Monday, 11 March 2019

தாண்டிக்குடி பாலமுருகன்...

முருகா வருக சதுர்வேத முதல்வா வருக வினைதீர்க்கும்
முனைவா வருக மலர் ஆறு முகவா வருக திருமாலின்
மருகா வருக மயில் ஏறுமன்னா வருக அடியார்கள்
வாழ்வே வருக தெய்வசிகாமணியே வருக வருகவே.’        


உள்ளன்போடு உருகி வணங்கும் உயிர்களிடத்தில், எல்லையில்லாப் பேரன்பு காட்டுகிறான் இறைவன். பக்தர்களின் விண்ணப்பங்களை நிறைவேற்றிக்கொடுப்பதில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு நிகர் முருகனே. குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருந்து, பக்தர்களுக்கு அருளாசிகளை வழங்கிவரும் மயில்வாகனன், பாலமுருகனாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் புண்ணியத்தலம் தாண்டிக்குடி.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகாவைச் சேர்ந்த தாண்டிக்குடி வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர். சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இதமான காற்றும், தவழும் மேகங்களுமான ரம்யமான இடம். பொதுவாக, மலைமீதுள்ள முருகப்பெருமானின் தலங்களில், கோயில்கள் மட்டும்தான் மலையில் இருக்கும். அதைச் சுற்றிக் கீழே ஊர் இருக்கும். ஆனால், இங்கு முருகன் இருக்கும் மலையைச் சுற்றியும் மலைகளாகவே இருக்கின்றன. சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் பகுதியில் குள்ளமான மனிதர்கள் வாழ்ந்ததாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அந்தக் குள்ள மனிதர்கள் வாழ்ந்த வீடுகள் இன்றைக்கும் இந்தப் பகுதியில் இருக்கின்றன. அவர்கள் வணங்கிய தெய்வமே இங்கு பாலமுருகனாக வீற்றிருந்து, அருளாசியை வழங்கிக்கொண்டிருக்கிறார்.  

திருக்கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் காட்சி கொடுப்பவர் விநாயகப் பெருமான். அவர் பாதம் பணிந்து வணங்கி, கோயிலுக்குள் செல்ல வேண்டும். அடுத்ததாக, மூலவரைப் பார்த்த நிலையில் இடும்பன் சந்நிதி அமைந்திருக்கிறது. இடும்பனை வணங்கித் திரும்பினால், பக்கவாட்டில் இருக்கிறது கால பைரவர் சந்நிதி. பைரவரை வணங்கி, கிழக்குப் பகுதியில் நடந்துசென்றால் ஆலமரத்தின் அடியில் இருக்கிறது நாகம்மாள் சந்நிதி. அவரை வணங்கி, கோயிலை அடைந்து அங்குள்ள தூணில் வீற்றிருக்கும் விநாயகரையும் வணங்கிய பிறகே  உள்ளே செல்ல வேண்டும். முருகனைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் மயிலும் படமெடுத்தபடி இருக்கும் நாகமும் பிரமாண்டமாகக் காட்சியளிக்கின்றன. அதைத் தாண்டி உள்ளே சென்றால், பாலமுருகனை தரிசிக்கலாம். ராஜ அலங்காரத்தில் இருக்கும்போது முருகனை தரிசிக்கக் கண்கோடி வேண்டும். நம்முடன் நேருக்கு நேராக பேசுவதைப்போலத் தோன்றும் அத்திருமுகத்தைப் பார்க்கப் பார்க்க கண்கள் பனிக்கும். அவன் அருள் பார்வை நம் ஆன்மாவைத் தொட்டு, தழுவிச்செல்லும் அந்த ஆனந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர்வுபூர்வமாக அனுபவிக்க நீங்களும் ஒருமுறை பாலமுருகனை தரிசிக்க வேண்டும். முருகனை தரிசித்த பிறகு, பிராகாரத் தூணில் லிங்க வடிவில் இருக்கும் சிவனை வணங்க வேண்டும். அதைத் தொடர்ந்து, கோயிலுக்கு வடமேற்கில் அமைந்திருக்கும் பன்றிமலை சுவாமிகள் சந்நிதிக்குச் சென்று சுவாமிகளை தரிசித்து, அருளாசி பெறலாம்.   

முருகப்பெருமானின் மற்ற கோயில்களில் இல்லாத பல சிறப்புகள் இத்தலத்துக்கு உள்ளன. கோயில் அருகேயுள்ள பாறையில் நின்று கீழே தெரியும் தாண்டிக்குடி கிராமத்தைப் பார்த்தால், ஊரே மயில் வடிவில் அமைந்திருப்பதுபோல தெரியும். இங்குள்ள பாறையில் மயில் உருவம், பாம்பு உருவம், முருகனை வணங்கும் ஆஞ்சநேயர், வேல் உருவம், முருகன் பாதம் ஆகியவை இயற்கையாகவே அமைந்திருக்கின்றன. முருகன் இங்கிருந்து தாண்டிக் குதித்து, பழநிக்குப் போனதாக ஒரு கதையிருக்கிறது. அப்படி தாண்டிக் குதித்த முருகனின் கால் தடமும் பாறைகளில் இருக்கிறது. இத்தனைச் சிறப்பு வாய்ந்த இந்தக் கோயில் இங்கு அமைந்த கதை சுவராஸ்யமானது. இயற்கை அழகு கொஞ்சும் இந்த இடத்தில், தனக்கு ஆலயம் அமைக்க நினைத்த முருகன், தவத்திரு பன்றிமலை சுவாமிகள் மூலமாக அதை நிறைவேற்றிக் கொண்டான். 

அது, 1948-ம் ஆண்டு. அப்போது இந்த இடத்தில் கோயில் இல்லை. தாண்டிக்குடி கிராமத்தின் பெரும் நிலக்கிழாராக இருந்தவர் சோமசுந்தரம் பிள்ளை. ஒருநாள் அவரது வீட்டிலிருந்த விலையுயர்ந்த பட்டுச்சேலைகளில் ஏழு சேலைகள் திருடு போய்விட்டன. வீட்டின் அனைத்துப் பணியாளர்களையும் கேட்டுப் பார்த்தாயிற்று. ஆனால், குற்றத்தை ஒப்புக் கொள்ள ஒருவரும் முன்வரவில்லை. தனது வீட்டில் திருடுப்போன பொருளை மீட்பதைவிட, திருடனைக் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார் சோமசுந்தரம் பிள்ளை. அதற்கான வழிமுறைகள் பற்றிப் பலரிடம் ஆலோசித்தபோதுதான், பக்கத்து கிராமமான பன்றிமலையில் இருக்கும் ராமசாமிபிள்ளை என அந்நாளில் அழைக்கப் பட்டு பின்னர், `பன்றிமலை சுவாமிகள்’ என அடியார்களால் அழைக்கப்படும், சுவாமிகளைப் பற்றித் தெரிந்துகொள்கிறார். அந்நாளில் கன்னிவாடி ஜமீனில் பணியாற்றிக்கொண்டே பல சித்து வேலைகளைச் செய்து கொண்டிருந்தார் சுவாமிகள். சித்து வேலை தெரிந்த அவரை அழைத்துவந்தால், திருடனைக் கண்டுபிடித்துக் கொடுத்துவிடுவார் என்றார்கள். அதன்படி, அவரிடம் உதவிகேட்க, `இன்னும் மூன்று நாள்களில் உங்கள் பிரச்னை தீர்ந்துவிடும்' எனச் சொல்லி அனுப்பிவைக்கிறார்.    

மூன்றாவது நாள், சோமசுந்தரம் இல்லத்துக்கு விஜயம் செய்கிறார் பன்றிமலை சுவாமிகள். அவரை வரவேற்று விருந்துபசாரத்துக்கு ஏற்பாடு செய்தார் சோமசுந்தரம் பிள்ளை. நான் ‘இன்று திருடனை அடையாளம் காட்டுவேன். ஆனால், அவனுக்குத் தண்டனை எதுவும் தரக் கூடாது’ எனச் சொல்லியபடியே விருந்து உண்ண அமர்ந்தார். அதற்கு முன்னதாக, அங்கிருந்த ஒருவர், ‘நீங்க சித்தெல்லாம் செய்வீங்கன்னு சொல்றாங்க... இப்ப இங்க ஒரு புறாவை உங்களால வரவழைக்க முடியுமா?’ எனக் கேட்டு கேலியாகச் சிரித்தார். அவர் சிரித்து முடிப்பதற்குள், அவரது மடியில் அழகிய புறா ஒன்று தவழ்ந்துகொண்டிருந்தது. இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் சப்தநாடியும் ஒடுங்கிப் போனார்கள். இந்தச் சம்பவம் புடவைத் திருடனையும் அசைத்துவிட்டது. சுவாமிகளுக்கு உணவு பரிமாறும்போது, அவரது காதில் ‘சுவாமி நான்தான் திருடினேன். என்னை எதுவும் செய்து விடாதீர்கள்’ என மன்னிப்புக் கேட்டுவிட்டு, தான் திருடிய புடவைகளை அவர் காலடியில் கொண்டு வந்து வைத்துவிட்டான். அதன் பிறகு சுவாமிகள் மீது பிள்ளைக்கு தனி மரியாதை ஏற்பட்டுவிட்டது. ஊருக்கு மேற்குத் திசையில் உள்ள மலைமீது மாட்டுத் தொழுவம் அமைப்பதற்குச் சரியான இடம் தேர்வுசெய்து தருமாறு சுவாமிகளை, குதிரைமீது அமர்த்தி அழைத்துக்கொண்டு போனார் பிள்ளை. ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் குதிரையில் இருந்து இறங்கிய சுவாமிகள், தனது பூட்ஸ்களை கழற்றிவிட்டு, அங்கேயே அமர்ந்துகொண்டார். 

`இந்த இடத்தில் தெய்விக மணம் வீசிக் கொண்டிருக்கிறது. இங்கு நான் ஒரு ஜோதியைக் காண்கிறேன். இங்கு முருகப்பெருமான் குடிகொண்டிருக்கிறார்’ என்கிறார். ஆனால், அதை பிள்ளை உள்ளிட்ட யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், கோபமடைந்த சுவாமிகள், ‘எனக்கு அருள் கொடுத்த முருகன் உங்களுக்கும் ஜோதி வடிவில் காட்சிகொடுப்பார். அதன் பிறகு நம்புவீர்கள்’ எனச் சொல்லிச் சென்று விட்டார். அதன் பிறகு, ஒருநாள் அந்த மலை மீது ஜோதி ஒன்று தோன்றியது. மூன்று பகல், மூன்று இரவு தொடர்ச்சியாக ஜோதி காட்சி கொடுத்தது. ஜோதியை தரிசனம் செய்த மக்கள், பக்திப் பரவசத்தில் பன்றிமலை சுவாமிகளை சரணடைந்தனர். ‘தவறிழைத்து விட்டோம் சுவாமி, தாங்கள் சொன்னபடி அங்கு முருகன் இருப்பது உண்மைதான். எங்களுக்கு ஜோதி ரூபமாகக் காட்சி கொடுத்து விட்டார். குமரனுக்கு ஆலயம் எழுப்பும் பணியைத் தாங்கள்தான் முன்னின்று நடத்தித் தர வேண்டும்’ என மன்றாடினர்.    

உடனடியாக, ஜோதி தெரிந்த இடத்தில் இருந்த புதர்களை வெட்டி அப்புறப்படுத் தினார்கள். அப்போது, அங்கு ஏற்கெனவே ஒரு கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் தென்பட்டன. கோயில் இருக்கும் இடத்துக்குக் கிழக்குப் பகுதியில் உள்ள பாறையில் முருகனின் பாதம் பதிந்த அடையாளமும் மயில், பாம்பு, வேல் போன்ற அடையாளங்களும் இருந்ததைப் பார்த்து பரவசமடைந்தனர். இந்த அடையாளங்கள் இப்போதும் பாறைகளில் இருக்கின்றன. உடனடியாக அங்கு கோயில் அமைக்கும் பணியைத் தொடங்கினார்கள். ஆனால், அங்கு பணியில் ஈடுபட்ட கல் தச்சர்கள் திடீர் திடீரென வாயில் நுரைதள்ளி மயங்கி விழுவது வாடிக்கையானது. இதைக் கேள்விப்பட்ட சுவாமி, குருவரையான் என்ற மலை தேவதையின் பாதையில் இந்தப் பணிகள் நடப்பதால் இது நேர்கிறது என்பதை உணர்ந்துகொண்டார். ஒருநாள் சர்க்கரை, முற்றிய தேங்காயைக் கையில் வைத்துக்கொண்டு தேவதை வரும் வழியில் நின்றுகொண்டு, ‘நான் முருகன் கோயில் கட்டப்போகிறேன். நீங்கள் அருள்கூர்ந்து உங்கள் வழிப்போக்கை மாற்றிக்கொள்ளவும்’ என வேண்டினார். அவர் வேண்டிக் கொண்ட சில விநாடிகளில், அவர் கையில் இருந்த பொருள்கள் மாயமாகிவிட்டன. அதன் பிறகு தேவதையின் தொந்தரவு இல்லாமல் திருப்பணி நடந்தேறியது. 

`ஒருவழியாக முருகனுக்குக் கோயில் அமைத்தாகிவிட்டது. அதற்கு தீர்த்தம் வேண்டாமா... அதற்கு என்ன செய்யலாம்?’ என யோசித்தார்கள். அப்போது ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டி, ‘அங்கு தோண்டுங்கள்... தீர்த்தம் கிடைக்கும்’ என்றார் சுவாமி. மலை உச்சியில், மொட்டைப் பாறையில் தண்ணீர் வரும் என்று சொல்கிறாரே என்ற ஐயம் இருந்தாலும், சுவாமி சொல்லை மறுக்க முடியாமல் தோண்டினார்கள். ஆனால், தண்ணீரைக் காணோம். அங்கு வந்த பன்றிமலை சுவாமிகள், அந்தப் பாறைகளின் இடுக்கில் தலைதூக்கி நின்ற நீண்ட கற்சிலும்பை தனது திருக்கரத்தால் பற்றி இழுத்தார். அந்த இடத்தில் இருந்து பீறிட்டது தண்ணீர். இன்றைக்கும் அந்த இடத்தில் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கிறது. இந்தக் கோயிலின் அருகே உள்ள பாறையில், மண்ணே விபூதியாக இருக்கிறது. பூமியில் இருந்து பொங்கிவரும் அந்த வெண்மையான மண்தான் இந்தக் கோயிலில் திருநீறாக வழங்கப்படுகிறது. 

கோயிலுக்குத் தேவையான நிலை, கதவு, சிலைகள் என ஒவ்வொருவராகக் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, அனைவரும், `கனவில் வந்து முருகன் சொன்னபடி தாங்கள் செய்துகொண்டு வந்திருக்கிறோம்’ என்றனர். ஆக, தனக்கு வேண்டிய ஆலயத்தை முருகனே ஏற்படுத்திக் கொண்டான் என்பதை பக்தர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆலயத் திருப்பணி சிறப்பாக நடந்து முடிந்து, 1949-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அன்று முதல் முருகப்பெருமானின் அருளாடல்களும் தொடர்கின்றன.

நாம் ஒரு கோயிலுக்குச் சென்றால், தரிசனம் மட்டுமே செய்கிறோம். ஆனால், ஒரு கோயில் உருவாவதின் பின்னணியில் எத்தனை எத்தனை அற்புதங்கள் நடந்தேறுகின்றன என்பதைக் கேட்டால், ஒவ்வொரு கோயிலின் மீதும் இன்னும் பன்மடங்கு பக்தி அதிகரிக்கும். பெரும்பாலும் கோயிலுக்குச் செல்வதே மன அமைதிக்காகத்தான். ஆனால், தாண்டிக்குடிக்கு வந்தாலே மன அமைதி கிடைத்துவிடும். சுற்றிலும் மலைகள், தவழ்ந்து செல்லும் மேகங்கள், இயற்கையான சூழ்நிலை இவற்றுக்கு இடையில் இருந்து முருகனை தரிசிப்பது ஆனந்தத்தின் எல்லை என்றே சொல்லலாம். 

‘தாண்டிக்குடி உண்டு
தக்கோர் மிக உண்டு
தாண்டி குதித்தருள
தனயன் முருகுண்டு
வேண்டி அவன் அருளை
உவந்தளிக்க பன்றிமலை
ஆண்டவர் அருளுண்டு
அருள் ஜோதிமலை காணீர்.’  



தாண்டிக்குடி அருள்மிகு பாலமுருகன் கோயில் நிர்வாகக் குழுவின் செயலாளராக இருப்பவர் சண்முகம். அவரது அனுபவத்தைச் சொல்கிறார்... ‘‘இந்தக் கோயிலைக் கட்டி முடிச்சதும், எங்க அப்பாவுக்கு பன்றிமலை சுவாமிகள் ஓர் உத்தரவு போட்டார். `ஒவ்வொரு பங்குனி உத்திரம் அன்னிக்கும் கூட நாலுபேரை சேர்த்துக்கிட்டு, அன்னதானம் போட்டுட்டு வாங்க’ங்கறதுதான் அந்த உத்தரவு. அந்த உத்தரவை அப்பா காலத்துல இருந்து இப்ப வரைக்கும் செயல்படுத்திட்டு வர்றோம். பழநிமலையில் இருக்குற முருகன் அப்படியே இங்கே இருப்பார். ரெண்டு சிலைகளும் ஒரே உயரம், கோவணத்துடன் கையில் தண்டுடன் இருக்கும் அதே திருக்கோலம். ஆனால், இங்கு பால முருகனாகக் காட்சியளிக்கிறார். கேட்டவருக்கு கேட்ட வரம் அருளும் கலியுகக் கடவுளாக விளங்குகிறார் தாண்டிக்குடி பாலமுருகன். எனக்கு கால் சதைகள்ல தீராத வலி உண்டாகிடுச்சு. ஃபேன் கொஞ்சம் வேகமாகச் சுத்தினாக்கூட வலி உயிர் போகும். அந்த அளவுக்குக் கடுமையான பாதிப்புல இருந்தேன். ஒரு கட்டத்துல நிலைமை ரொம்ப மோசமாகிடுச்சு. ‘இனி, சண்முகம் பொழைக்கிறது கஷ்டம்’னு ஊருக்குள்ள பேச ஆரம்பிச்சுட்டாங்க. சரி, நடப்பது நடக்கட்டும். கடைசியாக முருகனை ஒருமுறை பார்த்துட்டு வந்துடுவோம் என அழுதபடி மலைக்கோயிலுக்கு வந்தேன். முருகன் முன்னாடி உட்கார்ந்துகிட்டு, ‘எனக்கு ஏன் இந்த நிலை? எனக்கு எதாவது ஒரு வழியைச் சொல்லு?’னு முருகனிடம் பேசிக்கிட்டே இருந்தேன். கண்ணுல இருந்து கண்ணீர் நிக்காம வழிஞ்சுகிட்டே இருக்கு. அப்ப, சித்த வைத்தியம் பார்க்கச் சொல்லி எனக்கு ஓர் உத்தரவு வந்தது. அதன்படி, காரைக்குடியில இருந்த ஒரு சித்த வைத்தியர்கிட்ட போய்ச் சேர்ந்தேன். அங்கே நாலு மாசம் இருந்ததுல பரிபூரணமா குணமாகிட்டேன். நான் குணமாகி கிளம்பும்போது, அந்த வைத்தியர் என்கிட்ட சொன்ன வார்த்தை, ‘நான் உன்னைப் பார்த்ததும், இது தேறாத கேஸ், எடுத்துக்க வேண்டாம்னுதான் நினைச்சேன். ஆனா, என் மனசுக்குள்ள ஒரு குரல், `உன்னால முடியும் சிகிச்சைக் கொடு’னு சொல்லிக்கிட்டே இருந்துச்சு. அதனாலதான் நான் உன்னைச் சேர்த்துக்கிட்டேன். நீ எனக்கு நன்றி சொல்றதைவிட, என் அப்பன் முருகனுக்கு நன்றி சொல்லு’ என்றார். அதைக் கேட்டதும், முருகனின் அருளை நினைத்து, உருகிப்போனேன். அன்று முதல் கோயில் திருப்பணியை செய்துகொண்டு இங்கேயே இருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட அனுபவம்போல, பலருக்கும் ஏற்பட்டு இருக்கு. இங்கு வந்து அவர்கள் நெக்குருகச் சொல்லி அழும்போதுதான் எங்களுக்கு அது தெரிகிறது. பன்றிமலை சுவாமிகளால், உருவாக்கப்பட்ட இந்தக் கோயிலில் அவருக்கும் தனியாக ஒரு சந்நிதியை அமைத்திருக்கிறோம். கேட்டவருக்கு கேட்ட வரம் கொடுக்கும் பாலமுருகனின் அருள்பெற முருக பக்தர்கள் தாண்டிக்குடி பாலமுருகனை தரிசித்து அருளாசி பெற வேண்டும்’’ என்கிறார்.