Saturday, 2 September 2017

ரிக் வேதத்தில் அகத்தியருடைய பிறப்பு

ரிக் வேதத்தில் அகத்தியருடைய பிறப்பு கூறப்படுகின்றது. கடும் விஷங்களை நீக்கக் கூடிய மந்திரங்களை அகத்தியர் செய்தார். அவை ரிக் வேதத்தில் 1-191வது ரிக்காக விளங்குகின்றன. இதனை மௌனமாய் உச்சரிக்க, சகல விஷத் தொல்லைகளும் நீங்கும்.
கேலன் என்ற மன்னனுக்குப் புரோகிதராய் இருந்தார். அப்போது ரிக் வேதத்தில் 1-165-192-ல் இருக்கும் ரிக்குகளைச் செய்தார். அகத்திய மாமுனி காலத்தைக் கடந்த,காலத்தை வென்ற ஒரு மாமுனிவர். முன்பிறப்பில் அவருக்கு ஜடராக்கினி, தஹராக்கினி என்பன பெயர்கள் என பாகவதம் அறிவிக்கின்றது.

ஸ்வாயம்புவ மன்வந்திரத்தில் தத்தோளி என்ற திருநாமத்துடன் விளங்கினார் என விஷ்ணுபுராணமும் முழங்குகின்றது.
சுகேது என்னும் யட்சன் பிரம்மாவை நோக்கித் தவம் புரிந்தான். அவர் அருளினால் ஒரு பெண் குழந்தையை அடைந்தான். தன் மகளுக்குத் தாடகை என்று பெயரிட்டான். சுகேது தக்க பருவத்தில் தாடகையை ஜர்ஜன் என்னும் யட்சனின் மகனாகிய சுந்தன் என்பவனுக்கு மணமுடித்தான்.
சுந்தனுக்கும், தாடகைக்கும் மாரீசன், சுபாகு என்னும் இரண்டு குமாரர்கள் பிறந்தனர். ஒரு நாள் சுந்தன் அகத்தியரின் ஆசிரமத்தை அடைந்தான். ஆணவத்தாலும் காமத்தாலும் மதிகெட்ட அவன் ஆசிரமத்தில் இருந்த மரங்களைப் பெயர்த்து எறிந்தும், மான் முதலிய ஜீவன்களைக் கொன்றும் ஆசிரமத்தை அழித்தான். தவச்சாலை பிணச்சாலை ஆனது. அகத்தியர் கோபங்கொண்டு பார்க்க, சுந்தன் சாம்பல் ஆயினான்.
கணவன் இறந்ததை அறிந்த தாடகை தன் குமாரர்களுடன் அகத்தியர் இருக்கும் இடம் வந்தாள். அகத்தியரைக் கொல்ல எண்ணி அவர் மீது மூவரும் பாய்ந்தனர். அழிவன செய்தமையின் மூவரும் அரக்கர் ஆகுக! என அவர் சபிக்க மூவரும் அரக்கர் ஆயினர்.
இவர்களை இராமபிரான் வதைத்த வரலாறு இராமாயணத்தினுள் காணலாம்.


No comments:

Post a Comment