Saturday, 2 September 2017

திருப்பனந்தாளில் அகத்தியர்


ஒப்பில்லாத தெய்வமே! உன்னை அன்போடு வழிபடுபவர்களுக்கு இந்த லிங்கத்தில் எழுந்தருளியிருந்து தமிழ்இயல் ஞானத்தை அதாவது தமிழ் அறிவைக் குறையாமல் அளிக்க வேண்டும்" 



சிவஞானம் பெற்ற தமிழ் முனிவரான அகத்திய முனிவர் இறைவனிடம், தமிழ் தொடர்பான ஞானங்களை - தமிழ் இயல் ஞானம் தன்னை அனைவருக்கும் அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட தலம் என்று ஒன்றே ஒன்றினை மட்டும் தான் அடையாளம் காட்ட முடியும். அது திருப்பனந்தாள்.

செஞ்சடை வேதிய தேசிகர் எழுதிய திருப்பனந்தாள் புராணத்தில் ஆறாவது சருக்கம் அகத்தியர் வழிபட்டதைக் குறிப்பிடுகிறது.

திருப்பனந்தாளில் அகத்தியர்

அரியவளான தாடகை பனசைப் பதியில் இறைவனை முடியை வளைத்த செய்தியை ஸ்தல மான்மியத்தை அறிந்தார் அகத்திய முனிவர். உடனே திருப்பனந்தாளுக்கு செல்ல முடிவெடுத்தார். பல்வேறு முனிவர்களுடன் திருப்பனந்தாளுக்குச் சென்றார்.

புண்ணியப் புனல்களில் மூழ்கினார்; சிவ பஞ்சாட்சர ஜெபம் செய்தார். உரிய நியாசங்களைப் புரிந்தார். முறைப்படிப் பூஜைகளைச் செய்தார். எட்டு வகை மலர்களை இட்டு அர்ச்சித்தார். பல்வேறு விதமான அபிஷேகங்களைச் செய்தார். தூய்மையான நீர், எண்ணை, மஞ்சள், மாப்பொடி, மஞ்சள் பொடி, நெல்லி முள்ளி, பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், இளவெந்நீர், வில்வக் குழம்பு, பாளிதம், பால், தயிர், தேன், கனிச்சாறு, இளநீர் முதலான பல அபிஷேகங்களைச் செய்தார். அவ்வப்போது தூப, தீபங்களையும் காட்டினார். செய்ய வேண்டிய எல்லாவகை பூஜைகளையும் முறைப்படிச் செய்தார். இறுதியில் சுவாமியை அலங்கரித்தபின் எட்டுவிதார்ச்சனைகள் செய்தார். ஈரெட்டு உபசாரங்களைச் செய்தார். உண்மையான அன்புடன் பணிந்தார்.

இடைவிடாது பிராத்தனை

இப்படிப் பல நாட்கள் பெரியநாயகியுடனான செஞ்சடையப்பரை இடைவிடாது வழிபட்டார். விழுந்து வணங்கும் போது அடியற்ற மரம் போல மிகுந்த ஆர்வத்துடன் உள்ளம் உருகி வணங்குவார். அப்போது அவர் விழியிலிருந்து அருவி போலக் கண்ணீர் கொட்டும். இப்படிப்பட்ட பேரன்புடன் தன்னை வழிபடுவதைக் கண்டார் செஞ்சடையப்பர்.

அகத்தியர் பெற்ற வரம்

சிவநாம ஜெபத்தில் மூழ்கிக் கிடந்த  அகத்தியர் முன் அருட்காட்சி தந்தார் சிவன்.

"உன் பூஜைக்கு மகிழ்ந்தோம். எனவே உனக்குக் காட்சி தந்தோம். வேண்டும் வரம் கேள் தருகிறோம்" என்றார்.

அப்போது அகத்திய முனிவர், "ஒப்பில்லாத தெய்வமே! உன்னை அன்போடு வழிபடுபவர்களுக்கு இந்த லிங்கத்தில் எழுந்தருளியிருந்து தமிழ், இயல் ஞானத்தை அதாவது தமிழ் அறிவைக் குறையாமல் அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

இறைவனும் "அப்படியே செய்கிறோம்" என்று அருள் செய்தார் என்கிறது திருப்பனந்தாள் புராணம்.



ஒப்பு உயர்வு ஒன்று இல்லாதோய்

உனை அன்பில் பணிந்தோருக்கு

இப்படியே இவ்விலிங்கத்து

இருந்து தமிழ் இயல் ஞானம்

தப்பறவே அளித்தி எனத்

தந்தனம் என்று இறைவியுடன்

அப்பமர் செஞ்சடையண்ணல்

அகன்றனன் என்று அருள் செய்தார் - என்பது புராணப்பாடல்.



இந்தக் காலத்தில்  பிள்ளைகளைச் சின்ன வயதிலிருந்தே ஆங்கிலப் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட ஆங்கில மோகம் தலை விரித்தாடத் தொடங்கி விட்டது. எங்கும் தமிழ் எல்லாம் தமிழ் என்ற நிலை இல்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டு வீதிகளில் தமிழ்தான் இல்லை என்ற நிலையே நிலவுகிறது.

குமரகுருபரர் முருகப் பெருமானிடம் "செந்தில் கந்தனே! தமிழில் உள்ள காப்பியங்களைக் கற்கும் திறன் அருள வேண்டும். ஐந்திலக்கண அறிவு வேண்டும். பழுத்த தமிழ்ப்புலமை வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.


ஆம்-குருபரர் கேட்டுக் கொண்டது போல எல்லாருக்கும் நல்ல தமிழ் அறிவு வேண்டும். தாலவனத்தில் உள்ள சிவபெருமான் தன்னை வேண்டியவர்களுக்குத் தமிழறிவு தருவதாக அகத்தியரிடம் வரம் கொடுத்தார் என்பது வரலாறு. தமிழ் அறிவு பெறத் தரிசிக்க வேண்டிய தலம் திருப்பனந்தாள் என்பது இந்த வரலாறு காட்டும் உண்மை.

No comments:

Post a Comment