Monday 11 March 2024

குரோதி வருட தமிழ்ப் புத்தாண்டு

 மங்களகரமான குரோதி வருட தமிழ்ப் புத்தாண்டு வருட பிறப்பு வாக்கிய பஞ்சாங்கப்படி 13.04.2024 சனிக்கிழமை இரவு 08 மணி 15 நிமிடத்தில் ஸ்திர துலா லக்கினத்தில் சனி ஓரையில் குரோதி வருடம் பிறக்கின்றது.


விஷு புண்ணிய காலம் - மருத்துநீர் வைக்கும் நேரம்:-


13.04.2024 பிற்பகல் 04.15 மணி முதல் இரவு 2.15 மணி வரை

         (14.04.2024 - 12.15 AM) மணி வரை 


அணியும் ஆடைகள்:-


வெண்மையான பட்டாடை அல்லது வெள்ளைகரை அமைந்த பட்டாடை.


சங்கிரம தோஷ நட்சத்திரங்கள்:-


மிருகசீரிடம், திருவாதிரை, புநர்பூசம் 01,02,03 ம் கால்கள், சித்திரை, விசாகம் 04 கால், அனுஷம், கேட்டை, அவிட்டம்


கை விஷேடம் பரிமாறும் நேரங்கள்:-


14.04.2024 காலை 07.57 மணி முதல் 09.56 மணி வரை 


14.04.2024 காலை 09.59 மணி முதல் 12.01 மணி வரை 


14.04.2024 இரவு 06.17 மணி முதல் 08.17 மணி வரை 


15.04.2024 காலை 09.08 மணி முதல் 09.51 மணி வரை 


15.04.2024 காலை 09.55 மணி முதல் 10.30  மணி வரை 


"குரோதி வருட வெண்பா"

-------------------------------------------------


இடைக்காடரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.


"கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால் பாரிற் சனங்கள் பயமடைவார் - கார்மிக்க அற்பமழை பெய்யுமே மஃகங்குறையுமே சொற்பவிளையுண்டெனவே சொல்"

                  - இடைக்காடர்


பாடல் விளக்கம்:

             குரோதி தமிழ் ஆண்டு கோரமான வருடம். எங்கும் கொள்ளை களவு பகை பெருகும். திருடர்கள் மக்களை தாக்கி அழிப்பர். ஊரில் பயம் மிகுதியாகும். மழையும் தேவையான நேரத்தில் மிகவும் குறைவாகவே பொழியும். எங்கும் காய்கறிகளின் பற்றாக்குறை காணப்படும். பயிர்களும் அழிந்து போய் மிகவும் அற்பமான விளைச்சலைத் தரும் என்று வெண்பாவில் சொல்லப்பட்டுள்ளது.


குரோதி தமிழ் புத்தாண்டு 60 ஆண்டுகளில் 38வது ஆண்டாக உள்ளது. குரோதி என்றால் பகைக்கேடு என்று பொருள். குரோதி வருடத்தில் என்ன நடக்கும் வெண்பாவில் கூறப்பட்டுள்ளது.


பஞ்சாங்கம் கணிப்பு 2024-25

-------------------------------------------------------


2024ஆம் ஆண்டில் ஆதாயம் 47 ஆகவும் வருவாய் 71 ஆகவும் இருக்கும். புதிய வரிகள் விதிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். தனியார் நிறுவனங்கள் அதிக அளவிலான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.


குரோதி தமிழ் ஆண்டில் இயற்கை நிகழ்வுகளில் மழை வெள்ள பாதிப்பு அதிகமாக இருக்கும். 16 புயல்கள் உருவாகும். அதில் 4 புயல்கள் ஆரம்ப கட்டத்திலேயே வலுவிழந்து விடும்.9 புயல்கள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி கடும் சூறாவளி காற்றுடன் கனமழை பொழியும். வெள்ளம் அதிக அளவில் ஏற்படும்.


பூண்டு, வெங்காயம், புளி, மாங்காய், கடுகு, அரிசி விலை உயரும். மின்சார உற்பத்தி பாதிப்பால் மின்வெட்டு அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும். ரியல் எஸ்டேட் நிறுவனம் வளர்ச்சி அதிகரிக்கும். 


கண் நோய், இருமல், காதுவலி, விஷ காய்ச்சல் அதிக அளவில் மக்களை பாதிக்கும். புற்றுநோய்க்கு இந்தியா மருந்து கண்டு பிடிக்கும். வவ்வால்கள் தொல்லை அதிகமாக இருக்கும். 


கையில் பணம் வைத்திருப்பது குறையும். ஆன்லைன் வியாபாரம் சூடுபிடிக்கும். மோசடிகள் அதிகரிக்கும். பாக பிரச்சனைகள் சம்பந்தமாக அதிக வழக்குகள் ஏற்படும். போலீசார் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். 


வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களால் திருட்டு கைவரிசைகள் தமிழகத்தில் அதிகரிக்கலாம். பாரத திருநாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள அண்டை நாடான பாகிஸ்தான் அல்லது தெற்கு பகுதியில் உள்ள இலங்கை நமது நாட்டுடன் இணையும் சூழ்நிலை உருவாகலாம். 


சிறுபான்மையினர் வாழும் நாடுகளில் எல்லை பிரச்சனைகள் உருவாகி போர் மூளும் சூழல் உருவாகலாம். இந்தியாவில் பணப்புழக்கம் கடுமையாக பாதிக்கும். மின்சாரக்கட்டணம் கடுமையாக உயரும்.


குரோதி  சித்திரை மாதத்தில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.


குரோதி வருஷத்திய

தேவதை - அஜராபிரபு.

ராஜா - செவ்வாய்

மந்திரி - சனி, சேனாதிபதி,

அர்க்காதிபதி - சுக்கிரன்,

ரஸாதிபதி - குரு,

தானியாதிபதி - சூரியன்.


குரோதி தமிழ் வருடத்தில் ராஜாவாக செவ்வாய் வருவதால் பெருமளவு தீ விபத்துக்களும் வாகன விபத்துக்களும் உண்டாகும். அரசியல்வாதிகளுக்குள் சண்டையும் அதனால் குழப்பமும் உண்டாகும். குரோதி ஆண்டின் கடைசியில் அரசனுக்கு நோயும் கண்டமும் உண்டாகும். மந்திரியாக சனி வருவதால் நாட்டில் விலைவாசி உயரும். காய்கறிகள், கனிகள் விலை உயரும். அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படும் புதுவித நோய்கள் உண்டாகும். சேனாதிபதி, அர்க்காதிபதியாக சுக்கிரன் வருவதால் எல்லையில் போர் பயம் உருவாகும். காதல் திருமணங்கள் அதிகம் நடைபெறும். நாட்டில் நல்ல மழை பொழியும் பயிர்கள் செழித்து தானிய உற்பத்தி அதிகரிக்கும். விவசாயம் செழிக்கும்.


ரஸாதிபதியாக குரு வருவதால் கரும்பு விளைச்சல் அதிகரிக்கும். மஞ்சள் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும். வருடம் முழுவதும் நல்ல மழை பொழிந்து விளைச்சல் அதிகமாகும். தானியாதிபதியாக சூரியன் வருவதால் சிவப்பு நிற பொருட்கள் விளைச்சல் அதிகமாகும். பீகார் மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். விளைச்சல் உற்பத்தி பாதிக்கும்.


குரோதி ஆண்டு கிரக நிலை:

--------------------------------------------------------

                  மேஷ ராசியில் சூரியன், குரு, மிதுனத்தில் சந்திரன், கன்னியில் கேது, கும்பத்தில் சனி, செவ்வாய், மீனத்தில் ராகு, புதன், சுக்கிரன் என நவகிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்தாண்டு ஏப்ரல் 14, சித்திரை 1ம் தேதி, ஞாயிற்றுக் கிழமையில் மிதுன ராசியில் பிறக்கின்றது.


இந்தப்  புத்தாண்டு தினத்தின் சிறப்பு

----------------------------------------------------------------------- 


புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும். வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.இத்துடன் கூட பல வீடுகளில், வெப்பத்தைத் தணிக்கும் நீர்மோர், இனிப்பைக் கூட்டும் பானகம் ஆகியவையும் அருந்தப்படுகின்றன. பின்னர் பருப்பு, வடை பாயசம் இவற்றுடன் கூடிய பெரிய விருந்து ஒன்றை, இந்த நாளில், மக்கள், குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினருட உண்டு மகிழ்கிறார்கள்.  இவ்வாறு நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் புதிய வருடத்தை மக்கள் துவக்குகிறார்கள்.


திருவிடைமருதூரில் கார் திருவிழாவும், திருச்சிராப்பள்ளி மற்றும் காஞ்சிபுரத்தில் மற்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. "மாங்காய்-பச்சடி" என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு உணவைக் கொண்ட ஒரு சிறப்பு விருந்தை குடும்பங்கள் ஒன்றாக அனுபவிக்கின்றன. உகாதி மற்றும் விஷூவின் போது தயாரிக்கப்படும் பொதுவான இனிப்பு சுவையான "பச்சடி" போன்ற உணவு வகைகளை ஒத்திருக்கிறது. இது வெல்லம், புளிப்பு பச்சை மாங்காய், துவர்ப்பு கடுகு, கசப்பான வேம்பு மற்றும் சிவப்பு மிளகாய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் கலவையாகும். 

வழக்கத்தின் மற்றொரு ஒருங்கிணைந்த பகுதி "பஞ்சாங்கம்" வாசிப்பது. வாசிப்பு பொதுவாக குடும்பத்தின் மூத்த உறுப்பினரால் செய்யப்படுகிறது. 


புத்தாண்டுக் கொண்டாட்டம்

------------------------------------------------------


தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை மாதம் முதல் நாள் அன்று அதிகாலையிலேயே துயில் எழுவது மிகவும் நல்லது. மற்ற தினங்களைப் போல அல்லாமல் இந்த சித்திரை மாதம் முதல் தினத்தன்று புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் உடல் வெப்பம் குறைந்து நோய்கள் தீரவும் தோஷ நிவர்த்திக்காகவும்  பல மூலிகைகள் சேர்ந்த மருத்துநீரை தலையிலும் உடம்பிலும் தடவி முதலில் நீராடுவது வழக்கம்.மருத்து நீரில் அனைவரும் குளியலை மேற்கொள்ள வேண்டும். மருத்து நீர் என்பது நமது முன்னோர்களால் தமிழ் வருடப் பிறப்பு அன்று குளிக்கும் போது பயன்படுத்தப்பட்ட ஒரு நீராகும். தற்கால தமிழர்கள் அதிகம் இதை பற்றி அறியாமல் இருக்க காரணம் இந்த மருத்து நீரை தயாரிக்க தேவையான பொருட்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்காததும், இதை தயாரிக்கும் முறை பற்றி அறியாததே ஆகும். எனினும் இந்த மருத்து நீரை தயாரிக்க நினைப்பவர்கள் ஒரு பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி அதில் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியால் செங்கழு நீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றில் சிறிதளவை போட்டு நன்கு காய்ச்சி நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டிலேயே இந்த மருத்து நீரை தயாரிக்க தெரியாதவர்கள், இப்புனித மருத்து நீரை, கோயில்களில் சேவை புரியும் அந்தணப் பெரியோர்களிடம் தயாரித்து தரும்படி கேட்டு பெற்று கொண்டு குளிக்க வேண்டும். 


குளிக்கும் போது தலையில் கொன்றை இலையையும், காலில் புங்கம் இலையையும் வைத்து குளிக்க வேண்டும். இப்படி செய்வதால் பிறந்திருக்கும் தமிழ் வருடத்திற்குரிய தோஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தோஷங்கள் நீங்க பெறும். மற்ற நட்சத்திரக்காரர்களும் இப்படி குளிப்பதால் அவர்களின் அனைத்து தோஷங்களும் நீங்கி, புதிதாக பிறந்திருக்கும் புத்தாண்டில் அதிர்ஷ்டங்கள் பெருகும். வெண்மையான பட்டாடை அல்லது வெள்ளைகரை அமைந்த பட்டாடைகளை அணிந்து கொள்வதால் பிறக்கின்ற புத்தாண்டு உங்கள் குடும்பத்தில் வளமையை கொடுக்கும் என்பது ஐதீகம்.

       பின்னர் உங்கள் வீட்டின் பூஜையறையில் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், போன்றவற்றை வைத்து, இஷ்ட தெய்வம் மற்றும் குல தெய்வ படங்களையும் தரிசித்து வணங்க வேண்டும். பிறகு உங்கள் வீட்டில் இருக்கும் வயதில் மூத்தோரான தாத்தா, பாட்டி, தாய், தந்தை மற்றும் இன்ன பிற பெரியோர்களை வணங்கி, அவர்களின் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். பிறகு அருகிலுள்ள கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும். 


இந்த புத்தாண்டு தினத்தை உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாட வாழ்த்துக்கள். உங்கள் வீட்டில் தலை வாழை இலை விருந்தை அனைவரும் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.


புது வருட பிறப்பு நாளில் நல்ல செயல்களை மட்டுமே செய்யுங்கள்.  எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து விடுங்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இதுபோல ஒற்றுமையோடு ஆண்டு முழுவதும் இருக்க வேண்டிக்கொள்ளுங்கள்.


அனைவருக்கும் மங்களகரமான குரோதி   வருடம்  

தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

             - சித்தர்களின் குரல்.

No comments:

Post a Comment