Thursday, 1 November 2018

பொய்யாமொழி புலவரும் முருகர் திருவிளையாடலும்

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

சிறந்த முருகனடியார்களான நக்கீரர், முசுகுந்தர், நல்லியக்கோடர், ஒளவையார், சேந்தனார், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சார்யர், குமரகுருபரர், முருகம்மையார், பகழிக்கூத்தர் வரிசையில் பொய்யாமொழிப் புலவரும் ஒருவர். பொய்யாமொழிப் புலவர் தொண்டை மண்டலத்தைச் சார்ந்த துறையூரைச் சேர்ந்தவர். இவர் இயற்பெயர் அம்பலத்தரசன். இவர் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ‘தஞ்சைவாணன் கோவை’ உள்ளிட்ட பல நூல்களை இயற்றிருக்கிறார். (இவர் வாழ்ந்ததற்கு வலுவான ஆதாரம்!)

தம் இளமைப் பருவத்தில் வைரபுரம் என்னும் ஊரில் கல்வி பயின்று வந்தார் அம்பலத்தரசன். குருகுலத்தில் அம்பலத்தரசனுடன் சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்களில், அந்தப் பிரதேசத்து மன்னன் காளிங்கராயனின் மகளான அமிர்தவல்லியும் ஒருவர். கல்வி பயின்ற காலம் போக மற்ற வேளையில் உபாத்தியாயரின் சோளக்கொல்லையை மாணவர் காவல் புரிவது வழக்கம்.

ஒரு நாள் அமிர்தவல்லி, அம்பலத்தரசனின் முறை வந்தது. இருவரும் காவல் காக்கும் வேளையில் அப்போது அங்கிருந்த காளி கோயில் ஒன்றின் பக்கத்தில் ஒரு மர நிழலில் படுத்துறங்கினார் அம்பலத்தரசன். அப்போது பயிர்களைக் குதிரையொன்று வந்து மேய்ந்துவிட்டது. அமிர்தவல்லி அது பற்றி கவலைப்படாமல், குதிரைகளை விரட்டாமல் அவற்றை ரசித்தபடி இருந்தாள். திடீரென விழித்த அம்பலத்தரசன் அழிந்த கொல்லையை கண்டு துடித்துப்போனார். குருநாதருக்கு என்ன பதில் சொல்வேன் என்று கலங்கி தவித்தார். உடனே விரைந்து சென்று அக்குதிரையை விரட்டினார். விரட்டியும் அது, பயிர் மேய்வதை விட்டுச் செல்லவில்லை. உடனே காளி கோயிலுக்குச் சென்றார். காளியிடம் முறையிட்டார். தம் ஆசிரியர்க்குப் பிழை செய்ததாகக் கருதி, அப்பிழை நீங்க அருள்புரிய வேண்டிக் காளியை வணங்கினார்.

காளிதேவி அவருக்கு பிரத்யட்சமாகி, “குழந்தாய் கவலை ஒழிக. இனி நீ கவிபாடும் வல்லமையை பெறுவாய். உன் வாக்கினின்று வெளியாகும் வார்த்தைகள் யாவும் பலிக்கும். உன் வாக்கு பொய்க்காது. இனி நீ பொய்யாமொழி என்று வழங்கப் பெறுவாய்! உனக்கு சிவகவி என்ற பெயர் சரித்திரத்தில் நிலைக்கும்!” என்று வரம் தந்து மறைந்தாள்.

வரம் பெற்ற பொய்யாமொழி கொல்லைக்கு சென்று அக்குதிரையின் மீது கீழ்கண்டவாறு வசை பாட…

‘வாய்த்த வயிரபுர மாகாளி அம்மையே
ஆய்த்த மணலில் அணிவரையில் – காய்த்த
கதிரைமா ளத்தின்னும் காளிங்கன் ஏறும்
குதிரைமா ளக்கொண்டு போ’

அடுத்த நொடி அது இறந்து வீழ்ந்தது.

விஷயம் கேள்விப்பட்ட குருநாதரும் இதர மாணவர்களும் அது காளிங்கராயனின் குதிரை அவன் நம் அனைவரையும் ஒழித்துவிடுவான் என்று பதறித் தவிக்கின்றனர். அமிர்தவல்லி தந்தையின் கோபம் மற்றவர்களை பாதிக்கும் என பயந்து குதிரையை உயிர்ப்பிக்க வேண்டுகிறாள். இயல்பிலேயே செருக்கு மிக்க அமிர்தவல்லியிடம் இதை வாய்ப்பாக கொண்டு “ஏழையை அலட்சியம் செய்யாதே, தெய்வத்தை இகழாதே” என்கிற வாக்குறுதியை பெற்று மற்றொரு பாட்டுப் பாடிக் குதிரையை உயிர்ப்பிக்கிறார் பொய்யாமொழி. சில நாட்கள் சென்றது. ஒரு நாள் அரண்மனைக்கு தீச்சட்டி ஏந்தி பிக்ஷை கேட்டு வரும் ஒரு பைரவப் பெண்மணியை (காளி!) செருக்கின் மிகுதியால் அமிர்தவல்லி அவமதிக்கிறாள்.

“அவளை அவமதிக்காதே” என்று தோழியர் கூறியும் அதை அலட்சியப்படுத்துகிறாள். மேலும் பைரவப் பெண்மணிக்கு பிக்ஷையிட அவள் தோழி ஒரு சொம்பில் கொண்டு வரும் அரிசியையும் அமிர்தவல்லி தட்டிவிடுகிறாள்.

உடனே அந்த பைரவப் பெண்மணி சிரிக்கிறாள்.

“சிரிக்கிறாயா என்ன செய்கிறேன் பார் உன்னை” என்று அருகே தடாகத்திலிருந்து சொம்பில் நீரை மொண்டு அவள் மீது ஊற்ற, பைரவப் பெண்மணியின் மீது அது படாமல் இவள் மீதே திரும்பிப் படுகிறது. இதைத் தொடர்ந்து அமிர்தத்தின் முகத்தில் உடலில் வைசூரி கொப்புளம் (அம்மை) தோன்றுகிறது. ஆசை மகளுக்கு முகமெல்லாம் அம்மை தோன்றியதைக் கண்டு துடிக்கும் காளிங்கராயன், பொய்யாமொழியின் வாக்குத் திறனைப் பற்றிக் கேள்விப்பட்டு அவன் தன் மகளை குணப்படுத்தினால் அவளையே திருமணம் செய்து வைப்பதாக பொய்யாமொழியிடம் கூறுகிறான்.

பொய்யாமொழி இதற்கு தயங்க… தனது குருநாதரின் கட்டளையை ஏற்று அமிர்தவல்லியை குணப்படுத்த அரண்மனை செல்கிறார். கட்டிலில் வைசூரி நோயின் கடுமையால் சுருண்டு படுத்திருக்கும் அமிர்தவல்லியை பார்த்து நடந்தது என்ன என்பதை காளியை தியானித்து ஞானதிருஷ்டியில் உணர்ந்துகொள்கிறார்.

“இவள் அன்னையை அவமதித்திருக்கிறாள். எனக்களித்த வாக்குறுதியையும் மீறி!” என்கிறார் அங்கு குழுமி இருப்பவர்களிடம்.

“மன்னிக்கவேண்டும். என் தவறை உணர்ந்துவிட்டேன். இனி அப்படி செய்ய மாட்டேன்” என்று அமிர்தவல்லி வருந்திக் கூற அதை ஏற்று கவி பாடி அவளது நோயை அகற்றி அவளையே திருமணமும் செய்துகொள்கிறார்.

அன்னை தந்த அருட்சக்தியை அற்ப பொருளுக்காக பயன்படுத்த பொய்யாமொழி விரும்பவில்லை.

அரண்மனையில் வளர்ந்த அமிர்தவல்லியால் பொய்யாமொழியுடன் எளிமையாக வாழமுடியவில்லை. ஜீவனத்திற்கு வேறு வழியில்லாததால் வீடு, நகைகளை விற்கிறார் பொய்யாமொழி. மேலும் தனது சினேகிதியின் துர்போதனையால், கவிபாடி திரவியம் தேடும்படி கணவனை வற்புறுத்துகிறாள் அமிர்தவல்லி.

இந்த நேரம் உள்ளூர் பிரமுகள் ஒருவர் முருகக் கடவுள் மேல் உலா பாடித் தரும்படியும் அதற்குப் பல வராகன்கள் தருவதாகவும் சொல்ல, பொய்யாமொழி மறுத்துவிடுகிறார். “வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ” என்று மறுத்துவிடுகிறார்.

வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ? வெள்ளிமலை (வள்ளலை)
எந்தன் சுவாமியைப் பாடும் வாயால்
தகப்பன் சாமியைப் பாடுவேனோ?

அப்பனைப் பாடும் வாயால் ஆண்டி
சுப்பனைப் பாடுவேனோ? என் அம்மை
அப்பனைப் பாடும் வாயால் பழனி ஆண்டி
சுப்பனைப் பாடுவேனோ?

“நான் அன்னையையும் அப்பன்னையும் பாடுபவன். கோழியை பாடும் வாயால் குஞ்சையும் பாடுவேனா?” என்று மறுத்துவிடுகிறார்.

முருகனடியார் பெரிதும் நொந்து மனம் வருந்திச் சென்றார். தன் மருமகனைப் பாட மறுத்த இவரிடம் இருந்து திருமகள் முற்றிலும் விலகிவிட வறுமையென்ற சிறுமையால் வாடாத துவங்கினார் பொய்யாமொழி. இதனால் தம்பதியினருக்குள் சச்சரவு ஏற்பட்டு பொய்யாமொழி வீட்டை விட்டு வெளியேறுகிறார். பல ஊர்களுக்கு சென்ற இவர் மதுரை சென்று பாடல் பாடி பொன்னும் மணியும் பெற்று திரும்பும்போது, ஒரு நாள் காட்டு வழியில் இவர் தனியே பயணம் செய்ய வேண்டியிருந்தது.

அப்போது ஒரு முரட்டு வேடன் இவரை வழிமறித்து “ம்…உன்னிடமுள்ள பொன் பொருளையெல்லாம் என்னிடம் கொடுத்துவிடு…. இல்லையெனில் தொலைத்துவிடுவேன்” என்று மிரட்டுகிறான்.

“என்னிடமா உன் வீரத்தை காட்டுகிறாய்… உன்னை வசைபாடி ஒழித்துவிடுவேன்” – இது பொய்யாமொழிப் புலவர்.

இருவருக்கும் வாதம் நீள்கிறது.

வேடன் நகைத்தபடி, “உன் வசையெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது… ம்… பொன்னை எடு!” என்று கத்தியை காட்டி மிரட்டுகிறான்.

வசைபாடி முடிப்பதற்குள் உயிர் போய்விடும் போலிருக்கிறதே என்று பயந்து நடுங்கிய பொய்யாமொழி, ”நான் ஒரு ஏழைப் புலவன்! நானே இப்போது தான் பல தேசம் சென்று கவிபாடி பொருளீட்டி வீட்டுக்கு திரும்புகிறேன். என்னை விட்டுவிடு!” என்று வேண்டினார்.

வேடன் சற்று இரக்கப்பட்டு ”சரி, நீர் கவி என்பதால் என் மீது பாடல் பாடினால் விடுவேன்!” என்றான்.

”உன் பெயர் என்ன?” எனக்கேட்ட புலவர்க்கு, வேடன் ”என் பெயரா? ம்… முட்டை!” என்றான்.

“முட்டை…? விசித்திரமான பெயராய் இருக்கிறதே…”

புலவர் உடனே முட்டையைப் பற்றி பாடினர்….

”பொன்போலுங் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே
என்பேதை செல்லற் கியைந்தனளே – மின்போலு
மானவேல் முட்டைக்கு மாறாய தெவ்வர்பொங்
கானவேல் முட்டைக்குங் காடு”

நற்றாயிரங்கல் என்ற துறையில் முட்டையென்ற பேர் வருமாறு இப்பாடலைப் பொய்யாமொழி பாடினார்.

பாடலின் பொருள் : மின்னலைப் போல ஒளி வீசிச் சுடர்கின்ற சிறப்புமிக்க வேலை ஆயுதமாக கொண்ட ‘முட்டை’ என்னும் பெருவீரருக்கு மாறான எதிரிகள் ஓடி ஒளிந்து கொள்கின்ற காட்டில், பல வேல மரங்கள் மிகுந்துள்ளன; அங்கு சூரியனின் உஷ்ணத்தினால் கள்ளிச் செடிகளும் சூடேறி பொன்போன்ற பொறிகளைப் பறக்க
விடுகின்றன. அத்தகைய அக்கானகத்தில் வேல முட்களும் காலில் தைக்கக் கூடிய வழியில் தன் தலைவனோடு இந்தப்பெண் செல்லத்துணிந்தனளே!’

தன் மகள் கொடிய வெப்பத்தில் காட்டில் முள் தைக்குமாறு செல்லத் துணிந்தாளே என ஒருத் தாய் வருந்துவதைப் பாடினார் புலவர். (முள்தைக்கும் என்பது ‘முட்டைக்கும்’ என வரும்).

பாடியபின்னர் புலவர் வேடனிடம், ”பாடினேன் இப்போதாவது என்னைப் போகவிடு!” என்றார்.

வேடன் நகைத்தான். ”நீர் பெரிய கவி என்று சொல்லிக்கொள்கிறீர். ஆனால் உம் பாடலில் பொருட்குற்றம் உள்ளதே!”

“என்ன என் பாட்டில் பிழையா? ஒரு வேடன் என் பாட்டில் பிழை கண்டுபிடிப்பதா?” பொய்யாமொழி திடுக்கிட்டார்.

“பாலுள்ள கள்ளி, பொறி பறக்கத் தீப்பற்றி எரியும் காட்டில், வேலின் முள் (வேலமரத்து முள்) மட்டும் எரிந்து சாம்பலாகாதா? அது எப்படி காலை தைக்கும்?” எனக்கேட்டான் வேடன்!

புலவர் திகைத்தார். அவருக்குத் தலை சுற்றியது!

”சரி… உம் பெயரைச் சொல்!” என்றான் வேடன்.

“பொய்யாமொழி”

வேடன் மீண்டும் சிரித்தான்.

”பொய்யாமொழியா? நன்று நன்று! ‘பொய்+ஆம்+மொழி’! உமது மொழி பொய்தான்!” எனச் சொல்லி தான் ஒரு பாடலை பதிலுக்கு பாடிக்காட்டினான்.

ஒரு வேடன் இப்படி கவிபாடுகிறானே… அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏமாற்றமும் கலந்து நின்றார் புலவர்.

திடுக்கிடும் பொய்யாமொழி, “நீ வேடனே அல்ல… நீ உண்மையில் யார்?”

“நீர் இப்போது யாரைப் பற்றி பாடினீர்?”

“முட்டையை பற்றி!”

“முட்டையிலிருந்து வெளிவருவது?”

“குஞ்சு….”

“குஞ்சுக்கு தாய்?”

“கோழி…”

வேடன் தொடர்ந்தான்….. ”கோழியைப் பாடியவன், கோழிக் குஞ்சைப்பாட மாட்டேன் என்றாயே, இப்பொழுது கேவலம் ‘முட்டை’யை பாடிவிட்டாயே! இதுவா உன் வைராக்கியம்?” என்று நகைத்தான்!

பொய்யாமொழிப் புலவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. “ஐயா… நீர … நீர்…. யார்?”

“நானா? நான் தான் உமது தாயின் குஞ்சு” என்று கூறி தன் சுய உருவை காட்டுகிறார் கந்தவேள்.

வேடனாய் வந்தது அந்த வேலவனே என்று அறிந்து “என்னப்பன் முருகன்.. என் ஆணவத்தை அகற்ற வந்த அறுமுகன்…” என்று கால்களில் விழுந்தார் பொய்யாமொழி.

முருகன் அவரிடம், “நீ நம்மை தொடர்ந்து இகழ்ந்து வந்தபோதும் உன் வைராக்கியத்தை மெச்சினோம். உனக்குள் இருக்கும் சிவ-சிவகுமாரன் பேதத்தை நீக்கி உம்மை தடுத்தாட்கொள்ளவே வந்தோம்” என்று கூறி அவனுக்கு பல மூர்த்தி தரிசனம் காண்பித்து “நானே முருகன்…. நானே சிவன்… நானே விஷ்ணு… உருவம் பலவாயினும் நாம் ஒன்றே!” என்று பரப்பிரும்ம தத்துவத்தை அவருக்கு உபதேசித்தான்.

“பொன்மூட்டை இனி சுமாக்காதே. அது உமக்கெதற்கு?” என்று அதை வீசச்சொல்லி அவர் நாவை நீட்டச் செய்து, அதில் தன் வேலால் சடாக்ஷர மந்திரத்தை பொறித்து, அவருக்கு ஆசி கூறி மறைந்தான்.

பார்த்தீர்களா எத்தனை கருணை கந்தனுக்கு… தன்னை துதிக்கதவரையும் தடுத்தாட்கொள்வதில் அந்த தண்டபாணிக்கு நிகர் வேறு யாரும் இல்லை. இந்தச் சிறப்பு முருகப்பெருமான் ஒருவனுக்கே உரித்தானது!

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறு செய் தனிவேல் வாழ்க் குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம் ்