரியே வெளிப்பாடுடைய உலகம் ஒருமை நிலையை அடையும்போது கடைசிபடியாக இருப்பது.
----------------------------------------------------------------------------
157. Charya, kriya, yoga and jnana- a summary
Verse157
பாரப்பா சரியை வழி அகார தீக்ஷை
பாலகனே தேகசுத்தி அனுஷ்டானங்கள்
காரப்பா கிரியை வழி உகார தீக்ஷை
கருவான சிவலிங்க சக்தி பூஜை
சாரப்பா யோகவழி மகார தீக்ஷை
சகலகலை காலரிந்து தன்னைக் காண
நேரப்பா ஞானவழி பூரணமாந்தீக்ஷை
நிராதார சொரூப நிலை தீபமாச்சே
சரியை, கிரியை, யோகம் ஞானம் என்ற நான்கு படிகளை இப்பாடலில் அகத்தியர் விளக்குகிறார். சரியை என்பது அகார தீட்சை என்றும் அது வெளி ஒழுக்கங்களான உடல் தூய்மை அனுஷ்டானங்கள் என்கிறார் அகத்தியர். கிரியை என்பது உகார தீட்சை. அது உள்ளொழுக்கங்கள், பூசை முதலியவை. யோகம் என்பது மகார தீட்சை. அது பிராணனின் நிலையையும் கலையைப் பற்றியும் அறிந்து தன்னை உணர்தல். கடைசி படியான ஞானம் என்பது நிராதார சொரூப நிலை. ஒன்றையும் அடித்தளமாகப் பெறாமல் இருக்கும் தீப நிலை. இங்கு தீபம் என்பது அறிவு ஒளி.
------------------------------------------------------------------------------
158. Pada mukhti
Verse 158
சாலோக சாமீப பதவி
ஆச்சப்பா சரியைவழி நடந்தோர்க்கப்பா
அப்போதே சாலோக பதவியாகும்
பேச்சப்பா கிரியைவழி நடந்தோர்க்கப்பா
பெருமையுடன் சாரூப பதமேயாகும்
நீச்சப்பா யோகவழி நடந்தோர்க்கையா
நிசமான சாமீப பதவியாகும்
மூச்சப்பா ஞானவழி வந்தோர்க்கையா
முத்தியுள்ள சாயுச்சிய பதவிதானே
சரியை, கிரியை, யோகம் ஞானம் என்ற நாற்படிகளில் பெரும் நன்மைகளை அகத்தியர் இப்பாடலில் பட்டியலிடுகிறார். சரியை சாலோக்கியத்தையும் கிரியை சாரூபத்தையும் யோகம் சாமீப்பியத்தையும் ஞானம் சாயுஜ்யத்தையும் அளிக்கின்றன என்கிறார் அவர். இந்த நான்கு நிலைகளையும் பெறுவது பதமுக்தி எனப்படுகிறது.
திருமூலர் இந்த நான்கு படிகளையும் தமது திருமந்திரம் ஐந்தாவது தந்திரத்தில் விளக்கியுள்ளார். அவர் சாயுச்சியம் என்பது சாக்கிரத் அதீத நிலையை அடைவது, உபசாந்தத்தில் நிலைத்திருப்பது, சிவமாக ஆவது ஆனந்த சக்திநிலை என்கிறார்.
-----------------------------------------------------------------------------
159. The four steps grant various benefits
Verse 159
தானென்ற சாலோக பதவி சேர்ந்தால்
சகலசவு பாக்கியபதி தானேயாவான்
ஊனென்ற சாமீப பதவிசேர்ந்தால்
உலகுதனில் சராசரங்க ளோகஞ்சசெய்வார்
கோனென்ற சாரூப பதவி சேர்ந்தால்
குவலயத்திற் சிவயோக ஞானியாவான்
வானென்ற சாயுச்சிய பதவி சேர்ந்தால்
மகத்தான வெளியோடே வெளியாவானே
சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம் என்ற நான்கு படி வழிமுறை அளிக்கும் பயன்களை அகத்தியர் இப்பாடலில் குறிப்பிடுகிறார். சரியை அளிக்கும் சாலோக பதவி உலகின் எல்லா செல்வங்களையும் அளிக்கும். கிரியை அளிக்கும் சாமீப்ய பதவி ஒருவரை அசைவன அசையாவன ஆகியவற்றுடன் யோகம் செய்யவைக்கும், அவற்றைத் தானாகக் காணவைக்கும். யோகம் அளிக்கும் சாரூப்பியம் ஒருவரை சிவத்தின் உருவைப் பெறவைக்கும். அவர் இவ்வுலகில் இருக்கும்போதே சிவயோக ஞானியாவார். கடைசி படியான ஞானம் ஒருவரை வெளியுடன் சேர்ந்து தானும் வெளிநிலையை அடைய வைக்கும் என்கிறார் அகத்தியர். இவ்வாறு இந்த நான்கு பத முக்திகளும் இவ்வுல நன்மையையும் உச்ச நிலையான வெளி நிலையையும் அளிக்கின்றன என்கிறார் அகத்தியர்.
----------------------------------------------------------------------------
160. Yogi becomes Poorna
Verse 160
வானான வெளியோடே வெளியாய் நின்று
மகத்தான நாற்பதமும் வகையராய்ப் பெற்று
ஊனான பஞ்சகரத்தால் நிலையும் பெற்று
உகாந்தவரை திருநடன உண்மை கண்டு
கோனான குருபத்தில் மனதொடுங்கி
குறியான பூரணமாய்ச் சேர்ந்தோர்க்கப்பா
தானான சமாதியுடன் உண்மை கேளு
தன்மையுடன் நாற்பதமும் ஒன்றதாமே
முந்தைய பாடலில் ஞானம் சாயுச்சிய பதவியைத் தரும் என்று ஒருவர் வெளியோடு வெளியாவார் என்றும் கூறிய அகத்தியர் அது எவ்வாறு ஏற்படுகிறது என்று இப்பாடலில் கூறுகிறார். வெளி நிலையை அடைந்த யோகி பஞ்சாட்சரத்தின் மூலம் அதில் நிலைபெற்று இருக்கிறார். அப்போது அவருக்கு திருநடனம் அல்லது பரத்தின் ஆதி அசைவு புலப்படுகிறது. இந்த ஆதி அசைவே யுக முடிவு வரை, உலகம் அழியும் வரை தொடருகிறது. இந்த நடனத்தைக் கண்ட யோகி குருபத்தில் ஒடுங்குகிறார். குரு என்றால் அஞ்ஞானமற்ற ஒளி என்று பொருள். இவ்வாறு அவர் ஒளி நிலையை அடைகிறார். இந்த பராபர நிலையில் அவர் குற்றமற்றவராக பூரணமாக இருக்கிறார்.
இதனை அடுத்து இந்த நிலையை அடைந்த யோகியை எவ்வாறு சமாதிபடுத்த வேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்.
-----------------------------------------------------------------------------
161. The end goal of all the four paths
Verse 161
தாமென்ற சரியைவழி நடந்தாலென்ன
தன்னறிவாய்க் கிரியைவழி நடந்தாலென்ன
வோமென்ற யோகவெளி நடந்தாலென்ன
உத்தமனே ஞானமதில் உறைந்தாலென்ன
ஆமென்ற பூரணமே தானென்றெண்ணி
அனுப்பான தமர்வாசல் அதிலே சென்று
நாமென்ற ஐந்தெழுத்தில் இரண்டைப் பற்றி
நாதாந்த வெளியொளியில் நாடினாரே
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வழிகளில் ஏதாவது ஒன்றில் சென்றாலும் முடிவில் ஒரு யோகி முயலுவது நாதாந்த ஒளி வெளியை நாடுவதே என்கிறார் அகத்தியர்.
---------------------------------------------------------------------------
162. How to construct a tomb (samadhi) for a liberated soul
Verse 162
சமாதியளவு
நாட்டமுடன் பூரணத்தில் நாடினோர்க்கு
நாதாந்த சமாதியுட நன்மைகேளு
தேட்டமுடன் எவ்விடமேயானாலென்ன
சிவசிவா அந்திடத்தில் செம்மை பண்ணி
வாட்டமுடன் பத்தடியிற் சதுரமாக
மைந்தனே ரெண்டு முழ ஆழஞ் செய்து
ஆட்டமுடன் அதின் கீழே ஆறடியில் மைந்தா
அப்பனே முச்சாணிலாழம் பண்ணே
நாதாந்தத்தை நாடிய ஆத்மாக்கள் முக்தாத்மாக்கள். அவ்வாறு நாதாந்தத்தை அடைந்தவர்களது உடலை எவ்வாறு சமாதிபடுத்தவேண்டும் என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார். அவர்களது உடலை இடுவதற்கு விசேஷமான இடம் என்று எதுவும் இல்லை. ஏதாவது ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் பத்தடி சதுரத்தை சுத்தப்படுத்தவேண்டும். அதில் இரண்டு முழ ஆழத்துக்குத் தோண்டவேண்டும். அதன் கீழ் ஆறடியில் மூன்று சாண் அளவுக்குக் குழியை ஏற்படுத்தவேண்டும் என்கிறார் அகத்தியர்.
-------------------------------------------------------------------------------
163. Samadhi continued
Verse 163
பண்ணப்பா அதின் கீழே நாலடியில் மைந்தா
பதிவான ஆழமது எண்சாண் நீளம்
நண்ணப்பா நிதானமதாய் நன்றாய்ச் செய்து
நலமான கிரகமதிற் பிரவேசிக்க
உண்ணப்பா கற்பொடியுஞ் செங்கல் தூளும்
உத்தமனே திருநீறும் மூன்றும் ஒன்றாய்
முன்னப்பா செய்துகொண்டு பதனம் பண்ணி
முத்திகர மாவதற்கு முறைமை கேளே
அந்த சமாதியைப் பற்றி மேலும் விவரங்கள் கூறுகிறார் அகத்தியர். மூன்று சாண் ஆழம் பண்ணிய பிறகு நான்கடியில் எட்டு சாண் அளவு தோண்டவேண்டும் என்றும் அதுவே அந்த யோகியின் உடல் இருக்கப்போகும் வீடு என்று கூறுகிறார் அகத்தியர். அதில் கல்பொடி, செங்கல் பொடி மற்றும் விபூதியை இடவேண்டும் என்றும் கூறுகிறார் அவர்.
----------------------------------------------------------------------------
164. How to process the body-1
Verse 164
கேளடா பாலுடனே இளநீர் விட்டுக்
கிருபையுடன் தண்ணீரும் தேனுங் கூட்டி
சூளடா அபிஷேகம் நன்றாய்ச் செய்து
சுத்தமுடன் மேல்துவட்டிச் சமமாய் மைந்தா
ஆளடா அரை தனக்குப் பட்டு வஸ்த்திரம்
அன்பாகத் தான் அணிந்து அதின்மேற் கேளு
மேலடா பாதாதி கேசமட்டும்
மேன்மையுடன் விபூதி தூளிதமே செய்யே
முந்தைய இரு பாடல்களில் முக்தியடைந்த ஒரு ஆத்மாவின் சமாதியை எவ்வாறு கட்ட வேண்டும் என்று அகத்தியர் கூறினார். இங்கு அவரது உடலை சமாதிக்கு எவ்வாறு பதனப்படுத்தவேண்டும் என்று கூறுகிறார்.
உடலுக்கு தண்ணீர், இளநீர், தேன், பால் ஆகியவற்றால் ஆனா கலவையால் அபிஷேகம் செய்யவேண்டும். அதனை சுத்தமாகத் துவட்டிய பிறகு அரைக்கு பட்டு வஸ்த்திரம் அணிவிக்க வேண்டும். அதன் பிறகு கால் முதல் தலை வரை விபூதியைப் பூசவேண்டும்.
----------------------------------------------------------------------------
165. Rituals for the body- 2
Verse 165
செய்யடா விபூதி தூளிதமே செய்து
திருவான புருவமத்தில் திலதப் பொட்டு
மெய்யடா தங்கமதால் பட்டஞ்செய்து
மேன்மைபெற ஐந்தெழுத்தை அதிலே மாறி
பையடா நெற்றிதனிற் பட்டங் கட்டிப்
பாங்குபெறச் சுகந்தமலர் மாலை சாற்றி
வையடா அமுதுகனி வர்க்கமுன்னே
வைத்தபின்பு தூபமொடு தீபங்காட்டே
உடலுக்கு அபிடேகம் செய்து பட்டுடுத்தி விபூதி பூசிய பிறகு நெற்றியில் திலகமிடவேண்டும் (திலதம் என்றால் எள், இங்கு திலகம் என்று இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது). அதன் பிறகு தங்கத் தகடால் ஒரு பட்டம் செய்து அதில் நமசிவாய ஐந்தெழுத்தைக் கீறி (மாறி என்று இருப்பது கீறி என்று இருக்குமோ என்று தோன்றுகிறது) அதை அவரது நெற்றியில் கட்ட வேண்டும். நறுமண மலர்களால் ஆன மாலையைச் சாற்றி, அமுதும் கனிகளும் படைத்து அவருக்கு தூப தீபம் காட்டவேண்டும் என்கிறார் அகத்தியர்.
அகத்தியர்அறிவுரை!
-------------------------------
"பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம்
உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி
உனக்கேதடா. பாவத்தை செய்தவன்
சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே.
அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி
தண்டனை தருவார் என்பது யாருக்கும்
தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான்
இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு
நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான்
என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக்
கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம்
இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த
நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று
பொருள். இந்த கருத்தை மனதில்
வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும்
பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக
எளிதாக, மிக நீதியாக தோன்றும்."
!ஓம் அகத்திய குருவே போற்றி!
தொடரும் அகத்தியரை நோக்கிய இந்த உண்மை பயணம் ......