Saturday, 14 August 2021

யோகியின் அடையாளம் என்ன

 *_



*ஓம் நமசிவாய* 🌻💐🌸


*குண்டலினி சக்தியை விழிக்க வைக்கும்* 


உயர்ந்த உன்னத ரகசியங்கள்…


யோகியின் அடையாளம் என்ன ? என்பதைக் குறித்து கீதை பட்டியலிடுகிறது.


அவையனைத்தும் குண்டலினி யோகிக்கும் பொருந்தும். யாருக்கு குண்டலினி கிளம்பியிருக்கிறது என்று ஒவ்வொருவராகத் தேடிக் கொண்டிருப்பதை விட, நமக்கு குண்டலினி கிளம்ப நாம் என்ன செய்யலாம் ? அதறற்கு நம் முன்னோர்கள் என்னென்ன வழிமுறைகளைச் சொல்கிறார்கள் என்று கவனித்து, அதற்கான முயற்சியை மேற் கொள்வதே உத்தமம். மனம் முழுமையாக ஒரு நிலைப்பட்டு, ஆழ்ந்த நிலைக்குப் போகப் போக எல்லாம் தெரிய வரும். தெய்வீகக் காட்சிகள், வாசனைகள், ருஷி, ஸ்பர்சம், அனாஹத ஒலிகள், போன்ற பல அனுபவங்களைப் பெறுவீர்கள். ஆனால் அதிலே லயித்து விடாமல் மேலும் மேலும் தீவிரமாக சாதனையைத் தொடர வேண்டும். இது தான் இவ்வளவு தான் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது.


குண்டலினி எழும்பியதற்கு அறிகுறியாக பல தியான நூல்கள் பலவிதமாகச் சொல்லியுள்ளன. அதில் எனக்குத் தெரிந்த சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். மேலே குறிப்பிட்டுள்ளஅனுபவங்கள் எல்லாமே குண்டலினி எழும்பியதைக் குறிப்பவையே. மூலாதாரத்தில் துடிப்பு இருக்கும் போது, மயிர் கூச்செறியும் போது, உட்டியாணா, ஜலந்தரம், மூலபந்தம் போன்றவை தானே வருகையில் குண்டலினி எழுந்து விட்டது என்று உணருங்கள். எந்த முயற்சியும் இன்றி சுவாசம் தானே நின்றாலோ, எந்த சிரமமும் இன்றி கேவல கும்பகம் தானே வந்தாலோ குண்டலினி சக்தி செயல்படுகிறது என்று உணருங்கள். மனதில் உலக எண்ணங்கள் எப்போது இல்லாமல் போகிறதோ, எப்போது நீங்கள்தானாகவே ஓம் என்ற மந்திரத்தை ஜெபிக்கிறீர்களோ, எப்போது பேரானந்தத்தை அனுபவிக்கிறீர்களோ அப்போது குண்டலினி சக்தியானது விழித்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


உங்கள் தியானத்தின் போது இரு புருவங்களுக்கும் இடையில் உள்ள திரிபுடியில் கண்கள் நிலை பெற்று, சாம்பவி முத்திரை செயல்படும் போது குண்டலினி செயல்படுவதை உணருங்கள். உங்கள் சரீரத்தில் பல பாகங்களில் மின் அதிர்வுகள் ஏற்படுகையில், பிராண அலைகள் உள்ளுக்குள்ளே அதிகரிப்பதை உணர்கையில் குண்டலினி கிளம்பி விட்டதை உணருங்கள். தியானத்தின் போது உடலே இல்லாதது போன்ற உணர்வுஏற்படும் போது, உங்கள் கண் இமைகளைத் திறக்க முயற்சித்து முடியாத போது, நரம்புகள் வழியாக மின்சார அலைகள் மேலும் கீழும் பாய்வதை உணரும் போதும் குண்டலினி மேலேழும்பி விட்டதை உணருங்கள்.


நீங்கள் தியானம் செய்கையில் உத்வேகமும், உள்ளுணர்வும் பெறுகையில், இயற்கையின் இரகசியங்கள் ஒவ்வொன்றாக உங்களுக்குத் தானாகவே புலப்படுகையில்,உங்கள் ஐயங்கள் எல்லாம் நீங்கித் தெளிவடைகையில், வேத இரகசியங்கள் எல்லாம் ஒவ்வொன்றாகத் தெளிவாகப்புரிய வருகையில் குண்டலினி செயல்படுவதை உணருங்கள். உங்கள் உடல் காற்றை விட லேசாகத் தோன்றும் போது, குழப்பமான சூழலிலும் மனம் சமநிலையில் நிற்கும் போதும், அபரிதமான சக்தி உடலில் பெருகியிருப்பதைஉணரும் போதும் குண்டலினி விழித்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். பல்வேறு ஆசனங்கள், மற்றும் யோக நிலைகளை நீங்கள் எந்தவித சோர்வும் சிரமும் இன்றி செய்யும் போதும், உங்கள் அறிவின் சக்தி பெருகி இருப்பதை உணரும் போதும், உயர்ந்த கவிதைகளை உங்களால் இயற்ற முடிகின்ற போதும் குண்டலினி விழித்து விட்டதை உணர்ந்து கொள்ளுங்கள்.


ஒவ்வொரு ஆதாரமாகக் கடந்து, ஒவ்வொரு விதமான அனுபவங்களையும் பெற்று புருவ மத்தியில் ஆக்ஞாவில் நுழையும் போது பிரம்மானந்தத்தைஅனுபவிப்பீர்கள். உங்களுக்கும் ப்ரம்மத்திற்கும் இடையே உள்ள வேற்பாட்டைப் பற்றிய லேசான அனுபவமேஎஞ்சி நிற்கும். அதையும் கடந்து சகஸ்ராரத்தை அடைந்து விட்டால் யோகி நிர்விகல்ப ஸமாதியை அடைந்து விடுவார். இரண்டற்ற நிலை ஏற்படும். அனைத்து பேதங்களும் சம்ஸ்காரங்களும்மறையும். பரிசுத்த நிலை உண்டாகும். கர்ம வினைகள் அழியும். இதுவே மிகமிக உயர்வான, மேலான அஸம்ப்ரக்ஞாத ஸமாதியாகும். குண்டலினி சிவனுடன் ஐக்கியமாகிவிடுகிறது.


தன் பிறகு யோகி விரும்பினால் தொண்டை மத்தியில் உள்ள சக்கரத்திற்கு இறங்கி வந்து சீடர்ர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, லோக ஷேமத்தில் ஈடுபடலாம். இந்தப் பூரண யோகியானவர் எட்டு வகை சித்திகளையும் பெற்றவராவார். மேலும் இதனால் யோகியானவர் 26 வகையான சக்திகளைப் பெறுவார் என்று சொல்லப்பட்டுள்ளது.....





No comments:

Post a Comment