Wednesday, 18 September 2019

கணக்கு விநாயகர்

கணபதி மூலாதார சக்தியின் வடிவமாகும். ‘க’ என்பது ஞானத்தையும், ‘ண’ என்பது மோட்சத்தையும், ‘பதி’ என்பது இருப்பிடத்தையும் குறிப்பதாகும். ஞானத்திற்கும் வீடுபேற்றிற்கும் அதிபதி என்பதால், இவர் ‘கணபதி’ எனப்பட்டார். இவர் கணங்களின் தலைவனாக இருந்தமையால் ‘கணபதி’ என ரிக் வேதமும், யானை முகத்தைக் கொண்டிருந்தமையால் ‘யானைமுகத்தான்’ என அதர்வணவேதமும், ஒற்றைக் கொம்பை கொண்டிருந்ததால் ‘ஒற்றைக்கொம்பன்’ என தைத்ரிய உபநிஷத்தும் கூறுகின்றன. இவர் வினைகளை அழிக்கும் தலைமை நாயகர் என்பதால் ‘விநாயகர்’ என்றும், விக்னங்களை தீர்ப்பவர் என்பதால் ‘விக்னேஸ்வரர்’ என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

சிவபெருமான் 64 வடிவங்களைக் கொண்டிருப்பது போல, கணபதி 32 வடிவங்களை கொண்டுள்ளார். சிவாலயம் இல்லாத ஊர் இருக்கலாம்; ஆனால் விநாயகர் கோவில் இல்லாத ஊரை காண்பது அரிது. விநாயகர் வழிபாட்டின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையே இதற்கு காரணம் என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு கடவுளையும் வணங்கும்போது அவருடைய உருவம் அல்லது படத்தை வைத்து வழிபடுவது நடைமுறை. ஆனால் விநாயகரை வழிபட உருவமோ அல்லது படமோ தேவையில்லை. அவரை நினைத்து மண், சாணம், மஞ்சள், வெல்லம் இப்படி ஏதாவது ஒன்றை கைப்பிடி அளவு பிடித்து வைத்தாலே போதும். அது கணபதியின் உருவமாகி விடும்.

பண்டைய மன்னர்கள் ஆலயத்தையும், ஆலய வழிபாட்டையும் மையமாக வைத்தே ஆட்சி புரிந்தனர். அதனால் அவர்களது ஒவ்வொரு செயலும் இறை வணக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டது. எந்த இறைவனை உயர்வான சக்தியாக கருதினார்களோ, அந்த இறைவனுக்கே ஆலயம் எழுப்பும்போதும் அதை கடைப்பிடிக்க தவறியதில்லை. கங்கை நதி வரை படையெடுத்துச் சென்று மாபெரும் வெற்றியைப் பெற்று அதன் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் என்னும் ஊரையும், சோழகங்கம் என்னும் ஏரியையும், கங்கைகொண்ட சோழீச்சுரம் என்னும் ஆலயத்தையும் நிர்மாணித்த ராஜேந்திரசோழன் அவைகளுக்கெல்லாம் முதற்பணியாக ஒரு விநாயகர் திருக்கோவிலை எழுப்பினான்.

கங்கைகொண்ட சோழீச்சுவரமுடையார் கோவிலுக்கு கன்னிமூலையில் (தென்மேற்கு திசையில்) விநாயகர் ஆலயத்திற்கான கட்டுமானப் பணியை மேற்கொண்ட ராஜேந்திர சோழன், கங்கை படையெடுப்பின் போது தான் கொண்டு வந்த விநாயகர் சிலையை அங்கு பிரதிஷ்டை செய்தான். அந்த விநாயகருக்கு ‘கனக விநாயகர்’ என்று பெயரிட்டு கும்பாபிஷேகமும் செய்வித்தான். இவ்வாலயத்தில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலை வாதாபியில் இருந்தும், நுளம்பர் நாட்டில் இருந்தும் கொண்டு வரப்பட்டதாக இருவிதமான வரலாற்றை முன்வைக்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். இந்த கனகவிநாயகர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட பிறகுதான், கங்கைகொண்ட சோழீச்சுரம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

கங்கைகொண்ட சோழீச்சுரத்தின் திருப்பணி அமைச்சர் ஒருவர் ஒருங்கிணைப்பிலும், அவருக்கு கீழே கணக்கர் ஒருவர் மேற்பார்வையிலும் தடையின்றி நடைபெற்று வந்தது. திருப்பணிக்காக செலவிடப்படும் பொன்- பொருட்களை கையாளவேண்டியது கணக்கரின் பணியாகும். அரண்மனை கருவூலத்தில் அனுதினமும் பொன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் கணக்கர், அவற்றை கனக விநாயகர் திருவடியின் முன்வைத்து வணங்கிய பிறகே, ஆலயத் திருப்பணிகளுக்காக செலவிடுவார். இப்படியே இடைவிடாமல் 16 ஆண்டு காலம் ஆலய கணக்கரின் மேற்பார்வையில் திருப்பணி மும்முரமாக நடைபெற்று வந்தன.

ஒரு நாள் ஆலயத் திருப்பணியை பார்வையிட மன்னன் ராஜேந்திரன் வந்தான். ஆலயம் கம்பீரமாக எழும்பிக் கொண்டிருப்பது கண்டு பரவசமடைந்தான். பின் கணக்கரிடம், “திருப்பணி செலவுக்குரிய கணக்கை நாளைக் காலை தெரிவியுங்கள்” என கூறிவிட்டுச் சென்றான்.

ஆலய மேற்பார்வை செய்த கணக்கருக்கு தூக்கிவாரிப் போட்டது. திருப்பணிக்குத் தேவையான செலவைத்தவிர வேறு எந்த செலவும் செய்யாததாலும், காலை முதல் இரவு வரை ஆலயப் பணியிலேயே முழுமையாக ஈடுபட்டிருந்ததாலும் அவருக்கு கணக்கு எழுத நேரமில்லாமல் போனது. மேலும் அரசனும் இதுநாள் வரை கணக்குக் கேட்காததால் வரவு செலவு கணக்கை அவர் எழுதி வைக்க நினைக்கவில்லை. ஆனால் மன்னன் கேட்ட பிறகு கொடுத்துதானே ஆகவேண்டும். பதினாறு வருட கணக்கை தயார் செய்வது எப்படி என்றெண்ணி கவலைப்பட்டவர், தம்மை தெய்வம்தான் காக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் கனக விநாயகர் சன்னிதிக்கு ஓடோடி வந்தார்.

“பெருமானே! மன்னர் திடீரென கணக்குக் கேட்கிறார். நான் என்ன செய்வேன்? தாங்கள்தான் இதற்கு வழிகாட்ட வேண்டும்” என கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்துவிட்டு, நடப்பது நடக்கட்டும் என்பதாக இல்லம் சென்றார்.

அன்றிரவு கணக்கர் கனவில் தோன்றிய கனக விநாயகர், “கணக்கரே! வருந்தாதீர். நாளை மன்னரை சந்தித்து, ‘இதுநாள் வரை எத்து நூல் என்பது லட்சம் பொன் செலவானது’ என கூறுங்கள்” என அருளி மறைந்தார்.

கண்விழித்த அமைச்சர் கனக விநாயகர் சன்னிதி நோக்கி கைகூப்பி வணங்கினார். உடனே ஓலைச் சுவடியை எடுத்து அதில் ‘எத்து நூல் என்பது லட்சம் பொன்’ என்று எழுதி வைத்துவிட்டு உறங்கிவிட்டார். மரவேலை, சுவர் வேலை செய்யும்போது வளைவு வராமல் இருப்பதற்காக பயன்படுத்தும் நூலை ‘எத்துநூல்’ என்பர். இதைக்கொண்டே ஒவ்வொரு கட்டுமானத்திற்கும் பயன்படுத்தப்படும் கல், மரம், மணல், மற்றும் இதர பொருட்கள் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என கணக்கிட்டுவிடலாம். பண்டைய கோவில் கட்டுமானத்தில் எத்து நூல் முக்கிய இடத்தை வகித்துள்ளது.

மறுநாள் மன்னரிடம் வந்த கணக்கர், விநாயகர் கனவில் சொன்னபடி கூறினார். அதைக் கேட்ட மன்னன் “இவ்வளவு செலவானதென்றால் நான் நினைத்தாற்போல கோவில் சிறந்த முறையில்தான் உருவாகிவருகிறது. மகிழ்ச்சி! கணக்கரே, எப்படி நீங்கள் இவ்வளவு துல்லியமாகக் கணக்கிட்டுச் சொன்னீர்கள்” என்று கேட்டான்.

நடந்த உண்மைகளை கணக்கர் அப்படியே கூறிவிட்டார். ஆச்சரியமடைந்த மன்னன் உடனடியாக கனக விநாயகர் சன்னிதிக்குச் சென்று கண்ணீர் மல்க வணங்கினான்.

“விநாயகப் பெருமானே கணக்கு தெரிவித்து, பிரகதீஸ்வரர் ஆலயம் எழும்ப ஆசி வழங்கிவிட்டார். அவ்விதத்தில் கனகவிநாய கரான இவர், ஆலயப் பணியின் கணக்குப் பிள்ளையார் ஆகிவிட்டார்” என பெருமிதத்துடன் கூறினான்.

இந்த அற்புத விநாயகரை பிற்காலத்தில் எவரேனும் வேறு இடத்திற்கு மாற்றிவிடக்கூடாது என்று நினைத்த மன்னன், 4 அடி உயரம், 3 அடி அகலமுடைய இந்த விநாயகரின் சன்னிதி முன் மிகச்சிறிய நுழைவு வாசலைக் கட்டினான். அந்நியர் படையெடுப்பு நடந்தபோது, பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கும் இந்த கனக விநாயகர் ஆலயத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு இந்த கனக விநாயகரின் அருளே காரணமாகும்.

கணக்கரை காப்பதற்காக கணக்குரைத்த கனக விநாயகர் அன்றுமுதல் ‘கணக்கு விநாயகர்’ என்று அழைப்படலானார். இதுவே காலப்போக்கில் கணக்க விநாயகர் என்றாகிப் போனது. கங்கைகொண்ட சோழபுரத்தை தனது தலைநகராக மாற்றிக் கொண்டு இங்கிருந்தவாறே ஆட்சியை தொடர்ந்த சோழ மன்னன் அனுதினமும் கணக்க விநாயகர் ஆலயம் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டான். போர்க்களம் செல்வது முதல் எந்தவொரு வேலையையும் செய்யும் முன்பாக, அவன் வழக்கமாக வழிபடும் முக்கிய கோவில்களில் கணக்க விநாயகர் கோவிலும் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. அவ்வாலய வழிபாடு அவனுக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்தது.

வழிபாட்டு பலன்

சுமார் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததும், வடதிசை பார்த்து அமைந்ததுமான இந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்யும் போது, இவரின் திருமேனி பச்சைநிறமாக மாறுவது தனிச் சிறப்பாகும். மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரிது என்பதற்கேற்ப, சிறிய ஆலயம் என்றாலும் அளவற்ற அருளும் ஆற்றலும் தரும் ஆலயமாக இது திகழ்கிறது. புதிதாக ஆலயம் கட்டும் முயற்சியில் ஈடுபடுவோர், ஏற்கனவே உள்ள ஆலயத்தை புதுப்பிக்க நினைப்போர், சொந்தமாக வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் புதிதாக வணிகம் தொடங்குவோர், ஏற்கனவே செய்துவரும் வணிகத்தில் சரிவை சந்திப்பவர்கள், கல்வியில் மேன்மை பெற விரும்புபவர்கள், இந்த விநாயகரை வழிபட்டு பலனும் பலமும் பெறலாம்.

குறிப்பாக கங்கைகொண்ட சோழபுரம் செல்பவர்கள், ஒரு வெற்றிச் சின்னத்தின் வரலாற்றில் இடம் பிடித்துள்ள இந்த விநாயகரை அவசியம் தரிசித்தல் வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழீச்சுவரமுடையார் ஆலயத்தின் தென்மேற்கில் அரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கணக்க விநாயகர் ஆலயம். இங்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது. நடந்தும் ஆலயத்தை அடையலாம்.