Tuesday, 30 July 2019

அகத்தியர் வாக்கு - திருவானைக்கா தட்சிணாமூர்த்தி, அம்மை நோய்,பராய்த்துறை பராய் மரம்

குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் தினம் ஒரு ஜீவ அருள்நாடி வாக்கு :

திருவானைக்கா தட்சிணாமூர்த்தி
பற்றி?

நீர் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும், வியாதிகளுக்கும் தீர்வு தரக்கூடிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. அதுமட்டுமல்லாமல் மழை குறைந்தால் வழிபடவேண்டிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இவை புற விஷயங்கள். ஆத்ம ஞானம் விரும்புபவர்கள் வழிபடவேண்டிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

இறைவன் எந்த இடத்தில் நிறைந்து காணப்படுகிறார் ?

இறைவன் எந்த இடத்தில் நிறைந்து காணவில்லை ? என்று கூறு. பிறகு இறைவன் எந்த இடத்தில் நிறைந்து காணப்படுகிறார் என்று யாங்கள் கூறுகிறோம். இறைவன் ஒரு இடத்தில் இருக்கிறார் என்று கூறும்பொழுதே இன்னொரு இடத்தில் இல்லை என்று ஆகிவிடுகிறது. எனவேதான் “ பார்க்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைந்திருக்கிறார் “ என்று ஒருவன் கூறியிருக்கிறான். இந்த பதிலைதான் நீ எப்படிக் கேட்டாலும் நாங்கள் கூறுவோம். ஆனால் அந்த இறையாற்றலை புரிந்துகொள்ளும் தகுதியைதான் வளர்த்துக்கொள்ள மனிதன் தவறுகிறான். அப்படி வளர்த்துக்கொண்டுவிட்டால் அவன் இருக்குமிடமோ, ஆலயமோ, ஏகாந்தமோ, எங்கிருந்தாலும் அந்த இறையாற்றலை அவனால் உணர
முடியும். இங்கு பிரச்சினை இறையிடம் அல்ல. மனிதனிடம்தான். 
அதிகம் வழிபடாத ஆலயங்களிலே இறையாற்றல் இருக்கிறது என்றால் அப்படியாவது மனிதர்கள் அங்கு சென்று தீபம் ஏற்றட்டும், உழவாரப் பணி செய்யட்டும், பூஜைகள் தொடரட்டும் என்ற அர்த்தத்தில்தான். அதிகம் வழிபடாத ஆலயத்திலே இறையருள் இருக்கிறதென்றால் அதிகம் வழிபடும் ஆலயத்தில் இறையருள்  இல்லை என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளக் கூடாது. எனவே நீ கூறிய இரண்டிலும் சம ஆற்றல்தான் நிறைந்திருக்கிறது.

அம்மை நோய் தீர்வதற்கு?

இளநீர் தானங்கள் தரலாம். பழனி சந்தனத்தை அவர்களுக்கு உண்ணத் தரலாம். அருகிலே புன்னை அன்னை இருக்கிறாள். அவளை வணங்கி வரலாம். புன்னையன்னைதான் சரியான மருந்து.

இறைவன் எப்படியோ அப்படியிருக்க கற்றுக்கொள். நல்லவருக்கும், தீயவருக்கும் ஒன்றுபோல்தான் இறைவன், காற்றை, மழையை, சூரியனை, சந்திரனை, கடல், ஆறு, நதி, பூமி, பூமியில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் படைத்திருக்கிறார். எனவே நீயும் இறைவன் பார்வையில் பார். முதலில் கொடுத்துப்பார். தொடர்ந்து ஏமாற்றுகிறான் என்று தெரிந்தால் கொடுக்காதே. அவ்வளவுதான் எம்மால் கூறமுடியும். ஏனென்றால் ஒருவன் நல்லவனா, கெட்டவனா, ஏமாற்றுகிறானா என்று பார்த்து, பார்த்து தர்மங்கள் செய்யத் துவங்கினால் ஒருவனுக்குக்கூட தர்மம் செய்ய முடியாது. ஆராய்ச்சி மட்டும்தான் செய்துகொண்டிருக்க முடியும்.
தொடர்ந்து இதுபோன்ற பல பணிகள் செய்ய நல்லாசிகளப்பா. இத்தருணம் விழி குறைபாடு மனிதர்கள் உள்ள அமைப்புக்கு உதவி செய்யவேண்டிய தருணம். வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்தி செய்யலாம்.
 தானத்திற்கும், தர்மத்திற்கும் இதுதான், அதுதான் என்பதல்ல. யாருக்கு எப்பொழுது எது தேவையோ, அது நேர்மையான வழிமுறையாக இருக்கும் பட்சத்தில் அதனை செய்யலாம்.

திருப்பராய்த்துறை ஸ்தலவிருக்ஷமான பராய் மரத்தை எப்படி பயன்படுத்தினால் நோய்கள் தீரும் ?

பொதுவாக எல்லா மரங்களிலும் எல்லா பாகங்களுக்கும் மருத்துவ குணம் உண்டு. மருத்துவ குணம் அதிகமாக வேண்டுமானால் அதன் ஆயுட்காலம் அதிகமாக இருக்க வேண்டும். நன்றாக இருக்கும்போதே மரத்தை வெட்டி பயன்படுத்தக்கூடாது என்றாலும்கூட மனிதனுக்கு வேறு வழியில்லை. மன்னிப்பு கேட்டுக்கொண்டு அதை செய்யவேண்டியிருக்கிறது. வேர்கள், இலைகள், கிளைகள், பட்டைகள் என்று எல்லாவற்றிற்கும் மதிப்பு உண்டு. இருந்தாலும் வயது முதிர்ந்த மரங்களின் பட்டைகளுக்கு அதிக மருத்துவ
குணம் உண்டு.  இவற்றை கஷாயமாக பயன்படுத்தலாம் அல்லது நிழலிலே உலர்த்தி பொடி செய்து மீண்டும் நீரிலே கொதிக்கவைத்து பயன்படுத்தலாம்.

கணவாயில் உள்ள ஸ்தல விருக்ஷத்திற்கு எய்ட்ஸ், கேன்சர் போன்ற ஆற்றல் உள்ளதாக சொல்லப்படுகிறது. அவற்றை எப்படி பயன்படுத்துவது?

எல்லாவற்றையும் எடுத்து மருந்து தயாரிக்கும் நிறுவனத்திடம் கொடுத்துவிடு. எல்லாவற்றையும் குளிகையாக செய்து விற்றுவிடுவான், எல்லோருக்கும் நோய் தீர்ந்துவிடும். எப்படியப்பா ( நோய் ) தீரும் ? மருந்து உண்டு, மூலிகை உண்டு. ஆனால் நோய் தீரவேண்டும் என்ற கர்மக்கணக்கு ஒருவனுக்கு இருக்கவேண்டும். அப்படி கணக்கு இருந்தால், நீ வெறும் நீரைக்கூட பக்தியோடு பருகினால் நோய் தீர்ந்துவிடும். இருந்தாலும் நீ கேட்ட மூலிகைகளுக்கு அத்தனை சக்திகளும் உண்டு, உண்டு, உண்டு.
மூலிகைகளுக்கு அளவே தேவையில்லையப்பா. சிறிது அதிகம் சாப்பிடுவதால் தோஷம் ஒன்றும் வந்துவிடாது. இருந்தாலும் முதலில் துவங்கும்பொழுது ஒரு சிட்டிகை எடுத்து நோயின் கடுமைக்கு ஏற்ப சிறிது அதிகப்படுத்திக் கொள்ளலாம். அதிகாலையில் வெறும் வயிற்றில் சூரிய உதயத்திற்கு முன்பு ஏற்பது சிறப்பு.
கொடுமையான நோய்கள் இருப்பவர்கள் எல்லாம் வேப்பந்தழைகளை உண்ணலாம். இளந்தளிரான வேப்ப இலைகளோடு கீழ்க்காய் நெல்லி இலை, வில்வ இலை, மாவிலை, இஃதொப்ப சிறியா நங்கை இலை, ஆடுதொடா இலை, நிலவேம்பு, பேய்ப்புடலை, மிளகு -  இவற்றையெல்லாம் எடுத்து பொடித்து வைத்து கஷாயம் செய்து பயன்படுத்தலாம். இலைகளை சம அளவிலும், மிளகு மிக, மிகக் குறைந்த அளவிலும் இருந்தால் நலமாக இருக்கும். வாரம் ஒருமுறை, இருமுறை
பொதுவாக யார் வேண்டுமானாலும் ஏற்றுவரலாம். நோய் எதிர்ப்பு சக்தியும், ஆரோக்கியத்தையும் இது கொடுக்கும்.

கண் பார்வை குறைபாடு?

எண்கண் முருகனை வழிபடுவது பக்தி வழி முயற்சி. விழியில் குறைபாடு உள்ள ஏழைகளுக்கு உதவி செய்வது தர்மவழி முயற்சி. இஃதோடு நிறைய பசுந்தளிரான கீரைகளை உண்ணுவதும், சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வதும் உடல் ரீதியான பயிற்சி.

ஸ்ரீ அகத்திய பெருமானின் ஜீவ அருள்நாடி வாக்குகளை படித்து,பொருள் உணர்ந்து அதன் படி நடந்து அனைவரும் பயன் பெறுங்கள்.

தஞ்சை ஸ்ரீ அகத்தியர் ஜீவ அருள் நாடியில் படிக்கப்பட்ட வாக்குகள்.