Wednesday 3 April 2024

திடியன் மலை



பழைமை வாய்ந்த மண்ணில் கதைகளுக்கும், கற்பனைகளுக்கும் என்றுமே பஞ்சமிருப்பதில்லை. கேட்கக் கேட்கத் தீராத கதைகள் வரலாறோடு பின்னிப் பிணைந்து கிடக்கும். அப்படி வரலாறும் கதைகளும் பிணைந்து கிடைக்கும் தலம் திடியன் மலை.
மலையும், வயலும், ஊரைச் சுற்றிலும் தாமரையும் அல்லியும் மலர்ந்திருக்கும் குளங்களும், சிவன், பெருமாள், சோணை முத்தையா, ராக்கச்சி அம்மன், அனுமார், விநாயகர், நடுவே சமண முனிவர்கள் வாழ்ந்த குகைக்கோயில் எனப் பல்வேறு சமய, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஊர் திடியன் மலை.

திடியன் மலைதிடியன் மலை
மதுரையின் மையத்திலிருந்து 33 கி.மீ தொலைவில் உயிர்ப்புடன் உள்ள அழகிய கிராமம். உசிலம்பட்டி- மதுரை நெடுஞ்சாலையில், செல்லம்பட்டியில் இருந்து 5 கி.மீ தொலைவில் தென்கிழக்கில் உள்ள மலையடிவார கிராமம்.

திடியன், வாலாந்தூர், புத்தூர், கருமாத்தூர், பாப்பாபட்டி, கொக்குளம், வேப்பனூத்து, தும்மக்குண்டு என எட்டு நாடுகள். (இங்கு நாடு என்பது ஊரையே குறிக்கும்) எட்டு நாட்டுக்கும் முதல்நாடு திடியன் என்ற பெயர்ப் பலகையோடு, திடியன் நம்மை வரவேற்கிறது. கி.பி. 1655 –ல் உரப்பனூரைச் சேர்ந்த பின்னத்தேவன் என்கிற தன் போர்த்தளபதிக்கு, (இவர் மூக்கறுப்புப் போரில் பங்கேற்றவர்) திருமலை பின்னத்தேவன் என்கிற பட்டத்தை மன்னர் திருமலை நாயக்கர் கொடுத்து, அந்தப் பட்டயத்தில் 'எட்டு நாடு' என்றும் குறிப்பிட்டு, அந்த நாடு எட்டிற்கும் கம்பளி விரித்து நீதிபரிபாலனம் செய்கின்ற அதிகாரம் பின்னத்தேவருக்கு வழங்கப்படுவதாகச் சொல்லியிருக்கிறார்.


இன்றும்கூட ஊர்ப்பெரியவர்கள், இந்த இடத்தில் அமர்ந்துதான், கம்பளி விரித்து தூங்காத்தேவர் (பின்னத்தேவரின் தந்தையின் சகோதரியைத் திருமணம் செய்தவர்) நீதிபரிபாலனம் செய்தார் என்று பரந்து விரிந்த ஆலமரத்தடியையும் மந்தையையும் காட்டுகிறார்கள்.
இங்கே உள்ள கயிலாசநாதர் கோயில் வந்த கதை ராமயணக் காலத்தில் ஆரம்பிக்கிறது. ராமபிரான் ராவண வதம் முடித்து, அயோத்திக்குத் திரும்பியதும், அசுவமேதயாகம் செய்தாராம். அசுவமேத யாகத்துக்கு முன் குதிரையொன்றைக் கொடியுடன் நாடு முழுவதும் அனுப்பும் வழக்கமுண்டு. அவ்வாறு செல்கிற குதிரை எங்கெல்லாம் தங்கி, நின்று இளைப்பாறுகிறதோ, அங்கெல்லாம் ராமபிரான் பிற்காலத்தில் வந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்றொரு கதையுண்டு. அப்படி ராமனே, காசியில் இருந்து லிங்கத்தை எடுத்து வந்து, தன் கையால் பிரதிஷ்டை செய்து, வழிபட்ட தலமே திடியன் கைலாசநாத கோயில் என்பது இம்மக்களின் நம்பிக்கை.

திடியன் மலைதிடியன் மலை
ராமாயண காலத்தை மட்டும் சொல்லிவிட்டு போய்விட்டால் எப்படி... மகாபாரதக் காலமும் இக்கோயிலோடு சேர்கிறது. பஞ்சபாண்டவர்களில் ஒருவனான சகாதேவன், வான சாஸ்திரக் கலையை இங்கு வந்து கற்றதாக ஒரு கதையுண்டு. அத்தோடு, அகத்திய முனிவர் கயிலாயத்தில் இருந்து தன்னகத்துக்கு வந்தபோது, இங்கு தங்கி, வழிபட்டே பின்னே, யாத்திரையைத் தொடர்ந்தார் என்றும் சொல்கிறார்கள். அத்தோடு, முருகன் திருப்பரங்குன்றத்தில் தெய்வானையை திருமணம் செய்யும் முன் இங்குவந்து, சிவனை வணங்கியே சென்றதாகவும் சொல்கிறார்கள்.

இங்குள்ள தட்சிணாமூர்த்திக்குக் கூடுதல் சிறப்பென்றும் சொல்கிறார்கள். அத்தோடு கூடவே, “இங்க இருக்க கோபுரத்தில, விஷ்ணு சிலை இருக்கு பாருங்க. இப்படி சிவனும் விஷ்ணுவும் இருக்கிற கோயில் கிருத யுகத்தைச் சேர்ந்தது என்கிறது சாஸ்திரம். அந்தக் காலத்தில்தான் அப்படிச் சேர்ந்து இருக்குமாம்” என்று பெருமை பொங்கக் கூறுகிறார் ஊர்ப்பெரியவர் ஒருவர்.


இந்தக் கயிலாசநாதர் கோயிலுக்குத் தலவிருட்சமாக, நெக்கொட்டான் மரம் என்கிற திண்டீர தைல ஜோதி வகையைச் சேர்ந்த மரம் இருக்கிறது. இது ஒளியுமிழும் மரம் என்றும், அந்த ஒளியிலேயே தேவர்களும், முனிவர்களும் பூமிக்கு வருவதாகவும் இவ்வூர் மக்கள் நம்புகிறார்கள்.

இந்த மரத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அங்கிருந்த பெரியம்மா ஒருவர்,

“திடியன்மலை மேலே தெரியுது பாருங்க ஒரு குகை. அதுக்குப் பேரு ஆண்டிப்புடவு. அங்க இன்னிக்கும் கட்டைவிரல் அளவுள்ள, மரணத்தை வென்ற சித்தர்கள் இருக்காங்க. அவங்களுக்கு உதவி செய்யுறதுக்காக வெள்ளை உடை தரித்த கட்டைவிரல் அளவுள்ள கட்டையர்களும் இருக்காங்க” என்று சொன்னார்.

உள்ளூர்க்காரர்களில் பலரும் இன்னும் திடியன்மலை மேலுள்ள சமண முனிகள் வாழ்ந்த ஆண்டிப்புடவு குகையில் கட்டைவிரல் சித்தர்கள் வாழ்வதாகவே நம்பிக்கையோடு சொல்கிறார்கள். அதிகாலையில் தாமரைக்குளத்தில் நீராட அவர்கள் வருவதாகவும் சொல்கிறார்கள். சொல்லும்போதே, அவர்கள் கண்களிலும், குரலிலும் ஒருவித பக்தி உணர்வை நாம் உணரமுடிகிறது.

திடியன் மலைதிடியன் மலை
திடியன் மலையடிவாரத்தில் இருக்கும் கயிலாசநாதர் கோயிலைக் கடந்து, மலை ஏறினால், புதிதாகக் கட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோயிலும், கொஞ்சம் மேலே ஏறினால், ஆண்டிப்புடவு என்கிற சமணர் குகைக்கோயிலும், அதற்கும் மேலே ஏறினால், தங்கமலை ராமர் கோயிலும் உள்ளன. இவ்வாறு சைவ, வைணவ, சமண, ராமாயண, மகாபாரத ஒருங்கிணைப்பாக திடியன் திகழ்கிறது.
கயிலாசநாதர் கோயிலுக்குப் பின்னால், தனியாருக்குச் சொந்தமான வாலகுருநாத சுவாமி கோயில் ஒன்று உள்ளது. இந்த இரு கோயில்களுக்கும் இடையே அழகான அடர்ந்த ஆலமரங்கள் உள்ளன. பறவைகளை உற்று நோக்கும் ஆர்வமுள்ள பறவையியலாளர்கள் இங்கு இரண்டு மணி நேரம் உட்கார்ந்தால், குறைந்தது 30 வகைப் பறவைகளையாவது பார்த்துவிட முடியும். பல வண்ணங்களோடும், பறவைகளின் ஒலியோடும் அங்கு வீசுகிற காற்று, புதியதோர் உணர்வைத் தருகிறது.

இங்கு பார்த்ததும் மனசில் ஒட்டிக் கொண்ட விசயம், அங்குள்ள மரங்களைப் பாதுகாக்க, மலையைப் பசுமையாக்க, அவ்வூர் மக்கள் காட்டும் அக்கறையும், முயற்சியும். வழுக்கும் மொட்டை மலையில், மரக்கன்றுகள் நட்டு, அவை சாயாமல் இருக்க கவட்டைக்குச்சிகள் நிறுத்தி, சுற்றிலும் கற்கள் அடுக்கி, தண்ணீரைத் தேங்கச் செய்து, மலையில் மரம் வளர்க்கிறார்கள். ஆலமரத்தின் விழுதுகளைக் குழாய் மூலம் கீழிறங்கச் செய்து, முனை முறியாமல் மண்ணுக்குள் வேர்பிடிக்கச் செய்கிறார்கள். இவர்களைப் போன்ற மனிதர்களால், பூமித்தாய் இன்னும் கொஞ்சகாலம் பச்சையாடை உடுத்துக் கொள்வாள் என்று நம்பிக்கை தோன்றியது.

சோணை முத்தையாசோணை முத்தையா
மலையின் இன்னொரு புறம் இருக்கும் கோயில் இந்த மண்ணின் மக்களுக்கு மிகவும் நெருக்கமான சோணை முத்தையா கருப்பசாமி கோயில். எப்போதும் கிடாவெட்டும், கறிசோறுமாய் கலகலப்பாய் இருக்கும் சோணை முத்தையா சாமி, காலில் செருப்போடு, கையில் துப்பாக்கி சகிதம் ஊர்க்காவலுக்கு போகும் தோற்றம், காலத்திற்கேற்ப நம்மூர் தெய்வங்களும் காட்சிகொடுக்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றியது.

திடியன் கிராமம் குறித்த தேடலில் தூங்காத்தேவர், பின்னத்தேவர், பிறமலைக் கள்ளர் நாட்டு வரலாறு, கோயில், திடியன் மலையைச் சுற்றி நிறையக் கதைகள் என அறிந்துகொள்ள ஆயிரம் செய்திகள் கிடைத்தன. மூதூர் மதுரை தன்னைச் சுற்றி இப்படி இன்னும் எத்தனை ஆயிரம் கதைகளை புதைத்து வைத்திருக்கிறதோ என்பது வியப்பாய் இருக்கிறது.

ஒரே ஊரில் பசுமைநடை, மலையேற்றம், பறவைகள் கவனிப்பு, வரலாறு, வழிபாடு, தத்துவ விசாரணைகள் என அத்தனையும் கலந்த அனுபவத்தைத் தரும் இடம் திடியன் மலை.

வரலாற்றுப் புரிதலும், கற்பனை ஆற்றலும் எழுதும் ஆசையும் உள்ளவர் இங்கே வந்தால் கட்டாயம் தமிழகத்திற்கு ஆகச்சிறந்த சரித்திர நாவல்கள் கிடைக்கக்கூடும்.

வாய்ப்புக் கிடைக்கும்போது திடியன் மலைக்குப் பயணியுங்கள்.

- வலம் வருவோம்...





No comments:

Post a Comment