Thursday, 16 October 2025

குளிகன்

 #எருமைத் தலையும் #மனித உடலும் கொண்டவராக இருக்கும் இவர் மகிசன் என்று நினைத்து விடாதீர்கள்


இவர் தான் #குளிகன். #குளிகை என்ற காலத்தின் அதிபதியாவார். இவர் #சனீசுவரன் - #தவ்வை தம்பதிளின் மகனாவார். இவரை #மாந்தி என்றும், #மாந்தன் என்றும் அழைக்கின்றனர். #பல்லவர்கள் காலத்தில் தவ்வையை வழிபடும் வழக்கம் இருந்துள்ளது. அவர்களின் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட, புதிதாக கட்டப்பட்ட கோயில்களில் தவ்வை சிலையுடன் மாந்தனையும் வைத்து வழிபாடு செய்துள்ளனர். பெரும்பாலும் தன்னுடைய தாயான தவ்வை மற்றும் சகோதரி #மாதி அவர்களுடன் ஒரே கல்லினால் ஆன சிலையில் உள்ளார். தற்போது இவரை வழிபடும் வழமை குறைந்து காணப்படுகிறது.


குளிகை காலம் உருவாவதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை இங்கே பார்க்கலாம். ராவணனின் மனைவி #மண்டோதரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் அவளுக்கு எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்று அறிந்த #ராவணன், குல குரு சுக்ராச்சாரியாரை சந்தித்தார். "குருவே, எனக்கு பிறக்கப் போகும் குழந்தை பல வித்தைகளுக்கு தலைவனாகவும், எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்டவனாகவும், அழகில் சிறந்தவனாகவும் விளங்க, எந்த நேரத்தில் பிறந்தால் நல்லது என்று சொல்லுங்கள்..??" என்று கேட்டான். அதற்கு #கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் பிள்ளை பிறந்தால், அந்த குழந்தை நீ விரும்பிய எல்லா சிறப்புகளும் கொண்டதாக இருக்கும் என்று #சுக்ராச்சாரியார் யோசனை தெரிவித்தார். அதன் அடிப்படையில் இராவணன் மேற்கண்ட யோசனையைச் சொன்ன #சுக்கிரன் உட்பட அனைத்து நவகிரக அதிபதிகளையும் சிறைபிடித்து ஒரே அறையில் அடைத்து வைத்தார். ஒரே இடத்தில் கிரக அதிபதிகள் அனைவரும் இருப்பதால் மண்டோதரிக்கு பிரசவ வலி இருந்த போதிலும் குழந்தை பிறப்பதற்கான சூழல் ஏற்படவில்லை.


"இந்த சிக்கலை தீர்க்க வேண்டுமானால் நாம் 9 பேர்களை தவிர நல்ல காரியத்தை விருத்தி செய்வதற்காக ஒரு புதிய உபகரக அதிபதியான ஒருவனை #சிருஷ்டி செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றி கொடுக்க வேண்டும். அதனால் நமக்கு நன்மை ஏற்படுவதுடன், அவனை சிருஷ்டிக்கும் அதே சமயத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவமும் ஏற்படும்" என்று சுக்ராச்சாரியார் தெரிவித்தார். உடனே சனீஸ்வரன் தனது சக்தி அம்சம் மூலம் தன் மனைவி #ஜேஷ்டா தேவிக்கு ஒரு மகன் பிறக்கும்படி செய்கிறார். அவரே குளிகன். அவர் பிறந்த அதே நேரத்தில் மண்டோதரியும் அழகான ஒரு மகனை பெற்றெடுக்கிறாள். அவர்தான் #மேகநாதன். குழந்தை பிறக்கும்போதே நல்ல காரியங்களை நடத்தி வைக்கும் தன்மை கொண்டவனாக இருந்ததால், நவகிரக அதிபதிகள் அனைவரும் அவனை வாழ்த்தினார்கள். தினமும் பகல் மற்றும் இரவு ஆகிய வேலைகளில் குளிகை நேரம் என்ற அளவில் ஒரு #நாழிகை நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரம் "#காரிய_விருத்தி_வேளை" என்று அழைக்கப்படுகிறது.


சுப காரியங்களை விருத்தி செய்ய ஏற்ற காலமாக குளிகை என்கிற காலம் கருதப்படுகிறது. குளிகை காலம் என்ற வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்ச்சிகளை மேற்கொள்வது, கடனை திருப்பிக் கொடுப்பது, தங்க நகைகள் வாங்குவது, அடகு வைத்த தங்க நகைகளை மீட்பது, பிறந்தநாளை கொண்டாடுவது போன்ற விஷயங்களை செய்யலாம். அதன் காரணமாக தடைகள் எதுவும் இல்லாமல் அந்த விஷயங்கள் தொடர்ச்சியாக நடந்து வரும் என்பது மட்டும் அல்லாமல், அதை போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்பது மக்களின் மத்தியில் அதிக நம்பிக்கையுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் சுப காரியங்களுக்கு குளிகை காலம் உகந்ததாகவும் அசுப காரியங்களை செய்யாமல் தவிர்க்கப்பட வேண்டிய காலமாகவும் குறிப்பிடப்படுகிறது..!!


அமைவிடம்: #அசலதீபேசுவரர் கோவில், #மோகனூர், #நாமக்கல் மாவட்டம்.