Tuesday 24 September 2024

மஹா அவதார் பாபாஜி

 உண்மையில் மகா அவதார் பாபாஜி யார்? அவர் எங்கே பிறந்தார்? எங்கே வளர்ந்தார்? எங்கே இருக்கிறார்? அவரது வயது என்ன? 


பாபாஜி, இந்த வார்த்தைக்குதான் எத்தனை மந்திர சக்தி! எத்தனை மகத்துவம்! புரிந்தவர்கள் இவரை தெய்வம் என்று போற்றுகிறார்கள். புரியாதவர்களுக்கு இவர் என்றுமே புரியாத புதிர்தான்! 


பாபாஜி என்ற பெயரில் நைனிடால் பாபாஜி, ஹரியகான் பாபாஜி, ஹைடகன் பாபாஜி என்றெல்லாம் பலரும் இருந்தாலும் எல்லோரும் ஒருவரே என்றுதான் சொல்கிறார்கள்.உண்மையில் மகா அவதார் பாபாஜி யார்?


அவர் எங்கே பிறந்தார்? எங்கே வளர்ந்தார்? எங்கே இருக்கிறார்? அவரது வயது என்ன? இந்தக் கேள்விகள் உலகம் முழுக்க கோடானு கோடிப் பேரிடம் இருந்தாலும்,யாராலும் சரியான விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.


அருகிலேயே அவர் இருப்பது அறியாமல், அவரைத் தேடி அலைபவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். எப்படி இருப்பார் என்ற ஆராய்ச்சியில் தங்கள் வாழ்நாளையே கழித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.


ஒரே நேரத்தில் பல வடிவங்களில் இருக்க முடியும் அவரால். வடிவமே இன்றி ஒளிரூபத்திலும் தோன்றுவார் அவர்.


தேடிக்கண்டுபிடிக்க நினைத்து அலைவதை நிறுத்திவிட்டு, ஆத்மார்த்தமாக அவரிடம் சரணடைந்து அவரையே மனதுள் இருத்தி தியானம் செய்தால், நாம் தேடிப் போகாமலேயே அவர் நம்மைத் தேடி வருவார்.


உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான பேர் மத இன, மொழி, மத வேறுபாடற்று மகா அவதார் பாபாஜியைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவலில் இருக்கிறார்கள். 


மகாவதார் பாபாஜியை தரிசித்ததாகவும் அவருடன் இருந்ததாகவும், பலர் பலவிதமாகச் சொல்கிறார்கள்.


விடுதலைப் போராட்ட தியாகியான டாக்டர் ராம்போஸ்லே பாபாஜியுடன் கிட்டத்தட்ட ஆறு வருடம் இருந்திருக்கிறார். பாபாஜியைப் பற்றிய அதிசயமான விஷயங்களை அவர் வியந்து கூறுகிறார். பாபாஜி எந்த வடிவத்திலும் தோன்றுவாராம். வயதானவராக, விலங்காக, பறவையாக எந்த உருவத்திலும் நிமிடத்தில் மாறிவிடுவாராம்.


ஒரு சமயம் அவரது பக்தரின் வீட்டிற்கு உணவருந்த வருவதாக பாபாஜி உறுதியளித்திருந்தாராம். ஆனால் சொன்னபடி பாபாஜி வரவில்லையென்று பக்தர் வருத்தப்பட்டார்.


அதை பாபாஜியிடமே நேரில் கேட்டுவிட்டார். உடனே பாபாஜி, ‘‘நான் அங்கே வந்திருந்தேன். மீந்துபோன உணவையெல்லாம் எனக்கு நீ போட்டாயல்லவா’’ என்றதும் அந்த பக்தர் அதிர்ந்து போனார். காரணம், அவர் மீந்து போன உணவைப் போட்டது ஒரு நாய்க்கு. அதாவது நாய் உருவில் அங்கே வந்திருக்கிறார் பாபாஜி.


பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பாபாஜி செல்வார். சில நேரத்தில் பறவைகளின் மூலமாகத் தன் சீடர்களுக்கு செய்தி சொல்லி அனுப்புவார். அந்தப் பறவைகள் மனிதனைவிட விரைவாகச் சென்று சீடர்களிடம் பாபாஜியின் செய்தியை விவரமாகத் தெரியப்படுத்திவிடும்.


பாபாஜி யார் என்பதைத் தெரிந்துகொள்ள முயன்றவர்களுள் ஒருவரான யோகிராமையா என்பவர், தனது தியானத்தில் பாபாஜியின் பிறப்பைப் பற்றிய விவரங்கள் காட்சியாகத் தெரிந்ததாகக் கூறுகிறார்.


அவதரித்த காலம் உட்பட சகலமும் உணரும்படியாக தெளிவாகப் புலப்பட்ட கனவு அது. அதாவது பாபாவால் உணர்த்தப்பட்ட விஷயம் அது. அந்த விவரங்கள்:


கடலூருக்கும் சிதம்பரத்திற்கும் நடுவே கடலோரத்தில் உள்ளது பரங்கிப்பேட்டை என்ற ஊர். அங்கே வசித்தனர் வேதாரண்ய ஐயர்-ஞானம்பாள் என்ற நம்பூதிரி பிராமணத் தம்பதியினர். இறைபக்தி மிக்க அவர்களுக்கு, கி.பி.203ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி கடவுளருளால் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு நாகராஜ் என்று பெயர் வைத்தனர்.


கார்த்திகை தீபத்தன்று பிறந்த அக்குழந்தை, மானிட வர்க்கத்திற்கு தான் ஒளி தரப்போவதை சொல்லாமல் சொல்லியது.


கேரளத்தைச் சேர்ந்த இந்த நம்பூதிரி குடும்பத்தினர் அங்கிருந்து பரங்கிப்பேட்டை வந்து அங்கிருந்த சிவன் கோவிலில் அர்ச்சகம் செய்து வந்தனர். சிவாலயமான அது காலப்போக்கில் முருகன் தலமாக பிரசித்திபெற்று, முத்துக்குமாரசாமி கோவில் என்று பெயர் பெற்றது. பழமையான அந்தக் கோயில் இன்றும் பரங்கிப்பேட்டையில் இருக்கிறது.


சிறுவன் நாகராஜுக்கு ஐந்து வயது இருக்கும்போது அந்த சிவன் கோவிலில் நடந்த திருவிழா ஒன்றின்போது கயவன் ஒருவனால் கடத்திச் செல்லப்பட்டான். கல்கத்தாவிற்கு அவனைத் தூக்கிச் சென்றபோது ராமானந்தர் என்னும் வேதவிற்பன்னர் ஒருவர், சிறுவனது முகத்தில் தெரிந்த தேஜஸைக் கண்டார். சிறிதளவு பணம் கொடுத்து அவனைக் கயவனிடமிருந்து மீட்டார்.


அதனால், சிறு வயதிலேயே சாதுக்களுடன் பழகும் பாக்கியம் கிடைத்தது நாகராஜுக்கு. காசி, பிராயாகை போன்ற தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது, அங்கே பால்குடி பாபாக்களோடு வாழ்ந்தார். அவர்களுக்கும் இலங்கையில் உள்ள கதிர்காமத்திற்கும் நல்ல தொடர்பு இருந்து வந்ததால் பதினொரு வயதிலேயே கதிர்காமம் சென்று அங்கு சித்தர் போகநாதரை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார்.


விரிந்து படர்ந்த ஓர் ஆலமரத்தின் கீழ் போகரோடு இருந்து, போகரின் ஆசியோடு பல்வேறு யோக சாதனைகளையும் தியானக் கிரியைகளையும் அவர் பழகினார்.


தமது பதினாறாவது வயதில் பொதிகை மலைப் பகுதிக்கு வந்த நாகராஜ், குற்றாலநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள பராசக்தி பீடத்தினருகில் அமர்ந்து, அகத்தியரை வேண்டி கடுமையான தவத்தை மேற்கொண்டார்.


தவத்திற்கு இரங்கி அகத்தியர் அவர் முன்னே வந்தார். கிரியாகுண்டலினியை உபதேசம் செய்து இமயத்தின் உச்சியிலுள்ள பத்ரிநாத்திற்குச் சென்று அங்கு தவமியற்றும்படி அனுப்பினார். அங்கு சென்ற நாகராஜ் கடுமையான யோகப் பயிற்சிகளாலும், தியான முறைகளாலும் உன்னத நிலையடைந்து பாபாஜியாக இவ்வுலகிற்கு வெளிப்பட ஆரம்பித்தார்.


ஒவ்வொரு மனிதனும் சித்தாஸ்ரமம் சென்று அங்கே சாதனை மேற்கொள்வதை லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்று ரிக்வேதமும், சாமவேதமும் சொல்கின்றன.


ஆனால் சித்தாஸ்ரமத்திற்கு எல்லோராலும் அவ்வளவு சுலபமாகச் சென்றுவிட முடியாது. ஆயிரம் யோகிகளில் ஓரிருவருக்கு மட்டுமே அந்த பாக்கியம் கிடைக்கும்.


சித்தாஸ்ரமம் செல்வது எந்த அளவிற்கு உயர்வானது என்பதை விளக்க வேண்டுமானால், மகாபாரத சம்பவம் ஒன்றைச் சொல்லலாம்.


குருக்ஷேத்ரப்போரில் அர்ஜுனனின் அம்புகளால் தாக்கப்பட்டு அம்புப் படுக்கையில் உத்தராயண புண்ய காலத்தில் உயிர்விடக் காத்திருந்த பீஷ்மரைப் பார்க்க வந்தார் கிருஷ்ணர். அற்புதமான விஷ்ணு சகஸ்ரநாமத்தால் அவரைத் துதித்தார் பீஷ்மர். அடுத்து, கண்களில் நீர்வழிய தன் கடைசி ஆசையாக பகவானிடம் அவர் கேட்டது என்னதெரியுமா? ‘‘இதே உடலுடன் சித்தாஸ்ரமம் செல்ல வேண்டும்!’’ என்றுதான். பாரதப் போர் முடிந்ததும் தருமர், தாமோதரனிடம் கைகூப்பி வேண்டியதும் இதையே தான்.


பூலோகவாசிகள் சொர்க்கமும், வைகுந்தமும் செல்ல விரும்புவார்கள். ஆனால், மோட்சத்திலும், விண்ணுலகிலும் இருப்பவர்கள் சித்தாஸ்ரமம் வரவே ஆசைப்படுகிறார்களம். 


ஸ்ரீசக்ர வாசினியான அன்னை லலிதாம்பிகையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி இது. இதன் உள்ளே செல்லவோ, சென்று விட்டால் வெளியே வரவோ எல்லோராலும் முடியாது.


சில குறிப்பிட்ட குருமார்களாலும் அவர்களின் சீடர்களாக இருப்போராலும், மட்டுமே முடியும். அவர்களால் தேர்வு செய்யப்படுபவர்களை அவர்களே வழிகாட்டி அழைத்துப் போவார்கள். அங்கே பல ஆயிரம் வருடங்களுக்கு மேல் வாழும் மகான்களை தரிசிக்கலாம். பல சாதனைகளை கற்றுக் கொள்ளலாம். அவ்விதம் சித்தாஸ்ரமத்திற்குள் பிறரை அழைத்துச் செல்லும் உரிமை பெற்ற வெகு சிலரில் மகாவதார் பாபாஜி மிக மிக முக்கியமானவர்.


பாபாஜியின் அற்புதங்கள் அள்ள அள்ளக் குறையாதது. பாபாஜி, லாமா பாபா என்ற பெயரில் திபெத்தில் இருந்ததாகவும் அவரது சீடரான ஜவுக்ஷா லாமாவிற்கு நான்கு கைகள் கொண்ட சிவரூபத்தில் தரிசனம் தந்தார் என்றும் கங்கோத்ரி பாபா உறுதிப்படுத்துகிறார்.


பாபாஜியை தட்சிணாமூர்த்தி அம்சமாக 2500 வருடங்களுக்கு முன்பு கல் அக்னிநாத் என்ற பெயரில் தட்சிணாமூர்த்தியாகத் தோன்றினார் என்றும், அவரே குருகோரக்ஷாநாத் என்றும் சில புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. நாத் பரம்பரையினர் அவரை சிவகோரக்ஷா என்றும், அவர் சிவபெருமான் அம்சம் என்றும் சொல்கிறார்கள்.


மகா அவதார் பாபாஜியை தனது மகா குருவாகக் கொண்டிருப்பவர் ரஜினி. அவரது அபூர்வ தரிசனத்தை அகத்தில் கண்டவர். பாபாஜியைப் பற்றி பலரும் பலவிதமாகக் கூறியிருந்தாலும், மகா அவதார் பாபாவைப் பற்றி தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ரஜினியின் நெருங்கிய நண்பரும், பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான நாகராஜன் ராஜா சொல்வதைக் கேளுங்களேன். ‘‘மகா அவதார் பாபாவைப்பற்றி எத்தனையோ பேர் எத்தனையோ அதிசயங்கள் அற்புதங்கள் என்று பலவும் சொல்லியிருக்கிறார்கள்.


அவரைப் பற்றிய புதிருக்கான விடையை அவரே சொல்வது போல், எனக்கு ஓர் அற்புதத்தை நிகழ்த்தி என்னை அதிசயத்தில் ஆழ்த்தியது என் வாழ்நாளில் மறக்க முடியாத மிகப் பரவசமான சம்பவம்.


2008ம் வருடம் ஜூலை மாதம் நானும் என் மனைவியும், எனது நண்பரும் அவரது மனைவியும் ரிஷிகேஷ் சென்றுவிட்டு அங்கிருந்து பத்ரிநாத் சென்றோம்.


இரவு தரிசனம் முடித்துவிட்டு, மறுநாள் அதிகாலை அபிஷேகம் பார்க்கச் சென்றோம். அந்த சமயத்தில் மட்டும்தான் பத்ரிநாராயணர் தியான நிலையில் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை நாம் தரிசிக்க முடியும். அபிஷேகம் ஆரம்பித்தது. எனக்கு பீடத்தில் பத்ரிநாராயணன் உருவம் தெரியவில்லை. சாட்சாத் பாபாஜியே அங்கே அமர்ந்திருப்பதாகத் தோன்றியது. மெய்சிலிர்க்க கண்களில் நீர் வழிய தரிசித்தேன்.


பிறகு கோவிலின் தலைமை அர்ச்சகரான நம்பூதிரியைப் பார்க்கச் சென்றோம். அவரது அறைக்குள்ளே சென்றவுடன், அங்கே இருந்த ஓர் ஓவியத்தின் மீது என் பார்வை பதிந்தது. அதில், நான்கு கைகளுடன் பாபாஜி தியான நிலையில் அமர்ந்திருப்பது போல் ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்தது.


நம்பூதிரியைப் பார்த்து அந்த ஓவியம் பற்றிய விவரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று என் மனம் படபடத்தது. ஆனால், அவர் உடலநலம் சரியில்லாமல் படுத்திருந்ததால் அவரைப் பார்க்காமலேயே சென்னை திரும்பினோம். என் மனமோ அந்த ஓவியத்தைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.


சென்னை வந்தவுடன் முதல்வேலையாக என் நண்பர் ரஜினிகாந்த் அவர்களைப் பார்த்து பத்ரிநாத்தில் இருந்த அதிசய ஓவியத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்ற ஆவலில் சென்றேன்.


ரஜினிகாந்தைப் பார்த்து ‘பத்ரிநாத்திற்குப் போய் வந்தேன்’ என்ற வார்த்தையை நான் முடிக்கும் முன்பு அவர் கேட்டார்... ‘‘பாபாஜியைப் பார்த்தீர்களா?’’


ஒரு விநாடி தூக்கிவாரிப் போட்டது எனக்கு. அவருக்கு எப்படித் தெரிந்தது? அவர் எதைச் சொல்கிறார்? பத்ரிநாராயணன், பாபாஜி போல் அமர்ந்திருப்பதைச் சொல்கிறாரா? என்று புரியாமல் விழித்தேன். 


புதிராகச் சிரித்தபடி தனது அறைக்குள் சென்றவர், வெளியில் வந்தபோது கையில் ஒரு படத்தோடு வந்தார். அந்தப் படத்தை அவர் என்னிடம் காட்டியபோது மேலும் அதிர்ந்து போனேன். பத்ரிநாத்தில் நம்பூதிரியின் அறையில் நான் பார்த்த விநோதமான பாபாஜி படம் அது!


‘‘இந்தப்படத்தைப் பற்றி சொல்லத்தான் நான் உங்களைத் தேடி வந்தேன். இது எப்படி உங்களிடம் இருக்கிறது?’’ என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.


‘‘நீங்கள் ரிஷிகேஷ் போகிறீர்கள். எப்படியும் உங்களை பாபாஜி பத்ரிநாத்திற்கு அழைத்து விடுவார். அங்கு இந்தப் படத்தைப் பார்க்கும் பாக்கியம் உங்களுக்கும் கிடைக்கலாம். அதற்குப் பின்னர் இந்தப் படத்தைப் பற்றிய விபரத்தை உங்களிடம் கூறலாம் என்றிருந்தேன்’’ என்று சொன்ன ரஜினிகாந்த் பத்ரிநாத் அனுபவத்தை சொல்லத் தொடங்கினார்.


‘‘நான் பத்ரிநாத் சென்றிருந்தபொழுது, அங்குள்ள நம்பூதிரியைச் சந்திக்க அவரது அறைக்குச் சென்றேன். அவரது அறையில் இருந்த இந்தப் படத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்து அதையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதை கவனித்த நம்பூதிரி, ‘‘இந்தப் படத்தைப் பற்றிய ரகசியத்தை இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. ஏனோ, உங்களிடம் சொல்ல வேண்டும் என்று எனது உள் மனது சொல்கிறது’’ என்று கூறிவிட்டு சொல்ல ஆரம்பித்தார்.


‘‘எனக்கு முன் இருந்த நம்பூதிரியின் கனவில் இந்த உருவம் தோன்றி, ‘இந்தக் கோவிலில் பத்ரி நாராயணனாக நான் தான் இருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். திடுக்கிட்டு எழுந்த அவர், தனக்கு இறைவன் கனவில் காட்டிய உருவத்தை அப்படியே ஓவியமாக வரைந்து வைத்துவிட்டார்.


அன்று முதல் இந்தப் படத்திலுள்ள தெய்வத்திற்கு பூஜை செய்தபிறகே பத்ரிநாராயணனுக்கு பூஜை செய்யும் வழக்கம் தொடர்ந்து வருகிறது’’ என்று நம்பூதிரி கூறினார்.


மகா அவதார் பாபாஜியால் மக்களுக்கு கிரியா யோகத்தை அளிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட சீடர், ஸ்ரீலாஹிரி மகாசாயர். இல்லறத்தில் இருந்து கொண்டே யோக சாதனைகள் செய்து இறைவனோடு ஒன்ற முடியும் என்பதை மக்களுக்கு எளிதாக எடுத்துச் சொன்னவர் இவர். மகா அவதாரர் பாபாவை நேரடியாக தரிசித்த அவர், கிருஷ்ண பரமாத்மாதான் பாபாஜி என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அது நிதர்சனமான உண்மை என்பதை எனக்கு உணர்த்திவிட்டார் பாபாஜி.


ரஜினிகாந்த் மூலம் தன்னைப் பற்றிய இந்த உண்மை எனக்குத் தெரிய வேண்டும். என் மூலம் வெளி உலகிற்குத் தெரிய வேண்டும் என்பது பாபாஜியின் எண்ணமாக இருந்திருக்கிறது.


பாபாஜியின் அந்த அற்புதப் படத்தின் பிரதி ஒன்றை எனக்குக் கொடுத்து, மன நிறைவையும், அருமையான, உண்மையான விளக்கத்தையும் எனக்களித்த நண்பர் ரஜினிகாந்திற்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. எல்லாம் பாபாஜியின் செயல் தவிர வேறென்ன!


கலியுகத்தின் கடவுளாய், மகா அவதார புருஷராய்த் திகழும் பாபாஜி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர். அவரது பெயரை ஒருமுறை உச்சரித்தாலே அவரது அபூர்வ ஞான சக்தி நமக்குள் பாய்வது போல் இருக்கும்.


பாபாஜி, காலத்தால் கட்டுப்படுத்த முடியாதவர். இயற்கைக்கும், விஞ்ஞானத்திற்கும் அப்பாற்பட்டவர். காரணம், காக்கும் கடவுளான பரம்பொருளே அவர்! பாபாஜியிடம் சரணடைவோம். அவர் நம்மை எங்கும் எப்போதும் காத்திடுவார்.

Thursday 5 September 2024

ஆலய பணியில் இன்று