Wednesday, 16 October 2019

ஸ்ரீ ராம நாம சக்கரம்

ஸ்ரீராம நாம சக்கரம்
பீஷ்மர் மகாபாரத யுத்த களத்தில் தோல்வியுற்று மரணப் படுக்கையில் கிடந்தார் அல்லவா? இச்சாம்ருத்யு என்ற அற்புதமான வரம் பெற்றிருந்ததால் அவர் விரும்பினால் ஒழிய அவரை மரணம் நெருங்காது. அதனால் அவர் உத்தராயண புண்ணிய காலத்தில் உயிரை விட விரும்பி மரணப் படுக்கையில் தாங்க முடியாத வேதனையில் துடித்துக கொண்டிருந்தார்.

அப்போது அவருக்குத் தாகம் ஏற்படவே அர்ச்சுனனை நோக்கி தனக்கு தண்ணீர் தருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கொண்டார். யுத்த களத்தில் தண்ணீருக்கு எங்கே போவது? ஆனாலும், அர்ச்சுனன் இறைவனை வேண்டி ஒரு ஜல அஸ்திரத்தை பிரயோகம் செய்தான். ஜல அஸ்திரத்தால் தண்ணீர் கொண்டு வர இயலவில்லை.

அர்ச்சுனனுக்கு ஒன்றும் புரியவில்லை. எந்தக் குழப்பத்தையும் தீர்க்கக் கூடியவர் பரமாத்மா ஒருவர்தான் என்பதால் அங்கிருந்த அனைவரும் அஸ்திரம் பலனளிக்காததற்கு காரணம் என்ன என்று அறியும் வண்ணம் கிருஷ்ண பகவானை நாடினர்.

பகவான் ஒரு குறும்புப் புன்னகையுடன் சகாதேவனை நோக்க சகாதேவனும் கிருஷ்ணனின் ரகசிய செய்தியைப் புரிந்து கொண்டு விரைந்து சென்று அர்ச்சுனனின் அம்பு தரையில் பதிந்திருந்த இடத்திற்கு அருகே தன்னுடைய குரு விரலையும் சனி விரலையும் வைத்து ஏதோ சைகை செய்தான். மறு விநாடியே பூமியிலிருந்து கங்கை பிரவாகம் பீறிட்டு வெளி வந்து பீஷ்மரை அடைந்து அவருடைய தாகத்தைத் தீர்த்து வைத்த்து.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த அதிசய செயலைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

அப்போதுதான் கிருஷ்ண பரமாத்மா அனைவரிடமும் ராம நாம மகிமையை எடுத்துக் கூறி அதை கைகளால் ஜபிக்கும் முறையை அறிந்த ஒருவன் சகாதேவன் மட்டுமே என்ற இரகசியத்தையும் அன்று முதன் முதலில் வெளியிட்டார்.

இவ்வாறு சகாதேவன் பல வருடங்கள் பயின்று வந்த ராம நாம மகிமையால்தான் பூமிக்கடியில் மறைந்திருந்த கங்காதேவி தன்னுடைய தனயனாக இருந்த பீஷ்மரின் தாகம் தீர்க்க விரைந்து வந்தாள்.

எனவே ஒரு தாயின் அன்பையும் மீறிய சக்தி உடைய ராம நாம சக்திதான் எந்த அற்புத்த்தையும் உலகில் சாதிக்கும் என்பதை உணர்த்தவே கிருஷ்ண பரமாத்மா இந்த நாடகத்தை நிகழ்த்தினார் என்பதை அப்போது அனைவரும் உணர்ந்து போற்றினர்.

சகாதேவன் ஓதிய ராம நாம ஜப யோகத்தை நீங்களும் இங்கே காட்டிய முறையில் பயின்று நலம் பல பெறலாம்.