Wednesday, 17 September 2025

மகாளயஅமாவாசை

 #மகாளயஅமாவாசை 


#மகாளய #அமாவாசை அன்று மிக முக்கியமான 5 விஷயங்களை தவறாமல் செய்ய வேண்டும். இதனால் முன்னோர்களின் ஆசிகளை முழுவதுமாக பெற முடியும். இதன் காரணமாக பலவிதமான துன்பங்களில் இருந்து விடுபட முடியும்.


மகாளய பட்ச பித்ருக்கள் வழிபாடு :


இந்து சமயத்தில் மகாளய அமாவாசை மிகவும் முக்கியமான ஒன்றாகும். பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வந்து நம்முடன் வசித்து, நாம் செய்யும் தர்ப்பணம், வழிபாடு, தானம் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு, நமக்கும் நம்முடைய குடும்பத்திற்கும் ஆசி வழங்கி, அவர்களின் ஆத்மா திருப்தி அடையும் காலமாகும்.


 மகாளய பட்சத்தின் 15 நாட்களும் செய்யப்படும் தர்ப்பணம், வழிபாடு, தானம் என அனைத்தும் மிகவும் முக்கியமானவையாகும். இந்த 15 நாட்களும் முன்னோர்களின் ஆன்மாக்களை திருப்தி படுத்துவதற்காகவும், அவர்களின் ஆசியை பெறுவதற்காகவும் எதுவும் செய்யவில்லை என்றாலும் கூட மகாளய பட்சத்தின் நிறைவாக வரும் மகாளய அமாவாசை அன்று சில குறிப்பிட்ட விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். இவற்றை செய்வதால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.


இந்த ஆண்டு மகாளய அமாவாசை செப்டம்பர் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினம் அதிகாலை 01.03 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 22ம் தேதி அதிகாலை 01.42 வரை அமாவாசை திதி உள்ளது. 


மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்காக நாம் செய்யும் தர்ப்பணம், வழிபாடு, தானம் ஆகியவை அவர்களின் ஆன்மாவிற்கு அமைதி, யமலோக துன்பங்களில் இருந்து விடுதலை ஆகியவற்றை அளிக்கும். இதனால் அவர்களின் ஆன்மா மகிழ்ச்சி, நம்மையும் நம்முடைய சந்ததிகளையும் மனதார வாழ்த்துவார்கள். இதன் காரணமாக நம்முடைய குடும்பத்தில் இருக்கும் பித்ருதோஷம், பித்ருசாபம், சுப காரிய தடைகள், பிரச்சனைகள் ஆகியவை நீங்கும் .


 இதனால் முன்னோர்களின் ஆசியை பெறுவதற்காக மகாளய அமாவாசை அன்று மறக்காமல் செய்ய வேண்டிய 5 மிக முக்கியமான விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.


மகாளய அமாவாசையில் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் :

 

1. எள்ளும் தண்ணீரும் இறைத்தல் :

மகாளய அமாவாசை அன்று அந்தணரை வைத்து முறையாக தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய முடியவில்லை என்றாலும் வீட்டில் எளிய முறையில் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபட வேண்டும். இது நம்முடைய கடந்த கால கர்மாக்களின் சுமைகளில் இருந்து விடுவிப்பதுடன், நம்முடைய முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு அமைதியை தரும். நம்முடைய மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயர்களை சொல்லி, அவர்களை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டு, காசி மற்றும் கயா தலங்களை மனதில் நினைத்துக் கொண்டு, எள்ளும், தண்ணீரும் இறைக்க வேண்டும்.


2. பிண்ட தானம் :


தர்ப்பணம் கொடுப்பதில் மிக முக்கியமானது பிண்ட தானம். மூன்று தலைமுறை முன்னோர்கள் அல்லது 21 தலைமுறை முன்னோர்களை நினைத்து அந்த எண்ணிக்கையில் கருப்பு எள், நெய், தேன் ஆகியவற்றை சாதத்துடன் கலந்து உருண்டைகளாக பிண்டம் பிடித்து வைத்து, அதை முன்னோர்களுக்கு அர்ப்பணித்து, பிறகு அதை நீர் நிலைகளில் எடுத்துச் சென்று கரைக்க வேண்டும். 


மகாளய அமாவாசை அன்று அளிக்கப்படும் இந்த பிண்ட தானம் நமக்கு இருக்கும் துன்பங்கள், வளர்ச்சியில் இருக்கும் தடை ஆகியவற்றை நீக்கி விடும். முறையாக மந்திரங்கள் சொல்லி, பிண்ட தானம் அளிப்பது மிகவும் சிறப்பானதாகும்.


3. தானங்கள் :


உணவுப் பொருட்கள் அல்லது தேவையான பொருட்களை ஏழைகள், வயதானவர்கள் ஆகியோருக்கு தானமாக அளிப்பது மகாளய அமாவாசையில் தவறாமல் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஆகும். ஆடைகள், பணம் போன்றவை தானமாக அளிப்பதும் சிறப்பு. இது முன்னோர்களின் ஆசிகளை நம்முடைய குடும்பத்திற்கு முழுவதுமாக பெற்றுத் தரும். முன்னோர்களை நினைத்து, அவர்களின் ஆன்மாக்களை சாந்தி அடைய வேண்டும் என நினைத்து இந்த தானத்தை செய்யும் போது, முன்னோர்களின் மனம் மகிழ்ந்து, அவர்கள் ஆசி வழங்குவார்கள். காகங்கள் மற்றும் பசுக்களுக்கு உணவளிப்பதும் மிகவும் சிறப்பான புண்ணிய பலன்களை தரும்.


4. தீபம் ஏற்றுவது :


மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் படத்திற்கு பூ அல்லது மாலை அணிவித்து, அவர்களின் படத்திற்கு முன்பு தனியாக ஒரு மண் அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இது முன்னோர்களின் மீதான மரியாதை மற்றும் அன்பை வெளிப்படுத்தும் சிறந்த முறையாகும். மண் அகலில் ஏற்றப்படும் தீபமானது நம்பிக்கை, ஆன்மாக்களுடனான தொடர்பை குறிப்பதாகும். முன்னோர்களின் படத்திற்கு முன் அமைதியாக சிறிது நேரம் அமர்ந்து, மனதார அவர்களை நினைத்து நாம் தெரியாமல் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்பதுடன் அவர்களின் ஆசிகளை அருளும் படி கேட்க வேண்டும்.


5. மந்திர ஜபம் :


மகாளய அமாவாசை அன்று பித்ருக்களுக்கு உரிய மந்திரங்களை சொல்லி வழிபடலாம். அது தெரியாதவர்கள், "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம். அல்லது கருட புராணம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற புனித நூல்களை படித்து இறைவனின் அருளை பெற முயற்சி செய்யலாம்.


 நம்முடைய முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு அமைதியையும், நமக்கு துன்பங்களில் இருந்து விடுதலையும் தந்து காக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும்.


 மகாளய அமாவாசை அன்று நம்முடைய முன்னோர்களுக்காக செய்யப்படும் பிரார்த்தனையும், முன்னோர்களை நினைத்து செய்யப்படும் வழிபாடுகளும் அவர்களுடைய ஆன்மாக்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பை வலுப்படுத்தும். இதனால் அவர்களின் மனம் மகிழும்.

No comments:

Post a Comment