Tuesday, 7 May 2019

ஆன்மீக உபன்யாசம்

Kavi arasar kannadasan's words

சக்திக்கும் சிவனுக்கும் நாரதர் ஒரு மாம்பழத்தை அளித்தார்.
சக்தி தேவிக்கு அதை மூத்த மகனுக்கு அளிக்க வேண்டும் என்ற ஆசை.
சிவபிரானுக்கோ இளைய மகனுக்குத் தர வேண்டும் என்று விருப்பம்.
பிள்ளைகள் போட்டியே, பெற்றோர்கள் போட்டியாகி விட்டது.
`சரி, எதற்கு வம்பு? உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே இந்த மாங்கனி!’ என்று கூறிவிட்டார் சிவன்.
முருகனிடம் மயில் இருக்கிறது. கணபதியிடம் மூஞ்சூறு தானே இருக்கிறது!
மயில் மீது ஏறி முருகப் பெருமான் உலகை வலம் வரத் தொடங்கினார்.
தாய்-தகப்பனை மூன்று முறை சுற்றினார்; கையை நீட்டினார் விநாயகப் பெருமான். மாங்கனி அவருக்குப் போய்விட்டது.
இது கதை!
`உலகத்தைவிட மிகப் பெரியவர்கள் தாயும் தகப்பனுமே’ என்ற தத்துவத்தை இந்துக்கள் எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார்கள்!
மகாலட்சுமிக்குச் சுயம்வரம்.
சாதாரண லட்சுமிக்குத் திருமணம் என்றாலே, ஊர் எவ்வளவு அல்லோலகல்லோலப் படுகிறது?
பத்திரிகைகளில் எல்லாம் அந்தச் செய்திதானே வருகிறது.
மகாலட்சுமிக்கே சுயம்வரம் என்றால் ஏழு உலகங்களும், தேவாதி தேவர்களும் திரளக்கூடும் இல்லையா?
முப்பத்து முக்கோடி தேவர்களும் கழுத்தை நீட்டினார்கள்.
ஆனால், மகாலட்சுமி ஒரு நிபந்தனை வைத்தாள்.
`என்னை எவன் விரும்பவில்லையோ, அவனைத்தான் மணப்பேன்’ என்றாள்.
`அவளை விரும்பாதது மாதிரி’ தேவர்களால் நடிக்கக்கூட முடியவில்லை.
ஏழு உலகங்களிலும் நடந்தாள், மகாலட்சுமி.
கடைசியில் பாற்கடலில் நடந்தாள்.
அங்கே பள்ளி கொண்டிருந்தது ஒரு கரிய திருமேனி.
மகாலட்சுமியை அது லட்சியம் செய்யவே இல்லை.
`என்ன, உங்களுக்கு ஆசையே இல்லையா?’ என்று கேட்டாள் மகாலட்சுமி.
`நீ யாரம்மா?’ என்று கேட்டது திருமேனி.
`நான் தான் மகாலட்சுமி!’ என்றாள்.
`அப்படியென்றால்…?’ என்று அது திருப்பிக் கேட்டது.
மகாலட்சுமிக்குச் சிரிப்பு வந்தது.
`உன்னை அறிவது தான் என் வேலையா? உலகத்தில் எனக்கு வேறு வேலை இருக்கிறது!’ என்றார் திருமால்.
அவர் கழுத்தில் மாலையைப் போட்டுக் காலடியிலேயே உட்கார்ந்து விட்டாள் மகாலட்சுமி.
உலக ரட்சகன் எதிலும் மயங்கி விடுவதில்லை என்பதையும், மனிதனும் அப்படி மயங்காமல் இருக்கும் வரைதான் மரியாதை என்பதையும் இந்தக் கதை எவ்வளவு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது!
ஒரு அரண்மனை, அதன் மேன்மாடத்திலே ஒரு ராஜா. அவர் பக்கத்திலே அழகான ராணி. இருவரும் பழங்களை உரித்துத் தின்றபடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சுளைகளைத் தின்றுவிட்டு தோல்களை வெளியே எறிகிறார்கள்.
ஒரு சந்நியாசி. அவனுக்கோ பசி. வெளித் திண்ணையில் அவன் உட்கார்ந்திருக்கிறான். ராஜா தூக்கியெறிந்த தோல்களை எடுத்து அவன் தின்கிறான். சேவகர்கள் பார்க்கிறார்கள். சந்நியாசியை இழுத்துக் கொண்டுபோய் ராஜா முன்னால் நிறுத்துகிறார்கள்.
அவனைச் சவுக்கால் அடிக்கும்படி ராஜா ஆணையிடுகிறான்.

அடி விழ, அடி விழச் சந்நியாசி சிரிக்கிறான்.
`ஏன் சிரிக்கிறாய்?’ என்று ராஜா கேட்கிறான்.
`அரசே, தோலைத் தின்றவனுக்கே இவ்வளவு அடி என்றால் சுளையைத் தின்றவனுக்கு எவ்வளவு அடி என்று எண்ணிப் பார்த்தேன். சிரிப்பு வந்து விட்டது!’ என்றான் சந்நியாசி.
பாவத்தின் அளவுக்கே தண்டனை என்பதற்கு இதை விடவா வேறு கதை வேண்டும்?
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுக்குத் துலாபாரம்.
துலாபாரம் என்றால் இந்தக் காலம் போல வெங்காயம், விறகு, பத்துக்காசு நாணயம் அல்ல. தங்கத்திலே துலாபாரம்!
சத்தியபாமா தன் நகைகளையெல்லாம் கழற்றி வைக்கிறாள்.
தான் செல்வம் படைத்தவள் என்பதைக் காட்டத் தாய் வீட்டுச் சீதனங்களையெல்லாம் கொண்டுவந்து வைக்கிறாள். தட்டு நகரவில்லை.
மெதுவாக வருகிறாள் ருக்மணி.
ஒரு துளசி தளத்தைக் கொண்டு வந்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் கால்களைத் தொட்டு வணங்கி விட்டு, அதைத் தட்டிலே வைக்கிறாள்.
என்ன ஆச்சரியம், தராசு சமமாகிறது!
ஆணவத்தோடு கொடுக்கப்படும் தங்கத்தைவிட அன்போடு கொடுக்கப்படும் இலை தழைகளுக்குச் சக்தியும், மரியாதையும் அதிகம் என்பதை இந்தக் கதை நிரூபிக்கவில்லையா?
பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர் வந்தார்.
`சுவாமி! ஒரு சந்தேகம்!’ என்றார்.
`என்ன?’ என்று கேட்டார் பரமஹம்சர்.
`நீங்கள் விஷ்ணு என்கிறீர்கள், சிவன் என்கிறீர்கள். அதே விஷ்ணுவின் அவதாரம் தான் ராமனும், கிருஷ்ணனும் என்கிறீர்கள். ஒரே விஷ்ணுவுக்கு இத்தனை வடிவங்கள் எதற்கு? ஏன் ஒரே கடவுளாக வைத்துக் கொண்டால் என்ன?’ என்று கேட்டார்.
அதற்குப் பரமஹம்சர் உடனே, `ஐயா! ஒரு விஷயம். நீங்கள் ஒருவர் தான். ஆனால் உங்கள் அப்பாவுக்கு மகன், மகனுக்கு அப்பா, மனைவிக்கு கணவன், மாமனாருக்கு மாப்பிள்ளை, மாப்பிள்ளைக்கு மாமனார், மைத்துனனுக்கு மைத்துனன், பாட்டனுக்குப் பேரன், பேரனுக்குப் பாட்டன். உங்கள் ஒருவருக்கே இத்தனை வடிவங்கள் இருக்கும்போது, ஈஸ்வரனுக்கு இருக்கக் கூடாதா?’ என்றார்.
கேள்வி கேட்டவர் முகத்திலே அசடு வழிந்தது.
பல தெய்வ வணக்கம் நியாயம் என்பதற்கு இதற்கு மேல் ஒரு உதாரணம் தேவையா?
இந்தப் பல தேவதை வணக்கத்தைப் பற்றி காஞ் சிப் பெரியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
மனுஷ்யர்களின் மனப்பான்மைகள் பல தினுசாக இருக்கின்றன. ஒவ்வொரு விதமான மனப்பான்மை உள்ளவர்களையும் ஆகர்ஷித்து, அவர்களைப் பக்தி செலுத்த வைத்து, அவர்களுடைய மனதைச் சுத்தம் செய்து, சித்தத்தை ஏகாரப் (ஒருமைப்) படுத்தவே பரமாத்மா பலப்பல தேவதா ரூபங்களாக வந்திருக் கிறது.
`இந்த இந்துக்களுக்கு எத்தனை கோடிச் சாமிகள்!’ என்று அந்நிய மதத்தவர்கள் நம்மைக் கேலி செய்வதுண்டு. உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வாமி இருப்பதாக விஷயம் தெரிந்த எந்த இந்துவும் எண்ணவில்லை. இந்த வைதிக மதம் ஸ்வாமி ஒருவரே என்று கண்டது மட்டுமில்லை; இந்த ஜீவனும்கூட அதே ஸ்வாமி தான் என்று வேறெந்த மதமும் கண்டு பிடிக்காததையும் கண்டு பிடித்திருக்கிறது. எனவே பிரபஞ்ச வியாபாரத்தை நடத்துகிற மகாசக்தியாக ஒரு ஸ்வாமி தான் இருக்கிறது என்பதில், எந்த விஷயமறிந்த இந்துவுக்கும் சந்தேகமில்லை. ஆனால், அந்த ஒரு ஸ்வாமி பல ரூபத்தில் வர முடியும்; அப்படிப்பட்ட யோக்கியதையும் கருணையும் அதற்கு உண்டு என்று இவன் நம்புகிறான்.
ஒரே ஸ்வாமி நம் தேசத்தின் மகா புருஷர் களுக்கும் பல ரூபங்களில் தரிசனம் தந்திருக் கிறார். அந்தந்த ரூபங்களுக்குரிய மந்திரம், உபாசனா மார்க்கம் எல்லாவற்றையும் அந்த மகா புருஷர்கள் நமக்குத் தந்திருக்கிறார்கள். இவற்றை முறைப்படி அனுஷ்டித்தால் நாமும் அந்தந்தத் தேவதை அனுக்கிரகத்தைப் பெற முடியும். எந்தத் தேவதையாக இருந்தாலும் சரி, அது முடிவில் பரமாத்மாவே! ஆகையால், நாம் சந்தேகம் கொள்ளாமல் பூரண சிரத்தையோடு பக்தி வைத்தால் அது நமக்கு சம்ஸார பந்தத்திலிருந்து விடுதலை தரும். இந்த விடுதலைக்கு நாம் பக்குவப்படுவதற்கு முன் நம் லெளகீக வேண்டுதலைக் கூட நிறைவேற்றி அனுக்கிரகிக்கும்.
அவரவர் மனதைப் பொறுத்து ஒன்றில் பிடிமானம் கொள்வதற்கென்றே இத்தனைத் தேவதைகள் இருக்கின்றன. தாயாரிடம் குழந்தை போல் பரமாத்மாவை அனுபவிக்க வேண்டும் என்கிற மனப்பான்மை உடையவனுக்கு, அம்பாள் உபாசனை இருக்கிறது. ஒரே சாந்தத்தில் அழுந்திப் போக வேண்டும் என்ற மனோபாவம் உள்ளவனுக்குத் தட்சிணாமூர்த்தி இருக்கிறார். ஆனந்தமாக ஆடிப் பாடி பக்தி செலுத்துவதற்குக் கிருஷ்ண பரமாத்மா இருக்கிறார்.
இஷ்டம் இருந்தாலும், இஷ்டம் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு மகாசக்தியிடம் பக்தி செய்வது என்று ஏதோ ஒரு தத்துவத்தை மட்டும் காட்டாமல், நம் மனசுக்கு எப்படி இஷ்டமோ, அதற்கு அனுசரணையாகவே அந்த மகா சக்தியை ஒரு மூர்த்தியில் பாவித்து, வெறும் தத்துவத்தை ஜீவனுள்ள ஒரு அன்பு உருவமாகப் பாவித்து பக்தி செய்வதற்கு நம் மதத்திலுள்ள `இஷ்ட தேவதை’ வழிபாடே வழி வகுக்கிறது. அன்போடு உபசரிக்க வேண்டுமானால் உபாசனைக்குரிய மூர்த்தி நம் மனோபாவத்துக்குப் பிடித்தமானதாக இருந்தால் தானே முடியும்? இதனாலேயே இஷ்ட தேவதை என்று தனக்குப் பிடித்த மூர்த்தியை உபாசிக்க நமது மதம் சுதந்திரம் தருகிறது. `நம் மனப் போக்குக்குப் பிடித்தது’ என்கிற நிலையில் ஆரம்பத்தில் ஏதோ மூர்த்தியை இஷ்ட தேவதையாக்கிக் கொண்டாலும், போகப் போக, அதனிடம் உண்மையான பக்தி உண்டாக உண்டாக, `நமக்கென்று என்ன ஒரு தனி மனப்போக்கு?’ என்று அதையும் விட்டுவிட அந்தத் தேவதையே அனுக்கிரகம் செய்யும்.

அவரவரும் தமக்கு இஷ்டமான தேவதையை உபாசிக்கும் போதே மற்றவர்களுடைய இஷ்ட தேவதைகளைத் தாழ்வாக எண்ணக்கூடாது. நமக்கு எப்படிப் பரமாத்மா அனுக்கிரகம் பண்ணுகிறாரோ அப்படியே மற்றவர்களுக்கு மற்ற ரூபங்களின் மூலம் அனுக்கிரகம் பண்ணுகிறார் என்று தெளிவு பெற வேண்டும். `அந்த அந்தத் தேவதைக்குரிய புராணத்தைப் பார்த்தால் அது ஒன்றே ஸ்வாமி, மற்ற தேவதையெல்லாம் அதற்குக் கீழானவை. இதை அவை பூஜை செய்தன. இதனிடம் அவை தோற்றுப் போயின என்றெல்லாம் இருக்கிறது’, என்று கேட்கலாம். இதற்கு `நஹி நிந்தா நியாயம்’ என்று பெயர். அதாவது இதர தேவதைகளை நிந்திப்பது பெளராணிகரின் நோக்கமல்ல. இந்த ஒரு தேவதையை ஆராதிப்பவருக்கு மனது சிதறாமல் இது ஒன்றிடமே தீவிரமாகப் பற்றுதல் ஏற்படுத்த வேண்டும் என்பதே புராணத்தின் நோக்கம்! இதற்காகவே இந்தத் தேவதைக்கு மட்டும் மற்ற தேவதைக்கு இல்லாத உத்கர்ஷம் சொல்லப்படுகிறது.
மகானுபாவர்களாக இருந்தவர்கள் எல்லாத் தேவதைகளையும் சமமாகவே பார்த்தார்கள். மகா கவிகளான காளிதாசன், பாணன் முதலியவர்களும், `ஒரே வஸ்து தான் பல மூர்த்திகளாகவும் வருகிறது’ என்று சந்தேகமில்லாமல் கூறுகிறார்கள்.
பக்தர்களின் மனோபாவத்தை பொறுத்துப் பரமாத்மா பல ரூபம் கொள்கிற போதே, பிரபஞ்சத்தில் தன்னுடைய வெவ்வேறு காரியங்களைப் பொறுத்தும் வெவ்வேறு ரூபங்களை எடுத்துக் கொள்கிறது. ரஜோ குணத்தால் சிருஷ்டி செய்யும் போது அதற்கேற்ப பிரம்மாவாகிறது. ஸத்வ குணத்தால் பரிபாலிக்கும் போது அதற்கேற்ப மகா விஷ்ணுவாகிறது; தமோ குணத்தால் சம்ஹரிக்கும் போது அதற்குரிய முறையில் ருத்ர ரூபம் கொள்கிறது. இந்த மூன்றைப் பாணனும், காளிதாசனும் ஒரே சக்தியின் மூன்று வடிவங்களாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த மூன்றுக்கும் பொருந்துவது முப்பத்து முக்கோடி தேவதைகளுக்கும் பொருந்தும்.
எனவே, `என் தெய்வம் உசந்தது; உன் தெய்வம் தாழ்ந்தது’ என்று சண்டை பிடிப்பதில் அர்த்தமே இல்லை. ஆனாலும், நம் தேசத்தில் பல இஷ்ட தெய்வங்கள் இருந்தாலும் கூடப் பிரதானமாக இருந்து வரும் சைவத்திற்கும், வைணவத்திற்கும் இடையே ரொம்பவும் சண்டை நடந்துதான் வந்திருக்கிறது. நன்றாக ஆலோசித்துப் பார்த்தால் இந்த இரண்டும் ஒரே வஸ்து தான் என்ற ஞானம் பெறுவோம்.