Sunday, 28 April 2019

விக்னேஸ்வரர்

மங்களாரம்பம் - பெரிய இடத்துப் பிள்ளை

முருகனும் மூத்தோனும்
தாத்தா, அப்பா, அம்மா, மாமா எல்லாரும் ரொம்பவும் பெரியவர்களாக இருக்கிறார்கள்.அது மட்டுமில்லை. கூடப் பிறந்தவரும் ரொம்ப மஹிமையுள்ளவர். கூடப் பிறந்தவரென்றால் இவருக்கு அண்ணா கிடையாது. இவர்தான் "மூத்த பிள்ளையார் மும்மணிக்கோவை" என்றே இவர்மேல் ஒரு ஸ்தோத்ரம் இருக்கிறது. ப்ரபஞ்சத்துக்கே முதல் குழந்தை அவர்."ஜயேஷ்ட ராஜா" என்பது வேதமே அவருக்குக் கொடுத்திருக்கிற பெயர். கணபதிதான் எல்லாருக்கும் அண்ணா. அவருக்குத் தம்பிதான் உண்டு.
தமையன் பெரிய ஆஸாமியாயிருந்தால் அவன் பெயரை வைத்துக்கொண்டே தம்பி தடபுடல் பண்னுவதுண்டு இப்படியே தம்பிக்காரன் பிரமுகனாயிருந்தாலும், தனக்காக யோக்யதையில்லாத அண்ணன்காரன் அதைக்காட்டி அதிகாரம் பண்ணவதுண்டு. இங்கேயோ ஈச்வர புத்ரர்கள் இரண்டு பேருமே சக்தி, ஸாமர்த்யங்களிலும் அநுக்ரஹத்திலும் ரொம்பவும் உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் பிள்ளையாருக்கு உறவுகளைச் சொல்லிப் பெருமை காட்டும்போது தம்பியையும் சொல்ல வேண்டியிருக்கிறது.
பிள்ளையாருக்கு விசேஷமாகப் பதினாறு பெயர்கள் உண்டு. ஷோடச நாமாக்கள் என்று சொல்வார்கள். (ஷோடசம் என்றால் பதினாறு) அஷ்டோத்தர (சத) ம் சொல்லிப் பூஜை பண்ண முடியாவிட்டாலும் இந்தப் பதினாறு நாமாக்களையாவது சொல்ல வேண்டும்.
ஸுமுகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்மக :!
ஸம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:!!
தூமகேதுர் கணாத்யஷோ பாலசந்த்ரோ கஜாநந:!
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸகந்தபூர்வஜ:!!
கடைசிப் பெயர் 'ஸ்கந்தபூர்வஜர்'-அதாவது 'ஸ்கந்தனுக்கு முன்னாடிப் பிறந்தவர்.' தம்பியை வைத்துத் தமையனாருக்குப் பெருமை கொடுக்கும் பெயர்! இப்படி இவருடைய பல உறவுக்காரர்களைப் பார்த்தாலும் இவர் ரொம்ப பெரிய இடத்துப் பிள்ளை என்று தெரியும். அதனால் அந்தப் பிள்ளையை நாம் மனங் குளிர்ந்திருக்கும் படியாகப் பண்ணவேண்டும். அதற்குக் கோபம் உண்டாகும்படியாக எதுவும் பண்ணாமல் ஜாக்கிரதையாயிருக்கவேண்டும். மூவுலகத்தின் மூத்த குழந்தையுடைய ப்ரீதியை நாம் முக்யமாக ஸம்பாதித்துவிட வேண்டும். நல்ல மனஸ், அருள் உள்ளம், இரக்க குணம் உள்ள அவர் எளிதிலே த்ருப்தி கொண்டுவிடுவார். எப்போதுமே ஆனந்தமாயிருக்கும் அவரை நாமும் கொஞ்சம் குஷிப்படுத்தி விட்டால், அவருடைய மாதா பிதாக்களான பார்வதீ பரமேச்வரர்களின் மனஸையும் குளிரப்பண்ணி அவர்களிடமிருந்து ஸகல நலன்களையும் பெற்றுவிடலாம்.
பிற தெய்வங்களும் போற்றும் பிள்ளையார்
மரியாதைக்குரிய குழந்தை
பெரிய இடத்துப் பிள்ளை என்பதாலேயே, 'நாம் நமக்கென்று ஒரு யோக்யதையும் ஸம்பாதிக்கொள்ள வேண்டியதில்லை. நம்முடைய பெரிய ஸம்பந்தத்தைக் காட்டியே ஊரை ஆட்டி வைத்துக்கொண்டிருக்கலாம்' என்று இருப்பவர்கள் உண்டு. அநேகம் பெரிய மநுஷ்யரகத்துப் பசங்கள் தறுதலைகளாகவோ, அசட்டுப் பிசட்டென்றோ இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் இந்தப் பெரிய இடங்களுக்கெல்லாம் உச்சியிலுள்ள மஹா பெரிய இடத்துப் பிள்ளை, 'உச்சிப்பிள்ளையார்' என்கிறோமே, அவர் எப்படியிருக்கிறார்? தேஹபலமா, புத்திக் கூர்மையா, கார்ய சக்தியா, அன்புள்ளமா எல்லாவற்றிலும் தமக்கு மேல் யாருமில்லை என்று இருக்கிறார். பெரிய இடத்துப் பிள்ளை என்பதால் மாத்திரம் அவருக்குப் பெருமையில்லை. அவருக்காகவே அவருக்குப் பெருமை என்பது "பிள்ளை" க்கு "யார்" போட்டு அவரைப் "பிள்ளையார்" என்று மிகவும் மரியாதையாகச் சொல்வதிலிருந்தே தெரியும்.
பொதுவாகச் தாய், தகப்பன், பாட்டன், பாட்டி, தமையன், தமக்கை ஆகிய பெரியவர்களைத்தான் மரியாதையாகத் தாயார், தகப்பனார், பாட்டனார், பாட்டியார், தமையனார், தமக்கையார் என்றெல்லாம் சொல்வது வழக்கம். பிள்ளைக்கு அப்படி மரியாதை விகுதி சேர்த்துச் சொல்கிற வழக்கம் எங்கேயும் கிடையாது. இதற்கு மாறுதலாக இவர் ஒருவர் விஷயத்தில் மட்டும் "பிள்ளை" என்காமல் "பிள்ளையார்" என்றே சொல்கிறோம்
முழுமுதற் கடவுளாக பிள்ளையார் ப்ரிதியை நாம் பெற்றுவிட்டால் அவரிடம் மிகவும்
அன்புகொண்ட பார்வதி பரமேச்வரர்களின். அநுக்ரஹத்தைப் பெற்று விடலாமென்றேன். நாம் பொதுவாக ஈச்வரனையும் அம்பாளையும் முக்யமாகக் கொண்டு வழிபடுபவர்களாதலால், அவர்களுடைய செல்லப் பிள்ளையை நாம் ஸந்தோஷப்படுத்துவதாலேயே அவர்களிடமிருந்து எல்லா அநுக்ரஹமும் பெற்விடலாமென்பதற்காச் சொன்னேன். இதனால் அநுக்ரஹ சக்தி அவர்களுக்குத்தான் உண்டு, பிள்ளையாருக்குக் கிடையாது என்றதாக ஆகாது. அப்பாவும் அம்மாவுந்தான் அருள் செய்யவேண்டும் என்றில்லாமல் அவரே எதையும் அருள் வல்லவர்தான்.
ஈச்வரனுக்கும் அம்பாளுக்கும் புத்ரர் என்பதற்காக இல்லாமல், அவரே முழுமுதற் கடவுள் என்று உபாஸிக்கிறவர்கள் இம்மை மறுமை நலன்கள் எல்லாவற்றையும் அவரே அநுக்ரஹிப்பாரென்று கொண்டிருக்கிறார்கள். கணபதியே பரதெய்வம் என்று உபாஸிக்கிற இவர்களுக்கு 'காணபத்யர்கள்' என்று பெயர். தங்களுடைய உபாஸனா மூர்த்தியின் உத்கர்ஷம் (உயர்வு) பற்றி அவர்கள் பிற உபாஸகர்களிடம் சொல்லும் ஒன்றை எவரும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். "சிவனையோ, அம்பாளையோ, முருகனையோ, விஷ்ணுவையோ பரதெய்வமாகப் பூஜிக்கிற நீங்களும் உங்கள் ஸ்வாமியைப் பூஜை பண்ண ஆரம்பிக்கும்போது முதலில் 'சுக்கலாம்பரதரம்' குட்டிக் கொணடு, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து
எங்கள் ஸ்வாமியை வேண்டிக் கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது? பிள்ளையாரையே பரமாத்மாவாகப் பூஜை பண்ணும் நாங்கள் உங்கள் ஸ்வாமிகளில் எவரையும் இப்படி வேண்டிக் கொள்வதில்லையே!" என்று அவர்கள் சொல்வார்கள்.
விஷ்வக்ஸேனர், தும்பிக்கையாழ்வார் என்ற பெயர்களில் வைஷ்ணவர்கள் முதல் பூஜை செய்வதும் விக்நேச்வரரின் ஒரு அவஸரத்துக்குத்தான் (கோலத்துக்குத்தான்) என்று சொல்லலாம்.தாமே அக்ர (முதல்) பூஜை பெறுகிற உயர்வோடு விளங்குபவர் பிள்ளையார். "இவரை பற்றிய ச்லோகங்களில் ஈச்வரன், அம்பாள், விஷ்ணு, முருகன் முதலியவர்களைப்பற்றி வருவதால், அந்த ஸ்வாமிகளாலேயே இவருக்குப் பெருமை என்று நினைத்தால் அது ஸரியே இல்லை.அந்த ஸ்வாமிகள் எல்லாருங்கூட ஏதாவது ஒரு ஸந்தர்பத்தில் இவர் தயவை நாடித்தான் கார்ய ஸித்தி அடைந்திருக்கிறார்கள்" என்று கணபதி உபாஸகர்கள் புராணங்களைக் காட்டுவார்கள்.
தெய்வங்களில் உசத்தி தாழ்த்தி இல்லை; இல்லவே இல்லைதான். ஆனாலும் ஒரே பரமாத்மா லீலானந்தத்துக்காகவும், ஜனங்களின் விதவிதமான மனப்போக்குகளில் ஒவ்வொனறுக்கும் பிடித்த மாதிரியும், பல ரூபங்களில் வருகிறபோது, அவரவருக்கும் தங்கள் மூர்த்தியும் பக்தி ஒருமுகப்படுவதற்காக ஒவ்வொரு மூர்த்தியும் மற்றவற்றைச் சில ஸந்தர்பங்களில் ஜயித்ததாகப் புராணங்களில் பார்க்கிறோம். ஒவ்வொரு மூர்த்தியும் இப்படி மற்றவற்றை ஜயித்தது என்பதாலேயே ஒவ்வொன்றும் மற்றவற்றிடம் தோற்றும்தான் இருக்க வேண்டுமென்றாகிறதல்லவா? இப்படி ஒவ்வொரு தெய்வமும் சில ஸந்தர்பத்தில் ஜயித்து, சில ஸந்தர்பத்தில் தோற்றுப் போவதில் ஜயித்தவைகளை மட்டுமே அந்தந்த தெய்வத்தின் பக்தர்களும் எடுத்துக் கொண்டு அதனிடம் தங்கள் பக்தியை
வலுவாக்கிக் கொள்கிறார்கள். இதில் பிள்ளையார் தோற்றுப் போனதாக மட்டும் ஒரு
கதையும் ப்ரஸித்தமாயிருக்கவில்லை. ஆனால் மற்ற ஸ்வாமிகள் இவரைப் பூஜித்ததற்கு நிறையக் கதைகள் இருக்கின்றன.
தந்தை பூஜித்த தனயர்
தகப்பனாரான ஈச்வரனையே எடுத்துக்கொள்ளலாம். அவர் த்ரபுர ஸம்ஹாரத்துக்காகப் புறப்படுகிறபோது பிள்ளையை - அவர் மரியாதை கொடுக்கப்பட்ட வேண்டிய பிள்ளையார் என்பதை மறந்து - ஸ்மரிக்காமலே கிளம்பினார். பிள்ளையார் தமக்கு வேண்டிய due -வைப் பெறாமல் விடமாட்டார்! 'பிள்ளையாருக்கு முதல் பூஜை' என்பது தேவதைகள் எல்லோருமாகத் தீர்மானித்தது.அப்படியிருக்க, ஒரு ரெஸொல்யூஷன் ஏகமனதாகப் பாஸ் ஆகிச் சட்டமாய் விட்டதென்றால் அதைத் தகப்பனாராகத்தான் இருக்கட்டும், அந்தத் தகப்பனார் ஸர்வ ஜ்கத்துக்கும் ஈச்வரராகத்தான் இருக்கட்டும், மீறினால் குற்றம் தானே? தப்புச் செய்தவரைப் பிளளையார் சும்மா விடமாட்டார்.
ஆகையால் த்ரிபுராஸுரர்களை நோக்கி ஈச்வரனின் ரதம் போய்க்கொண்டிருக்கும் வழியில் அதன் அச்சு முறிந்து போகும்படியாகப் பிள்ளையார் பண்ணிவிட்டார். ரதம் நின்றுபோய்விட்டது. உடனே ஈச்வரனுக்குப் புரிந்துவிட்டது. 'ரொம்பவும் பெரியவனாகையால் நமக்குச் சட்டம் இல்லை என்று இருப்பது தப்பு. ரொம்பப் பெரியவனாயிருப்பதாலேயே நாம் தான் லோகத்துக்கெல்லாம் உதாரணமாக நடந்து காட்ட வேண்டும். அதன் படி சட்டத்துக்கு ரொம்பவும் அடங்கிப்போக வேண்டும். சட்டம் என்று வருகிறபோது அப்பா பிள்ளை முதலான உறவுகளுக்கு இடமில்லை, என்று பரமேஸ்வரன் நினைத்தார்.
உடனே, கொஞ்சங்கூட ஸ்தானம் பார்க்காமல் பிள்ளையாருக்குப் பூஜை பண்ணினார். (இன்னொரு ஸந்தர்ப்பத்தில் இளைய பிள்ளையிடமும் கீழ்ப்படிந்து ப்ரணவோபதேசம் வாங்கிக் கொண்டிருக்கிறார்!) பிள்ளையாரும் அப்பா கொஞ்சம் நினைத்தவுடனேயே ஒடிவந்து விக்னத்தை அகற்றிவிட்டார். அதற்கப்புறம் ரதம் ஒடி, முடிவில் த்ரிபுராந்தகர்' என்று பெரிய பெயர் வாங்கும்படியாக ஈச்வரன் அந்த அஸுரர்களை ஜ்யித்தார். செங்கல்பட்டுக்கும் திண்டிவனத்துக்கும் நடுவில் "அச்சரப்பாக்கம்" என்று இருக்கிறதே, அந்த ஊர்தான் ஈச்வரனுடைய ரதத்தின் அச்சு இற்றுப்போன "அச்சிறுப்பாக்கம்"என்று சொல்வார்கள்.
ஸமீபகால ஸம்பவத்தில் புராண நிருபணம்
அப்படிச் சொல்வது நிஜந்தானென்று நிரூப்பிக்கிறதாக ஸமீபத்தில் ஒன்று நடந்தது. ராமேச்வரத்தில் சங்கர மண்டபம் கட்டிக்கொண்டிருந்தோம். அதில் ப்ரதிஷ்டை செய்யவேண்டிய ஆசார்யாள் பிம்பத்தை லாரியில் எடுத்துக் கொண்டு போயிற்று. ஜெய்ப்பூரிலிருந்து ஸலவைக்கல் தருவித்து காஞ்சிபுரத்தில் ஆசார்யாளுக்கும், அவருடைய நாலு சிஷ்யர்களுக்கும் பெரிசு பெரிசாக பிம்பம் பண்ணி அங்கேயிருந்து ராமேச்வரத்துக்கு லாரியில் எடுத்துக் கொண்டு போயிற்று. அப்போது வழியில் ஸரியாக இந்த அச்சிறுப்பாக்கத்திலேயே லாரி Break down ஆகி நின்று விட்டது! அப்புறம் பிள்ளையாரக்கு நூற்றியெட்டுத் தேங்காய் உடைத்து விட்டே, லாரியைப் பழுதுபார்த்துக் கிளப்பிற்று. அதற்குப் பிற்பாடு எந்த
விக்னமுமில்லாமல் கும்பாபிஷேகம், ப்ரதிஷ்டை எல்லாம் ஜாம்ஜாமென்று நடந்தது. இந்த விக்னமும்கூட அநுக்ரஹம் என்று தான் தோன்றிற்று. தாம் கைலாஸ சங்கரனேதான் என்று நமக்கு உறுதிப்படுத்துவதற்காகவே நம்முடைய சங்கரபகவவத் பாதாள் இங்கே தம்முடைய நவீனகால ரத அச்சான லாரி ஆக்ஸிலை முறித்துக்கொண்டிருக்கிறரென்று தோன்றிற்று.
அன்னைக்கு உதவிய ஜங்கரன்
அம்பாளும் விக்நேச்வரரை உத்பவிக்கப்பண்ணி அவர் ஸஹாயத்திலே ஜயம் பெற்றாளென்று லலிதோபாக்யானத்தில் வருகிறது. லலிதாம்பிகை பண்டாஸுரனோடு யுத்தம் செய்த போது சக்திஸேனை என்பதாக முழுக்கவும் தேவஸ்த்ரீகளையே கொண்ட படையோடு போனாள். போய்ப் படைவீடாக ஒரு அக்னிக்கோட்டை கட்டப்பண்ணி அதற்குள் ஸேனா ஸழூஹத்தோடுகூட முகாம் போட்டிருந்தாள். பண்டா ஸுரனுக்கு மந்த்ரபலம் நிறைய உள்ள விசுக்ரன் என்ற ஒரு அஸிஸ்டன்ட் இருந்தான். அவன் என்ன பண்ணினானென்றால் விக்ன யந்த்ரம் என்ற ஒன்றைப் பண்ணி அதை அக்னிக் கோட்டைக்குள்ளேபோய் அம்பாளின் கூடாரத்தில் விழும் படியாக MCP எறிந்தான். அந்த யந்திரத்தின் தன்மை என்னவென்றால், இந்த நாளில் Psychological warfare என்கிறார்களே, அப்படி அது எதிராளியை பௌதிகமாகத் தாக்காமல் அவர்களுடைய மனஸையே சத்ருபக்ஷமாக மாற்றிவிடும், இப்போது propaganda வினால் (பிரசாரத்தினால்) கொஞ்சம் கொஞ்சமாக மனஸை மாற்றுகிற மாதிரியில்லாமல். மந்திரசக்தி வாய்ந்த யந்த்ரமாதலால் அது உடனேயே மன மாறுதலை உண்டாக்கிவிடும்,
விக்ன யந்த்ரம் வந்து விழுந்தவுடன் அதன் மயக்கும் சக்தியால் சக்திஸேனைகளின் புத்தியே மாறிவிட்டது."எதற்காக அஸுரர்களை நாம் கொல்லணும்? இது ஜீவ ஹிம்ஸைதானே? அம்பாளுக்கு அவர்களிடம் விரோதமென்றால் நமக்கென்ன வந்தது? இன்னம் அடி அஸ்திவாரத்துக்கே போனால் எதற்காக இந்த அம்பாளுக்கு அடங்கி நாம் வேலைக்காரப் பிழைப்புப் பிழைக்கணும்? நம்மால்தான் அவளுக்கு பலம் என்பதால்தானே நம்மைச் சேர்த்துத் திரட்டிக் கொண்டு வந்திருக்கிறாள்? இத்தனை நாளாக நாம் என்னவோ புத்தியில்லாமல் அவள்தான் நமக்கெல்லாம் மேலே, அவளுக்கே நம்மை அடக்கி ஆள்கிற பலம் இருக்கிறது என்றெல்லாம் நினைத்துக்கொண்டு ஏவல் செய்து விட்டோம். இப்போது நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் ஆயுதங்களைப் போட்டு விட்டு அப்படியே ஸ்ட்ரைக் பண்ணிவிடவேண்டும் யஜமானி-பணியாளி என்கிற கதை இனிமே பலிக்காது. எல்லாரும் ஸமம்தான்" என்றெல்லாம் அந்த ஸேனைகள் ட்ரேட் யூணியனிஸம், கம்யூனிஸம் எல்லாம் பேச ஆரம்பித்து விட்டன.
"வேர்க்க விருவிருத்துக்கொண்டு, அடியும் குத்தும் பட்டுக் கொண்டு இனிமேலே இவளுக்காக யுத்தம் செய்ய வேண்டியதில்லை. நாம் பாட்டுக்கு நிர்விசாரமாகத் தூங்கலாம். அக்னிக் கோட்டைதான் இருக்கவே இருக்கிறது. அதைத் தாண்டி யாரும் வந்து நம் தூக்கத்தைக் கெடுக்க முடியாது" என்று சொல்லிக்கொண்டு ஸேனா ஸமூஹம் முழுக்கப்படுத்திக்கொண்டு 'கொர் கொர்' என்று குறட்டை விட
ஆரம்பித்துவிட்டன. புத்தியை முதலில் மாறாட்டமாகக் கலக்கிவிட்டு, அப்புறம் அது ஸ்தம்பித்துச் செயலிழந்து தூங்கும்படிச் செய்யும் சக்தி விக்ன யந்த்ரத்துக்கு இருந்தால் இப்படி நடந்தது. ஜ்ரும்பணாஸ்த்ரம் என்று ஒன்று உண்டு. அதை போட்டுவிட்டால் அதற்கு ஆளாகிறவர்கள் கொட்டாவி கொட்டாவியாக விட்டுக்கொண்டு அசந்து விழுந்துவிடுவார்கள். 'ஜ்ரும்பணம்' என்றால் 'கொட்டாவி விடுவது'
நவீன கால ஆயுதங்களைவிட பயங்கரமான விசித்ரமான ஆயுதங்தளை மந்த்ர சக்தியாலேயே ஆதிகாலத்தில் செய்திருக்கிறார்களென்று புராணத்திலுள்ள விவரங்களைப் பார்த்தால் தெரியும். ப்ரஹ்மாஸ்த்ரம், நாரயணாஸ்த்ரம், பாசுபதாஸ்த்ரம் முதலியவற்றின் சக்தியைப் பற்றிப் படிக்கும்போது ஆடம் பாம் (ப்) ,ஹைட்ரஜன் பாம் (ப்) எல்லாம் ஒன்றுமேயில்லை என்று தோன்றும். இப்போது இந்த பாம் (ப்) களின் ரேடியேஷனால் கர்ப்பசேசேத மேற்படுகிறது என்கிறார்களென்றால், அந்தக் காலத்தில் அச்வத்தாமா போட்ட அபாண்டவாஸ்த்ரம் உத்தரையின் கர்பபத்திலிருந்த சிசுவைப் பாதித்திருக்கிறது! கிருஷ்ண பரமாத்மாதான் அதை ரக்ஷித்துக் கொடுத்தார். அம்பாள் தன்னுடைய படைகள் ஸ்ட்ரைக் பண்ணிவிட்டு ஆனாலும் நல்லவேளையாக sabbotage (நாசவேலை) செய்யாமல், அமர்க்களமாய் டெமான்ட்ரேஷன்கூடச் செய்யாமல் அததுகளும் நன்றாகத் தூங்கிக்கொண்டு கிடப்பதைப் பார்த்தாள். ஞானஸ்வரூபிணியாக இருக்கப்பட்ட அவளுக்குத் தெரியாததா? இதெல்லாமும் அவள் லீலைதான்!
விக்நேச்வரரின் ப்ரபாவம் வெளிப்படவேண்டுமென்றுதான் அவளே இப்படி ஒரு விக்னத்தை விசுக்ரன் என்ற வ்யாஜத்தில் உண்டாக்கிக் கொண்டிருந்தாள். சிவ - சக்திகளாக எப்போதும் இருப்பவர்களில் சக்தியே பண்டாஸுரனை வதைப்பதற்காக இப்போது லலிதாம்பிகையாக ஞானாக்னி குண்டத்திலிருந்து தோன்றியிருந்தாள். கல்யாணமாகாதா கன்னியாக இவள் யுத்தத்துக்குப் போகக் கூடாது என்பதனால் இவளை விவாஹம் செய்துகொள்வதற் கூடாது என்பதனால் இவளை விவாஹம் செய்துகொள்வதற்காக சிவனும் காமேச்வரர் என்ற ரூபத்தில் வந்தார். கல்யாணம் ஆயிற்று. காமச்வர - காமேச்வரி என்று அந்த தம்பதியைச் சொல்வது வழக்கம். அந்த காமேச்வரிதான் நம்முடைய காமாக்ஷியாக இருப்பது. அவளுடைய ஸ்தானம்தான் காமகோடி பீடம்.
கல்யாணமானவுடன் பண்டாஸுர வதத்துக்காகப் புறப்பட்ட அம்பாள் ஈச்வரனைக் காமேச்வரனாக வரவழைத்தது மட்டும் போதாது, தன்னுடைய அருமைக் குழந்தை கணபதியையும் இந்த லலிதாம்பிகை ஆவிர்பாவத்தில் வரவழைத்து அவன் பெருமையை ப்ரகடனப்படுத்த வேண்டுமென்று நினைத்தாள். அதற்கு வாய்ப்பாகவே இப்போது சக்தி ஸேனை விக்ன யந்த்ரத்தால் தூங்கிக்கொண்டு கிடந்தது. உடனே காமேச்வரன் மேல் தன் ப்ரேம கடாக்ஷத்தைச் செலுத்தி மந்தஸ்மிதம் (புன்னகை) செய்தாள் அம்பாள். அவர் முகத்திலும்
மந்தஹாஸம் படர்ந்தது. இப்படி ஆதி தம்பதியின் பரஸ்பர அன்பில் உண்டான சிரிப்பின் காந்திஸமூஹம் ஒன்று சேர்ந்ததோ இல்லையோ, அதிலிருந்தே மஹா கணபதி உத்பவித்துவிட்டார்! ஆனந்த ஸ்வருபமாக, எப்போழுதும் ப்ரஸன்ன முகமாக, ஸுமுகராக இருக்கிற அவர் ரொம்பவும் பொருத்தமாக, ஸாக்ஷாத்
அம்பாள் ஈச்வரன் ஆகியவர்களின் முகத்திலிருந்து பெருகுகிர சிரிப்பு ஒன்று சேர்ந்ததிலிருநது உத்பவித்துவிட்டார்.
பிள்ளையாரின் பல ஆவிர்பாவங்களில் இது லலிதோபாக்யானத்தில் வருவது லலிதோபாக்யானம் என்பது பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான ப்ரஹ்மாண்ட புராணத்தில் வருகிறது. ஈச்வரனின் முகத்தைப் பார்த்துச் சிரித்தே அம்பாள் பிள்ளையாரை அவதரிக்கச் செய்ததை லலிதா ஸஹஸ்ர நாமத்தில் "காமேச்வர முகாலோக கல்பித ஸ்ரீ கணேச்வரா" என்று சொல்லியிருக்கிறதது. எந்த தேவவதையானாலும் தன் சக்தியெல்லாம் எவளருத்தியின் அம்சலேசம்தானே அப்பேர்ப்பட்ட பராசக்தி, தானே விக்ன யந்திரத்தைச் சக்தியற்றதாகச் செய்திருக்கலாமாயினும், விக்ன நிவாரணத்துக்காகவே ஒரு விக்நேச்வரனை ஏற்படுத்தியிருக்கும்போது வர் ஸஹாயத்தினால்தான் இதைச் செய்ததாக இருக்கவேண்டுமென்பதத்காக இப்படி லீலை செய்தாள். அவள் இப்படி ஒரு சட்டத்துக்கு அடங்கியிருந்ததற்கேற்ப, அவளுடைய கடாக்ஷத்திலிருந்து உண்டான விக்நேச்வரரும், 'ஸஹாயத்தைத்தானே ஆனானப்பட்ட பராசக்தியும் நாடவேண்டியிருக்கிறது? என்று கர்வப்படாமல் அவளை நமஸ்காரம் பண்ணினார். பணிவோடு அவளோடு ஆசிர்வாதத்தை வாங்கிக்கொண்டே விக்ன யந்த்ரத்தை அழிப்பதற்காகப் புறப்பட்டார். அக்னிக் கோட்டையின் ஒரு மூலையில் யந்த்ரம் புதைந்து கிடந்தது. பிள்ளையார் அதைக் கண்டுபிடித்து, தந்தத்தால் குத்தித் தவிடு பொடியாக்கினார். உடனே தேவி கணங்கள் தூக்கம் கலைந்து எழுந்தன. அவற்றுக்கு ஏற்பட்டிருந்த மனோ பேதமும் மாறி, அம்பிகையிடம் பழையபடி பக்தி விச்வாஸம் கொண்டன. முன்னைவிட உத்ஸாஹமாக யுத்தம் செய்தன. முடிவில் பண்டாஸுரன் போனான்.