Wednesday, 1 October 2025

முருகர் பாடல்

 முத்தும் பவழமும் மரகத பச்சையும்  

---------


முத்தும் பவழமும் மரகதப்பச்சையும்

நீலமும் சிகப்பும் கோமேதகமும்

மின்னிடும் வைரமும் வைடூரியமும்

நவரத்தினத்தில் மின்னிடும் ஹாரமும்

பள பள பள வென ஜொலிக்கும் அட்டிகையும்

கல கல கலவென குலுங்கிடும் வளைகளும்

நவமணி மாலையும் பொன்மணி நகையும்

உன் புன்னகைக்கு ஈடாமோ? முருகா

பரம்குன்றம் திருக்குமரா !


பாலும் கற்கண்டும் சர்க்கரை பாகும்

கட்டிக் கரும்பும் 

கனி ரஸச்சாறும்

தேனில் ஊறி தித்திக்கும் பலாவும்

நாவில் ஊறும் அறுசுவை உணவும்

கற்பூர வாழையும் அத்திக் கனியும்

கொய்த கனிகளும் கொய்யாக் கனியும்

த்ராக்ஷை பேரீச்சை மாதுளம்கனியும்

தேமாங்கனியும் தேவாம்ருதமும்

உந்தன் பஞ்சாம்ருதத்திற்கு ஈடாமோ? 

முருகா ..பழனி மலை திருக்குமரா...


குழலின் ஓசையும் யாழின் இசையும்

தும்புரு நாதமும் மதுர ஸங்கீதமும்

சலங்கை ஒளியும் சங்கின் முழக்கமும்

தாலாட்டு நயமும் கோலாட்ட நயமும்

பச்சைக் கிளியின் கொச்சை மொழியும்

கூ கூ கூ எனும் குயிலின் கீதமும்

கண கண கணவெனும் மணியின் நாதமும்

பால் மனம் கமழும் மழலை மொழியும்

உந்தன் கனிமொழிக்கு ஈடாமோ? முருகா !

ஸ்வாமிமலை திருக்குமரா!


அலைகடல் அழகும் பனி மலைத் தொடரும்

பாயும் நதியும் வீழும் அருவியும் கதிரவன் ஒளியும் 

நீள்மதி நிலவும் சிலுசிலு 

ஊற்றும் சலசல ஓடையும்

பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களும் மழையும் குளிரும் தென்றல் காற்றும்

பனித் துளி படர்ந்த பசும் பூச்சோலையும்

நெஞ்சத்தை அள்ளும் வான்முகிலும்

உந்தன் பேரழகிற்கு ஈடாமோ? முருகா!

திருத்தணிகை திருக்குமரா !


பச்சிலை மூலிகை சித்தர்கள் வைத்தியம்

நாடியில் சொல்லும்

சித்தர்கள் வித்தர்கள் அருமருந்தாகிர

இருந்தும் தீரா நோய் தீர்க்கும்

உந்தன் திருநீறுக் கீடாமோ? முருகா !

திருச்செந்தூர் திருக்குமாரா !


அரண்மனை வாழ்வும் அரச போகமும்

அறுசுவை உணவும் அரியாசனமும்

ஆயிரம் கோடி காசோடு பணமும்

அயர்ந்துறங்க பஞ்சு மெத்தையும்

மனைவி மக்களும் சுகபோக வாழ்வும்

சொந்தமும் பந்தமும் சொத்தும் சுகமும்

சீரும் சிறப்பும் பெரும் புகழும்

நவநிதி இருந்தும் நிம்மதி தரும் உந்தன் சந்நிதிக்கு 

ஈடாமோ? முருகா!

பத்துமலை திருக்குமாரா !


முருகா என்னை காக்கும் கவசம்

சஷ்டி கவசமன்றோ?

வேலா எனக்கு வெற்றி தருவது

உன் கை வேலன்றோ ?

குமரா எந்தன் குறைகளை கேட்பது

உன் இரு செவியன்றோ?

சரவணா எனக்கு அருளைத் தருவது

உன் திருக் கரமன்றோ?

கந்தா என்மேல் கருணை பொழிவது

உன் இரு விழியன்றோ?

ஷண்முகா எனக்கு ஆறுதல் தருவது

ஆறு முகமன்றோ?

உனது ஆறு முகமன்றோ?

உனது ஆறு முகமன்றோ?

No comments:

Post a Comment