Saturday, 2 September 2017

விநாயகரை வழிபடும் அதிசய யானை

விநாயகரை வழிபடும்

அதிசய யானை


வாணியம்பாடி, செப்.3:

இந்துக்களின் முழு முதற்கடவுளாக கருதப்படுபவர் விநாயகர். அவருக்கு முதலில் வழிபாடு நடத்தி பூஜை செய்த பிறகே, எந்தவொரு காரியத்தையும் தொடங்குவார்கள். அத்தகைய விநாயகருக்கு விளாம்பழத்தை படையலிட்டு, யானை ஒன்று வழிபாடு நடத்தும் அரிய நிகழ்வு, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிகழ்ந்து வருகிறது.

இந்த மாவட்டத்திலுள்ள ஜவ்வாது மலை தொடர்ச்சியில், �ஏழைகளின் ஊட்டி� என்றழைக்கப்படும் ஏலகிரி மலை அமைந்துள்ளது. இங்கு, 6 காட்டு யானைகள் ஒரு ஆண் யானையுடன் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன.

இதிலிருந்து தனியாக பிரிந்து செல்லும் ஒரு ஆண், கடந்த 20 ஆண்டுகளாக ஆலங்காயம் காப்பு காட்டில் சுற்றித்திரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில், தீர்த்தம் காட்டுப்பகுதி, நரசிங்கபுரம், கல்லரைப்பட்டி மலையடிவார பகுதிகளுக்கு ஆண் யானை வந்திருக்கிறது.

அங்குள்ள விவசாய நிலங்கள் வழியாக நடந்து சென்றதால், கால்தடம் பட்டு பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஆனால், இந்த யானை பயிர்களை தின்று நாசம் செய்வதோ, யாரையும் தொந்தரவு செய்வதோ கிடையாது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், “தீர்த்தம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று இந்த யானை வந்து விடுகிறது. அப்போது, விளாம்பழத்தை எடுத்து வந்து விநாயகருக்கு படையலிட்டு, சிறிது நேரம் அங்கேயே நின்று வழிபடும் யானை, பின்னர் அந்த விளாம்பழத்தை சாப்பிட்டு விட்டுச் சென்று விடுகிறது” என்றனர்.

இதுகுறித்து, தீர்த்தமலை சிவன் கோயில் அர்ச்சகர் சிவா கூறுகையில், “விநாயகர் சதுர்த்தி அன்று இரவு 10, 11 மணியளவில் சிவன் கோயிலுக்கு வரும் ஆண் யானை, தீர்த்தம் குளத்தில் குளித்து விட்டு தண்ணீரை உறிஞ்சி, விநாயகர் சிலை மீது ஊற்றி அபிஷேகம் செய்கிறது. பின்னர், மீண்டும் காட்டுக்குள் சென்று விடுகிறது” என்றார்.

No comments:

Post a Comment